பகுப்பு பேச்சு:இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள்
இந்தப் பகுப்பில் உள்ள பல கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை குறித்து எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது.
பொதுவாக, பல கட்டுரைகளில் காணப்படும் தன்மை:
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011 என்னும் ஒரே ஒரு நூலை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளது. இவர்களின் குறிப்பிடத்தக்க தன்மை குறித்து வேறு ஆதாரங்கள் உள்ளனவா?
- இவர்களின் பிறப்பு, இருப்பிடம், அலுவல் பணி தவிர எழுத்தாளர் என்ற முறையில் குறிப்பிடத்தக்கவர்களின் எழுத்துப் பணி பற்றிய குறிப்புகள் இல்லை.
கட்டுரையில் காணப்படும் பிற குறைகள்:
- பொத்தாம் பொதுவான விளக்கங்கள். (எ.கா. - இயல்பாக கவி பாடும் ஆற்றல் இவருக்குண்டு என்று எஸ். எம். முஹம்மது ஜக்கரிய்யா கூறுகிறது. பி. சாகுல் ஹமீது சாதனையாளர் விருது பெற்றார் என்கிறது. எங்கிருந்து பெற்றார், யார் அளித்தார் என்பது போன்ற விவரங்கள் இல்லை.
- தெரு முகவரி வரை இருப்பிடத் தகவல் தருவது தேவை அற்றது. (எ.கா. - ஏ. கே. முஹம்மது யாசீன், எம். என். முஹம்மது அபூபக்கர்)
கிட்டத்தட்ட அனைத்துக் கட்டுரைகளும் இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011 என்ற ஒரே ஒரு நூலை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளமையால் நூலில் வேறு கூடுதல் தகவல் உள்ளதா, இப்படி ஒட்டு மொத்தமாக ஒரு நூலை அடிப்படையாக வைத்து எழுதுவது காப்புரிமைச் சிக்கல் ஆகுமா என்று அறிய விரும்புகிறேன்.
நீக்கல் பரிந்துரை
ஏ. கே. முஹம்மது யாசீன் என்னும் ஒரு கட்டுரையில் உள்ள தரவுகளை மட்டும் ஆய்ந்தோம் என்றால்,
- பெயர்
- பிறந்த நாள்
- முகவரி
- அலுவல் பணி, பொத்தாம் பொதுவான விளக்கங்கள். (எ.கா. நிதி ஆலோசகரும், இலக்கிய ஆர்வலரும், சமூகசேவகருமாவார். ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.)
- உசாத்துணை
இதில் எங்குமே எழுத்துப் பணி இல்லை.
ஒருவரை விளையாட்டு வீரர் என்று அறிமுகப்படுத்தினால், அவரது விளையாட்டு வாழ்க்கையைப் பற்றிய தகவல், தரவுகளை அந்தக் கட்டுரை கொண்டிருக்க வேண்டும். அதே போலவே எழுத்தாளர்களின் கட்டுரையும். இத்தரவுகளின் அடிப்படையிலேயே அவர் குறிப்பிட்டத்தக்கவரா இல்லையா என்று முடிவெடுக்க முடியும். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானால் நூல் அச்சடித்து என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எனவே, ஒரே ஒரு நூலை ஆதாரமாக வைத்து இது போன்ற தரவற்ற கட்டுரைகளை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, எழுத்துப் பணி பற்றிய தரவு இல்லாத கட்டுரைகளை நீக்கக் கோருகிறேன்--இரவி 13:30, 25 சனவரி 2012 (UTC)
- ஒற்றை நூலில் இருந்து எடுத்துத் தருவது பதிப்புரிமைச் சிக்கல் ஆகாது. தகவல்களை மூலநூலில் உள்ளபடி அப்படியே படியெடுத்தால் தான் பதிப்புரிமைச் சிக்கல் வரும் (சொல் வரிசை உட்பட). மற்றபடி, தகவல்கள் ஒரு நூலில் இருந்தாலும் பல நூல்களில் இருந்தாலும் அப்படியே படியெடுக்காத வரை பதிப்புரிமை சிக்கல் கிடையாது (ஏனெனில் தகவல்களுக்கு பதிப்புரிமை கிடையாது, அவற்றை வரிசைப்படுத்தும் முறைக்கே உண்டு)
- ஆங்கில விக்கியின் notability criteria வைக் கொண்டு நோக்கினால் "if a print encyclopedia/reference work deems a person notable, wikipedia should deem him notable" என்பார்கள். நாம் அதனையே பின்பற்றலாம். பல நூல்களில் இருந்து உசாத்துணை வேண்டுமென்று கோரத்தேவையில்லை.--Sodabot 13:42, 25 சனவரி 2012 (UTC)
//இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011//
1. இந்நூல் நீங்கள் குறிப்பிடும் print encyclopedia/reference work என்ற அடிப்படையில் கீழ் வருமா? ஒரு நூல் இப்படி கருதப்படுவதற்கான வரையறை என்ன? 2. ஒருவர் என்ன எழுதினார் என்றே குறிப்பு இல்லாத நிலையில் அவரை எப்படி குறிப்பிடத்தக்க எழுத்தாளர் என்று ஏற்றுக் கொள்வது? இதே போன்று அறிவியலாளர், அரசியலாளர் பற்றிய கட்டுரை இருந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? முதன்மைத் தரவுக்குப் புறம்பான மற்ற தகவல்களை இக்கட்டுரையில் இருந்து நீக்கினால், கட்டுரையில் ஒன்றுமே இருக்காது. 3. தரவுக்குப் பதிப்புரிமைச் சிக்கல் இல்லை தான். ஆனால், இந்தத் தரவுகளைத் தவிர அந்நூலில் எழுத்தாளர்களைப் பற்றிய கூடுதல் தகவல் உள்ளதா? இல்லை என்றால், நூலைப் பல துணுக்குகளாக மாற்றி இடுவதற்குச் சமமே.--இரவி 14:12, 25 சனவரி 2012 (UTC)
என்ன எழுதினார்கள் என்றே குறிப்பிடப்படாத அனைத்துக் கட்டுரைகளையும் நீக்குவதற்குப் பரிந்துரைத்துள்ளேன். மறுப்புள்ளவர்கள் தெரிவிக்கவும். நன்றி --இரவி 20:18, 25 சனவரி 2012 (UTC)
- //3. தரவுக்குப் பதிப்புரிமைச் சிக்கல் இல்லை தான். ஆனால், இந்தத் தரவுகளைத் தவிர அந்நூலில் எழுத்தாளர்களைப் பற்றிய கூடுதல் தகவல் உள்ளதா? இல்லை என்றால், நூலைப் பல துணுக்குகளாக மாற்றி இடுவதற்குச் சமமே.-// ட்
- இப்படி பல துணுக்குகளாய்ப் பிரித்து இடுவ்தில் எந்தப் பதிப்புரிமைச் சிக்கலும் கிடையாது. தரவுகள் தவிர வேறு எதுவும் இல்லையெனில் நூலாசிரியர்களிடம் மிஞ்சுவது ”வெளிப்பாடு” (presentation of data) மட்டும். வெளிப்படும் முறையை மாற்றி, தரவுகளை வேறு முறையில் பதிப்பித்தால் பதிப்புரிமை தடை கிடையாது, மாற்றி வெளிப்படுத்தும் முறைக்கு அவர்களால் பதிப்புரிமையும் கோர இயலாது.--சோடாபாட்டில்உரையாடுக 20:24, 25 சனவரி 2012 (UTC)
பதிப்புரிமைச் சிக்கல் பற்றி தெளிவுபடுத்தியமைக்கு நன்றி--இரவி 20:31, 25 சனவரி 2012 (UTC)
- 1.இதுவரை தமிழ் விக்கிப்பீடியா பேணி வந்திருக்கும் தரவுகள்/குறிப்பிடத்தக்கமை வழக்கங்களைப் பார்க்கையில் இந்நூல் கண்டிப்பாக "reference work" தான். பழைய உரையாடல்களில் “inclusionism" இருக்க வேண்டும் என்று இணக்க முடிவுள்ளதைக் கண்டிருக்கிறேன். கடுமையான குறிப்பிடத்தக்கமை விதிகள் கொண்ட ஆங்கில விக்கிப்பீடியாவின் விதிகளில் படி vanity publishing இல்லாத அனைத்தும் ஏற்கக்கூடிய தரவுகளே
- 2 இதற்குப் பொதுவான பதில் சொல்ல இயலாது. ஒவ்வொரு கட்டுரையாக ஆராய்ந்து என்ன இருக்கிறது, மேம்படுத்த முடியுமா என்று பார்த்து தான் சொல்ல முடியும். ஏற்கனவே அச்சில் ஒரு நூலில் இடம் பெற்று விட்டதே ஒருவர் குறிப்பிடத்தக்கமைக்கான முதல் வரையறையறைத் தாண்டி விட்டார் என்பது பொருள். முதன்மைத் தரவுகளை நீக்கிவிட்டால் வேறொன்றும் இருக்காது என்ற பெயர்களை மட்டும் பட்டியலிட்டு அப்பட்டியலுக்கு அக்கட்டுரைகளை வழிமாற்றி விடலாம். இதுவே ஆங்கில விக்கியில் கடைபிடிக்கிறார்கள்.
- 3.இப்படி பல துணுக்குகளாய்ப் பிரித்து இடுவ்தில் எந்தப் பதிப்புரிமைச் சிக்கலும் கிடையாது. தரவுகள் தவிர வேறு எதுவும் இல்லையெனில் நூலாசிரியர்களிடம் மிஞ்சுவது ”வெளிப்பாடு” (presentation of data) மட்டும். வெளிப்படும் முறையை மாற்றி, தரவுகளை வேறு முறையில் பதிப்பித்தால் பதிப்புரிமை தடை கிடையாது, மாற்றி வெளிப்படுத்தும் முறைக்கு அவர்களால் பதிப்புரிமையும் கோர இயலாது. வாழ்வியல் களஞ்சியம் போன்ற நூல்களை இதே போல் பிரித்து ஏற்கனவே தமிழ் விக்கியில் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இது போல் எழுதப்பட்டுள்ளன. அவையும் பதிப்புரிமை மீறல் ஆகா--சோடாபாட்டில்உரையாடுக 20:24, 25 சனவரி 2012 (UTC)
inclusionismல் எனக்கும் இணக்கமுண்டு. ஆனால், ஒருவர் எதற்காக குறிப்பிடப்படுகிறாரோ அதற்கான அடிப்படை தரவாவது இருக்க வேண்டும். abc என்னும் ஒருவர் இந்த ஆண்டு பிறந்தார், இந்தத் தெருவில் வாழ்கிறார், அவருக்கு இன்னின்ன பணிகளில் ஆர்வம் உண்டு என்று சொல்லி விட்டு அவரை வடபழனி அறிவியலாளர்கள் பகுப்பில் இட்டால் ஏற்றுக் கொள்வீர்களா? அதே போல் தாம் இந்தக் கட்டுரைகள் எழுப்பட்டுள்ளன. ஒருவர் இந்திய இசுலாமிய எழுத்தாளர் என்ற பகுப்புக்குள் வருவதற்கு முன் இந்தியர், இசுலாமியர் என்ற அடையாளத்தையும் தாண்டி எழுத்தாளர் என்ற அளவில் குறிப்பிடத்தக்கமை இருக்க வேண்டும். ஒருவர் எழுத்தாளரா இல்லையா குறிப்பிடத்தக்கவரா என்பதை அவரது எழுத்தாக்கப் பணியை வைத்துத் தான் அறிய முடியும். இந்த ஆண்டு பிறந்து இந்தத் தெருவில் வாழ்பவர் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரா என்று எப்படி ஆய்வது?அவரைப் பற்றி ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் ஒப்புக் கொள்ள முடியாது. //இதுவரை தமிழ் விக்கிப்பீடியா பேணி வந்திருக்கும் தரவுகள்/குறிப்பிடத்தக்கமை வழக்கங்களைப் பார்க்கையில் இந்நூல் கண்டிப்பாக "reference work" தான். // இந்த அடிப்படையில் இது போன்ற கட்டுரைகளை ஏற்றுக் கொள்வது ஆபத்தான போக்காக முடியும். தமிழ்நாட்டில் எத்தனைப் பதிப்பகங்கள் உள்ளன, அவற்றின் தரம் என்ன, ஊருக்கு எத்தனைக் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்... --இரவி 20:49, 25 சனவரி 2012 (UTC)
- இது காயல்பட்டினம் அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாட்டில் வெளியிடப்பட்டது” என்று புன்னியாமீன் அவரது பேச்சுப்பக்கத்தில் சொல்லியுள்ளார். இது vanity publishing கிடையாது என்பது தெளிவாகிறது. என்னைப் பொறுத்தவரை இது தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட ஒரு முஸ்லிம் எழுத்தாளர் who's who என்பதில் ஐயமில்லை. இவற்றைப் போல பல மலர்கள்/தொகுப்புகள் பார்த்திருக்கிறேன். “ தமிழ்நாட்டில் யார் வேண்டுமானால் நூல் அச்சடித்து என்ன வேண்டுமானாலும் எழுதலாம்” என்று கொள்வோமெனில் தமிழ்நாட்டில் அச்சான எந்த நூலையும் ஐயத்துக்குள்ளாக்கலாம். தமிழ்நாட்டில் வெளியான எந்த நூலையும் ஆதாரமாகக் கொண்டு கட்டுரை எழுத இயலாது. ”தமிழ்நாட்டில் எத்தனைப் பதிப்பகங்கள் உள்ளன, அவற்றின் தரம் என்ன, ஊருக்கு எத்தனைக் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்..” இவர்களில் பலரும் தமிழ் விக்கியில் ஏற்கனவே உள்ளனர். அதற்காக தமிழில் வெளியான பல எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் பரவலாக அறியப்படுவார்கள், பேரைச் சொன்னவுடன் தெரியுமளவுக்கு இருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க இயலாது. “பதிப்பகங்களும் தரங்களும்” பற்றி உங்களுடைய கண்ணோட்டம் அதுவாக இருக்கலாம். அதற்காகத் தான் அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் ”நாம் என்ன அறிவோம்” என்பதைத் தவிர்த்து “மூன்றாம் நிலை தரவுகளில் உள்ளனவா” என்ற கேள்வியை வினவுகின்றன. இது ஒரு ஏற்கத்தக்க மூன்றாம் நிலைத் தரவில் வெளியான தகவல், அதனை இங்கு இடுவதில் எந்தத் சிக்கலும் இல்லை. விக்கிப்பீடியா மூன்றாம் நிலைத் தரவுகளில் தொகுப்பே. சொந்த ஆய்வுக் கூடமல்ல. ஒருவர் எழுத்தாளர் என்று ஒரு நூலில் உள்ளது. அந்நூல் நமது Reliable Source வரையறைக்கு உட்பட்டது. அது போதும் சேர்த்துக் கொள்ள. மேலதிகத் தகவல்கள் இல்லையெனில் பட்டியலாக்கி வழிமாற்றி விட்டுப் போகலாம். “ஆபத்தான போக்காக முடியும்” இதைத் தான் அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களும் பல அளவுகளில் செய்து வருகின்றன. இதில் ஆபத்து எங்கிருந்து வருமெனத் தெரியவில்லை--சோடாபாட்டில்உரையாடுக 21:02, 25 சனவரி 2012 (UTC)
- இந்தத் தெருவில் வாழ்கிறார், அவருக்கு இன்னின்ன பணிகளில் ஆர்வம் உண்டு என்று சொல்லி விட்டு அவரை வடபழனி அறிவியலாளர்கள் பகுப்பில் இட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?
- அவரது பெயர் ”சென்னை அறிவியலாளர்கள் மாநாட்டில்” வெளியிடப்பட்ட “வடபழனி அறிவியலாளர்கள் பட்டியல்” என்ற நூலில் இடம்பெற்றிருந்தால் ஏற்றுக் கொள்ளத்தான் செய்வேன். ”எனக்குத் தெரியாதா, தமிழ்நாட்டில் என்ன மாதிரி அறிவியல் இருக்கிறது அறிவியலாளர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்லமாட்டேன். இதே நூலை உசாத்துணையாகக் கொண்டு எழுதப்பட்ட பிற எழுத்தாளர்களில் நம்பகத்தன்மை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கும் போது (எழுத்துப்பணி பற்றிய குறிப்புகள் இடம் பெறுவதால்), அந்நூல் எழுத்துப்பணி பற்றி குறிப்புகள் இல்லாமல் இன்னொருவரை எழுத்தாளர் என்று சொல்வதை எற்றுக்கொள்ள எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. கட்டுரை தனித்து நிற்க தரவுகள் போதா என்ற வாதம் வேறு - அதை ஏற்றுக் கொள்கிறேன். அதற்காகத் தான் பட்டியலாக்கி வழிமாற்றலாம் என்கிறேன். (பிற பெரிய விக்கிகளில் செய்யப்படுவது போன்றே)--சோடாபாட்டில்உரையாடுக 21:13, 25 சனவரி 2012 (UTC)
சோடாபாட்டில், இந்நூல் காயல்பட்டினம் அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாட்டில் வெளியிடப்பட்டது. தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்படிருந்தால் எழுத்தாளர் என்பதற்கு நம்பகத்தன்மை கூடும். இசுலாமியத் தமிழிலக்கியம் என்னும் போது பொதுவான குறிப்பிடத்தக்கமையில் சாய்வு இருக்க வாய்ப்புண்டு. எழுத்தாளர்களில் யார் இசுலாமியர் என்று பார்த்துப் பகுப்பு இடுவது வேறு. இசுலாமியர் என்பதற்காகவே ஒருவரை எழுத்தாளராக முன்வைப்பது வேறு.
//இதே நூலை உசாத்துணையாகக் கொண்டு எழுதப்பட்ட பிற எழுத்தாளர்களில் நம்பகத்தன்மை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கும் போது (எழுத்துப்பணி பற்றிய குறிப்புகள் இடம் பெறுவதால்),//
inclusionism, இணக்க முடிவுக்கு உடன்பட்டு எழுத்தாக்கம் பற்றிய குறிப்புகள் உள்ள கட்டுரைகளை மட்டுமாவது இப்போது ஏற்றுக் கொள்ளலாம். ஏன் என்றால், அவர்கள் எழுத்தாக்கங்களின் அடிப்படையில் அவர்களின் குறிப்பிடத்தக்கமையை உறுதி செய்ய முடியும். எனவே, இக்கட்டுரைகளை ஏற்றுக் கொள்வதற்கு எழுத்தாக்கமே காரணமே அன்றி, உசாத்துணை நூல் காரணம் அன்று. எனவே, அதே உசாத்துணை நூலில் உள்ள மற்ற கட்டுரைகளை ஏன் ஏற்கக் கூடாது என்று வாதம் எழாது.
பி.கு: அருள் கூர்ந்து, இதை இசுலாம், இசுலாமிய எழுத்தாளர்களுக்கு எதிரான செயற்பாடாக யாரும் கருதி விட வேண்டாம். எந்த நாடு, சமயமாக இருந்தாலும் இங்குள்ள கருத்துகள் பொருந்தும்--இரவி 21:25, 25 சனவரி 2012 (UTC)
தகவல் குறிப்பிடத்தக்கதா, போதுமான அடிப்படைத் தரவுகள் உள்ளனவா என்பதே இப்போது பிரச்சினை. எல்லா கட்டுரைகளையும் தனி ஒரு பட்டியல் பக்கத்துக்கு நகர்த்தினாலும் இது பொருந்தும். ஆசிரியர் பெயர், நூல் பெயர் மட்டும் ஒரு கட்டுரையில் இருந்தால் தனி ஒரு கட்டுரை தேவை இல்லை என்று பட்டியல் பக்கத்துக்கு நகர்த்துவது பொருந்தும்.--இரவி 21:46, 25 சனவரி 2012 (UTC)
- இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பது தமிழ் இலக்கியத்தின் ஒரு உட்பகுப்பே. ஒரு உட்பிரிவு மாநாட்டில் நூல் வெளியிடப்பட்டது என்பதாலேயே அதில் சார்பு இருக்கும் என்று எப்படி முடிவு செய்ய இயலும். பெண்கள் இலக்கிய மாநாட்டில் வெளியானால், பெண்களுக்கான சார்பு இருக்கிறது என்று சோல்லி விடலாமா. அப்படிப் பார்த்தால், “தமிழ் இலக்கிய மாநாட்டில்” வெளியிடப்படும் நூலில் தமிழர்/தமிழ்நாட்டு சார்பு இருக்கும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது இந்திய சாகித்ய அகாதமி வெளியிடும் who's who இல் இடம்பெறும் தமிழ் எழுத்தாளர்களைத் தான் ஏற்க முடியும் என்று சொல்லலாமா. ”வடபழனி தமிழ் இலக்கிய மாநாடு” என்று வாதம் வருவதற்கு முன் நான் முந்திக் கொள்கிறேன். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெரும் பிரிவுகளில் ஒன்று. ஏதோ சிறிய நான்கைந்து பேர் கொண்ட இலக்கியவட்டமல்ல. அதற்கு தனியாக நாம் கட்டுரையே எழுதி வைத்திருக்கிறோம். அதற்கு நடந்த ஒரு மாநாட்டில் வெளியிடப்பட்ட நூலில் சார்பிருக்கும், குறிப்பிடத்தக்கமை குலைந்திருக்கும் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இசுலாமியத் தமிழ் இலக்கியத்தை நாம் தமிழ் இலக்கியத்தின் பிரிவுகளில் ஏற்போமெனில் அதை எழுதுவோரையும் தமிழ் எழுத்தாளர்களில் ஒரு பிரிவாகத் தான் ஏற்க வேண்டும்.
- ”எழுத்தாக்கங்களின் அடிப்படையில் அவர்களின் குறிப்பிடத்தக்கமையை உறுதி செய்ய முடியும்”. இவர்களிடம் எழுத்தாக்கம் உள்ளதென்பதை நாமெப்படி அறிவோம்?. இந்த உசாத்துணை நூல் மூலமாகத் தானே?. சிலருக்கு எழுத்தாக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, சிலருக்குக் குறிப்பிடப்படவில்லை. இரு தரப்பினரும் உசாத்துணை நூலில் இடம் பெறுகின்றனர். எழுத்தாளர்களா இல்லையா என்ற வினவும் போது இருவரையும் சமமாகவே கொள்ள வேண்டும். “இந்த நூலில் அவர்கள் எழுத்தாக்கம் இடம் பெறவில்லை என்று தான் பொருள்”. ஆனால் அதே நூல் அவர்களை எழுத்தாளர்களாக மதித்து பிறருடன் சேர்த்துள்ளது. விக்கிப்பீடியாவில் ஒரு எழுத்தாளர் பட்டியலில் இடம் பெற இது போதுமான குறிப்பிடக்கதக்கமையே. --சோடாபாட்டில்உரையாடுக 21:50, 25 சனவரி 2012 (UTC)
- எழுத்தாளர் பட்டியலில் இணைப்பதற்கு அந்த குறிப்பிடுதன்மை போதுமானது என்பது சரியே. ஆனால், ஒரு எழுத்தாளரைப் பற்றிய தனிக்கட்டுரை இருந்தால் அதில் அவரது குறிப்பிடுதன்மைக்குக் காரணமான எழுத்தாக்கத்தைப் பற்றிய தகவல்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லாத கட்டுரைகளை மட்டும் பட்டியலுக்கு நகர்த்தலாம். -- சுந்தர் \பேச்சு 13:49, 26 சனவரி 2012 (UTC)
- ”எழுத்தாக்கங்களின் அடிப்படையில் அவர்களின் குறிப்பிடத்தக்கமையை உறுதி செய்ய முடியும்”. இவர்களிடம் எழுத்தாக்கம் உள்ளதென்பதை நாமெப்படி அறிவோம்?. இந்த உசாத்துணை நூல் மூலமாகத் தானே?. சிலருக்கு எழுத்தாக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, சிலருக்குக் குறிப்பிடப்படவில்லை. இரு தரப்பினரும் உசாத்துணை நூலில் இடம் பெறுகின்றனர். எழுத்தாளர்களா இல்லையா என்ற வினவும் போது இருவரையும் சமமாகவே கொள்ள வேண்டும். “இந்த நூலில் அவர்கள் எழுத்தாக்கம் இடம் பெறவில்லை என்று தான் பொருள்”. ஆனால் அதே நூல் அவர்களை எழுத்தாளர்களாக மதித்து பிறருடன் சேர்த்துள்ளது. விக்கிப்பீடியாவில் ஒரு எழுத்தாளர் பட்டியலில் இடம் பெற இது போதுமான குறிப்பிடக்கதக்கமையே. --சோடாபாட்டில்உரையாடுக 21:50, 25 சனவரி 2012 (UTC)
//என்னைப் பொறுத்தவரை இது தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட ஒரு முஸ்லிம் எழுத்தாளர் who's who என்பதில் ஐயமில்லை.//
//இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்/எழுத்தாளர்கள் பற்றி பல நூலகளை எழுதியவராகவும், இஸ்லாமிய தமிழிலக்கியச் சூழலில் ஒரு துறை வல்லுனராகவும் தெரிகிறார்.//
கட்டுரைகள் அனைத்தும் இவர்களை எழுத்தாளர், கவிஞர் என்று அறிமுகப்படுத்துகின்றனவே ஒழிய முசுலிம் எழுத்தாளர், முசுலிம் கவிஞர் என்று அறிமுகப்படுத்தவில்லை. எனவே, பொதுவாகவே எழுத்தாளர், கவிஞர் என்பதற்கான குறிப்பிடத்தக்கமை இருக்க வேண்டும்.
பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள் என்பதன் கீழ்
புதுமைப்பித்தனும் இருக்கிறார். என்ன எழுதினார் என்றே தெரியாத 100+ ஆட்களும் இருக்கிறார்கள் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? இவர்கள் எழுத்தாளர்கள் தான் என்று தமிழ்நாடு அரசே சான்றிதழ் அளித்தாலும், என்ன எழுதினார்கள் என்று தெரியாமல் ஒருவரை எழுத்தாளராக ஏற்றுக் கொள்வது அறிவுடமையா?
பகுப்பு மட்டுமே இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் எனக் கூறுகிறது. ஆனால், பகுப்பை நீக்கினாலும் கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை நிலைக்க வேண்டும். குறிப்பிடத்தக்க கட்டுரைகளை எழுதி விட்டு தகுந்த பகுப்பு இடலாம். பகுப்பை முடிவு செய்து விட்டு, அதன் அடிப்படையில் கட்டுரையின் குறிப்பிடத்தக்கமையை நியாயப்படுத்தக்கூடாது. இதே அடிப்படையில் ஒவ்வொரு சமயத்துக்கும் ஒவ்வொரு சாதிக்கும் கூட எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள் பட்டியல் இட்டு நியாயப்படுத்த முடியும். இதுவே ஆபத்தான போக்கு. ஒரு கலைக்களஞ்சியத்தின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும்.
எழுத்தாளர்கள் என்ற அளவிலேயே குறிப்பிடத்தக்கவர்களாக உள்ள சில இந்திய / தமிழ்நாட்டு இசுலாமியர் கீழே காணலாம்:
http://en.wikipedia.org/wiki/Inkulab
ஆகியோரின் கட்டுரைகளில் இந்தப் பகுப்பினையும் இட்டால் அதற்கு ஒரு பொருள் உண்டு.
//இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பது தமிழ் இலக்கியத்தின் ஒரு உட்பகுப்பே. ஒரு உட்பிரிவு மாநாட்டில் நூல் வெளியிடப்பட்டது என்பதாலேயே அதில் சார்பு இருக்கும் என்று எப்படி முடிவு செய்ய இயலும். பெண்கள் இலக்கிய மாநாட்டில் வெளியானால், பெண்களுக்கான சார்பு இருக்கிறது என்று சோல்லி விடலாமா. //
நூலின் பெயர் இலக்கிய இணையம். ஆனால், அதில் உள்ளவர்கள் அனைவரும் இசுலாமியர்கள். இது இசுலாமியர்கள் தொடர்பான சாய்வா இல்லையா? அதாவது, இசுலாமியர் என்ற காரணத்தாலேயே இவர் எழுத்தாளர் என்ற முறையில் இந்நூலில் அறிமுகப்படுத்தப்படுகிறார். இத்தகைய ஒரு niche நூலில் கூட குறிப்பிடும் அளவில் அவருடைய ஆக்கங்கள் இல்லை எனில், பொதுக்களத்தில் இவரின் குறிப்பிடத்தக்கமை என்ன?
//அப்படிப் பார்த்தால், “தமிழ் இலக்கிய மாநாட்டில்” வெளியிடப்படும் நூலில் தமிழர்/தமிழ்நாட்டு சார்பு இருக்கும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது இந்திய சாகித்ய அகாதமி வெளியிடும் who's who இல் இடம்பெறும் தமிழ் எழுத்தாளர்களைத் தான் ஏற்க முடியும் என்று சொல்லலாமா.//
தமிழக எழுத்தாளர்கள் என்று ஒரு தமிழ் நிறுவனம் வெளியிடும் ஒரே ஒரு நூலில் மட்டுமே வாழும் மாந்தர் ஒருவரின் பெயர் இருந்து, அவரின் ஆக்கங்கள் பற்றிய தகவல் வேறு எங்கும் இல்லை என்றால் அவர் குறிப்பிடத்தக்கவர் இல்லை தான்.
//இவர்களிடம் எழுத்தாக்கம் உள்ளதென்பதை நாமெப்படி அறிவோம்?. இந்த உசாத்துணை நூல் மூலமாகத் தானே?. சிலருக்கு எழுத்தாக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, சிலருக்குக் குறிப்பிடப்படவில்லை. இரு தரப்பினரும் உசாத்துணை நூலில் இடம் பெறுகின்றனர். எழுத்தாளர்களா இல்லையா என்ற வினவும் போது இருவரையும் சமமாகவே கொள்ள வேண்டும். “இந்த நூலில் அவர்கள் எழுத்தாக்கம் இடம் பெறவில்லை என்று தான் பொருள்”. ஆனால் அதே நூல் அவர்களை எழுத்தாளர்களாக மதித்து பிறருடன் சேர்த்துள்ளது. //
இதே ஏரணத்தைத் தமிழ் விக்கிப்பீடியா சார்ந்தும் புரிந்து கொள்ள மாட்டார்களா? புதுமைப்பித்தனும் தமிழ் எழுத்தாள்கள் பகுப்பில் இருக்கிறார். இந்த 100+ பேர்களும் என்ன எழுதினார்கள் என்றே தெரியாமல் தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பில் இருக்கிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா இருவரையும் சமமாக வைத்துள்ளது என்று தமிழ் விக்கிப்பீடியா வாசகர்கள் இவர்களை கண்மூடித் தனமாக எழுத்தாளர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? இதைத் தான் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நேரக்கூடிய ஆபத்தான போக்குகளில் ஒன்று எனச் சொன்னேன். ஓரிரு கட்டுரை மட்டும் இந்நூலை அடிப்படையாக வைத்து இருந்தால் பரவாயில்லை. ஆனால், நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இவ்வாறு இடும் போது ஒரு நூலின் நம்பகத்தன்மையைத் தாண்டியும் ஒருவரின் குறிப்பிடத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது விக்கிப்பீடியாவின் கடமை.
//இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்/எழுத்தாளர்கள் பற்றி பல நூலகளை எழுதியவராகவும், இஸ்லாமிய தமிழிலக்கியச் சூழலில் ஒரு துறை வல்லுனராகவும் தெரிகிறார்.//
இவர்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்பு தகவல் புரட்சி இல்லாத காலத்திலோ சில நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்தாலோ மரைக்காயரை ஒரு துறை வல்லுனராக ஏற்று அவரது உசாத்துணை மட்டும் போதுமானது என நினைக்கலாம். ஆனால்,
Biography articles should only be for people with some sort of fame, achievement, or perhaps notoriety. One measure of these is whether someone has been featured in several external sources (on or off-line). Less well-known people may be mentioned within other articles
என்ற அடிப்படையில் வாழும் மாந்தர்களான இவர்களின் இலக்கியப் பங்களிப்புக்கு இன்னும் கூடுதல் உசாத்துணை தேவை.
//இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெரும் பிரிவுகளில் ஒன்று. ஏதோ சிறிய நான்கைந்து பேர் கொண்ட இலக்கியவட்டமல்ல. அதற்கு தனியாக நாம் கட்டுரையே எழுதி வைத்திருக்கிறோம். அதற்கு நடந்த ஒரு மாநாட்டில் வெளியிடப்பட்ட நூலில் சார்பிருக்கும், குறிப்பிடத்தக்கமை குலைந்திருக்கும் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இசுலாமியத் தமிழ் இலக்கியத்தை நாம் தமிழ் இலக்கியத்தின் பிரிவுகளில் ஏற்போமெனில் அதை எழுதுவோரையும் தமிழ் எழுத்தாளர்களில் ஒரு பிரிவாகத் தான் ஏற்க வேண்டும்.//
இசுலாமியத் தமிழ் இலக்கியம் குறித்த தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் இருந்து: "இசுலாமிய சமயம் தொடர்பான தமிழ் இலக்கியங்களே இவ்வாறு சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன."
இசுலாமியத் தமிழ் இலக்கியம் என்பது வேறு. எழுதுபவர் இசுலாமியராக இருப்பது வேறு. இசுலாமியர் எழுதுவது எல்லாமே இசுலாமியத் தமிழ் இலக்கியம் கிடையாது. ஒரு நல்ல எழுத்தாளரை இசுலாமியர் என்ற அடிப்படையில் மட்டுமே அடையாளப்படுத்துவதும் அவருக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது.
இசுலாமியத் தமிழ் இலக்கியத்தை இசுலாமியர் தான் எழுத வேண்டும் என்றில்லை.
(மேலே உள்ள வாதத்தில் தலித், பெண்ணியம் என்று வேறு எடுத்துக்காட்டுகளையும் பொருத்திப் பார்க்கலாம்)
சிறுகதையா புதினமா ஆய்வுக்கட்டுரையா சமயப் பாடல்களா என்று இங்கு இவர்கள் என்ன எழுதினார்கள் என்றே தெரியாத நிலையில் இசுலாமியத் தமிழ் இலக்கியம் எழுதினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அந்தக் காரணத்தினால், இவர்களை நான் ஏற்க மறுக்கிறேன் என்பதும் செல்லாது.
மேற்கண்ட கட்டுரையில் இசுலாமியத் தமிழ் இலக்கியம் என்று குறிப்பிடப்படும் எந்த ஆக்கத்தின் எழுத்தாளரையும் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இல்லை.
எதைப் பட்டியலில் சேர்ப்பது?
//ஈரோடுவில் பிறந்து தற்போது ஈரோடு திருநக் காலனியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், ஆன்மீகத் துறையில் நாட்டமுள்ளவரும், பல்வேறு விருதுகளையும், பரிசில்களையும் வென்றவரும், பல அமைப்புகளின் பொறுப்பாளருமாவார்.//
கட்டுரையில் உள்ள தகவலை நீக்காமல் ஒரு பட்டியலை உருவாக்கி வழி மாற்றி விட்டாலும், இது போன்ற பொத்தாம் பொதுவான தகவல் உடைய தகவலில் எதைச் சேமிப்பது?
http://en.wikipedia.org/wiki/List_of_Indian_writers
என்பதைப் போல இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் என்ற ஒரு பட்டியல் உருவாக்கி, அதில் இவர்களின் பெயர்களை மட்டும் பட்டியல் இட்டு உசாத்துணை நூலாகக் குறிப்பிடலாம். எழுத்தாக்கம் குறிப்பிடப்படாத நிலையில், பெயர், பிறந்த தேதி, ஊர் தவிர மற்ற பொதுப்படையான தகவல்கள் அனைத்தும் சேமித்து வைக்கத் தேவையற்றதாகவே உள்ளன.
வாழும் மாந்தர்களின் குறிப்பிடத்தக்கமைக்கு நான் கோருவது பின்வரும் இரண்டில் ஒரு விசயம் தான்:
- அவர்களின் படைப்புகளின் / சாதனைகளின் பட்டியல் ( அல்லது )
- குறுகிய வட்டத்துக்கு வெளியே உள்ள சமகால ஆய்வாளர்களால் இவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கான சான்றுகள்.
கட்டுரைகளை அப்படியே நீக்காமல், ஒரு மாதமோ இரு மாதமோ நீக்கல் அறிவிப்புக் காலம் கொடுக்கலாம். இதற்குள் கட்டுரைகளில் கூடுதல் தகவல் சேர்ந்தால் சரி. அல்லது, இவற்றில் எவை பெறுமதியான தகவல் என்பதை முடிவு செய்து பட்டியல் பக்கத்துக்கு நகர்த்தலாம்.
என்பது ஒரு பொதுக் கருத்தாக இருக்க முடியும். இதற்கு இணங்குகிறேன்.--இரவி 17:13, 26 சனவரி 2012 (UTC)
நூலின் நம்பகத்தன்மை குறித்து
தொகு- // தமிழ்நாட்டில் யார் வேண்டுமானால் நூல் அச்சடித்து என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.//
- //தமிழ்நாட்டில் எத்தனைப் பதிப்பகங்கள் உள்ளன, அவற்றின் தரம் என்ன, ஊருக்கு எத்தனைக் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.//
- //இந்நூல் காயல்பட்டினம் அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாட்டில் வெளியிடப்பட்டது. தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்படிருந்தால் எழுத்தாளர் என்பதற்கு நம்பகத்தன்மை கூடும். //
ஆகிய ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளன என்பதால் ஆசிரியர் பற்றி சற்று தேடினே. நூலாசிரியர் மு. சாயபு மரைக்காயர் vanity publishing ல் ஈடுபடுபவரல்ல என்று தெளிவானது. அவரது நூல்கள் கன்னிமாரா நூலகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், மலேசிய தேசிய நூலகம் போன்றவற்றிலும் மேலும் பல நூலகங்களிலும் [1] [2] அவரது நூல்கள் இடம் பெற்றுள்ளன. மிகக்குறைவாக தமிழுக்கு இடமளிக்கும் ஆங்கில இதழ் இந்துவில் கூட விமர்சனம் செய்யப்ப்பட்டுள்ளன. தெற்காசிய மானுடவியலில் குறிப்பிடத்தக்க அறிஞராகக் கருதப்படும் சூசன் பெய்லியின் நூலில் மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ளன. (சூசன் பெய்லியின் நூல்கள் பல மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்திய வரலாறு/மானுடவியல் துறைகளில் பாடநூலகளாகப் பயன்படுத்தப்படுபவை). தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திலும் இவர் குறிப்பிடப்படுகிறார். புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது வாங்கியுள்ளார். இதிலிருந்து இவர் ”தேங்காய்மூடி” சுயவிளம்பர எழுத்தாளர் அல்லர் என்று தெளிவாகத் தெரிகிறது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்/எழுத்தாளர்கள் பற்றி பல நூலகளை எழுதியவராகவும், இஸ்லாமிய தமிழிலக்கியச் சூழலில் ஒரு துறை வல்லுனராகவும் தெரிகிறார். இப்படிப்பட்டவர் எழுதிய ஒரு உசாத்துணை நூலை தாராளமாக தமிழ் விக்கியில் ஏற்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 22:44, 25 சனவரி 2012 (UTC)
- அந்த நூலின் ஆசிரியர் சாயபு மரைக்காயரைப் பற்றிய தகவல்களைத் திரட்டியதற்கு நன்றி, சோடாபாட்டில். அவரைப் பற்றிய ஐயம் எதுவுமில்லை. இருந்தாலும் பொதுவாக தன்விளம்பரப் பதிப்புகளைப்பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏற்கனவே பல சாதிக் கட்டுரைகளில் உள்ள சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்கள். அதுபோன்ற உரையாடல்களில் சில குழு இதழ்கள் போன்றவற்றை மேற்கோள் காட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறு பல நூல்களை நான் பார்த்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 13:54, 26 சனவரி 2012 (UTC)
- \\இதிலிருந்து இவர் ”தேங்காய்மூடி” எழுத்தாளர் என்று தெளிவாகத் தெரிகிறது.//
இங்கு தேங்காய் மூடி போன்ற அடைமொழிகள் நகைச்சுவைக்காகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட எழுத்தாளருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:51, 26 சனவரி 2012 (UTC)
- மாற்றியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:55, 26 சனவரி 2012 (UTC)
- நன்றி, சோடாபாட்டில்!--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:58, 26 சனவரி 2012 (UTC)
- மாற்றியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:55, 26 சனவரி 2012 (UTC)
பொதுப்பட பேசாமல் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்
தொகுஇக்கட்டுரைகளில் பலவற்றை நீக்கத் தகுந்தவை என்று இரவி கூறியுள்ளார். கனகு சிறீதரனும் நானும் அதற்கு ஒப்புதல் இட்டுள்ளோம். என் கேள்வி என்னவென்றால், ஏன் இந்த 212 கட்டுரைகளும் தனித்தனி கட்டுரைகளாக இருக்க வேண்டும்? இதே தகவலை ஓரிண்டு அட்டவணைகளில் எளிதாக இடலாமே! கீழே எடுத்துக்ககட்டப்பட்டுள்ளவை இவற்றில் உள்ள உள்ளடக்கங்களுக்கு எடுத்துக்காட்டு. இவை போதுமானவை அல்ல. நீக்கல் விண்ணப்பத்துப் பக்கத்தில் வாழ்க்கை வரலாறுகள், அதுவும் வாழும் மாந்தர்களின் வரலாறுகள், குறிப்பிடுந்தன்மை முதலியவை பற்றி நான் சுட்டியுள்ள கொள்கைசார் கருத்துகளைப் பாருங்கள். குறிப்பாக w:en:WP:NOT என்னும் பகுதியில் "Wikipedia is not a directory" என்னும் பக்கத்தையும் பாருங்கள். ஒரே மாதிரியான மிகப் பொதுப்படையான கூற்றுகள் கொண்ட 2-4 வரி கட்டுரைகள், அதுவும் நூற்றுக்கணக்கில் ஒரே நூலில் இருந்து எடுத்து இடுதல் சரியாகுமா? "Biography articles should only be for people with some sort of fame, achievement, or perhaps notoriety. One measure of these is whether someone has been featured in several external sources (on or off-line). Less well-known people may be mentioned within other articles" என்னும் தொடரையும் கருத்தில் கொள்ளுங்கள். கீழே உள்ளவற்றைப் பாருங்கள் :
- ஏ. ஆர். சையத் சுல்தான் இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சென்னை ஜமாலியா பெரம்பூர் நெடுஞ்சாலையில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், பி.எஸ்.ஸி. பட்டதாரியும், எழுத்தாய்வுதுறை மற்றும் சமூகப் பணிகளில் அதீத ஆர்வம் கொண்டவருமாவார்.
- மௌலவி, அல்ஹாபிழ், காரி எம். முஹம்மது ரபீக் ரசாதி (பிறப்பு: சூன் 2 1980) விழுப்புரம் எனுமிடத்தில் பிறந்து தற்போது விழுப்புரம் அஞ்சல் 7, செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்துவருகின்றார். இவர் ஒரு இளம் எழுத்தாளரும், விழுப்புரம் மத்ரஸா அன்வாருல் ஹதாவின் முதல்வரும், சென்னையின் மத்ரஸாயே நிஸ்வானின் கண்காணிப்பாளருமாவார். இஸ்லாமிய சமய அடிப்படையிலான பல ஆக்கங்களை இவர் எழுதியுள்ளார்.
- எம். ரஜ்முன்னிசா முஅஸ்கரியா (பிறப்பு: சனவரி 1 1974), திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியில் பிறந்து தற்போது தூத்துக்குடி மாவட்டம் தெற்குப் புதுமனையில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், மேடைப்பேச்சளாரும், கவிஞரும், ஆசிரியருமாவார். இவரது சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. பெற்ற விருதுகளும் கௌரவங்களும் அப்ஸலுல் உலமா
- எம். ரியாஜ் அகமது (பிறப்பு: மார்ச்சு 5 1979) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சக்கராப்பள்ளி எனுமிடத்தில் பிறந்து தற்போது சக்கராப்பள்ளி மில்லத் நகரில் வசித்துவரும் இவர் கவிதைகள் புனைவதில் ஆர்வமிக்கவரும், இலக்கிய ஆர்வலரும், சமூகப் பணிகளிலும், நூல்களை வாசிப்பதிலும் அக்கறை செலுத்தி வருபவருமாவார். இவர் மில்லத் நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைச்செயலாளரும்கூட.
- டாக்டர் எல்.எம். சரீப் (பிறப்பு: சனவரி 12, 1944) கோட்டக்குப்பத்தில் பிறந்து தற்போது விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ஹாஜி உசேன் வீதியில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், வைத்தியருமாவார். இவரின் வைத்தியக்கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவந்வந்துள்ளன.
--செல்வா 14:35, 26 சனவரி 2012 (UTC)
- இந்தக் கட்டுரைகளின் மொத்த உள்ளடக்கமே இவ்வளவுதான் என்றால் வழக்கம்போல கலைக்களஞ்சியத்துக்கேற்ற மேலதிகத் தகவலைக் கேட்டுச் சில நாட்கள் பொறுக்கலாம். தலைப்புக்குப் பொருத்தமான வேறு தகவல்கள் கிடைக்காவிட்டால் நீக்கி விடலாம். -- சுந்தர் \பேச்சு 14:55, 26 சனவரி 2012 (UTC)
விபரக்கொத்து
தொகுசெல்வா, நீங்கள் "Wikipedia is not a directory" என்பதைக் குறிப்பிடுகிறீர்கள. அதேவேளை "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" என்று ஏராளமாகப் பட்டியலிட்டிருப்பவை அவ்வாறுதானே உள்ளன. அவற்றைத் தனித் தனிக் கட்டுரைகளாக இருக்க வைக்க வேண்டுமாயின், இலங்கையில் உள்ள பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை, மாகாண சபை, பாராளுமன்றம் போன்றவற்றுக்கான தேர்தல்கள், அவ்வாறே மலேசியா, இந்தோனேசியா ... தேர்தல் முடிவுகளை எல்லாம் எழுதித் தனித் தனிக் கட்டுரைகளாக ஆக்குவதற்கு இடமுண்டா?--பாஹிம் 18:13, 26 சனவரி 2012 (UTC)
- உண்டு பாஹிம். தேர்தல் கட்டுரை எழுதப்பட்டு அதிலிருந்து முடிவுகள் கட்டுரை எழுதலாம். முடிவுகள் மட்டும் தனித்திருக்காது முதன்மைத் தேர்தல் கட்டுரை எழுதப்பட்டு அங்கிருந்து இணைப்பு தந்து முடிவுகள் தாராளமாக உருவாக்கலாம் (ஆங்கிலம் மற்றும் பிற விக்கிகளில் எழுதப்படுகின்றன). தனிக்கட்டுரைகளாக வேண்டுமா ஒரே கட்டுரையில் வேண்டுமா என்பது கட்டுரையின் அளவும், படிக்கும் இலகும் கருத்தில் கொண்டு அமையலாம்--சோடாபாட்டில்உரையாடுக 18:27, 26 சனவரி 2012 (UTC)
- பாஃகிம், நல்ல கேள்வி. தனிக்கட்டுரைகளாக இருக்கத் தேவை இல்லை (என்னைப் பொருத்த அளவிலே). வரலாற்று நோக்கில் ஏதோ ஓரிரு தொகுதிகளில் நிகழ்ந்த தேர்தலில் ஏதும் சிறப்பு இருந்ததல் அதற்காகத் தனிக் கட்டுரை இருக்கலாம். தேர்தலைப் பற்றிய தகவல்கள் தேவை எனில், அட்டவணை அல்லது அது போன்ற அமைப்பில் அடக்கலாம். தமிழ்நாடு என்று எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேண்டுமானால் ஒரு கட்டுரை இருக்கலாம் (இதுவே தேவையானதா, அதுவும் ஒவ்வொரு தேர்தலுக்கும், என்பதைப் பயனர்கள்தாம் தெரிவிக்க வேண்டும்). இந்தியா முழுவதும், இலங்கை, மலேசியா என்றும் ஏன் உலக நாடுகள் என்று அளவிலாது போகும். போகட்டுமே என்றால் போகட்டும்!! கலைக்களஞ்சியத்தின் அடிப்படைக் குறிக்கோளே, எவ்வாறு சுருக்கமாக, கருவான கருத்துகளை கற்றுக்கொள்ளுமாறு/தெரிந்து கொள்ளுமாறு ஆணித்தரமாக எழுதலாம் என்பதே (கல்வி கரையில, கற்பவர் நால் சில!!). தரவுகள் எல்லாவற்றையும் தொகுக்கும் தரவடை (தரவு அடை, தரவுக்கிடங்கு) ஒரு கலைக்கஞ்சியம் அல்ல. ஆனால் இவை எல்லாம் என் தனிக் கருத்துகள்தாம். போதிய உள்ளடக்கம் இல்லாமல், "இவர் கவிஞர், இவர் முதல்தர தேர்வுப் போட்டியில் பங்கு கொண்டார்" என்று பொத்தாம் பொதுவாக, அதுவும் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் எழுதினால் அது என்னைப் பொருத்த அளவில் எற்புடையதல்ல. களையப்பட வேண்டியன. இவற்றை வைத்து இது தமிழ் விக்கிப்பீடியாவின் (அறிவார்ந்த? ) "புது வளர்ச்சி" என்று கூறமுடியுமா? --செல்வா 00:06, 28 சனவரி 2012 (UTC)
இதைத்தான் நானும் சொல்கிறேன். எந்தக் கட்டுரையாக இருந்தாலும் அது போதிய அறிவு வளர்ச்சிக்குப் பங்களிக்கத் தக்கதாக இருக்க வேண்டும். வெறுமனே பெயர்களையோ பெறுபேறுகளையோ அடுக்கிக் கொண்டு செல்வதாயின் அது கலைக்களஞ்சியம் என்ற வரையறைக்கு உட்படாது என்றே கருதுகிறேன். நீங்களும் அதைத்தானே, "கலைக்களஞ்சியத்தின் அடிப்படைக் குறிக்கோளே, எவ்வாறு சுருக்கமாக, கருவான கருத்துகளை கற்றுக்கொள்ளுமாறு/தெரிந்து கொள்ளுமாறு ஆணித்தரமாக எழுதலாம் என்பதே" என்று சொல்கிறீர்கள். எனினும், மேற்படி கட்டுரைகளைப் பொறுத்தவரையில் விக்கிப்பீடியாவில் உள்ள பலரும் அவை குறித்து முதலிலேயே கூறாதிருந்தமையினால் அல்லது கவனிக்காதிருந்தமையினால் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவற்றை விரிவாக்குமாறு கட்டுரையாசிரியருக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் அத்துறையில் ஆர்வமுள்ளோரும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபடலாம். அவ்வாறு விரிவாக்கம் செய்ய முடியாத கட்டுரைகளைத் தனிப் பட்டியலொன்றுக்குட் கொண்டு வரலாம். இங்கு எழுத்தாளர்கள் பற்றிய சிக்கல் எழு முன்னரே வேறு கட்டுரைகள் தொடர்பில் நாம் அவ்வாறுதான் நடந்து கொண்டோம். தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் என்று (என்னைப் பொருத்தவரையிற்) பொருளற்ற ஒருவரிக் கட்டுரைகள் பல இருந்தன. அவையனைத்தையும் நீக்குவதற்கு நான் நீக்கல் வேண்டுகோளை இணைத்தபோது அவற்றையெல்லாம் இணைத்து ஒரு பட்டியலாக்கப்பட்டது. ஆறுகள் பற்றிய ஒருவரிக் கட்டுரைகளை எழுதியவர் அதற்காக எங்கேயும் வருத்தப்பட்டதாக அறியேன். எனவே, இந்த விபரம் தெரியாத எழுத்தாளர் கட்டுரைகளுக்கும் அவ்வாறே செய்யலாம். வெறுமனே பெயர்களை அல்லது சொற்களை அல்லது பெறுபேறுகளைப் பட்டியலிடுவதனால் என்ன பயன் விளையும்? அதே நேரம், விக்கிப்பீடியாவின் வளர்ச்சி அறிவார்ந்ததாக இருக்க வேண்டுமாயின் குறிப்பிட்ட ஒரு வகைக் கட்டுரைகள் உரவாகும் போது தொடக்கத்திலேயே அதைப் பற்றி அறிவுறுத்தப்பட வேண்டும். மாறாக, ஒரு பயனர் ஏராளமான கட்டுரைகளை எழுதிய பின்னர் அது குறித்து ஆளுக்கொரு பக்கம் நின்று கருத்தாடுவதால் ஏனைய பயனர்களிடம் உளத்தாங்கல் ஏற்படலாம். நாமிருக்கும் சூழலில் எங்களிடம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொடர் பங்களிப்பாளர்களே உள்ளனர். இந்நிலையில் நாம் இதனைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.--பாஹிம் 02:35, 28 சனவரி 2012 (UTC)
- விருப்பம் பாஃகிம், நன்றாகச் சொன்னீர்கள்! நீங்கள் சொல்வதுடன் முற்றிலும் உடன்படுகின்றேன். --செல்வா 10:00, 28 சனவரி 2012 (UTC)
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக
தொகுநூற்றுக்கணக்கான ஒருவரிக்கட்டுரைகள், அல்லது மேலே உரையாடியுள்ள 'தனித்தன்மையற்ற' பல கட்டுரைகளை புன்னியாமீன் அல்லது வேறொரு பயனர் எழுதியதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கலாமே? அவர்களின் நேரம், வேலை குறைந்திருக்குமே, தவிர்த்திருப்பார்களே, விக்கியின் தரமும்(?) பாதித்திருக்காதே. பலநூறு கட்டுரைகள் எழுத நினைக்கும் புதிய பயனர்கள், 'நாம் கட்டுரைகள் பல எழுதி பின்னர் விக்கியர்கள் ஒன்றும் சொல்லாமல் ஒருநாள் இதுபோன்று நீக்கிவிடுவார்களோ' என்று தவறான எண்ணம் கொள்ள செய்யுமே. நாம் ஏன் ஆரம்பத்திலே இவற்றை கண்கானிக்கவில்லை, மேம்படுத்தசொல்லி அறிவுறுத்தவில்லை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். (நான் கூட தூதரகங்களின் பட்டியல் கட்டுரைகள் தமிழாக்கம் செய்து எழுதினேன். 400 கட்டுரைகள் வரை (70-80 சதவீதம்) மென்பொருள் கொண்டு தமிழாக்க முடியும் என்றபோதிலும், தொடரவில்லை. ஆரம்பத்தில் சில பயனர்களின் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர் அதனால் வேலை அதிகமிருக்கும் என்றெண்ணி தொடரவில்லை.) -- மாகிர் 04:07, 27 சனவரி 2012 (UTC)
- மாகிர், இப்போதும் கட்டுரைகளை முற்றிலும் நீக்க வேண்டும் என்பது இணக்க முடிவாக இல்லை. கட்டுரைகளை மேம்படுத்த காலம் தந்து, மேம்படாத கட்டுரைகளை மட்டும் பட்டியல் பக்கத்துக்கு மாற்றலாம் என்பதே பொதுக்கருத்தாக உள்ளது. எனவே, பயனர் ஒருவரின் உழைப்பு வீணாகிறது என்ற சொல்ல இயலாது. தமிழ் விக்கிப்பீடியாவில் துப்புரவுப் பணியில் ஈடுபடுவோர் மிகச் சிலரே. 2007க்குப் பிறகு கட்டுரை நீக்கல் குறித்த உரையாடல்கள் ஏறத்தாழ இல்லை என்றே சொல்லலாம். அண்மைய மாற்றங்களைப் பலரும் அன்றாடம் பார்த்து வந்தாலும், இது போன்ற பிரச்சினைகளை யாரேனும் ஒரு பயனர் சுட்டிக் காட்டினால் அன்றி பலரின் கவனத்துக்கு வருவதில்லை. அன்றாடம் 500க்கு மேற்பட்ட தொகுப்புகள் நிகழும் போது, சிறிய சமூகமான தமிழ் விக்கிப்பீடியாவில் இது போன்ற பிரச்சினைகள் உடனுக்கு உடன் கவனிக்கப்படாமல் போவதற்கே வாய்ப்பு அதிகம். இப்போது ஏன் என்ற கேள்வியே விக்கியில் தவறு. எப்போது வேண்டுமானாலும் பொதுவில் உரையாடி இணக்க முடிவுகளை எடுப்பது விக்கியின் கொள்கைக்கு உட்பட்டதே. இதுவரை பல்வேறு விசயங்கள் குறித்து தமிழ் விக்கிப்பீடியாவில் தெளிவான அல்லது இறுக்கமான கொள்கை இல்லை. இனியாவது, தேவைப்படும் இடங்களில் இவற்றைச் சுட்டிக் காட்டி ஒரு பொதுப் புரிதலை எட்ட முனைவது, நீங்கள் சுட்டியபடி தமிழ் விக்கி பற்றி மேம்பட்ட புரிதலை ஏற்படுத்த உதவும்--இரவி 05:36, 27 சனவரி 2012 (UTC)