பட்டுச் சேலை

பட்டுச் சேலைகள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திற்கு அடுத்து அசாம் மாநிலத்தில் அதிகம் உற்பத்தியாகிறது. பட்டுச் சேலைகள் பட்டு நூல்களைக் கொண்டு, கைத்தறி நெசவுகள் மூலம் கைகளால் தயாரிக்கப்பட்டுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் பட்டு நூலின் மேற்புறத்தில் வெள்ளி முலாம் பூசப்பட்டு பின்னர் அதற்கு மேல் தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகை நூல்களைக் கொண்டு அழகியப் பட்டுச் சேலைகள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அசாம் பகுதியில் ஜரிகை இல்லாத பழுப்பு மட்டும் சிவப்பு நிறம் கலந்த பட்டுச் சேலைகள் மட்டும் தயாரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பட்டுத் துணிகள் உற்பத்தி

தொகு

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் அதன் 12 சுற்றுப்பகுதிகளில் நெய்யப்படும் கைத்தறி நெசவுப் பட்டுச் சேலைகளுக்கு மட்டும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[1] மேலும் தமிழ்நாட்டின் ஆரணி, திருபுவனம் மற்றும் கும்பகோணம் பகுதிகளிலும் அசல் ஜரிகைப் பட்டுச் சேலைகள் உற்பத்தியாகிறது. சேலம் நகரத்தில் அசல் வெண்பட்டு ஜரிகை கரை வேட்டிகள் உற்பத்தியாகிறது.

பட்டுச் சேலைகளின் வகைகள்

தொகு

உலகில் துசர் பட்டுத் துணி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. டசர் பட்டுத் துணி, இந்திய மாநிலமான பிகாரின் பாகல்பூர், மேற்கு வங்காளத்தின் மால்டா நகரம் மற்றும் ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் அதிகம் உற்பத்தியாகிறது. மேலும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மற்றும் ஆரணி பகுதிகளிலும், அசல் எரி பட்டு மற்றும் மூகா பட்டுச் சேலைகள் அசாம் மாநிலத்திலும், பனாரஸ் பட்டுச் சேலைகள் உத்தரப் பிர்தேசத்தின் வாரணாசி மாவட்டத்திலும், பாலுசாரி பட்டுச் சேலைகள் மேற்கு வங்காளத்தின் (Baluchari Silk Sari) முர்சிதாபாத் மாவட்டத்திலும், சந்தேரி பருத்திப் பட்டுச் சேலைகள் மத்தியப் பிரதேசத்திலும், சம்பல்புரி பட்டுச் சேலைகள் ஒடிசாவின் பெர்காம்பூர், பர்கஃட், சம்பல்பூர் பகுதிகளிலும், பைத்தானி பட்டுச் சேலைகள் மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரத்திலும், மைசூர் பட்டுச் சேலைகள் மைசூரிலும் உற்பத்தியாகிறது. [2]

பட்டு நூல் உற்பத்தி மையங்கள்

தொகு

பட்டுச் சேலைகள் தயாரிப்பதற்கான அசல் பட்டு நூல்கள் பட்டுப்புழு வளர்ப்பு மூலம் தயாரிக்கப்படுகிறது. இப்பட்டுப்புழு வளர்ப்பு நிலையங்கள் தமிழ்நாடு, மைசூர், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் அதிகம் உள்ளது.

ஜரிகை உற்பத்தி மையங்கள்

தொகு

பட்டுச் சேலைகளை அழகுப்படுத்தும் பட்டு நூலின் மீது வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகை நூல்கள் இந்தியாவில் சூரத் மற்றும் காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள ஓரிக்கைப் பகுதியில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. இனி புவிசார் குறியீட்டுடன் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள்
  2. 12 Most Popular Types Of Silk Sarees of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுச்_சேலை&oldid=3285554" இலிருந்து மீள்விக்கப்பட்டது