தஞ்சை வேதநாயக சாத்திரி

மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் (1826-1889) குழப்பிக் கொள்ளாதீர்.

தஞ்சை வேதநாயக சாத்திரி என அழைக்கப்படும் வேதநாயகம் சாஸ்திரியார் (7 செப்டம்பர் 1774 – 24 சனவரி 1864), லூதரனிய கிறித்துவ மரபைச் சேர்ந்த தமிழ்க் கவிஞரும், நாடகாசிரியரும், இறையியலாளரும் தமிழறிஞரும் ஆவார். பெத்தலகேம் குறவஞ்சி (1800) உள்ளிட்ட நாடகங்கள், ஆரணாதிந்தம் (1837) உள்ளிட்ட இறைப் பனுவல்கள் என மொத்தம் 133 நூல்களையும் 400-க்கும் மேற்பட்ட கிறித்துவப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவற்றுள் பல பாடல்கள் தற்காலத்திலும் தமிழ் சீர்திருத்தக் கிறித்தவ மரபினரால் பாடப்பெறுகின்றன.

வணக்கத்திற்குரிய
வேதநாயகம்
சாஸ்திரியார்
சபைகத்தோலிக்க திருச்சபை (1774-85)
லூதரனியம் (1785-1864)
பிற தகவல்கள்
இயற்பெயர்வேதபோதகம்
பிறப்பு(1774-09-07)7 செப்டம்பர் 1774
திருநெல்வேலி,
கருநாடக சுல்தானகம்
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு24 சனவரி 1864(1864-01-24) (அகவை 89)
தஞ்சாவூர்,
மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
கல்லறைசி. எஸ். ஐ. புனித பேதுரு ஆலயம், தஞ்சாவூர்
பெற்றோர்ஞானப்பூ (தாய்)
தேவசகாயம் (தந்தை)
வாழ்க்கைத் துணைவர்
  • வியாகம்மாள்
    (தி. 1795; இற. 1796)
  • மைக்கேல் முத்தம்மா
    (தி. 1801; இற. 1829)
  • வரோதயம்மாள் (தி. 1829)
பிள்ளைகள்
  • ஞானதீபம்
    (வளர்ப்பு மகள்)
  • ஞானசிகாமணி (மகன்)
  • நோவா ஞானாதிக்கம் (மகன்)
  • எலியா தேவசிகாமணி (மகன்)
  • மனோன்மணி (மகள்)
வேலைதமிழ்க் கவிஞர், நாடகாசிரியர், அறிஞர், இறையியலாளர், பாடலாசிரியர்
படித்த இடம்தரங்கம்பாடி இறையியல் பள்ளி

மதராசு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குப் பயணம் செய்து இறைப்பணி ஆற்றினார். இறையியல், வானியல், கணிதம் உடலியல், சமூகவியல் எனப் பல்வேறு அறிவுத்துறைகளில் புலமை பெற்றிருந்தார். ஞானதீபக் கவிராயர் உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர். தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோசியின் அரசவைப் புலவராக (1829-32) பணியாற்றினார்.

இவர் வழிமரபினர் தற்காலத்திலும் அவர் வழியில் இறைப்பணியாற்றி வருகின்றனர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தொடக்க வாழ்க்கை

தொகு

ஆற்காடு நவாபுகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த திருநெல்வேலி நகரில் 7 செப்டம்பர் 1774 அன்று ஞானப்பூ அம்மையார் - போதகர் தேவசகாயம் (எ) அருணாச்சலம் இணையருக்கு மகனாகப் பிறந்தார் வேதநாயகம். பெற்றோர் முதலில் இட்ட பெயர் 'வேதபோதகம்'. இவரது தமக்கை பெயர் சூசையம்மாள். தங்கை பாக்கியம்மாள். இக் குடும்பம் கத்தோலிக்க மரபைப் பின்பற்றி வாழ்ந்தது. தன் ஐந்தாம் அகவை தொடங்கி இலக்கணக் கல்வி பயின்றார் வேதநாயகம். ஏழாம் அகவையில் அவர் தாய் காலமானார். 1783-ஆம் ஆண்டில் வேதநாயகம் ஒரு தனி ஆசிரியரின் மேற்பார்வையில் இலக்கியமும் கணிதமும் பயில ஏற்பாடு செய்தார் தேவசகாயம்.

சுவார்ட்சு - வின் கீழ் கல்வி

தொகு

தன் சபையுடன் ஏற்பட்ட சிக்கலால் தேவசகாயம், 1785-இல் பிள்ளைகளுடன் தஞ்சாவூர் சென்றார். அங்கு பணியாற்றிய செர்மானிய லூதரனிய இறைச்செய்தியாளர் கிறித்தியான் பிரெடெரிக் சுவார்ட்சு என்பவரின் தாக்கத்தில் நால்வரும் சீர்திருத்தக் கிறித்தவ மரபை ஏற்றனர். நான்கு மாதங்கள் தஞ்சையில் இருந்தபின் நெல்லைக்குத் திரும்பினர். மறு ஆண்டில் (1786) நெல்லைக்கு வந்த சுவார்ட்சு, தேவசகாயத்தின் ஒப்புதலுடன் வேதநாயகத்தைத் தஞ்சைக்கு அழைத்துச்சென்று கல்வி புகட்டினார். சுவார்ட்சின் மாணாக்கர்களுள் அன்றைய தஞ்சாவூர் மராத்திய மன்னர் துளஜாஜியின் மகன் சரபோசியும் (பின்னாளைய மன்னர் இரண்டாம் சரபோசி) அடக்கம். இவர் வேதநாயகத்துடன் கொண்ட நெருங்கிய நட்பு இறுதிவரை தொடர்ந்தது.

ஆசிரியப்பணி

தொகு

தரங்கம்பாடி இறையியல் பள்ளியில் 1789-91 காலகட்டத்தில் சேர்ந்து பேராசிரியர்கள் முனைவர் ஜான், முனைவர் காமரர், அருட்திரு. யோஹான் பீட்டர் ராட்லர் ஆகியோரின்கீழ் கல்வி பயின்றார். செருமன், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ஓரளவு புலமை பெற்றார். கல்வியை நிறைவுசெய்தபின் தஞ்சை திரும்பித் தன் 19ஆம் அகவையில் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள ஊர்களில் நற்செய்திப் பள்ளியாசிரியராக அமர்ந்து இலக்கியம், கணிதம், ஒழுக்கவியல் ஆகியவற்றைக் கற்பித்தார். பின்னர் தஞ்சை வேதக் கல்லூரியில் தலைமையாசிரியராகப் பணியேற்றார். இக்காலக்கட்டத்தில், பராபரன் மாலை, ஞான ஏற்றப்பாட்டு, ஞான வழி, ஆதியானந்தம், பரம நீதி புராணம் போன்ற நூல்களை இயற்றினார். பேச்சுத் தமிழில் இயற்றப்பட்ட இப் படைப்புகள், மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இருந்தன.

1795-இல் தனது தந்தை மற்றும் சுவார்ட்சின் விருப்பத்திற்கிணங்கத் தன் உறவினர் வியாகம்மாளைத் திருமணம் செய்தார் வேதநாயகம். ஆனால் ஓராண்டுக்குப்பின் வியாகம்மாள், பேறுகாலத்திலேயே மறைவுற்றார். 13 பிப்ரவரி 1798 அன்று சுவார்ட்சு இயற்கை எய்தினார். 1799-இல் தேவசகாயம், பிரித்தானிய சிலோனின் (தற்போது இலங்கை) யாழ்ப்பாண நகரில் இறைப்பணி செய்துவந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். இந்நிகழ்வுகளால் துயருற்ற நிலையில் வேதநாயகம் இயற்றிய இறைப்பாடல்கள், பராபரன் மாலை, செபமாலை உள்ளிட்ட பனுவல்களில் இடம்பெற்றுள்ளன.

தஞ்சாவூர் அரசவையில்

தொகு

1798-இல் தஞ்சை மன்னராக முடிசூடிய சரபோசி, வேதநாயகத்தைத் தன் மூத்த உடன்பிறப்பாகவே நடத்தினார். எனினும் கிறித்தவத்தை வெறுத்த சில அரசவையோர் இவருக்கு நெருக்கடி தர முயன்றனர். எனினும் சாத்திரியார் அச்சமின்றித் தனது கிறித்தவ நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இக் காலத்தில் தெலுங்கு, சமசுகிருதம், இலத்தீன் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றார்.

அந்நாளில் தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தின் நூலகரை ஆழ்ந்த உரையாடலுக்குப்பின் கிறித்தவம் தழுவச்செய்தார் வேதநாயகம்.[1] அந் நூலகரின் மகன் ஞா. சாமுவேல் பின்னாளில் இறையியலாளராகவும் கவிஞராகவும் வளர்ந்தார். வேதநாயகம், என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை, ஞா. சாமுவேல் ஆகிய இவர்களே முப்பெரும் தமிழ் கிறித்தவக் கவிஞர்களாகப் போற்றப்படுகின்றனர்.

இறைப் பயணங்கள்

தொகு

வேதநாயகம், தன் 27-ஆம் அகவையில் தன் மற்றொரு உறவினரான மைக்கேல் முத்தம்மாவை அருட்திரு. கோலோஃப் முன்னிலையில் மணந்தார். 1811-இல் இவ்விணையர், வேதநாயகத்தின் சகோதரியின் மகளான ஞானதீபத்தைத் தத்தெடுத்தனர். வேதநாயகம், கதாகாலட்சேப முறையில் தொலைதூர நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இயேசுவின் நற்செய்தியைப் பரப்புவதற்காகத் தனது குடும்பத்தினரையும் பாடகர்குழுவையும் பயன்படுத்தினார்.

1808-இல், தஞ்சை சபை, அவருக்கு வேத சிரோன்மணி பட்டத்தை வழங்கியது. அதே ஆண்டில், தரங்கம்பாடி சபை, ஞான நொண்டி நாடகத்தை தங்கள் நகரத்தில் நடத்தும்படிக் கேட்டுக் கொண்டது. அதன்பின் அச் சபையோர், சுவிசேஷக் கவிராயர் பட்டத்தையும் பல்லக்கையும் வழங்கிச் சிறப்பித்தனர்.

1809-இல் மதராசு நகரின் (தற்போது சென்னை) வேப்பேரி பகுதிவாழ் கிறித்தவர்கள் வேதநாயகத்தை அழைத்து பெத்தலகேம் குறவஞ்சி (1800) நாடகத்தை அரங்கேற்றச் செய்தனர். இதன்பின் ஞானதீபக் கவிராயர் பட்டத்தையும் ஒரு பல்லக்கையும் வழங்கிச் சிறப்பித்தனர்.

1810 தொடங்கி 1855 வரை தன் செபமாலை பனுவலை இயற்றிச் செறிவுபடுத்தினார். இப் பனுவல், பரவலாக அறியப்பட்ட தமிழ்க் கவிஞர்களின் தாக்கம் பெற்றிருந்தது (1826-இல் தஞ்சை வந்த கல்கத்தா நகர ஆயர் ரெஜினால்ட் ஹீபர், செபமாலையின் ஒரு படியையும், வேதநாயகம் பாடல்கள் அடங்கிய மற்றொரு தொகுப்பையும் வாங்கி இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைத்தார்).

1811-இல் குடும்பத்துடன் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். அங்கு அருட்திரு. கிறிஸ்தியன் டேவிட் ஆதரவில் சிறிது காலம் தங்கியிருந்து, சுற்றியுள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் நற்செய்தியைப் பரப்பினார். பின்னொரு முறை திருவிதாங்கூர், மைசூர் ஆகிய அரசவைகளுக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பெற்றார்.

1815-இல், திருச்சிராப்பள்ளி நகர்வாழ் கிறித்தவர்கள், ஐரோப்பியர்களுடன் ஒன்றிணைந்து வேதநாயகத்திடம், 45 நாட்கள் பேரின்பக் காதல் நாடகத்தை நிகழ்த்துமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவ்வாண்டில் ஜூன் 18 அன்று 'போலே' என்பவர் தலைமையில் அவர்கள், இறையியல் முனைவர் பட்டத்துக்குச் சமமான வேத சாஸ்திரியார் என்ற பட்டத்தை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அவர் வேதநாயக சாஸ்திரியார் என்று அழைக்கப்பட்டார், அப் பட்டம் இன்றுவரை அவர் வழிமரபில் தொடர்கிறது.

பிற்காலம்

தொகு

இந்தியாவின் முதல் தலைமை அளவையராக (1815-21) பணியாற்றிய காலின் மெக்கன்சி, தஞ்சை பகுதி குறித்த வரலாற்றுத் தரவுகளைத் திரட்டும் பணியை வேதநாயகத்துக்கு வழங்கினார்.

1827-இல் தஞ்சை சபையின் தலைவராகப் பொறுப்பேற்ற அருட்திரு.எல்.பி. ஹாப்ரோவுக்கும் வேதநாயகத்துக்கும், சபையின் சாதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதில் கருத்து வேறுபாடு உண்டானது. இதனால் வேதநாயகத்தையும் அவர் சார்ந்த சமூகத்தினர் சிலரையும் சபையிலிருந்து நீக்கினார் ஹாப்ரோ. இதனால் பொருளியச் சிக்கலில் ஆழ்ந்த வேதநாயகத்துக்கு சரபோசி மன்னர் உதவி செய்தார்.[2]

வேதநாயகத்தின் 55-ஆம் அகவையில் முத்தம்மா காலமானார். பின்னர் வேதநாயகம், தஞ்சாவூர் சாந்தப்ப பிள்ளையின் மகள் வரோதயம்மாளை அருட்திரு. பிரதர்டோ முன்னிலையில் மணந்தார்.

ஜார்ஜ் ஸ்பெர்க்னெய்டர் உள்ளிட்ட கிறித்துவ ஊழியர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்த வேதநாயகத்துக்கு ‘முன்ஷி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1829-இல் சரபோசியின் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். மறு ஆண்டில் (1830) சுவார்ட்சின் பள்ளியிலிருந்து விலகினார்.

1832-இல், சரபோசி மன்னர் இறந்தபின், ​​அவர் விருப்பத்திற்கிணங்க வேதநாயகம் ஒரு பாடலை இயற்றிப் பாடியபின்னரே அவர் உடல் கொண்டுசெல்லப்பட்டது. சரபோசியின் மகனும் வாரிசுமான தஞ்சாவூர் சிவாஜி, வேதநாயகத்துக்கு அதே ஆதரவை வழங்கவில்லை. எனவே அவரின் சீடர்கள் கலைந்து சென்று தங்கள் ஊழியத்தைத் தொடர்ந்தனர். வேதநாயகம் பணப்பற்றாக்குறையால் தவித்தார். இருப்பினும், அவரது பாடல்களைப் பாராட்டிய பெருமக்களும் செல்வந்தர்களும் அவருக்குப் பரிசுகளை அனுப்பினர். பிரித்தானிய அலுவலர் டேவிட் ஆக்டர்லோனியின் கீழ் இருந்த சில செருமானியர்கள் அவருக்கு பணப் பரிசுகளையும் வழங்கினர்.

1841-இல் ஆயர் ஜார்ஜ் ஸ்பென்சர் மற்றும் அருட்திரு இராபர்ட்டு கால்டுவெல் ஆகியோர் வேதநாயகத்தைத் தஞ்சையில் சந்தித்து உரையாடினர்.

1845 சனவரியில் தஞ்சாவூர் சபையினர், வேதநாயகத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி அவர்கள் மாதம்தோறும் ஒரு பங்களிப்பை அனுப்புவதாக உறுதியளித்தனர், எதிர்காலத்திலும் இவ்வுடன்படிக்கை செல்லும் என அறிவித்தனர். இன்றும் தஞ்சாவூர் கிறித்தவர்கள், வேதநாயகத்தின் வழித்தோன்றல்களுக்கு அதே மரியாதையையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.

கிறிஸ்தவ அறிவை ஊக்குவிக்கும் சங்கம் (SPCK) தன் புத்தகங்களை வெளியிட்டதன் வழியே வேதநாயகம் ஒரு குறிப்பிட்ட வருமானத்தைப் பெற்றார். தவக்காலம், கிறிஸ்துமஸ் ஆகிய காலங்களில் ‘சதுர்’ என்ற சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்.

1850-இல், வேதநாயகத்தின் 75-ஆம் அகவையில் அருட்திரு. கெஸ்ட், என்றி பவர் ஆகியோர், வேதநாயகத்தின் உருவப்படத்தை வரைய ஏற்பாடு செய்தனர்.

1850 முதல் 1858 வரை சாஸ்திரியருக்கும் திருச்சபைத் தலைவர்களுக்கும் இடையே போராட்ட காலமாக இருந்தது. ஜி.யு. போப் சபைத் தலைவராகப் பொறுப்பேற்றபின் வேதநாயகம் மற்றும் அவரின் மூன்று பிள்ளைகள் மீது சில கட்டுப்பாடுகளை விதித்தார். எனினும் பின்னர் அவர்கள். சமரசம் செய்து கொண்டனர்.

1856-இல் தரங்கம்பாடி சபையின் ஆண்டுவிழாவில் பங்கேற்றார் வேதநாயகம்.

இறப்பு

தொகு

தஞ்சையில் 24 சனவரி 1864 அன்று குடும்பத்தினருடன் அன்றாட வழிபாடுகளில் ஈடுபட்டபின் பின் மாலை நான்கு மணியளவில் தன் 90-ஆம் அகவையில் காலமானார் வேதநாயகம். அதனைத் தொடர்ந்து தேவாலயங்களில் மணிகள் ஒலித்தன. நகரத் தெருக்களில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அவர் உடல் வைக்கப்பட்டிருந்த பாடை அருகே அவர் இயற்றிய பாடல்களும் முழு இரவு விவிலிய வாசிப்பும் உரைகளும் அரங்கேறின. அவர் இயற்றியவற்றுள் மூன்று பாடல் வரிகள் ஒரு தாளில் எழுதப்பட்டு அவரது கையில் மடித்து வைக்கப்பட்டிருந்தது.

இதன்பின் அவரது உடல், சோக இசையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுக மக்கள் வளைவுகளை நிறுவியிருந்தனர். மலர்களையும் தூவினர். அருட்திரு நெய்லர், ஆல்பர்ட் ஆகியோர் இறுதிச் சடங்குகளை நடத்தினர். இறுதியாக அவரது உடல், முழு மரியாதையுடன் புனித பேதுரு தேவாலயக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

படைப்புகள் பட்டியல் (பகுதியளவு)

தொகு
ஆண்டு தலைப்பு வகை
1800 பெத்தலகேம் குறவஞ்சி நாடகம்
ஞான நொண்டி நாடகம்
1809 சென்னப் பட்டணப் பிரவேசம்
1813-34 பேரின்பக் காதல் இறையியல் பனுவல்
1821 தியானப் புலம்பல் இறையியல் பனுவல்
1830 ஞானத்தச்ச நாடகம் நாடகம்
1837;

பதி.1885

ஆரணாதிந்தம் [3] இறையியல் பனுவல்
அறிவானந்தம்
ஆதியானந்தம்
ஞான அந்தாதி
ஞான ஏற்றப்பாட்டு
ஞானக் கும்மி
ஞான வழி
ஞானவுலா
செபமாலை
பராபரன் மாலை
பரம நீதி புராணம்
வண்ண சமுத்திரம்

பட்டங்கள்

தொகு
ஆண்டு பட்டம் வழங்கியோர் குறிப்பு
1808 வேத சிரோன்மணி தஞ்சை சபை
சுவிசேஷக் கவிராயர் தரங்கம்பாடி சபை ஞான நொண்டி நாடகத்துக்காக
1809 ஞானதீபக் கவிராயர் வேப்பேரி சபை பெத்தலகேம் குறவஞ்சி நாடகத்துக்காக
1815 வேத சாஸ்திரியார் திருச்சிராப்பள்ளி சபை பேரின்பக் காதல் நாடகத்துக்காக
வித்தகக் கவிஞர்
விவிலிய அறிஞர்
ஞான கவிச்சக்கரவர்த்தி

வழிமரபினர்

தொகு

வேதநாயகம் - முத்தம்மா இணையரின் வளர்ப்பு மகள் ஞானதீபம் (1811-1870) ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். தன் வளர்ப்புத் தந்தையின் இறைப்பணிகளில் அவருக்கு உறுதுணையாக இருந்தார். வேதநாயகம் எழுதிய ஒரு பனுவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 32-ஆம் அகவையில் தன் உறவினரான டேனியல் மங்கலம் பிள்ளை என்பவரைத் திருமணம் செய்து ஞானாகரம் என்ற மகளைப் பெற்றெடுத்தார்.

வேதநாயகம் - முத்தம்மா இணையருக்குப் பிறந்த மகன் ஞானசிகாமணி (1813-1877), பின்னாளில் இறையியல் பள்ளியில் பாதிரியார்களுக்குத் தமிழ் கற்பித்தார். மேசியா மகத்துவம் மற்றும் (இரண்டு மதங்களுக்கு இடையிலான உரையாடல்) என்ற நூல்களை இயற்றினார். பரவலாகப் பயணம் செய்து காலட்சேபங்களை நடத்தினார்.

வேதநாயகம் - வரோதயம்மாள் இணையருக்கு நோவா ஞானாதிக்கம் (1830-1902), எலியா தேவசிகாமணி (1834-1908) மற்றும் மனோன்மணி (மகள்) ஆகிய குழந்தைகள் பிறந்தனர். எலியா, தன் தந்தையின் காலட்சேபங்களுக்கு உதவினார்; பாடல்களை இயற்றினார்; சில சமயங்களில் தானே சமய உரையும் ஆற்றினார். நோவா ஞானதிக்கம், அருளம்மாள் என்பாரை மணந்து, வேதநாதம் என்ற மகனையும் பல மகள்களையும் பெற்றெடுத்தார். மனோன்மணி, தன் தந்தையின் சொற்பொழிவுகளில் பாடல்கள் பாடவும் விவிலியத்தை வாசிக்கவும் செய்தார். தன் 24-ஆம் அகவையில் மாசிலாமணி என்பவரை மணந்து வேதசாஸ்திரம் என்ற மகளைப் பெற்றார். 1861-இல் நாகப்பட்டினத்தில் ஆங்கிலம், தமிழ் மொழிகளைக் கற்பித்துக் கொண்டிருக்கையில் காலமானார்.

வேதநாயகத்தின் வழிமரபினர், ஏழாம் தலைமுறையாகத் தற்காலத்திலும் கிறித்துவப் பணியில் தொடர்கின்றனர்.[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Life of Christian Friedrich Swartz: Missionary to South India".
  2. "Brief History - Sastriars.org". www.sastriars.org. பார்க்கப்பட்ட நாள் 2024-09-18.
  3. தேவநேசன், தா.வி. (1956). "தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார்" (PDF).
  4. "Family Tree - Sastriars.org". www.sastriars.org. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  5. "Present Sastriars - Sastriars.org". www.sastriars.org. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  6. "Gamaz". gamaz-in.translate.goog. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சை_வேதநாயக_சாத்திரி&oldid=4153988" இலிருந்து மீள்விக்கப்பட்டது