தொட்டில்
தொட்டில் (Bassinet) அல்லது தொட்டி என்பது சிறுகுழந்தைகளைப் பாதுகாப்பாகப் படுக்கவைக்கும் அமைப்பாகும். இது பலவகையான வடிவமைப்புகளில் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் வேட்டி அல்லது சீலைத்துணியை வீட்டில் ஒரு கொக்கியிலோ வயல்வெளிகளில் மரக்கிளையிலோ கட்டும் தூளி எனும் அமைப்பு பரவலானது. மரத்தினால் ஆன சிறு கட்டில் போன்ற அமைப்பும் உண்டு. அதில் நான்கு புறத்திலும் தடுப்பு இருக்கும். பெதுவாக இருபுறமும் மரக்கால் வைத்து உயர்த்தி வைத்திருப்பர். ஊஞ்சல் போல ஆட்டும் வசதியும் இருக்கலாம். பிரம்பு அல்லது மூங்கில் நாரைக் கொண்டு முடைந்த கூடை போன்ற அமைப்புகளும் உண்டு.
தொட்டில் என்னும் சொல் சங்க காலத்தில் இல்லை.[1] காமச்சுவை தரும் கணிகையின் வாயை ஒரு பாடல் ‘தொட்டி’ என்று குறிப்பிடுகிறது. [2] தூக்கணாங் குருவியின் கூண்டை ஒரு பாடல் ‘தூங்குகூடு’ எனக் குறிப்பிடுகறது. [3] இதனால் சங்க கால மக்கள் குழந்தையைத் தாலாட்டும் துணித்தொட்டிலைத் தூங்குகூடு என்று வழங்கினர் எனத் தெரிகிறது.
பயன்பாடு
தொகுகுழந்தைகள் பிறந்த முதல் ஆண்டில் மிகவும் மென்மையான உடலமைப்பைக் கொண்டிருப்பர். ஏதும் இடர் வந்தால் அவர்களால் அதைச் சொல்லவும் முடிவதில்லை. அந்தப் பருவத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு மிகவும் தேவையானது. மேலும் அக்குழந்தைகள் பகலிலும் இரவிலும் பெரும்பகுதி உறங்குவர். முழுநேரமும் பெரியவர்கள் உடனிருக்க முடிவதில்லை. தரையில் பாய்விரித்துப் படுக்க வைத்தால் சில வேளைகளில் எறும்புகள், பூரான் போன்றவை கடித்துவிட வாய்ப்புண்டு. கட்டில் மெத்தையில் படுக்க வைத்தால் உருண்டு விழ வாய்ப்புண்டு. இரவில் பெரியவர்களுடன் மெத்தையில் உறங்கினால் அவர்கள் தூக்கத்தில் தவறுதலாகக் குழந்தையின் மீது அழுத்திவிட நேரலாம். இந்தச் சிக்கல்களைத் தவிர்க்கவும் குழுந்தைகளின் சிறப்புத் தேவைகளுக்காகவும் அவர்களைத் தொட்டிலில் இடுகிறார்கள். பருத்தித்துணியில் தூளி கட்டுவது வெப்பப் பகுதிகளில் குழந்தையின் உடலுக்கு மென்மையாக இருக்கும். கூடவே அவர்களை அணைத்துள்ளது போல இருப்பதால் குழந்தைகள் அச்சமின்றி உறங்குவர். முன்னும் பின்னும் தூளியை ஆட்டி குழந்தையைத் தூங்க வைக்கும் வழக்கம் பரவலானது. ஆனால் இந்த அமைப்பு குறுகலாக இருப்பதாகவும் குழந்தையின் அசைவுகளைக் கட்டுப்படுத்துவதாகவும் அண்மையில் சிலர் கருதுகிறார்கள். இதற்கென குறுக்கே தொட்டில் கம்பு ஒன்றை வைத்து தொட்டில் துணியை அதில் முடிந்து அகலத்தை விரிப்பார்கள். குழந்தைகளின் பொழுதுபோக்குக்காக அதில் சில பொம்மைகளைத் தொங்க விடுவதுண்டு.
ஓரிடத்தில் இருக்கும் தொட்டில்களைத் தவிர பணியிடங்களுக்குக் கூடவே எடுத்துச் செல்லக் கூடிய தொட்டில்களும் வானூர்திகளில் பயணத்தின்போது குழந்தைகளைப் படுக்க வைக்கும் தொட்டில்களும் உள்ளன. அண்மையில் விற்கப்படும் சில தொட்டில்கள் தாமாகவே ஆடி குழந்தைகளை உறங்கவைக்கவும் செய்கின்றன. மருத்துவமனைகளில் தாயின் கட்டிலுக்கு அருகே இரும்புக் கம்பிகளை இணைத்துச் செய்த பெட்டி போன்ற அமைப்பையுடைய தொட்டில்களை வைத்திருப்பார்கள். சில குழந்தைகள் ஒன்பது திங்கள் கருப்பையில் இருக்காமல் முன்கூட்டியே பிறக்கும்போதும் பிற காரணங்களுக்காகவும் அவர்களை எல்லாப்புறமும் மூடிய கூண்டு போன்ற சிறப்பு அமைப்புகளில் வைத்திருப்பார்கள். அவற்றில் வெப்பம், உயிர்வளி (ஆக்ஃசிசன்) அளவு போன்றவற்றை நிலைப்படுத்தியிருப்பார்கள்.
கலை இலக்கியத்திலும் பொதுவாழ்விலும்
தொகுமாந்தர் வாழ்வியலில் குழந்தைப்பேறு முக்கிய இடம்பெற்றுள்ளதால் அதன் அடையாளமான தொட்டிலைப் பற்றிப் பல குறிப்புகள் அன்றாட வாழ்விலும் கலைகளிலும் உள்ளன. பல உலக மொழிகளிலும் மாந்த நாகரிகம் தோன்றிச் செழித்த இடங்களைக் குறிப்பிடும்போது நாகரிகத்தின் தொட்டில் (Cradle of civilisation) என்பர்.[4][5][6][7] எடுத்துக்காட்டாக பண்டைத் திராவிட நாகரிகத்தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்சநல்லூரில் இருந்தது எனத் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.[8][9] தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் எனும் முதுமொழி இளவயதில் வரும் சில பழக்கங்கள் இறுதிவரை மாறா என்ற பொருளில் வழங்குகிறது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடலொன்றில் கிடக்கிற றொட்டில் கிழிய வுதைத்திடும் எனும் வரியில் தூளியில் இருக்கும் குழந்தையைப் பற்றிய குறிப்பு உள்ளது.[10] சிறுதொட்டிலை விடு என்ற பெயரிலும் பெரியாழ்வார் வழங்கியுள்ளார்.[11] 1991-ஆம் ஆண்டு வெளிவந்த சின்ன தம்பி திரைப்படத்தில் வாலி இயற்றிய தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே என்ற பாடலின் மையமாகத் தொட்டிற் குழந்தை உள்ளது.[12][13] நாட்டுப்புறப் பாடல்களில் ஒரு சிறப்பான இடம்பற்றுள்ள தாலாட்டு என்பது தால் எனும் தொட்டிலை ஆட்டிக் கொண்டே குழந்தையை உறங்கச் செய்யும் பாடல்வகை.[14] தொட்டில் பற்றிய தாலாட்டுப்பாடல் ஒன்று பின்வருவது:
“ |
|
” |
குழந்தை பிறப்பை அடுத்த தமிழர் சடங்குகளிலும் தொட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்ததும் பெரியவர்களை வைத்துச் செய்யும் சேனை தொடுதலை அடுத்து தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.
வெவ்வேறு தொட்டில் அமைப்புகள்
தொகு-
சேலையால் கட்டப்படும் தொட்டிலில் உறங்கும் குழந்தை, தமிழகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ தொட்டி
- ↑ பரிபாடல் 20 அடி 51
- ↑ தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப (புறநானூறு 225)
- ↑ [1] The Near East: Archaeology in the "Cradle of Civilization", Charles Keith Maisels, Routledge 1993, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-04742-0
- ↑ "Indus River Valley Civilizations". history-world.org. Archived from the original on 2012-06-09. பார்க்கப்பட்ட நாள் 2008-06-10.
- ↑ "Ancient China: The Yellow River Culture". www.wsu.edu. Archived from the original on 1999-11-17. பார்க்கப்பட்ட நாள் 2008-06-10.
- ↑ Mann, Charles C. (2006) [2005]. 1491: New Revelations of the Americas Before Columbus. Vintage Books. pp. 199–212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4000-3205-9.
- ↑ Boulanger, Chantal (1993). In the Kingdom of Nataraja, a guide to the temples, beliefs and people of Tamil Nadu (PDF). சென்னை: தென்னிந்திய சைவ சித்தாந்தப் பதிப்புக் கழகம் (நெல்லை). pp. 2, 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9661496-2-9.
- ↑ "Exclusive TV channel for Tamil culture sought". த இந்து (சென்னை). 2006-06-23 இம் மூலத்தில் இருந்து 2012-01-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120105063951/http://www.hindu.com/2006/06/23/stories/2006062304320600.htm. பார்த்த நாள்: சூலை 01, 2013.
- ↑ "தொட்டில்". பேரகரமுதலி. (1936). சென்னைப் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 2013-06-30. “கிடக்கிற் றொட்டில் கிழிய வுதைத்திடும் (திவ். பெரியாழ். 1, 1, 9)” [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "விடுதாதல்". தமிழ்ப் பேரகரமுதலி. (1936). சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது சூலை 01, 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "தமிழிசை.காம்". Archived from the original on 2013-03-15. பார்க்கப்பட்ட நாள் 2013-06-30.
தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
- ↑ சின்ன தம்பி: தூளியிலே ஆடவந்த[திரைப்படப் பாடல்].
- ↑ "கண்ணே கண்ணுறங்கு". கீற்று. செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 2013-06-30.
{{cite web}}
:|first=
missing|last=
(help); Check date values in:|date=
(help)