பாலமுருகன்

தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்

பாலமுருகன் (பிறப்பு: சுந்தரபாண்டியன், 21, ஏப்ரல், 1937-15, சனவரி, 2023) என்பவர் இந்திய தமிழ்த்திரைப்பட கதை உரையாடல் எழுத்தாளர்[1], இயக்குநர் ஆவார். இவர் தன் 40 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில் சுமார் 50 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, உரையாடல் எழுதியவர். இரண்டு படங்களையும் இயக்கியவர்.[2]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இவரது இயற்பெயர் சுந்தரபாண்டியன் ஆகும்.[2] ஆண்டிபட்டியில் 21, ஏப்ரல் 1937 இல் பிறந்தவர். இவரது பத்தாவது வயதில் குமரகுரு திரைப்படத்தில் பாலமுருகனாக நடித்தார். மகனை பாலமுருகனாக பார்த்து மகிழ்ந்த இவரது தாய் காளியம்மாள் தன் மகன் பெயரை பாலமுருகன் என்று மாற்றிக்கொள்ளுமாறு சொல்லி பெயரை மாற்றினார்.[2] பின்னர் தன் 11வது வயதில் தாய்நாடு என்ற படத்தில் நடித்தார். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், இவரை அவரது தாய் பாய்ஸ் நாடக நிறுவனத்தில் சேர்த்துவிட்டார். சிலகாலம் கழித்து சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். இளைஞனான காலத்தில் இவருக்கு உள்ள கதை எழுதும் ஆற்றலைக் கண்டுகொண்ட இவரது நாடக ஆசிரியர் பி. எஸ். சிவானந்தையா நாடகங்களுக்கு கதை உரையாடல் எழுதுமாறு ஊக்குவிக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட பாலமுருகன் நடித்தபடியே பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு கதை, உரையாடல் எழுதினார். சக்தி நாடக சபாவுக்காக இவர் எழுதிய முதல் நாடகம் அமைதி அடுத்த நாடகம் கவியின் கனவு என்பதாகும்.[2]

மதுரையில் நடகங்களை நடத்திவந்த வேளையில் மதுரை திமுக அரசியல்வாதியான மதுரை முத்து பாலமுருகனை சென்னைக்குச் செல்லுமாறு தூண்டி கா. ந. அண்ணாதுரைக்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தனுப்பினார். சென்னைக்கு வந்த பாலமுருகன் அண்ணாதுரையின் எழுத்து வேலைகளுக்கு உதவியாளராக சிலகாலம் பணியாற்றினார்.[2] இவரின் திறமையைக் கேள்விப்பட்ட சிவாஜி கணேசன் தனக்கு ஒரு நாடகத்தை எழுதித் தருமாறு சொல்லியனுப்பினார். இதையடுத்து சிவாஜி கணேசனுக்காக நீதியின்நிழல் என்னும் நாடகத்தை எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை சிவாஜி நடித்து நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுக்கு நாடங்களை எழுதினார்.[2]

இதன் பிறகு சிவாஜி கணேசன் நடித்த அன்புக்கரங்கள் படத்திற்கு கதை, உரையாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். அதை தொடர்ந்து எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை, எங்கள் தங்க ராஜா, ராஜபார்ட் ரங்கதுரை மனிதனும் தெய்வமாகலாம், மன்னவன் வந்தானடி, பாட்டும் பரதமும், சித்ரா பௌர்ணமி போன்ற படங்களில் சிவாஜி கணேசனின் ஆஸ்தான கதாசிரியரானார். மேலும் கவிஞர் முத்துலிங்கத்தை இயத்துநர் பி. மாதவனிடம் அறிமுகம் செய்வித்து அவர் பாடலாசிரியராக அறிமுகமாக உதவினார்.[3]

குடும்பம் தொகு

பாலமுருகனுக்கு நவமணி என்ற மனைவியும், சந்திரமோகன், சிவானந்தம், பூபதிராஜா, ராஜேஷ், என்ற மகன்களும், கற்பகம் என்ற மகளும் உண்டு.[2] வயது மூப்பின் காரணமாக பாலமுருகன் 15, சனவரி, 2023 அன்று இறந்தார்.[4]

எழுதிய நூல்கள் தொகு

  • நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்[5]

குறிப்புகள் தொகு

  1. , சுந்தர்ராமன், வசனத்தால் வசியம் செய்தவர்!: கதாசிரியர் பாலமுருகன், கட்டுரை தினமணி 2, சனவரி, 2019
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "அஞ்சலி: பாலமுருகன் - அன்புக் கரங்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-22.
  3. "பாலமுருகன் அமைத்துத்தந்த பாட்டுச்சாலை! - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  4. "பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!". www.dinamaalai.com. 2023-01-16. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  5. "தன் வசனங்களின் மூலம் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த கதாசிரியர் பாலமுருகன் பிறந்தநாள்…". ttncinema.com. 2020-04-21. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.

வெளி இணைப்புகள் தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பாலமுருகன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலமுருகன்&oldid=3761238" இலிருந்து மீள்விக்கப்பட்டது