ஜுராசிக் பார்க் (புதினம்)
ஜுராசிக் பார்க் (Jurassic Park) என்பது அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டனால் எழுதப்பட்டு 1990-ஆம் ஆண்டில் வெளியான அறிவியல் புனைவுப் புதினமாகும்.[2] மரபணுப் பொறியியல் குறித்த ஒரு எச்சரிக்கைக் கதையாக (Cautionary tale) இப்புதினம் விளங்குகிறது. இத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மீளுருவாக்கப்பட்ட தொன்மாக்களைக் காட்சிப்படுத்தும் ஒரு கேளிக்கைப் பூங்காவின் சரிவே இதன் மையக்கருத்து. இதன்வழியே கணிதக் கருத்தாக்கமான ஒழுங்கின்மை கோட்பாட்டையும், நடைமுறை வாழ்க்கையின் மீதான அதன் தாக்கத்தையும் இப்புதினம் விளக்குகிறது.
முதல் பதிப்பு அட்டை | |
நூலாசிரியர் | மைக்கேல் கிரைட்டன் |
---|---|
அட்டைப்பட ஓவியர் | சிப் கிட் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
வகை | அறிவியல் புனைவு, தொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு, திகில் புனைவு |
வெளியீட்டாளர் | ஆல்பிரட் ஏ. கேனோஃப் |
வெளியிடப்பட்ட நாள் | நவம்பர் 20, 1990[1] |
ஊடக வகை | அச்சு (மேலட்டை) |
பக்கங்கள் | 448 |
ISBN | 0-394-58816-9 |
OCLC | 22511027 |
813/.54 20 | |
LC வகை | PS3553.R48 J87 1990 |
அடுத்த நூல் | தி லாஸ்ட் வேர்ல்ட் |
இதன் தொடர்ச்சியாக மைக்கேல் கிரைட்டன் எழுதிய த லொஸ்ட் வேர்ல்ட் என்ற புதினம் 1995-இல் வெளியானது. பின்பு 1997-இல் இவ்விரு புதினங்களும் மைக்கேல் கிரைட்டன்ஸ் ஜுராசிக் வேர்ல்ட்(Michael Crichton's Jurassic World) என்ற ஒரே நூலாக வெளியாயின (இத் தொகுப்புக்கும் ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்துக்கும் தொடர்பில்லை).[3][4][5]
கதைச் சுருக்கம்
தொகு1989 ஆம் ஆண்டில், கோஸ்ட்டா ரிக்கா நாட்டிலும் அதன் அருகிலுள்ள ஈஸ்லா நுப்லார்[6] (Isla Nublar) என்ற (கற்பனை) தீவிலும் சில மர்ம விலங்குகள் தொடர் தாக்குதல்கள் நடத்துகின்றன. இறுதியில் அவற்றுள் ஒன்று புரோகாம்ப்ஸோக்னாதஸ் என அடையாளம் காணப்படுகிறது. அதை உறுதிப்படுத்த தொல்லுயிர் ஆய்வாளர் ஆலன் கிரான்ட்டும் (Dr. Alan Grant) அவரிடம் பயிலும் தொல் தாவரவியல் பட்டதாரி மாணவியான எல்லி சாட்லரும் (Ellie Sattler) அழைக்கப்படுகின்றனர். ஆனால் இடையில் இன்ஜென் (International Genetic Technologies) உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜான் ஹேமன்ட் (John Hammond), ஈஸ்லா நுப்லாரில் தாம் உருவாக்கியுள்ள உயிரியல் காப்பகத்தைப் பார்வையிடக்கோரி இருவரையும் அழைத்துச்செல்கிறார்.
அவ்வாறே ஈஸ்லா நுப்லாருக்கு வரும் கிரான்டும் சாட்லரும், அது உண்மையில் படியெடுக்கப்பட்ட தொன்மாக்கள் வாழும் ஜுராசிக் பார்க் எனப் பெயர்கொண்ட கருப்பொருள் பூங்கா என்றறிகின்றனர். [அம்பர் பிசினில் சிக்கிய பழங்காலப் பூச்சிகள் மற்றும் கொசுக்களிடம் கண்டெடுக்கப்பட்ட தொன்மா டி.என்.ஏக்கள் அவற்றை மீண்டும் உருவாக்க உதவின. தொலைந்த மரபணுத்தொகைகளுக்கு மாற்றாக ஊர்வன, பறவை, நீர்நில வாழ்வன ஆகியவற்றின் டி.என்.ஏ க்கள் நிரப்பப்பட்டன] இனப்பெருக்கத்தைத் தடுப்பதற்காக அவையனைத்தும் லைசின்-குறைபாடுள்ள (lysine) பெண் விலங்குகளாக உருவாக்கப்பட்டுள்ளன; எக்சு-கதிர் கருத்தடையும் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிகின்றனர் . மரபணுப் பொறியியல் துறையில் இன்ஜென்னின் முன்னேற்றங்களைப் பெருமையுடன் விளக்கும் ஹேமன்ட், இருவரையும் தீவின் பல்வேறு தானியங்கி அமைப்புகளூடே அழைத்துச் செல்கிறார்.
[அப் பூங்காவில் அண்மையில் நடந்த நிகழ்வுகள், ஹேமண்டின் முதலீட்டாளர்களை அச்சப்படுத்தியிருக்கின்றன. அவர்களை அமைதிப்படுத்தும் நோக்கில் இவர்களிருவரையும் புதிய ஆலோசகர்களாக அமர்த்த ஹேமண்ட் விரும்புகிறார்].
இவர்களுக்கு எதிர்த்தரப்பில் புகழ்பெற்ற கணித வல்லுநரும் ஒழுங்கின்மை கோட்பாட்டாளருமான இயான் மால்கம் (Dr.Ian Malcolm), முதலீட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர் டொனால்ட் ஜென்னாரோ (Donald Gennaro) ஆகியோர் உள்ளனர். இவர்களிருவரும் பூங்காவின் வாய்ப்புகளை ஐயுறுகின்றனர். பூங்காவின் உருவாக்கத்திற்கு முன்பே கலந்தாலோசிக்கப்பட்டிருந்த மால்கம், இப்பூங்கா விரைவில் அழிந்துவிடும் என்று தற்போது உறுதிபடக் கணிக்கிறார். ஆயினும் இக்கணிப்பை ஹேமன்ட் மறுக்கிறார்.
பின்னர் இப்பூங்காவைப் பார்வையிடச் செல்லும் ஆலோசகர் குழுவினரோடு ஹேமண்டின் பேரக் குழந்தைகளான டிம் (Tim Murphy) மற்றும் லெக்ஸ் மர்பி (Lex Murphy) ஆகியோர் இணைகின்றனர். இச் சுற்றுலாவின்போது கிரான்ட் ஒரு வெலாசிராப்டர் முட்டை ஓட்டைக் கண்டெடுக்கிறார். இதனால் பூங்காவிலுள்ள தொன்மாக்கள் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கிவிட்டன என்ற மால்கம்-மின் கூற்று நிறுவப்படுகிறது.
இதற்கிடையில் ஒரு வெப்ப மண்டலச் சூறாவளி, ஈஸ்லா நுப்லாரைத் தாக்குகிறது. அப்பொழுது ஜுராசிக் பார்க்-கின் தலைமைக் கணிணி நிரலாளரான டென்னிஸ் நெட்ரி (Dennis Nedry), தொன்மா முளையங்களை (Embryos) இன்ஜென்-னின் போட்டி நிறுவனமான பயோசின்-னுக்கு (Biosyn) விற்கத் திட்டமிடுகிறார் (இதற்காக ஏற்கெனவே பயோசின்-னின் முகவரான லூயி டாட்ஜ்சனிடம் (Dr.Lewis Dodgson) இவர் கையூட்டுப் பெற்றிருந்தார்). பூங்காவின் பாதுகாப்பு அமைப்பை அணைத்தபின் முளையச் சேமிப்பு அறைக்குள் நுழைந்து பூங்காவின் பதினைந்து வகைத் தொன்மாக்களின் முளையங்களையும் திருடுகிறார். அவற்றைப் பூங்காவின் கிழக்குக் கப்பல் துறையில் காத்துள்ள பயோசின் ஆட்களுக்குக் கொண்டு செல்கையில் வழிதப்பும் அவரை ஒரு டைலோஃபோசாரஸ் (Dilophosaurus) கொல்கிறது.
நெட்ரியின் செயலால் பூங்காவின் பாதுகாப்பு வேலிகள் அணைகின்றன. தொன்மாக்களும் தம் இருப்பிடங்களிலிருந்து தப்பி விடுகின்றன. ஆலோசகர் குழுவை ஒரு டைரனோசாரஸ் (டி-ரெக்ஸ்) தாக்குகிறது. பூங்காவின் மக்கள் தொடர்பு மேலாளர் எட் ரெஜிஸை (Ed Regis) ஓர் இளம் டி. ரெக்ஸ் கொல்கிறது. கிரான்டும் சிறார்களும் வழிதப்புகின்றனர். இத் தாக்குதலில் படுகாயமடையும் மால்கம்மை ஜென்னாரோவும் பூங்காவின் காப்பாளர் இராபர்ட் முல்டூனும் (Robert Muldoon) மீட்டுப் பூங்காவின் கால்நடை மருத்துவர் ஹார்டிங்கின் (Dr.Harding) பொறுப்பில் விடுகின்றனர்.
பின்னர் பூங்காவின் தலைமைப் பொறியாளர் ஜான் அர்னால்ட் (John Arnold), மரபணுப் பொறியாளர் ஹென்றி வூ (Henry Wu), முல்டூன், ஹேமன்ட் ஆகியோர் பூங்காவின் மின்தொடர்பை உயிர்ப்பிக்கப் போராடுகின்றனர். அவர்களின் முயற்சி முதலில் பலனளித்தாலும் மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இச்சமயத்தில் வெலாசிராப்டர்களும் தப்பிவந்து வூ, அர்னால்ட் இருவரையும் கொல்கின்றன.
இதற்கிடையில் கிரான்ட்டும் சிறார்களும் ஒரு காட்டாற்றின் வழியே படகில் பயணித்து பூங்காவின் பார்வையாளர் மையத்தை அடைகின்றனர். அத் தீவிலிருந்து கோஸ்ட்டா ரிக்காவுக்குச் சென்றுகொண்டிருக்கும் ஒரு சரக்குக் கப்பலில் பல இளம் வெலாசிராப்டர்கள் பதுங்கியுள்ளதாக மேலாண்மைக் குழுவினரிடம் அவர்கள் கூறுகின்றனர். பின்பு கிரான்ட்டும், டிம்மும் மின்சாரத்தை மீட்கின்றனர்.
சரக்குக் கப்பலைத் திரும்பிவரப் பணிக்கும் ஜென்னாரோ, அப்பூங்காவை விரைவில் அழிக்கவேண்டும் என்கிறார். ஆனால் முதலில் கள நிலவரத்தை ஆராய வலியுறுத்தும் கிரான்ட், அவரையும் சாட்லர், முல்டூன் ஆகியோரையும் அழைத்துக்கொண்டு பூங்காவுக்குள் செல்கிறார். ராப்டர்கள் கட்டிய கூடுகளில் பொறித்த முட்டைகளின் எண்ணிக்கையையும் பூங்காவின் திருத்தப்பட்ட கணக்கீட்டையும் ஒப்பிட்டபின் இவர்கள் மையத்துக்குத் திரும்புகின்றனர். இதற்கிடையே பூங்காவில் நடைபயிலும் ஹேமன்ட், முந்தைய தவறுகளைத் திருத்தி மீண்டும் ஒரு புதிய பூங்காவைக் கட்டமைக்க எண்ணுகிறார். திடீரென டி-ரெக்ஸின் முழக்கத்தால் அதிர்ந்து ஒரு சிறுகுன்றிலிருந்து விழுகிறார். அங்கு கூடும் புரோகாம்ப்ஸோக்னாதஸ்கள் அவரை உண்கின்றன.
தொன்மாக்களின் இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரையில், அவற்றின் மரபணு இடைவெளிகளை நிரப்புவதற்காகத் தவளைகளின் மரபணுக்கள் நிரப்பப்பட்டதால் பெண் தொன்மாக்களுள் சில, ஆணாக மாறி இனப்பெருக்கம் செய்திருக்கின்றன எனத் தெரிய வருகிறது. மேலும், சரியெனக் கருதப்பட்ட எண்ணிக்கையை அடைந்தவுடன் எண்ணுவதை நிறுத்துமாறு ஆணை பெற்றமையால், புதிதாகப் பிறந்த விலங்குகளைச் சேர்க்காமல் கணினி தவறிழைத்தமையும் தெரியவருகிறது. விரைவில் ஈஸ்லா நுப்லாருக்கு வரும் கோஸ்ட்டா ரிக்க வான்படையினர் (கற்பனை) அவ்விடத்தை இடர் மிக்கதாக அறிவிக்கின்றனர். அத்துடன் நாபாம் (napalm) கொண்டு அதை அழித்தும் விடுகின்றனர்.
இந்நிகழ்வுகளில் உயிர்தப்பியோரை ஐக்கிய அமெரிக்கா மற்றும் கோஸ்ட்டா ரிக்கா நாடுகளின் அரசுகள், காலவரையின்றி ஒரு விடுதியில் தடுத்துவைக்கின்றன. பல வாரங்களுக்குப் பின், கோஸ்ட்டா ரிக்கா வாழ் அமெரிக்க மருத்துவரான மார்ட்டின் குய்டியெர்ரேஸ் (Dr. Martin Guitierrez) என்பவர் அங்கு வந்து கிரான்ட்டைச் சந்திக்கிறார். மர்ம விலங்குக் கூட்டமொன்று கோஸ்ட்டா ரிக்காவின் காடுகளூடே இடம்பெயர்வதாகவும் லைசின் நிறைந்த பயிர்கள் மற்றும் கோழிகளை உண்பதாகவும் தெரிவிக்கிறார். மேலும், உயிர்பிழைத்தோர் யாரும் (டிம் மற்றும் லெக்ஸ் தவிர) அவ்வளவு விரைவில் அவ்விடுதியை விட்டு வெளியேறப் போவதில்லை எனக் கூறி கிரான்ட்டிடம் விடைபெற்றுச் செல்கிறார்.
புதினத்தில் இடம்பெறும் தொல் பழங்கால விலங்குகள்
தொகுமுதன்மைக் கட்டுரை: ''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய விலங்குகளின் பட்டியல்
(ஆங்கில அகரவரிசைப்படி)
எண் | விலங்கு | ஆங்கிலப் பெயர் | குறிப்பு |
1 | அபடோசாரஸ் | Apatosaurus | |
2 | ஸியராடேக்டைலஸ் | Cearadactylus | |
3 | கோயலூரோசாரஸ் | Coelurosaurus | மரபணு பிரித்தெடுத்தலை எதிர்நோக்கியிருக்கும் ஒரு "கோயலூரோசாரஸ்" என இது ஊகிக்கப்படுகிறது |
4 | டெய்னானிக்கஸ் | Deinonychus | இவை,வெலாசிராப்டர் ஆன்டிரோஃபஸ் (Velociraptor antirrhopus) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன |
5 | டைலோஃபோசாரஸ் | Dilophosaurus | |
6 | ஹிப்சிலோஃபோடான் | Hypsilophodon | |
7 | யுவோப்லசெப்பலஸ் | Euoplocephalus | |
8 | ஹாட்ரோசாரஸ் | Hadrosaurus | |
9 | மையாசாரா | Maiasaura | |
10 | மெகாநியூரா | Meganeura | இவை, பெரியவகைத் தட்டாரப்பூச்சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளன |
11 | மைக்ரோசெராட்டஸ் | Microceratus | |
12 | ஒத்னியேலியா | Othnielia | |
13 | புரோகாம்ப்ஸோக்னாதஸ் | Procompsognathus | |
14 | ஸ்டெகோசாரஸ் | Stegosaurus | |
15 | ஸ்டைரகோசாரஸ் | Styracosaurus | |
16 | டிரைசெரடாப்ஸ் | Triceratops | |
17 | டைரனோசாரஸ் | Tyrannosaurus | |
18 | வெலாசிராப்டர் | Velociraptor | அறிவுக்கூர்மையும் சீற்றமும் மிகுந்தவை |
பின்புலம்
தொகுகிரைட்டன், முதன்முதலில், ஒரு தொன்மாவை மீளுருவாக்கும் பட்டதாரி மாணவரைப் பற்றிய திரைக்கதையைத்தான் 1983-இல் இயற்றினார்.[7] பின்பு அக்கதையை வனவிலங்குப் பூங்கா ஒன்றில் நிகழ்வதாக மாற்றியமைத்தார்.[8] மேலும் கதையின் விவரிப்பைக் குழந்தைகளின் பார்வையிலிருந்து பெரியவர்களின் பார்வைக்கு மாற்றினார்.[9]
கருப்பொருள்கள்
தொகுஅறிவியலின் பிறழ் திறன்களை ஜுராசிக் பார்க் ஆராய்கிறது. மால்கம்மின் ஐயுறுதலில் கிறித்துவக் கூறுகள் மறைமுகமாய் இழையோடுகின்றன. ஹேமன்ட் தேர்ந்தெடுத்த புனிதக் கேடான பாதையை அவருக்கு நினைவூட்டும் உளச்சான்றாக மால்கம் விளங்குகிறார். பூங்காவின் இறுதி நிலை 'நரகம்' என்ற சொல்லால் உருவகப்படுத்தப்பட்டு ஹேமன்டின் புனிதக் கேடான முயற்சியின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.[10]
கிரைட்டனின் இப்புதினம், மனித இனத்தின் கண்மூடித்தனமான படைப்புச் செயலைக் கூறும் மேரி ஷெல்லியின் பிராங்கென்ஸ்டைன் கதையின் மற்றொரு பதிப்பெனக் கொள்ளலாம். விக்டர் பிராங்கென்ஸ்டைன், இறைப்படைப்பின் பிறழ்வடிவமான தன் படைப்புக்குப் பெயரிடவியலாமற் போவது போலவே ஹென்றி வூ -வுக்கும் நடக்கிறது. இச் செயல்களின் அறமின்மை மனித அழிவுக்கு வழிவகுக்கிறது.[11]
அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் இடர்மிக்கவையாகவும் வாழ்வை மாற்றுபவையாகவும் காட்டும் கிரைட்டனின் பிற புதினங்கள் போலவே ஜுராசிக் பார்க்-கும் அறிவியல் சமூகத்தின் கபடத்தையும் உயர்வு மனப்பான்மையையும் சுட்டுகிறது. தொன்மாக்களை மீளுருவாக்கவும் அவற்றைச் சந்தைப்பொருள்களாகக் கருதவும் ஹேமன்டைத் தூண்டுபவை இப் பண்புகளே. அணு ஆற்றல் குறித்து பனிப்போர் எழுப்பிய அச்சங்களை மரபணு மேலாண்மை குறித்து எழும் கவலைகளுடன் இணைத்துக் கதையைக் கொண்டுசெல்கிறார் கிரைட்டன்.[12]
வரவேற்பு
தொகுஇப்புதினம் வெளியானபின் அதிக அளவில் விற்பனையானது. கிரைட்டனின் ஆகச்சிறந்த புதினமாகவும் ஆனது.விமர்சகர்கள் இதற்குப் பெருமளவில் நேர்மறையான விமர்சனங்களை அளித்தனர்.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த ஒரு மதிப்புரையில், எழுத்தாளர் கிறிஸ்டோபர் லேமன்-ஹாப்ட் ( Christopher Lehmann-Haupt) இவ்வாறு குறிப்பிட்டார்: (இப்புதினம்) பிராங்கென்ஸ்டைன் தொன்மத்தின் மேம்பட்ட மாதிரி... தற்போது வரை திரு.கிரைட்டன் எழுதிய புதினங்களுள் மிகச்சிறந்தது.[13]
கட்டுரையாளர் ஜீன் லியோன்ஸ் ( Gene Lyons) எண்டர்டெயின்மெண்ட் வீக்லி வார இதழுக்கு அளித்த மதிப்புரையில் அறிவார்ந்த பொழுதுபோக்கு நிறைந்த, தோற்கடிக்க முடியாத நூல்... பொழுது போக்குவிக்கும் புதுமைச் செய்திகளை எளிதாகச் செரிக்கும் வகையில் வழங்குகிறது என்பதாகக் குறிப்பிட்டார்.[14]
ஆயினும் லியோன்ஸின் இந்த மதிப்புரையும், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு எழுத்தாளர் ஆண்ட்ரூ ஃபெர்குஸன் ( Andrew Ferguson) அளித்த மதிப்புரையும் கிரைட்டனின் பண்புரு வருணனை (characterization) பாணியை உணர்ச்சியும் சுயமானத்தன்மையும் அற்றது என விமர்சித்தன. மேலும் ஃபெர்குஸன் கூறுகையில், மால்கம்-மின் மலிவான தத்துவப்படுத்தலைக் குறைகூறினார். இந்நூலைத் திரைப்படமாக்கினால் ஐயத்திற்கு இடமின்றி அது மோசமான தரம் கொண்டதாகத்தான் இருக்கும் என்று அவர் கணித்தார். எனினும் தொன்மாக்கள், மரபணு ஆய்வு, தொல்லுயிரியல் மற்றும் ஒழுங்கின்மை கோட்பாடு குறித்த, ஆர்வத்தைத் தூண்டக்கூடிய உரையாடல்கள்தான் இந்நூலின் (ஒரே) உண்மையான மதிப்பு என அவர் ஒப்புக்கொண்டார்..[15]
இப்புதினம் திரைப்படமாக்கப்பட்டபோது மேலும் பிரபலமடைந்தது. அத்திரைப்படம் $ 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது. பல தொடர்ச்சிகளும் வெளிவந்தன.[16]
1996-ஆம் ஆண்டில் இப்புதினம், இரண்டாம் நிலை BILBY விருது பெற்றது.[17]
தழுவல்கள்
தொகு1993-ஆம் ஆண்டில் அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க், இப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு ஜுராசிக் பார்க் என்ற வெற்றிப் படத்தை இயக்கினார். பின்பு அவரே த லொஸ்ட் வேர்ல்ட் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் பிறிதொரு திரைப்படத்தையும் இயக்கினார். மூன்றாவதாக ஜோ ஜான்ஸ்டன் இயக்கத்தில் ஜுராசிக் பார்க் III என்ற திரைப்படம் 2001-இல் வெளியானது. இரு புதினங்களிலும் இடம்பெற்ற, ஆனால் முந்தைய இரு படங்களிலும் பயன்படுத்தப்படாத உறுப்புகள், கருப்பொருள்கள் மற்றும் காட்சிகளை இப் படம் உள்வாங்கிக் கொண்டது.
மேலும் காண்க
தொகு- அமெரிக்க எழுத்தாளர் கேத்தரின் மெட்கால்ஃப் ரூஃப் எழுதிய யெ மில்லியன் இயர்ஸ் ஆஃப்டர் "A Million Years After" சிறுகதை (வெயர்ட் டேல்ஸ் இதழில் நவம்பர் 1930 இல் வந்தது). பல இலட்சம் ஆண்டுகள் பழமையான முட்டைகளிலிருந்து தொன்மாக்கள் பொறிந்து வருவதாக அமைந்துள்ளது. படிக்க: https://archive.org/details/Weird_Tales_v16n05_1930-11_sas/mode/1up.
- வெஸ்ட்வோர்ல்ட்,1973-இல் கிரைட்டன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இதுவும் ஒரு கேளிக்கைப் பூங்காவின் அழிவைக் கூறுகிறது.
- தி கர்ஸட் எர்த் (1978), ஜட்ஜ் டிரெட் காமிக்ஸின் 2000 AD வரிசை நூல். பாட் மில்ஸால் எழுதப்பட்ட இப் படைப்பிலும் படியெடுக்கப்பட்ட தொன்மாக்களின் கேளிக்கைப் பூங்கா ஒன்று தோன்றுகிறது.
- கார்னோசார் (1984), இதையொத்த கருப்பொருள்களைக் கொண்ட புதினம்.
- தி லாஸ்ட் வேர்ல்ட் (1995) கிரைட்டன் எழுதிய ஜுராசிக் பார்க்கின் தொடர்ச்சி.
குறிப்புகள்
தொகு- ↑ "Copyright information for Jurassic Park". United States Copyright Office. பார்க்கப்பட்ட நாள் June 15, 2016.
- ↑ "JURASSIC PARK | Kirkus Reviews" – via www.kirkusreviews.com.
- ↑ Crichton, Michael (1997). Michael Crichton's Jurassic World. Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0375401077.
- ↑ "Michael Crichton's Jurassic world (information)". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். பார்க்கப்பட்ட நாள் 2015-01-28.
- ↑ "Michael Crichton's Jurassic World: Jurassic Park, The Lost World". Barnes & Noble. பார்க்கப்பட்ட நாள் 2015-01-28.
- ↑ ஸ்பானிய மொழியில் தோராயமான பொருள்: "முகில் சூழ்ந்த தீவு" அல்லது "தெளிவற்ற தீவு" ".
- ↑ Crichton, Michael (2001). Michael Crichton on the Jurassic Park Phenomenon (DVD). Universal.
- ↑ "Return to Jurassic Park: Dawn of a New Era", Jurassic Park Blu-ray (2011)
- ↑ Website, M. C. "Jurassic Park".
- ↑ Gallardo-Terrano, Pedro (2000). Rediscovering the Island as Utopian Locus: Michael Crichton’s Jurassic Park.. https://go.galegroup.com/ps/anonymous?id=GALE%7CH1100078863. பார்த்த நாள்: 2018-08-02.
- ↑ Miracky, James (2004). Replicating a Dinosaur: Authenticity Run Amok in the Theme Parking in Michael Crichton’s Jurassic Park and Julian Barnes’s England, England.. https://go.galegroup.com/ps/anonymous?id=GALE%7CH1100078866. பார்த்த நாள்: 2018-08-02.
- ↑ Geraghty, Lincoln (2018). "Jurassic Park". Books to Film: Cinematic Adaptations of Literary Works 1.
- ↑ Lehmann-Haupt, Christopher (November 15, 1990). "Books of The Times; Of Dinosaurs Returned And Fractals Fractured". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1990/11/15/books/books-of-the-times-of-dinosaurs-returned-and-fractals-fractured.html.
- ↑ Lyons, Gene (November 16, 1990). "Jurassic Park". Entertainment Weekly. http://www.ew.com/article/1990/11/16/jurassic-park.
- ↑ Ferguson, Andrew (November 11, 1990). "The Thing From the Tar Pits : JURASSIC PARK By Michael Crichton (Alfred A. Knopf: $19.95; 413 pp.)". Los Angeles Times. http://articles.latimes.com/1990-11-11/books/bk-5972_1_jurassic-park.
- ↑ Jurassic Park (1993). Box Office Mojo (1993-09-24). Retrieved on 2013-09-17.
- ↑ "Previous Winners of the BILBY Awards: 1990 – 96" (PDF). www.cbcaqld.org. The Children's Book Council of Australia Queensland Branch. Archived from the original (PDF) on 19 November 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
கூடுதல் வாசிப்பு
தொகு- DeSalle, Rob & Lindley, David (1997). The Science of Jurassic Park and The Lost World. Or How to Build a Dinosaur. New York: BasicBooks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-07379-4.
வெளி இணைப்புகள்
தொகு- ஈஸ்லா நுப்லார் வரைபடம் (புதினத்தின்படி) பரணிடப்பட்டது 2017-09-20 at the வந்தவழி இயந்திரம்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஜுராசிக் பார்க் (புதினம்)
- அதிகாரப்பூர்வ மைக்கேல் கிரைட்டன் வலைத்தளத்தில் ஜுராசிக் பார்க் பரணிடப்பட்டது 2015-06-17 at the வந்தவழி இயந்திரம்