தமிழ்நாடு காவல்துறை

தமிழக அரசு சார்ந்த அமைப்பு.
(தமிழக காவல் துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் குற்றங்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இஃது இந்தியாவில் ஐந்தாவது[2] பெரிய காவல்துறை ஆகும்.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல் துறையின் சின்னம்
தமிழ்நாடு காவல் துறையின் சின்னம்
குறிக்கோள்வாய்மையே வெல்லும்
துறையின் கண்ணோட்டம்
பணியாளர்கள்1,00,932
ஆண்டு வரவு செலவு திட்டம்7,749 கோடி (US$970 மில்லியன்) (2019–20 est.) [1]
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புதமிழ்நாடு, இந்தியா
தமிழ்நாடு காவல் துறையின் அதிகார வரம்பின் வரைபடம்
அளவு130,058 சதுர கிலோமீட்டர்கள் (50,216 sq mi)
மக்கள் தொகை7,21,38,958
சட்ட அதிகார வரம்புதமிழ்நாடு மாநிலம்
ஆட்சிக் குழுஉள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
Overviewed byஉள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, தமிழ்நாடு
தலைமையகம்டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004
துறை நிருவாகி
இணையத்தளம்
www.tnpolice.gov.in

வரலாறு

தொகு

முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்ப தொடங்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலும் 1888, ஏப்ரல் 12 , Governor-General -இன் ஒப்புதலும் 1888, சூன் 26 வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஓர் ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது. ஆண்கள் மட்டுமே பணியாற்றிவந்த தமிழ்நாடு காவல் துறையில் முதன்முதலில் 1973 இல் பெண்களும் சேர்த்துக்கொள்ளபட்டனர்.[3]

துறை அமைப்பு

தொகு

தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 1,21,215 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.

தமிழகத்தில் உள்ள 9 பெரிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர் , மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் , திருநெல்வேலி, திருப்பூர், ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.

தமிழகம் 38 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.

நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். இவர்களைத் தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.

அடுக்கதிகாரம் (Hierarchy)

தொகு

உயர் அதிகாரிகள்

தொகு
  • காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)
  • கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP)
  • காவல்துறைத் தலைவர் (IG)
  • காவல்துறைத் துணைத்தலைவர் (DIG)
  • காவல் கண்காணிப்பாளர் (SP)
  • கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP)
  • துணை போலீஸ் சூப்பிரண்டு (DSP)

துணை அதிகாரிகள்

தொகு

காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்

தொகு
 
சென்னை மாநகரக் குதிரைப்படைக் காவலர் பிரிவு-காவல் பணி மேற்கொள்ளுதல் (மவுன்டட் கார்ட்)
  1. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
  2. ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
  3. பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
  4. பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
  5. கடலோர காவல் துறை (Coastal Security Group)
  6. குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
  7. பொருளாதாரச் சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
  8. செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School)
  9. இரயில்வே காவல்துறை (Railways)
  10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
  11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
  12. குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
  13. போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
  14. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
  15. குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
  16. பயிற்சிப் பிரிவு (Training)

காவல்துறைப் பதவிகள்

தொகு

தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியில் இருப்பவர்களுக்கு பணிக்கேற்ற குறியீடுகள் அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் இடம் பெற்றிருக்கின்றன. அவை குறித்த அட்டவணை;

தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள்
பதவி பதவிச் சின்னம்
காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP) அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
 
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (ADGP) அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
 
காவல்துறைத் தலைவர் (IGP) ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
 
காவல்துறைத் துணைத்தலைவர் (DIG) அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
 
தேர்வுநிலை காவல் கண்காணிப்பாளர்

(SP) (Selection Grade)

அசோகா சின்னம், அதற்குக் கீழே இரண்டு நட்சத்திரம், அதற்குக் கீழே ஐபிஎஸ் என்ற ஆங்கில எழுத்து
 
காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
 
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் (Addl.SP) அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
 
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (ADSP) அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
 
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP) மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
 
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
 
ஆய்வாளர் (Inspector) மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
 
உதவி ஆய்வாளர் (Sub-Inspector) இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
 
சிறப்பு துணை ஆய்வாளர் (Special.Sub-Inspector) இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
 
தலைமைக் காவலர் (Head Constable) (HC) சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
 
முதல்நிலைக் காவலர் (PC-I) சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) பட்டை எதுவுமில்லை.

தமிழகத்தில் குற்றங்கள்

தொகு

தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாகக் குற்றங்கள் குறைந்து வருவதாகக் காவல்துறை தெரிவிக்கின்றது.

வ.எண் குற்றம் 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009
1 கொலை 1594 1647 1487 1389 1365 1273 1521 1630 1644
2 ஆதாயத்திற்காகக் கொலை 81 75 104 73 74 89 102 105 123
3 குழுக் கொள்ளை 158 178 95 72 73 95 88 100 97
4 வழிப்பறி 669 650 514 464 437 450 495 662 1144
5 வீட்டில் கொள்ளை 5957 5532 4849 4147 3738 3300 3717 3849 4221
6 திருட்டு 16940 18614 18213 17530 15851 13651 13217 15019 15712
7 மொத்தம் 25399 26696 25262 23675 21538 18859 19140 21365 22941

காவல்துறையில் பெண்கள்

தொகு

இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991–1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003–2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது

காவலர் பயிற்சிக் கல்லூரி

தொகு

காவலர்களுக்குப் பயிற்சி அளிக்க காவலர் பயிற்சிக் கல்லூரி (Police training college) சென்னை அசோக்நகரில் அமைந்துள்ளது. இங்குக் காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது.

போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம், தமிழ்நாடு

தொகு

போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம், தமிழ்நாட்டில் போதை மருந்துகள், கள்ளச் சாராயம், பாக்குடன் கலந்த புகையிலைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், போதை விற்பனையை தடுக்கவும் செயல்படுகிறது. இது தமிழ்நாடு காவல்துறையின் ஒரு சிறிய பிரிவாகும். இதன் தலைவராக சென்னை குற்றப்பிரிவின் உதவி தலைமை காவல் இயக்குநர் ஆவார்.

போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகத்தின் பலம்

தொகு

தற்போது மாநில போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகமானது ஒரு காவல் உதவி தலைமை காவல் அதிகாரி (டி ஐ ஜி) தலைமையில் செயல்படுகிறது. அவருக்கு உதவிட ஒரு காவல்துறை கண்காணிப்பாளர், 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 12 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 16 ஆய்வாளர்கள், 17 துணை-ஆய்வாளர்கள் மற்றும் 126 இதர காவலர்கள் உள்ளனர். இதன் அலகுகள் ஒரு ஆய்வாளர் தலைமையில் செயல்படுகிறது. ஒரு அலகில் 1 முதல் 4 மாவட்டங்கள் கொண்டுள்ளது.

தற்போது மாநிலத்தில் 15 போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியக அலகுகள் இயங்கி வருகிறது. இப்பிரிவுகளுக்கு உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமை தாங்குகிறார்கள்.

போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகத்தின் நோக்கங்கள்

தொகு

1985 போதைப் பொருள் மற்றும் மனநல மருந்துப் பொருட்கள் சட்டத்தை திறம்பட அமலாக்கத்தின் மூலம் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பதற்கும், போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களின் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்குமான சிறப்பு முகமை இதுவாகும். போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகத்தின் முக்கிய நோக்கம் போதைப் பொருட்கள் தொடர்பான உளவுத் தகவல்களைச் சேகரித்து, விற்பனை தொடர்பான தகவல்களை அமைப்பதாகும். , போதைப் பொருட்களைக் கொண்டு செல்வது மற்றும் வளர்ப்பது மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் மற்றும் தீவிர சோதனை நடத்துதல், கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்தல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தல் ஆகும். ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற கடலோரப் பகுதிகள் வழியாக இந்திய மீனவர்கள், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்கள் போதைப்பொருள் கடத்தல் இராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, காடுகளில் உருவாகும் சட்டவிரோத கஞ்சா போன்ற பயிர்களை பயிரிடுவதை ஒழிக்க நடவடிக்கை எடுப்பர்.

போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகத்தின் செயல்பாடுகள்

தொகு

கடந்த 2019, 2020 & 2021 ஆண்டுகளில் தமிழகத்தின் போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகப் பிரிவுகள் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 2541 வழக்குகளில் 2948 பேர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். உலர் கஞ்சா 16068, பச்சை கஞ்சா 2949 கிலோ கிராம், ஹெராயின் 2.439 கிலோ கிராம், கெட்டமைன் 7.439 கிலோ கிராம் அபின் 4.100 கிலோ, எல்.எஸ்.டி அஞ்சல் தலைகள் 0.053 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் 85.118 கி.கி., ஹஷிஷ் எண்ணெய் 1.002 கிலோ கிராம் சராஸ் 27.220 கிலோ கிராம கைப்பற்றியுள்ளனர்.

போதைப்பொருள் குற்றவாளிகளின் அடிக்கடி நடவடிக்கைகளைத் தடுக்க, அவர்கள் தமிழ்நாடு BDGIFSSV சட்டம் 1982இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக 47 போதைப்பொருள் குற்றவாளிகள் இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி/கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த்தி, போதைப்பொருட்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் போதைப்பொருட்களின் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் சூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

நீதிமன்றங்களால் தீர்க்கப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அழிக்க சிறப்பு முயற்சிகளை எடுத்துள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிசாவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா வருவதை குறைக்க, இக்குழுவின் தலைவராக, சென்னை குற்றப்பிரிவு உதவி தலைமை காவல் இயக்குநர் தலைமையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தகவமைத்துக் கொள்ளக்கூடியவர்கள் மற்றும் பாதைகளை மாற்றுவதன் மூலமும் போக்குவரத்து முறைகளை மாற்றுவதன் மூலமும் தடை வெற்றிக்கு எதிர்வினையாற்றுகின்றனர். தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி போன்ற கடலோரப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது. இதில் இந்திய மீனவர்கள், இலங்கையர், வணிகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகத்தினர் வனத்துறை, கடலோர காவல்படை மற்றும் பல போன்ற பிற அமலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து, போதைப்பொருள் கடத்தலின் பிற வழிகளைத் தடைசெய்கின்றனர்.[4]

விமர்சனங்கள்

தொகு

தமிழ்நாடு காவல்துறை மீது மனித உரிமை மீறல்கள், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், இலஞ்ச ஊழல் பரவல், அரசியல் மயமாக்கம் எனப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.[5][6][7] 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் காவல் நிலையங்களில் புகார் செய்யும்போது அதைப் பதிவு செய்யாத காவலர்கள் மீது வழக்கு பதியலாம் என்று டிஜீபிக்கு 8 கட்டளைகளைக் கொடுத்துள்ளது.[8] தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிவரும் காவல் கஷ்டடி[தெளிவுபடுத்துக] கொலைகள் காவல்துறைக்கு ஒரு பின்னடைவாக உள்ளது.

ஆதாரம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu Budget Analysis 2019–20" (PDF). prsindia.org. 2019.
  2. தமிழ்நாடு காவல்துறை இணையம்-தமிழ்நாடு காவல்துறைப் பற்றி பார்த்து பரணிடப்பட்ட நாள் 5. மே 2009
  3. "தமிழகத்தில் பொன்விழா காணும் 'பெண் போலீஸ்' - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 16-ம் தேதி விழா நடத்த திட்டம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
  4. NARCOTIC INTELLIGENCE BUREAU, CID OF TAMIL NADU
  5. Unlawful killings by the police in Tamil Nadu
  6. Report details police atrocities
  7. Rival's revenge in Tamil Nadu
  8. காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_காவல்துறை&oldid=4159045" இலிருந்து மீள்விக்கப்பட்டது