சின்னத் தம்பி

(சின்ன தம்பி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சின்ன தம்பி 1992 ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம். இதில் பிரபு, குஷ்பூ, கவுண்டமணி நடித்திருந்தனர்.

சின்னத் தம்பி
சுவரொட்டி
இயக்கம்பி. வாசு
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
குஷ்பூ
மனோரமா
கவுண்டமணி
ராதா ரவி
ஓட்டம்2.5 மணி நேரம்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

வசதி படைத்த குடும்பத்தில் மூன்று சகோதரர்களின் செல்லத் தங்கையான நந்தினி தான் கதையின் நாயகி. நாயகனின் இறந்துபோன தந்தை ஒரு பாடகர். நாயகியின் பிறந்தநாளன்றும், பூப்புனிதநீராட்டுவிழாவிலும் நாயகனை பாட அழைக்கப்படுகிறார்.

மூன்று சகோதரர்களும் நந்தினியை தங்கள் சொந்த மகள் போல வளர்க்கின்றனர். தங்கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி திளைக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால், சோதிடர் ஒருவர், நாயகி தன் சகோதரர்களின் விருப்பத்திற்கு மாறாக, தன் விருப்பத்திற்கு உரியவனையே திருமணம் செய்து கொள்வாள் என்று கணித்துக் கூறுகிறார். இது நாயகியின் சகோதரர்களை கோபப்படுத்துகிறது. இது நடப்பதை தடுக்க, நாயகியை வீட்டுக்காவலில் வைத்து வளர்க்கின்றனர். கல்வி உட்பட அனைத்தும் வீட்டிலேயே நடைபெறுகிறது. நாயகி ஊருக்குள் வரும்போது மற்றவர் சந்தித்தாலோ, பேசினாலோ, நாயகியின் சகோதரர்களால் தண்டிக்கப்படுகின்றனர்.

நாயகனான சின்னத்தம்பி, தன் ஏழை விதவைத்தாயால் வளர்க்கப்படுகிறார். அப்பாவியான குணமுடைய இவர், பாட்டுப்பாடி பொழுதைக் கழிக்கிறார். நாயகி நந்தினி பருவமடைய, அந்த நிகழ்வுக்கும் பாட சின்னத்தம்பி அழைக்கப்படுகிறான். அப்போது ''அரைத்த சந்தனம்'' என்ற பாடலைப் பாடுகிறார். நந்தினியின் ஊழியர்களாகவும் மெய்க்காப்பாளர்களாகவும் சில ஆண்கள் இருந்தனர்.

ஒரு நாள் சின்னத்தம்பி நந்தினியின் மெய்க்காப்பாளர்களோடு சண்டையிட்டு அவர்களைத் தோற்கடிக்கிறான். நந்தினியின் மெய்க்காப்பாளராக இருப்பதற்கு சின்னதம்பியே சரியானவன் என்று நினைத்த நந்தினியின் அண்ணன் அவனுக்கு வேலை கொடுக்கிறார். தனிமையில் வளர்ந்த நந்தினி, வெளியில் சுற்றிப்பார்க்க நினைக்கிறாள், அதனால் அவள் தன் அண்ணன்களுக்குத் தெரியாமல் ஊரைச் சுற்றிப்பார்க்க சின்னத்தம்பியுடன் செல்கிறாள்.

ஒரு நாள், நந்தினியைப் பார்த்த ஒரு தொழிற்சாலை தொழிலாளி தண்டிக்கப்படுகிறான். இதனால் அவமானமடைந்த அந்தத் தொழிலாளி அந்த சகோதரர்களுக்குச் சொந்தமான புதிய தொழிற்சாலையின் திறப்புவிழாவில் நந்தினியை கொல்லத் திட்டமிட்டுள்ளார். சின்னத் தம்பி அந்த சதித்திட்டத்தைக் அறிந்து, சரியான நேரத்தில் நந்தினியை காப்பாற்றுகிறான். நடந்ததை அறியாத நாயகியின் சகோதரர்கள், சின்னத்தம்பி நந்தினியைத் தொட்டு தூக்கியதைக் கண்டு கோபமடைந்து அடிக்கின்றனர். நந்தினி அவர்களைத் தடுத்து நிறுத்தி, உண்மைகளைச் சொல்கிறாள். பிறகு சின்னத தம்பி தனது வேலையை விட்டு விலகவே, அன்று இரவு நந்தினி சின்னத்தம்பியை சந்திப்பதற்கும், மன்னிப்புக் கேட்கவும், அவனை வேலைக்கு வரும்படி அழைக்கவும் செல்கிறாள். சின்னத்​​தம்பி அவளது சகோதரர்களின் வன்முறையைக் கண்டு அவர்களுடன் இருக்க விரும்பவில்லை என மறுக்கிறார். இதில் இருந்து தப்பிக்க தனக்கு தாலி கட்டுமாறு நந்தினி கூறுகிறாள். அப்பாவியான சின்னத்தம்பியும், திருமணம் செய்கிறோம் என்று அறியாமல் தாலி கட்டிவிடுகிறான்.

சின்னத தம்பி மீண்டும் வேலைக்கு வருகிறான், நந்தினியின் உயிரைக் காப்பாற்றியதற்காக சகோதரர்கள் சின்னத்தம்பிக்கு விருந்து அளிக்கின்றனர். நடந்ததை அறியாக நாயகியின் சகோதரர்கள், நாயகிக்கு திருமணம் செய்விக்க முன்வருகின்றனர். சுமங்கலி பூஜை அன்று அனைத்துப் பெண்கள் முன்பும் சின்னத்தம்பியிடம் ’நமக்கு நடந்தது திருமணம்’ என்று புரியவைக்க முயல்கிறாள் நாயகி நந்தினி. இதைக் கண்ட அவளது அண்ணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, நந்தினியின் அண்ணன்கள் அவளுக்கு மணமகனை பார்த்துவிட்டதாகவும் அவரைப் பற்றி சின்னத்தம்பியைப் பாடுமாறும் கூற, நாயகன் பாட, உணர்ச்சிவசப்பட்ட நாயகி நாயகனை கட்டித்தழுவுகிறார். நடந்தவற்றை அறிந்த ந்நந்தினியின் மூத்த அண்ணன் சின்னத்தம்பியை அவளுக்கு ஊரறிய திருமணம் செய்து வைப்பதாக பொய் கூறுகிறார். இதனால் நந்தினி மகிழ்கிறாள். பிறகு அவள் சகோதரர்களோ, சின்னத்தம்பியைக் கொன்றுவிட்டால் அவன் கட்டிய தாலி தானாக இறங்கிவிடும் என்று நினைக்கின்றனர்.

நந்தினியின் சகோதரர்களை நினைத்து பயந்த சின்னத்தம்பியின் தாய் அவனை மறைவாக இருக்குமாறு கூறுகிறார். நந்தினியின் சகோதரர்கள் சின்னத்தம்பியை தேடி வர, சின்னத்தம்பியின் தாய் தன் மகன் இருக்கும் இடத்தைக் கூற மறுக்க, சித்திரவதைக்கு ஆளாகிறார். நடந்ததை அறிந்த நந்தினி, மனமுடைகிறாள். சின்னத்தம்பி, தன் தாயை அவமானப்படுத்திய அந்த சகோதரர்களை அடித்து உதைக்க, பிறகு அவனும் அவன் அம்மாவும் ஊரைவிட்டுச் செல்ல முடிவெடுத்தனர். இதை அறிந்த நந்தினி மயங்கிவிடவே, மனந்திரும்பியை நந்தினியின் அண்ணன்கள் சின்னத்தம்பியின் தாயிடம் மன்னிப்புக் கேட்கின்றனர். மனமகிழ்ந்த நாயகன் பாட்டுப் பாட, நாயகி எழுகிறாள். இருவரும் இணைவதாக கதை முடிகிறது.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இயக்குநர் பி. வாசுவின் மகனான நடிகர் சக்தி முதன்முறையாக இப்படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்திருந்தார்.[1] இப்படம் பி. வாசு, நடிகர் பிரபு இருவரும் என் தங்கச்சி படிச்சவ (1988), மற்றும் பிள்ளைக்காக (1989) படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படமாகும்.[2]

பாடல்கள் தொகு

இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இத்திரைப்படத்தில் 35 நிமிடங்கள் இடம் பெற்றன. அனைத்துப் பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[3][4]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 "தூளியிலே ஆட வந்த 1" சித்ரா வாலி 2:40
2 "தூளியிலே ஆட வந்த 2" மனோ வாலி 4:38
3 "போவோமா ஊர்கோலம்" சுவர்ணலதா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 4:44
4 "அட உச்சந்தல" மனோ வாலி 4:58
5 "குயிலப் புடிச்சி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 4:46
6 "அரைச்ச சந்தனம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 4:52
7 "நீ எங்கே என் அன்பே" சுவர்ணலதா கங்கை அமரன் 5:04
8 "தூளியிலே ஆட வந்த 3" மனோ வாலி 1.52

பெற்ற விருதுகள் தொகு

விருதுகள் வகை பரிந்துரை முடிவு சான்று
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் சிறந்த திரைப்படம் கே. பாலு வெற்றி [5]
சிறந்த தமிழ் இயக்குநர் பி. வாசு
சிறந்த நடிகை குஷ்பூ
சிறந்த நகைச்சுவை நடிகர் - தமிழ் கவுண்டமணி
சிறந்த பின்னணிப் பாடகர் - தமிழ் மனோ
சிறந்த பின்னணிப் பாடகி - தமிழ் சுவர்ணலதா
சிறந்த ஒளிப்பதிவாளர் டி. கே. எஸ். பாபு
பிலிம்பேர் விருதுகள் சிறந்த தமிழ் திரைப்படம் கே. பாலு [6]
தமிழக அரசு விருதுகள் சிறந்த திரைப்படம் (முதல் பரிசு) கே. பாலு [7][8][9]
சிறந்த இயக்குநர் பி. வாசு
சிறந்த நடிகர் பிரபு
சிறந்த நடிகை குஷ்பூ
சிறந்த பின்னணிப் பாடகர் மனோ
சிறந்த பின்னணிப் பாடகி சுவர்ணலதா
சிறந்த ஒளிப்பதிவாளர் டி.கே. எஸ். பாபு

மறுஆக்கங்கள் தொகு

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் இதர இந்திய மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் இயக்குநர்
1991 ராமாச்சாரி கன்னடம் வி. ரவிச்சந்திரன், மாலாஸ்ரீ டி. ராஜேந்திர பாபு
1992 சந்தி தெலுங்கு வெங்கடேஷ், மீனா, நாசர் ரவி ராஜா பினிசெட்டி
1993 ஆனாரி இந்தி வெங்கடேஷ், கரீஷ்மா கபூர், சுரேஷ் ஓபராய் முரளி மோகன் ராவ்

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னத்_தம்பி&oldid=3732721" இருந்து மீள்விக்கப்பட்டது