சென்னை வானொலி நிலையம்

சென்னை வானொலி நிலையம் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வானொலி நிலையமாகும். அனைத்திந்திய வானொலியின் ஒரு அங்கமாக இந்நிலையம் இருக்கிறது. 2013ஆம் ஆண்டு சென்னை வானொலி நிலையம் பவழ விழா கொண்டாடியது.[1]

வரலாறு தொகு

தோற்றமும் வளர்ச்சியும் தொகு

"ஆல் இந்தியா ரேடியோவின் சென்னை வானொலி நிலையம்" என்ற பெயரில் இப்பொழுது இயங்கிவரும் வானொலி நிலையம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

உலகில் முறையான வானொலி ஒலிபரப்பு முதன் முதலில் அமெரிக்காவில் 1920 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கியது. 1922 ஆம் ஆண்டு லண்டனில் முறையான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளின் பின்னர், 1924 இல், மெட்ராஸ் பிரெசிடென்சி ரேடியோ கிளப் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எழும்பூர் ஹாலோவே கார்டனில் இந்த அமைப்பு இயங்கியது. அமைப்புக்கு சி. வி. கிருஷ்ணசுவாமி செட்டி தலைவராக இருந்தார். இவர்கள் 40 வாட் ஒலிபரப்பு திறனுள்ள ஒரு கருவி மூலம் 1924 ஜூலை 31-ந்திகதியிலிருந்து ஒரு வானொலி ஒலிபரப்பு ஆரம்பித்தார்கள். பின்னர் 200 வாட் திறனுள்ள ஒரு ஒலிபரப்புக் கருவியை நிறுவி ஒவ்வொரு நாள் மாலையிலும் இரண்டரை மணி நேரம் ஒலிபரப்பு செய்தார்கள். இசை, பேச்சு என்பன ஒலிபரப்பாகின. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலையிலும் ஒலிபரப்பினார்கள்.

நிதி நெருக்கடி காரணமாக இந்த அமைப்பு 1927 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இவர்கள் தமது வானொலி ஒலிபரப்புக் கருவியை சென்னை மாநகராட்சிக்குக் கொடுத்து விட்டார்கள். மாநகராட்சி 1930 ஏப்ரல் 1-ந் திகதியிலிருந்து மாலை 5.30 தொடக்கம் இரவு 7.30 வரை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பினார்கள். பள்ளிப் பிள்ளைகளுக்காக பள்ளி நாட்களில் மாலை 4 மணியிலிருந்து 4.30 வரை இசைப் பயிற்சியும் கதைகளும் ஒலிபரப்பினார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை கிராமபோன் இசை ஒலிபரப்பானது. மாதத்தில் ஒரு திங்கட்கிழமை மட்டும் மாலை 5.30 தொடக்கம் 7.30 வரை மேற்கத்தைய இசை ஒலிபரப்பானது.

மக்கள் இவற்றைக் கேட்பதற்காக மெரீனா கடற்கரை, ராபின்சன் பார்க், பீபள்ஸ் பாக், உயர் நீதிமன்ற கடற்கரை போன்ற இடங்களில் 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டன. 14 கார்ப்பரேசன் பள்ளிகளுக்கு சிறிய வானொலிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

இந்த ஒலிபரப்பு சேவை 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் திகதி அனைத்திந்திய வானொலியால் பொறுப்பேற்கப்பட்டது. வானொலி நிலையம் எழும்பூர் மார்ஷல் தெருவில் அமைக்கப்பட்டது. அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த எர்ஸ்கின் பிரபு நிலையத்தைத் தொடங்கி வைத்தார். முதல் நாளன்று டி. கே. பட்டம்மாளின் இசைக்கச்சேரி ஒலிபரப்பானது. இரண்டாம் நாள் எஸ். ராஜம் இசைக்கச்சேரி செய்தார். அவருக்குப் பக்கவாத்தியமாக கோவிந்தசாமி நாயக்கர் வயலினும், மதராஸ் ஏ. கண்ணன் மிருதங்கமும் வாசித்தனர்.

அப்போது மதராஸ் வானொலி நிலையம் என்றே அழைக்கப்பட்டது. இதன் முதல் இயக்குநராக விக்டர் பரஞ்சோதி நியமிக்கப்பட்டார்.[2]

1975ஆம் ஆண்டிற்குப் பிறகு தொலைக்காட்சி பரவலாக வருவதற்கு முன்புவரை, அப்போதைய மாகாண மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக சென்னை வானொலி நிலையம் இருந்தது.[1]

மாதமிரு இதழ் தொகு

வானொலி என்ற பெயரில் ஒரு மாதமிரு இதழ் வெளியிடப்பட்டது. வரவிருக்கும் இரண்டு வாரங்களுக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என்ற விபரமும், ஏனைய தகவல்களும் இந்த இதழில் இடம் பெற்றன.

அக்காலத்தில் இசை நிகழ்ச்சிகளே கூடுதலாக ஒலிபரப்பாகின. இசைப் பயிற்சி நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகின. பயிற்சியில் இடம்பெறப்போகும் பாடலின் ராகம், அதன் ஆரோகண, அவரோகணங்கள், தாளம், குறியீடுகள், பாடல் வரிகள், இயற்றியவர், இசையமைத்தவர், சொல்லிக்கொடுக்கப் போகும் ஆசிரியர் யார், கற்றுக்கொள்ளப்போகும் மாணவர் யார், யார் போன்ற விபரங்கள் வானொலி இதழில் கொடுக்கப்பட்டன. 1987 ஆம் ஆண்டு இந்த இதழ் வெளியீடு நிறுத்தப்பட்டது.[2]

சென்னை வானொலி நிலையத்தின் சேவைகள் தொகு

சென்னை வானொலி மத்திய அலைவரிசையிலேயே ஒலிபரப்பி வந்தது. இதனால் இதன் ஒலிபரப்பு சென்னை நகரிலும் அதனைச் சுற்றியிருந்த சில பகுதிகளிலும் மட்டுமே கேட்க முடிந்தது. அக்காலத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் சென்னை நகரமே தலை நகராக இருந்தது. அதனால் சென்னையில் பெருமளவு தெலுங்கு பேசும் மக்களும் வாழ்ந்தார்கள். அத்துடன், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி இருந்ததால் ஆங்கிலம் பேசும் மக்களும் வாழ்ந்தார்கள். ஆகவே சென்னை வானொலியில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. ஒரு அலைவரிசையில் ஒலிபரப்பிக் கொண்டிருந்த சென்னை வானொலி பின்னர் சென்னை-1, சென்னை-2 என இரண்டு அலைவரிசைகளில் ஒலிபரப்பத்தொடங்கியது. சென்னை-1 அலை வரிசையில் கூடுதலாகத் தமிழ் மொழியிலும், சென்னை-2 அலைவரிசையில் தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. கன்னடம், மலையாளம் ஆகிய ஏனைய தென்னிந்திய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின.
எழும்பூரில் இயங்கி வந்த வானொலி நிலையம், 1954 ஆம் ஆண்டு காமராஜர் சாலை கலங்கரை விளக்கத்துக்கு எதிரே தற்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. வசதியான இடத்துக்கு மாற்றப்பட்டபின் ஒலிபரப்புகளும் அதிகரிக்கப் பட்டன. சிற்றலையிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. இதன் மூலம் தமிழ் நாடு முழுவதிலும் மட்டுமன்றி அயல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, இலங்கை போன்ற இடங்களிலும் சென்னை வானொலி நிகழ்ச்சிகளை மக்கள் கேட்க முடிந்தது.

தென்கிழக்கு ஆசிய சேவை என மற்றொரு சேவை சிற்றலையில் ஒலிபரப்பானது. இந்த ஒலிபரப்பை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா போன்ற பல தெற்கு ஆசிய நாடுகளில் கேட்க முடிந்தது.

அனைத்திந்திய வானொலியில் வர்த்தக ஒலிபரப்புகளைச் சேர்ப்பது என்று அரசு தீர்மானித்தபின்னர் விவித பாரதி ஒலிபரப்புகள் நாடு முழுவதும் ஒலிபரப்பு ஆரம்பித்தன. சென்னை வானொலியும் விவித பாரதி ஒலிபரப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறது.

பின்னர் பண்பலை எனப்படும் எஃப். எம். (Frequency Modulation) அலைவரிசையில் ஒலிபரப்புகள் நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்டன. சென்னை வானொலியில் எஃப். எம். ரெயின்போ, எஃப். எம். கோல்ட் என இரு ஒலிபரப்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஒலிபரப்பாகி வருகிறது.[3]

சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சிகள் தொகு

1938 ஜூன் 16-ந் திகதி சென்னை வானொலியாக முறைப்படி இயங்கத் தொடங்கியபோது முதன்முதலாக ராஜாஜியின் உரை ஒலிபரப்பானது.
இதன் பின்னர் பல அறிஞர்கள், அரச நிர்வாகத்தினர், அதிகாரிகள், சமூக சேவையாளர்கள், சமயப் பெரியார்கள் இன்னும் பலதரப்பட்டவர்கள் உரையாற்றியுள்ளனர்.

ஆரம்ப காலங்களில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பும் வசதி இருக்கவில்லை. இதனால் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால், அதில் சம்பந்தப்பட்டவர் குறிப்பிட்ட நேரத்தில் நிலையத்துக்கு வந்து பேசவோ, பாடவோ வேண்டியிருந்தது. பின்னர் ஒலிப்பதிவு முறை வந்த பின்னர் பல நிகழ்ச்சிகள் முன்னரே ஒலிப்பதிவு செய்யப்பட்டு குறித்த நேரத்தில் ஒலிபரப்பானது.[3]

கல்வி நிகழ்ச்சிகள் தொகு

கல்வித் துறையில் தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான மாணவர்களுக்குக்கான ஒவ்வொரு துறை பாடத்திலும் வல்லுநர்களால் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு அவை ஒலிபரப்பாகி வந்தன. இதனால் துறைவாரியான ஆசிரியர்கள் இல்லாத பள்ளி மாணவர்கள் பெரிதும் பயனடைந்தனர்.[3]

விவசாய நிகழ்ச்சிகள் தொகு

விவசாயத்துறையில் விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை துறை வல்லுநர்களைக் கொண்டு விவசாய நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு தெரிவித்து வந்தார்கள். ஆடுதுறை 27 என 90 நாட்களில் மகசூல் ஆகும் நெல்ரகம் அறிமுகப்படுத்தப் பட்டபோது அது பற்றிய முழு விபரங்களையும் சென்னை வானொலி ஒலிபரப்பியதால் விவசாயிகள் அந்த நெல்லை ரேடியோ நெல் எனத் தங்களுக்குள் கூறிக்கொள்வார்கள்.[3]

இளைய பாரதம் தொகு

இளைஞர்களுக்காக ஏனைய மாநிலங்களிலிருந்த வானொலி நிலையங்கள் யுவவாணி என்ற பெயரில் ஒலிபரப்பிய நிகழ்ச்சியை, சென்னை நிலையம் இளைய பாரதம் எனப் பெயரிட்டு ஒலிபரப்பியது. இந்த நிகழ்ச்சியை இளைஞர்களே தயாரித்து ஒலிபரப்பினார்கள்.[3]

சிறுவர் நிகழ்ச்சிகள் தொகு

சிறுவர்களுக்காக பாப்பா மலர், சிறுவர் சோலை போன்ற நிகழ்ச்சிகளைச் சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பியது. இதில் சிறுவர்கள் நேரில் கலந்து கொள்வார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஒரு ஒலிபரப்பாளர் நிகழ்ச்சியை நடத்துவார். அவரை வானொலி அண்ணா என சொல்வார்கள். வானொலி அண்ணாவாக நிகழ்ச்சியை (ஒருவர் பின் ஒருவராக) நடத்தியவர்கள் ஐயாசாமி, கூத்தப்பிரான், என். சி. ஞானப்பிரகாசம் ஆகியோர். 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 23-ந் திகதி சிறுவர் சோலை நிகழ்ச்சியை வானொலி அண்ணாவாக இருந்து நடத்திய என். சி. ஞானப்பிரகாசம், அரும்பு இல்லம் என ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஒரு இல்லத்திற்கு நேரில் சென்று நடத்தினார். அந்த நிகழ்ச்சியை திண்டிவனத்தில் கேட்ட ஒரு தாயும் தந்தையும் அன்றைய நிகழ்ச்சியில் பேசிய இரு சிறுவர்களின் குரல் காணாமல் போன தங்கள் மகன்களின் குரல் போல இருப்பதாக வானொலி நிலையத்துக்குத் தெரிவித்தனர். அவர்களை நிலையத்துக்கு வரவழைத்து குறிப்பிட்ட இல்லத்துக்கு அழைத்துச் சென்று சிறுவர்களைப் பெற்றோருடன் சேர்த்து வைத்தது சென்னை வானொலி.[3]

நலவாழ்வு தொகு

ஆரோக்கிய பாரதம் என்ற நிகழ்ச்சி மூலம் தேசிய நலத்திட்டங்களை மக்களுக்குச் சென்னை வானொலி எடுத்துச் சொன்னது. நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி காசநோய் தடுப்புத்திட்டம், தேசிய கண்பார்வை இழப்புத் தடுப்புத்திட்டம், தேசிய தடுப்பூசிகள் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைப் பற்றியும் திட்டங்களின் பலன்களைப் பற்றியும், அந்தந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள், மருத்துவர்கள் மூலமாக விளக்கங்கள் கொடுத்து ஒலிபரப்பியது.[3]

மெல்லிசை தொகு

இசை நிகழ்ச்சிகளில் கருநாடக சங்கீதக் கச்சேரிகள் தவிர மெல்லிசை, சேர்ந்திசை எனத் தனிப்பாடல்கள் ஒலிபரப்பாகின. மெல்லிசைப் பாடல்களை உருவாக்க, பிரபல திரைப்பட இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது. சேர்ந்திசை நிகழ்ச்சி குழுவுக்கு எம். பி. ஸ்ரீநிவாசன் தலைவராக இருந்தார். இந்தப் பாடல்களில் இசை, குரல், வார்த்தை என்பனவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு அதிக வாத்தியங்கள் சேர்க்கப்படாமல் உருவாக்கப் பட்டன.[3]

கருநாடக இசை தொகு

ஒவ்வொரு நாளும் இரவு 7.30 முதல் 9 மணி வரை கருநாடக இசைக் கச்சேரிகள் இடம்பெற்றன. அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்மங்குடி சீனிவாச ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், டி. கே. பட்டம்மாள், ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி, டி. பிருந்தா, முக்தா, என். சி. வசந்தகோகிலம், டி. கே. ரங்காச்சாரி, வி. வி. சடகோபன் ஆகியோரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்றன.

கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, மைசூர் டி. சௌடையா ஆகியோரின் வயலின் இசை நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பு பெற்றவை.

டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை, பி. எஸ். வீருசாமி பிள்ளை, குழிக்கரை பிச்சையப்பா, இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு, சேக் சின்ன மௌலானா ஆகியோரின் நாதசுவர இசைக் கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டன.

டி. ஆர். மகாலிங்கம், பல்லடம் சஞ்சீவ ராவ், டி. என். சுவாமிநாத பிள்ளை ஆகியோரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டன.

தாள வாத்தியக் கச்சேரி எனும் இசை நிகழ்ச்சி இரசிகர்களிடையே பெரும் புகழினைப் பெற்றது.[1]

அரும்பெரும் பொக்கிஷம் தொகு

சென்னை வானொலி நிலையத்தில் 75 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேச்சுகள், இசைக் கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், நாடகங்கள், வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஒலிப்பதிவு நாடாக்கள் பாதுகாக்கப்பட்டு பேணப்படுகின்றன. இவற்றினை எண்முறைக்கு (Digital) முறைக்கு மாற்றி வருகிறார்கள்.

ராஜாஜி, பம்மல் சம்பந்த முதலியார், பெரியார், காமராஜர், சர். சி. பி. ராமசாமி ஐயர், எஸ். சத்தியமூர்த்தி, ருக்மணிதேவி அருண்டேல், சரோஜினி நாயுடு போன்ற தலைவர்களின் குரல்கள் அடங்கிய பதிவுகள் இங்கே உள்ளன.

அனந்தராம தீட்சிதர், கிருபானந்தவாரியார், வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன், கி. ஆ. பெ. விசுவநாதம், கீரன் ஆகியோரது மேடைப் பேச்சுக்கள் அடங்கிய பதிவுகளும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. கிருபானந்த வாரியாரது பதிவுகள் மட்டும் நூற்றுக்கும் மேல் உள்ளன.

எம். ஜி. ஆர், கண்ணதாசன், டி. எஸ். பகவதி, சிவாஜி கணேசன், பாரதிதாசன், கொத்தமங்கலம் சுப்பு, பி. எஸ். ராமையா, டி. ஆர். மகாலிங்கம், கவிமணி ஆகியோரது பதிவுகளும் இங்கே உள்ளன.

கோட்டையில் ஆங்கிலேயக் கொடியினை இறக்கிவிட்டு இந்தியத் தேசியக் கொடியினைச் சுதந்திரத்திற்கு முன்பே ஏற்றிய பாஷ்யம் ஆர்யா அவர்கள் கொடி ஏற்றிய உடன் கோட்டையில் ஆற்றிய உரையின் அரிய பதிவு இன்றும் சென்னை வானொலி நிலையத்தில் உள்ளது.

இவை தவிர கருநாடக இசைக் கலைஞர்களின் எண்ணற்ற இசைப்பதிவுகள் சென்னை வானொலி நிலையத்தில் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "AIR journey – down memory lane". தி இந்து. 5 சூலை 2013. Archived from the original on 31-08-2014. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. 2.0 2.1 S. Sankaranarayanan. "When Madras went on the AIR". madrasmusings.com. Archived from the original on 20 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 எஸ். சங்கரநாராயணன். "சென்னை வானொலி எனும் ஆலமரம்". dinamalar.com. Archived from the original on 15 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_வானொலி_நிலையம்&oldid=3741028" இலிருந்து மீள்விக்கப்பட்டது