செம்மஞ்சள்

செம்மஞ்சள் (ஆரஞ்சு) என்பது, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களுக்கிடையே நிறமாலையில், தெரியும் ஒளி ஆகும். மனிதக் கண்கள்  585 மற்றும் 620 நானோமீட்டர் அலைவரிசையில் இந்நிறத்தை இனங்கண்டு கொள்கின்றது. செம்மஞ்சள் என்பதன் ஆங்கிலப்பெயரான ஆரஞ்சு என்பது, அதன்  அதே பெயர் கொண்ட பழத்தின் அடிப்படையில் உருவான பெயர் ஆகும்.

செம்மஞ்சள்
About these coordinatesஇந்த நிற ஆயங்கள் பற்றி அறிய
About these coordinates
— நிற ஆயங்கள் —
அலைநீளம் 590–620 நமீ
அதிர்வெண் 505–480 THz
Hex triplet #FF6600
RGBB (r, g, b) (255, 102, 0)
HSV (h, s, v) (24°, 100%, 100%)
மூலம் HTML Colour Chart @30
B: Normalized to [0–255] (byte)

 கேரட், பூசணி, இனிப்பு உருளைக்கிழங்கு, ஆரஞ்சு முதலியன, ஒருவகைக் கரோட்டீன்களால் இந்த செம்மஞ்சள் நிறத்தைப் பெற்றுக்கொள்கின்றன. கரோட்டீன்கள், ஒளித்தொகுப்பில் உதவும் ஒரு  வகை ஒளிச்சேர்க்கை நிறமிகள் ஆகும். 

ஐரோப்பா மற்றும் அமெரிக்கப் பகுதிகளில், செம்மஞ்சளானது, மகிழ்ச்சி, புறவயநோக்கு, செயன்மை, ஆபத்து, முதலான பல்வேறு உணர்வுகளுடன் இணைத்து நோக்கப்படுகின்றது. கிறித்துவ சனநாயகத்தைக் குறிக்கும் அரசியல் நிறமாகவும் செம்மஞ்சளே திகழ்கின்றது.[சான்று தேவை] இந்து மற்றும் பௌத்த சமயங்களிலும், செம்மஞ்சளை புனித நிறமாகக் கருதுகிறார்கள்.[1]

சொற்பிறப்பியல் தொகு

தமிழ் இலக்கியங்களில் சிவப்பு சார்ந்த நிறமொன்று காவி என்று அழைக்கப்படும் வழக்கம், சங்க காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றது. குறுந்தொகையின் 144ஆம் பாடலில் செங்குவளை மலர்கள் காவி நிறத்தவை என்ற குறிப்பைக் காணலாம். சமகாலத்தில் ஆரஞ்சு என்றும், செம்மஞ்சள் என்றும் இதை இருவிதமாகவும் அழைக்கிறார்கள். ஆங்கில ஆரஞ்சு என்ற பெயர், பழுத்த ஆரஞ்சுப் பழங்களால் உருவான பெயர்.[2] இது இத்தாலிய ச் சொல்லான ''ஆரன்சியா''விலிருந்து வந்ததாகவும்,[3][4] ஆரன்சியா என்பது அராபிய "நாரஞ்" என்பதிலிருந்து வந்ததாகவும், நாரஞ் கூட தமிழ் - சங்கதச்சொல்லான நாரங்காய் என்பதிலிருந்து வந்ததாகவும் [5]  சொற்பிறப்பியலாளர்கள் சொல்கின்றார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தான் ஆரஞ்சு மரம், ஐரோப்பியாவுக்கு ஆசியாவிலிருந்து அறிமுகபப்டுத்தப்பட்டது. ஆரஞ்சு என்பதை முதன்முதலாக நிறத்தைக் குறிக்கப் பயன்பட்ட மிகப்பழைய ஆவணம், 1512இல் எழுதப்பட்ட ஒரு குறிப்பு ஆகும்.[6][7]

சஃப்ரன் என்ற ஆங்கிலச்சொல், ஆரஞ்சை விடப் பழமையானது.[8] தமிழைப் போலவே, ஆரஞ்சு நிறப்பொருட்கள் சில, சிவப்பு என்றும் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டிருக்கின்றன.  சிவப்பு மான், செவ்வாய்க்கிரகம் என்பன அத்தகையவை.

வரலாற்றில் செம்மஞ்சள் தொகு

பண்டைய எகிப்து நாட்டில், இந்நிறம் பூசப்பட்ட கல்லறை எச்சங்கள் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளன. ஆர்பிமண்ட் எனப்படும் ஒருவகைக் கனிமத்திலிருந்து  செம்மஞ்சள் நிறம், பெறப்பட்டிருக்கின்றது. ஆர்பிமண்ட் (Orpiment) என்பது, உரோம அரசின் காலத்தில் சீனாவில் கூட மருந்தாகப் பயன்படும் முக்கியமான வாணிகப் பொருளாகத் திகழ்ந்திருக்கின்றது. ஆர்சனிக் கலந்த இந்த கனிமம், எரியம்புகளாகப் பயன்பட்டுள்ளது என்பதும், இதன் செம்மஞ்சள் நிறம் காரணமாக, இரசவாதிகள் இதிலிருந்து தங்கம் தயாரிக்க முயன்றதும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.  

ஆரஞ்சுக் கோமரபு தொகு

நஸ்சௌவின் ஆரஞ்சுக் கோமரபு (அல்லது ஆரஞ்சு வம்சம்) என்பது, ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க கோமரபுகளில் ஒன்றாக, பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவியது. தெற்கு பிரான்சில், ஆரஞ்சு என்று அழைக்கப்பட்ட சிறு பிரதேசம் ஒன்றில் ஆரம்பமான இந்தக் கோமரபு, ஆரஞ்சு நிறத்தால் அப்பெயரைப் பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. அது செல்டிய நீர்த்தெய்வமான அரௌசியோவின் திரிந்த பெயர் என்கிறார்கள். ஆனால், வடக்கு பிரான்சிற்கு ஆரஞ்சுப் பழங்கள் பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பாதையில் தான், ஆரஞ்சுப் பிரதேசம் அமைந்திருந்தது என்பது ஊன்றி நோக்கத்தக்கது. 

 நெதர்லாந்து சுதந்திரமடையும் வரை, ஸ்பெயினுக்கு எதிரான எண்பதாண்டு இடச்சுப் போரில் ஆரஞ்சு அரசின் முதலாம் வில்லியம், பெரும் பங்காற்றினார். 1689இல்இங்கிலாந்தின் மன்னனான இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம், ஆரஞ்சுக் கோமரபில் குறிப்பிடத்தக்கவன்.

மூன்றாம் வில்லியத்துக்குப் பின், ஐரோப்பிய அரசியலில், செம்மஞ்சள் குறிப்பிடத்தக்க நிறமாக மாறியது அவன் சார்ந்த புரட்டஸ்தாந்து மதத்தின் அடையாளமாகவும் அது மாறலானது. அயர்லாந்தின் புரட்டஸ்தாந்தினர், "ஆரஞ்சு மக்கள்" என்றே செல்லமாக அழைக்கப்பட்டார்கள். 

ஏனையவை தொகு

செம்மஞ்சள் அடர்வண்ணம் என்பதால், பல்வேறு ஆடைகளையும் பொருட்களையும் செய்யப்பயன்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கடற்படை, கடல் உயிர்காப்புக் கவசங்களின் நிறமாக செம்மஞ்சளையே பரிந்துரைத்திருந்தது. இன்றும் பெரும்பாலான அக்கவசங்கள் செம்மஞ்சள் நிறத்திலானவையே. வீதித் திருத்துநர்கள், போக்குவரத்து அதிகாரிகள், விபத்திலிருந்து தம்மைப் பாதுகாக்க, இன்றும் செம்மஞ்சளை அணிகிறார்கள். 

உக்ரைன் நாட்டில் 2004ஆம் ஆண்டு நவம்பர் - திசம்பர் காலத்தில் விக்டர் யுஸ்செங்கோக்கு ஆதரவாக இடம்பெற்ற கிளர்ச்சியை "செம்மஞ்சள் புரட்சி" என்றே அழைக்கிறார்கள்.[9] 

இயற்கை மற்றும் பண்பாட்டில் தொகு

குறிப்புகள் தொகு

  1. Eva Heller, Psychologie de la couleur: effets et symboliques, pp. 149–158
  2. Paterson, Ian (2003). A Dictionary of Colour: A Lexicon of the Language of Colour (1st paperback ). London: Thorogood (published 2004). பக். 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85418-375-3. இணையக் கணினி நூலக மையம்:60411025. https://archive.org/details/dictionaryofcolo0000pate{{inconsistent citations}} 
  3. "orange - Origin and meaning of orange by Online Etymology Dictionary". Retrieved 22 January 2018.
  4. "orange n.1 and adj.1". Oxford English Dictionary online. Oxford: Oxford University Press. 2013. Retrieved 2013-09-30.(subscription required)
  5. Shorter Oxford English Dictionary, 5th edition, 2002.
  6. "orange colour – orange color, n. (and adj.)". Oxford English Dictionary. OED. Retrieved 19 April 2011.
  7. Maerz, Aloys John; Morris Rea Paul (1930). A Dictionary of Color. New York: McGraw-Hill. p. 200{{inconsistent citations}} 
  8. "Saffron - Define Saffron at Dictionary.com". Dictionary.com. Retrieved 25 September 2014.
  9. Foreign Policy: Theories, Actors, Cases Foreign Policy: Theories, Actors, Cases, Oxford University Press, 2008, ISBN 0199215294 (page 331)

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மஞ்சள்&oldid=3871345" இலிருந்து மீள்விக்கப்பட்டது