புவி நாள்

(பூமி நாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.[1]

1969இல் ரான் காப் உருவாக்கிய சுற்றுச் சூழல் குறியீடு: "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துக்களின் ஒருங்கிணைப்பு

1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.[1]

ஐக்கிய நாடுகள் அவை சூன் 5ம் நாளன்று உலக சுற்றுச் சூழல் நாளை அனுசரித்து வருகிறது.

ஏப்ரல் 22 ஆம் நாளின் வரலாறு

தொகு

கேலார்ட் நெல்சனின் அறிவிப்பு

தொகு

1969 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமாகிய கலிபோர்னியாவின் சாந்தா பார்பரா நகர் அருகே நிகழ்ந்த பெரும் எண்ணெய்க்கசிவைப் பார்வையிட்ட விஸ்கான்சின் அமெரிக்க மேலவை உறுப்பினர் (Senator) கேலார்ட் நெல்சன் 1970 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் சுற்றுச்சூழல் குறித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறுமென 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டனின், சியாட்டிலில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அறிவித்தார். சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக நாடு தழுவிய அளவில் சுற்றுச்சூழல் அழிவு தவிர்க்கும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாகக் கேலார்ட் நெல்சன் தேசிய நிகழ்ச்சி நிரலில் முதன் முதலில் முன்மொழிந்தார்.

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான எட்டி ஆல்பர்ட் என்பவர் புவி நாளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். இப்போது வரை நடக்கும் இந்த வருடாந்திரச் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள்குறித்த பணிகளை 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறப்பாக மேற்கொண்ட[2] ஆல்பர்ட்டின் பணி சிறப்பானது என்றாலும், புவி நாள் ஆல்பர்ட்டின் பிறந்த நாளான ஏப்ரல் 22 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது ஒரு தரப்பினரின் கூற்றாகும்.

அந்தக் கால கட்டத்தில் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மீது அளவு கடந்த தாக்கத்தை ஏற்படுத்திய கிரீன் ஏக்கர்ஸ் என்ற தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆல்பர்ட் இன்றளவும் சிறப்பான முறையில் அறியப்படுகிறார்.

கருத்து உருவாக்கம்

தொகு

ரான் கோப் (Ron Cobb) என்னும் கருத்துப்பட ஓவியர் சுற்றுச்சூழல் குறித்த குறியீடு ஒன்றை உருவாக்கினார். அது பின்னர் புவி நாள் குறியீடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது; அத்துடன் அது மக்களின் பொதுச் சொத்தாகவும் அறிவிக்கப்பட்டது. அந்தக் குறியீடு முறையே "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துகளின் ஒருங்கிணைப்பாகும்.

கிரேக்க மொழியின் எட்டாம் எழுத்தாகிய "தேட்டா" (Theta - பெரிய வடிவம் "Θ", சிறிய வடிவம் "θ") சாவு போன்ற பேரிடரைக் குறிக்கும் எச்சரிக்கை அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1970 ஏப்ரல் 21 இல், "லுக்" பத்திரிகை தனது இதழில் அந்தக் குறியீட்டை ஒரு கொடியுடன் இணைத்து வெளியிட்டது. பச்சை, வெள்ளை என்று மாறி மாறி 13 வண்ணப்பட்டைகளுடன் காணப்பட்ட அந்தக் கொடி அமெரிக்க கொடியைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தது. அமெரிக்கக் கொடியில் காணப்படும் நட்சத்திரங்களுக்குப் பதிலாகப் பச்சை நிறத்தில் சுற்றுச்சூழல் குறித்த குறியீட்டுடன் இக்கொடி காணப்பட்டது. 1969 ஆம் ஆண்டு விளம்பர வாசக எழுத்தாளரான ஜுலியன் கேனிக் (Julian Koenig) என்பவர் அமெரிக்க மேலவை உறுப்பினர் நெல்சனின் அமைப்புக் குழுவில் இருந்ததுடன், இந்த நிகழ்விற்குப் "புவி நாள்" என்று பெயரிட்டார். இந்தப் புதிய நிகழ்வைக் கொண்டாடத் தேர்ந்தெடுப்பட்ட நாள் ஏப்ரல் 22 என்பதுடன், அது கேனிக்கின் பிறந்த நாளாகவும் அமைந்தது.

"பெர்த் டே" என்கிற சந்தம் அமைந்ததால் "எர்த் டே" என்று பெயரிடுவது எளிதாக இருந்ததாக அவர் கூறினார்[3][4]. 1969 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரையில் கிளேட்வின் ஹில் (Gladwin Hill) பின்வருமாறு எழுதினார்:

"சுற்றுச் சூழல் நெருக்கடி" பற்றிய அதிகரித்து வரும் கவலை, வியட்நாம் போர்பற்றிய மாணவர்களின் அதிருப்தியை மங்கச் செய்து விடும் விதத்தில் நாட்டில் சுழல்போல் வேகமாகப் பரவி வருகிறது.....வியட்நாமில் நடந்த போராட்டங்களைப் போன்று சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்காக அடுத்த வசந்த காலத்தில் ஒரு நாளைத் தேசிய நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை குழு விவாதப் பொருளாகக் கருதி மேலவை உறுப்பினர் கேலார்ட் நெல்சனின் அலுவலகத்திலிருந்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது...."[5]
என்று கூறினார்.

மேலவை உறுப்பினர் நெல்சனின் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க டெனிஸ் ஹேய்ஸ் என்பவர் பணியில் அமர்த்தப்பட்டார்.

திட்ட விரிவாக்கமும் தொடர்ந்த முன்னேற்றமும்

தொகு

1970 ஏப்ரல் 22 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட புவி நாள் நவீன சுற்றுச்சூழல் போராட்டத்தின் துவக்கம் என்று கூறலாம். ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கும் குறிக்கோளுடன் ஏறத்தாழ இரண்டு கோடி அமெரிக்கர்கள் இதில் பங்கேற்றனர். ஹேய்சும் அவரது அலுவலர்களும் ஒரு கடலோரத்திலிருந்து மறு கடலோரம் வரையிலான மிகப் பெரிய பேரணிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தின. மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், சீர்படுத்தப்படாத கழிவு நீர், நச்சுத் தன்மையுள்ள குப்பைகள், பூச்சிக்கொல்லிகள், காடுகளை அழித்தல் மற்றும் காட்டு விலங்குகளின் பேரழிவு போன்றவற்றை எதிர்த்துப் போராடி வந்த குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டன.

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டிச் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உலகம் முழுவதும் அறியச்செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய உந்துதல் சக்தி கிடைத்தது. அத்துடன் 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜனேரோவில் ஐக்கிய நாடுகள் சபை புவி குறித்து விவாதிப்பதற்கான உயர்மட்ட சந்திப்பிற்கு வழி கோலியது.

2000 ஆம் ஆண்டு நெருங்கும் தறுவாயில், புவி வெப்பமடைதல் மற்றும் சுத்தமான எரிசக்தியை மையப்படுத்திய மற்றுமொரு செயல் திட்டத்தைத் தலைமை ஏற்று நடத்த ஹேய்ஸ் ஒப்புக் கொண்டார். 2000 ஆம் ஆண்டின் ஏப்ரல் 22 புவி நாளானது, 1990 ஆம் ஆண்டு புவி நாளில் பொது மக்கள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையை நினைவுபடுத்துவதாக இருந்தது. 2000 ஆம் ஆண்டு புவி நாளுக்கான, போராட்டக்காரர்களை இணைக்க இணையம் உதவியாக அமைந்தது. அத்துடன் வரலாற்றுச் சாதனையாக 184 நாடுகளின் கோடிக்கணக்கான மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் 5000 சுற்றுச்சூழல் குழுக்கள் கூடி விட்டனர். ஒரு பேசும் முரசு ஆப்பிரிக்காவின் காபோன் இல் கிராமம் கிராமமாகச் சென்றதுடன், லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியின் தேசிய வணிக மையத்தில் கூடினர்.

2007 ஆம் ஆண்டு புவி நாளன்று, உக்ரைனின் கீவ், வெனிசுவேலாவின் கேரகாஸ், துவாலு, பிலிப்பைன்சின் மணிலா, டோகோ, எசுப்பானியாவின் மாட்ரிட், லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற ஆயிரக்கணக்கான இடங்களில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் இதுகுறித்த நடவடிக்கைகளில் பங்கேற்க ஒன்றிணைந்தனர். இன்றளவில் நடத்தப்பட்ட புவி நாட்களுள் இதுவே மிகப் பெரியது எனலாம்.

புவி நாள் கூட்டமைப்பு

தொகு

1970 ஆம் ஆண்டு முதன் முதலில் சுற்றுச்சூழல் குடியுரிமை, வருடந்தோறும் அதிகரிக்கும் உள்நாட்டு மற்றும் உலகம் தழுவிய நடவடிக்கையை ஊக்கப்படுத்த நிர்வாகிகளால் புவி நாள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. புவி நாள் கூட்டமைப்பு மூலமாகப் போராட்டக்காரர்கள் உள்ளூர், உள்நாடு மற்றும் உலக அளவிலான கொள்கை மாற்றங்களைத் தெரிந்து கொள்ள முடியும். சர்வதேச கூட்டமைப்பு 174 நாடுகளில் 17000 அமைப்புகளை ஒன்றிணைக்கிறது. உள்நாட்டு செயல் திட்டம் 5000 குழுக்களையும் 25000க்கும் அதிகமான பயிற்சியாளர்களையும் வருடந்தோறும் சமூக முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது.[6]

இரவும் பகலும் சமமான புவி நாளின் வரலாறு

தொகு

வானியலின் படி இரவும் பகலும் சமமான புவி நாள், வடகோளப் பகுதியில் மத்திய வசந்தின் நடுப்பகுதி மற்றும் தென்கோளப் பகுதியில் மத்திய இலையுதிர் காலத்தின்போது ஏற்படுவதாகும். துல்லியமான தருணத்தைக் குறிக்கும் விதமாக இரவும் பகலும் சமமான நாள் மார்ச் 20 ஆம் தேதிவாக்கில் கொண்டாடப்படுகிறது.

இரவும் பகலும் சமமான நாள் என்பது நேரத்தின் அடிப்படையில், சூரியனின் மையப் பகுதியானது நிலக்கோள நடுக்கோட்டின் நேர் "உச்சியில்" ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 தேதிவாக்கில் அமைகின்ற நிகழ்வாகும் (ஒரு முழு நாள் அல்ல). பெரும்பாலான கலாச்சாரங்களில் இரவும் பகலும் சமமான நாள் என்பது கதிரவனின் தென்பயணக் காலத்தில் தொடங்கி, வடபயணக் காலத்தில் நிறைவடையும்படியாக இருக்கிறது.

 
டென்வர், கொலோரேடோ, யுஎஸ்ஏ இல் ஜான் மெக்கானெல் தனது வீட்டிற்கு முன்பு, தான் உருவாக்கிய புவிக் கொடியுடன்.

1969 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் "புவி நாள்" எனப்படும் உலகம் தழுவிய விடுமுறை நாளை ஜான் மெக்கானெல் முதன் முதலில் அறிவித்தார். 1970 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதியன்று சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் ஜோஸப் ஆலியோடோவால் முதல் புவி நாள் பிரகடனம் வெளியிடப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவின், டேவிஸ் மற்றும் பல நகரங்களில் வெவ்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன், கலிபோர்னியாவில் பல-நாள் தெரு விருந்துகளும் நடத்தப்பட்டன. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஊ தாண்ட் இந்த வருடாந்திர நிகழ்ச்சியை கொண்டாடும் மெக்கானெல்லின் முயற்சியை ஆதரித்தார் என்பதுடன், 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் தேதி இதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டு பின்வருமாறு கூறினார்:

நமது அழகான விண்கப்பலான பூமி தனது வெதுவெதுப்பான, மென்மையான, உயிரோட்டமுள்ள வாழ்வினங்களுடன் குளிர்ந்த விண்வெளியில் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்க இனி அமைதியான, உற்சாகமான புவி நாட்கள் மட்டுமே வர வேண்டும்.[7]

1972 ஆம் ஆண்டின் இரவும் பகலும் சமமான மார்ச் புவி நாளை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் குர்ட் வால்ட்ஹைம் அறிவித்தார் என்பதுடன், அந்த மார்ச் சம இரவு நாளிலிருந்து ஐக்கிய நாடுகள் அவையின் புவி நாள் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்கின்றன (ஐக்கிய நாடுகள் அவை ஏப்ரல் 22 ஆம் தேதி உலகம் தழுவிய புவி நாள் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறது).

மார்கரெட் மீட் சம இரவு நாள் கொண்டாட்டமான புவி நாளுக்குத் தனது ஆதரவை அளித்ததுடன், 1978 ஆம் ஆண்டு பின்வருமாறு அறிவித்தார்:

"புவி நாள் என்பது எல்லா தேசீய எல்லைகளையும் கடந்து, எல்லா பூகோள ஒருமைப்பாடுகளையும் பாதுகாத்து, மலைகளையும், கடல்களையும், மணிநேர நிலப்பகுதிகளையும் உள்ளடக்கி, அதே சமயம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு ஒப்பந்தம் ஆகும். அதே சமயம் இயற்கையின் இசைவை பாதுகாக்க, அதே சமயம் கால அளவீடும் விண்வெளி வழியிலான உடனடி தொடர்பு, மற்றும் தொழில் நுட்பத்தின் வெற்றிகளையும் எடுத்துக்கொண்டு செயல்படும் புனிதமான நாளாகும்.

புவி நாள் வானவியல் விநோதங்களை ஒரு புதிய வழியில் நோக்குகிறது - அது ஒரு மிகப் பழைமையான வழியும் கூட. வசந்த கால சம இரவு நாள் கதிரவன் நிலக் கோளத்தின் நடுக்கோட்டைக் கடக்கும் நேரம் மற்றும் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு பகல் நேரங்கள் சமமாக இருக்கும் தருணத்தைச் சிறப்பிக்கிறது. ஆண்டு நாள்காட்டியில் இந்நாள் தனிப்பட்ட, பிளவுபடுத்தும் ஒரு குறியீடாகவும் இருப்பதில்லை. ஒரு வாழ்க்கைமுறை மற்றொரு வாழ்க்கைமுறைக்கு மேலானது எனும் கருத்தும் அங்குத் தோன்றுவதில்லை. மார்ச் சம இரவு நாளைச் சிறப்பிப்பதில் உலக மக்கள் அனைவரும் பொதுவான வானவியல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். அத்துடன் விண் வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் கிடைக்கக்கூடிய தோற்றத்தின் அடிப்படையில் புவி நாளைக் குறித்த ஒரு கொடி உருவாக்கப்பட்டுள்ளதும் மிகப் பொருத்தமே."[8]

சம இரவு நாளில், ஜப்பானால் ஐக்கிய நாடுகளுக்கு நன்கொடையாகத் தரப்பட்ட ஜப்பானிய அமைதி மணியை ஒலித்துப் புவி நாள் கடைப்பிடிப்பது மரபாகும். ஐக்கிய நாடுகள் கொண்டாட்டம் நடக்கும் அதே சமயத்தில்[9] உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. 2008 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சடங்குகளைத் தவிர நியூசிலாந்து, கலிபோர்னியா, வியன்னா, பாரிஸ், லித்துவேனியா, டோக்கியோ மற்றும் பல இடங்களில் மணி ஒலித்துச் சடங்குகள் நடத்தப்பட்டன. சம இரவுப் புவி நாள் ஐக்கிய நாடுகள் அவையில் "புவி சமூக அறக்கட்டளை"[10] என்னும் அமைப்பால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஏப்ரல் 22 கொண்டாட்டங்கள்

தொகு

வளர்ந்து வரும் சுற்றுப்புறவியல் தீவிர நடவடிக்கை 1970 புவி நாளுக்கு முன்பு

தொகு

1960 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் அமெரிக்காவின் மிகவும் சுறுசுறுப்பான காலம் ஆகும். 1960 ஆம் ஆண்டின் மத்தியில் காடுகளுக்கான சட்டத்தை அமெரிக்கக் காங்கிரஸ் நிறைவேற்றத் தொடங்கியது.

நியூயார்க்கின் நசாவ் மாவட்டத்தில் நடந்த 1960 ஆம் ஆண்டிற்கு முந்தைய டிடிடீக்கு எதிரான அடித்தளப் போராட்டம், ரேச்சல் கார்சன் தனது அதிக அளவு விற்பனையிலான "ஒலியிழந்த வசந்தகாலம்" (Silent Spring) என்ற புகழ்பெற்ற நூலை 1962 ஆம் ஆண்டு எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டு ரால்ஃப் நேடர் சுற்றுப்புறவியலின் முக்கியத்துவம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

புவி நாள் 1970

தொகு
 
கேலார்ட் நெல்சன்

பரவலான சுற்றுச்சூழல் சீரழிவுக்கு பதிலளிக்கும் விதத்தில், அமெரிக்க மேலவை உறுப்பினர் கேலார்ட் நெல்சன், சுற்றுச்சூழல் குழு விவாதப்பொருள் அல்லது 1970 ஏப்ரல் 22 நடைபெற இருந்த புவி நாளுக்கு அழைப்பு விடுத்தார். அந்த ஆண்டு 2 கோடிக்கும் மேலான மக்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் போராட்டக்காரரான கேலார்ட் நெல்சன், இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் ஒரு முக்கிய பங்காற்றினார், அத்துடன் அவர் தனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை நிரூபிக்கச் சுற்றுச்சூழல் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் காலத்தில் நடைபெற்ற வியட்னாம் போர் எதிர்ப்புப் போராட்டங்களைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.[11] புவி நாள் என்கிற கருத்து முதன் முறையாக ஜேஃஎப் கென்னடி க்கு பிரெட் டட்டனால் எழுதப்பட்ட ஒரு அலுவலகக் குறிப்பில் முன்மொழியப்பட்டது.[12]

கலிபோர்னியா சமூக சுற்றுச்சூழல் பேரவையின் கூற்றுப்படி: 1969 ஆம் ஆண்டு கடலோரத்திற்கு அப்பால் ஏற்பட்ட பயங்கரமான எண்ணெய்க் கசிவுக்குப் பிறகு செனட்டர் கேலார்ட் நெல்சன் சான்டா பார்பராவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகுதான் புவி நாள் என்கிற திட்டம் உருப்பெற்றது என்றும், அத்துடன் அவர் அந்த நிகழ்வைக் கண்டதன் மூலம் மிகவும் கொதிப்படைந்து பின்னர் வாஷிங்டன் டிசிக்கு திரும்பிச் சென்றார். பின்னர் சுற்றுச்சூழல் குறித்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு ஏப்ரல் 22 ஆம் தேதியைத் தேசிய நாளாக அறிவிக்கும் ஒரு மசோதாவை அவர் சமர்ப்பித்தார்.[13]

 
டெனிஸ் ஹேய்ஸ்

இந்த நடவடிக்கைகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவரான டெனிஸ் ஹேய்ஸை செனட்டர் நெல்சன் தேர்ந்தெடுத்தார். புவி நாளானது "பாரம்பரிய அரசியல் செயல்முறையை ஒதுக்கித் தள்ள வேண்டும்" என்று தான் விரும்புவதாக ஹேய்ஸ் கூறினார்.[14] காரெட் டுபெல் என்பவர் சுற்றுச்சூழலுக்கான குழு விவாதப்பொருள் பற்றிய முதல் விளக்க வழிகாட்டியாக விளங்கியதுடன், சுற்றுப்புறச் சூழலுக்கான கையேடு ஒன்றை ஒழுங்குபடுத்தி தொகுத்தார்.

இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஒருவர் கீழ்வருமாறு கூறினார்:

"ஒரு மிகப்பெரிய அளவிலான பொது நலன் காரணமாக, பல வகையான சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகள்மீதும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். தவறான பாதையில் விரைந்து போய்க் கொண்டிருக்கும், இவை எல்லாவற்றையும் ஒரே சீராக எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்குள்ளது. மேலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக அவர்களை ஒரு சமுதாயத்தின் கீழ் ஒன்றிணைக்கவே நாங்கள் பாடுபடுகிறோம்.

"இது ஒரு மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தற்போது சுமார் 12000 உயர்நிலைப் பள்ளிகளிலும், 2000 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், ஓரிரு ஆயிரம் மற்ற சமுதாயக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன. வெவ்வேறு விதங்களில் பங்கேற்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்."

நாடு தழுவிய நிகழ்ச்சியில் வியட்நாம் போர் எதிர்ப்பும் நிகழ்ச்சிநிரலில் இருந்தது, ஆனால் இது சுற்றுச்சூழல் மையக் கருத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் என்று கருதப்பட்டது. வாஷிங்டன் டிசியில் நடந்த நிகழ்ச்சியில் பீட் சீகர் ஒரு முக்கியமான பேச்சாளர் மற்றும் அரங்க காட்சியாளராக இருந்தார். பால் நியூமன் மற்றும் அலி மக்கராவ் போன்றோர் நியூயார்க் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.[15].

"அமெரிக்க புரட்சியின் மகளிர் அமைப்பு" (Daughters of the American Revolution) என்ற நிறுவனம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்த மிகவும் குறிப்பிடத் தக்க அமைப்பாகும்.

1970 ஆம் ஆண்டின் புவி நாள் விளைவுகள்

தொகு
 
கலிஃபோர்னியாவின் சான் தியேகோவில் உள்ள சான் தியேகோ நகர் கல்லூரியில் புவி நாள் 2007.

அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் புவி நாள் கொண்டாட்டம் சிறப்புப் பெற்றது. முதல் புவி நாளன்று அமெரிக்கா முழுவதும் இரண்டாயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள், சுமார் பத்தாயிரம் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான சமுதாயங்களின் பங்கேற்பாளர்கள் மற்றும் கொண்டாட்டக்காரர்கள் இருந்தனர். குறிப்பாக, இது "சுற்றுச்சூழல் சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவான அமைதிப் போராட்டங்களுக்கு 2 கோடி அமெரிக்கர்கள் வசந்தகாலக் கதிரவனின் ஒளியில் இறங்கிவர வழியாயிற்று."[16]

அந்தப் புவி நாள் "வெற்றிக்கு" அடித்தள மக்களின் தன்னார்வப் பங்கேற்பே காரணம் என்று செனட்டர் நெல்சன் கூறினார். 2 கோடி போராட்டக்காரர்களும் ஆயிரக்கணக்கான பள்ளிகளும் உள்ளூர் சமுதாயங்களும் பங்கேற்றனர்.[17] சுற்றுச்சூழலுக்காகச் சட்டம் இயற்றுதல் ஒரு கணிசமான, நீடித்து நிற்கக்கூடிய மக்கள் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று அமெரிக்க அரசியல்வாதிகளை உணரச்செய்திருப்பதாக நெல்சன் நேரிடையாகக் குறிப்பிட்டார். 1970 ஆம் ஆண்டு புவி நாள் காரணமாகச் சுத்தமான காற்று, காட்டு நிலங்கள், கடல் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியது.[18]

தற்போது அது ஆதாய நோக்கமில்லாத புவி நாள் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு 175 நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அந்தக் கூட்டமைப்பு கூற்றுப்படி புவி நாள் இப்போது "ஒவ்வொரு வருடமும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் கொண்டாடப்படுகிற, உலகத்தின் மிகப் பெரிய மதச் சார்பற்ற விடுமுறை நாளாகும்."[19] சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து மனிதர்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் கொணர்வதற்கும், நாடுகளின் கொள்கைகளில் மாற்றம் கொணர்வதற்கும் புவி நாள் கொண்டாட்டம் துணையாகும் என்பது சுற்றுச் சூழல் குழுக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.[18]

ஏப்ரல் 22 இன் முக்கியத்துவம்

தொகு
  • சுற்றுச்சூழல் பற்றிய குழு விவாதப்பொருளில் கல்லூரி மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று எண்ணி இந்த நாளை மேலவை உறுப்பினர் நெல்சன் தேர்ந்தெடுத்தார். இதற்கு ஏப்ரல் 19 -25 தேதி வரையிலான நாட்களே சிறந்ததென அவர் முடிவு செய்தார்.

இந்த நாள் ஐக்கிய அமெரிக்காவில் தேர்வு காலத்தின்போதோ வசந்த கால விடுமுறையிலோ வரவில்லை. அத்துடன் மத சம்பந்தப்பட்ட உயிர்ப்பு விழா அல்லது யூத பாஸ்கா விழா போன்ற விடுமுறை நாட்களிலும் வரவில்லை. இது வசந்த காலத்தில் வசதியான காலநிலையில் வரும் நாளாகவும் உள்ளது.

வகுப்பில் அதிக அளவு மாணவர்கள் இருக்கக்கூடும், எனவே வாரத்தின் மத்தியில் மற்ற நிகழ்ச்சிகளுடன் குறைவான போட்டியே இருக்கும் என்ற காரணத்தினாலே, ஏப்ரல் 22 ஆம் தேதி புதன் கிழமையை அவர் தேர்ந்தெடுத்தார்.

லெனினின் 100வது பிறந்த நாளை வேண்டுமென்றே தான் தேர்ந்தெடுத்தீர்களா என்று கேட்டதற்கு, நெல்சன் ஒரு விளக்கம் தந்தார். அதாவது, உலகத்தில் 370 கோடி மக்கள் இருக்கின்றனர்; ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் மட்டுமே என்ற நிலையில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி மக்களின் பிறந்த நாள் வருகிறது என்பது நெல்சன் அளித்த விளக்கம்.

"எந்த ஒரு நாளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் பிறக்கக்கூடும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"உலகத்தின் முதல் சுற்றுச்சூழல்வாதி என்று பலராலும் கருதப்படும் அசிசியின் பிரான்சிசு ஏப்ரல் 22 அன்று பிறந்தவர்தான்." [20]

  • ஏப்ரல் 21 ஆம் தேதி ஸியெர்ரா கிளப்பை நிறுவிய ஜான் முயிரின் பிறந்த நாள் ஆகும்.
  • "டைம்ஸ்" பத்திரிகை கூறியது: 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி தான் விளாடிமிர் லெனின் 100 வது பிறந்த நாளாகும். அந்த நாள் ஒன்றும் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் அல்ல; உண்மை என்னவென்றால் அது "ஒரு கம்யுனிஸ்ட் தந்திரம்" என்று சிலர் சந்தேகப்படுகின்றனர்.

" [14] அமெரிக்காவின் ஃபெடரல் பியுரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் இயக்குநர் ஜே.எட்கர் ஹூவருக்கு லெனின் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்; 1970 ஆம் ஆண்டு போராட்டங்களின்போது ஃஎப்பிஐ வேவு பார்த்ததாகச் சொல்லப்பட்டது.[21] லெனின் எப்போதுமே ஒரு சுற்றுச்சூழல்வாதியாக அறியப்பட்டவர் அல்லர் என்றபோதிலும், லெனினின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத்தான் அந்த நாள் தேர்ந்தடுக்கப்பட்டது என்கிற எண்ணம் [22][23] சில இடங்களில் இன்னும் நிலவுகிறது. ஆரம்ப கால ஏற்பாடுகள் நடந்த சமயத்தில் ஏப்ரல் 22 ஐத் தேர்வு செய்யச் சில இடது சாரிக் குழுக்கள் நெல்சன் மீது "செல்வாக்கைப் பயன்படுத்தியதாக" கூறியிருக்கிறார்கள். ஆனால் இது அவர் வேண்டுமென்றே எடுத்த முடிவாகத் தோன்றவில்லை.

  • ஏப்ரல் 22 என்பது 1872 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு தேசிய மரம்-நடும் விடுமுறையான ஆர்போர் டேயின் நிறுவனர் ஜுலியஸ் ஸ்டெர்லிங் மோர்ட்டனின் பிறந்த நாளே ஆகும்.

ஆர்போர் டே 1885 ஆம் ஆண்டு நெப்ராஸ்காவில் ஏப்ரல் 22 அன்று நிரந்தரமாகக் கொண்டாடப்படுகிற ஒரு சட்டப்பூர்வமான விடுமுறை நாளாக ஆனது. நேஷனல் ஆர்போர் டே அமைப்பின் கூற்றின்படி "அரசாங்க அனுஷ்டிப்புகளுக்கு மிகவும் பொதுவான நாள் ஏப்ரலின் கடைசி வெள்ளிக்கிழமை தான்... ஆனால் பல அரசு விடுமுறை நாட்கள் மரம் நடுவதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலைக்கு ஒத்துப்போகிற சமயங்களில் வருகின்றன."

[24] நெப்ராஸ்காவைத் தவிர, மிகவும் பரவலாகக் கொண்டாடப்படுகிற புவி நாளால் இது பெரும்பாலும் பொலிவிழந்து காணப்படுகிறது.

புவி வாரம்

தொகு

பல நகரங்கள் புவி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி அட்டவணையை வழக்கமாக ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 22 புவிநாள் அன்று முடியும்படி ஒரு முழு வாரத்திற்கும் நீட்டிக்கின்றன.[25] இந்த நிகழ்ச்சிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கூடிய அதிகப்படியான மறுசுழற்சி, செம்மையான எரிபொருள்-செயல்திறன், மற்றும் கழித்துக்கட்ட வேண்டிய பொருட்களைக் குறைத்தல் உள்ளிட்ட நடத்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டவை. [26]

ஏப்ரல் 22 உலகெங்கிலும் உள்ள பல லட்சம் மக்களால் கொண்டாடப்படும் புவி நாளாக இருந்து வருகிறது.

புவி நாள் சுற்றுப்புறவியல் கொடி

தொகு
 
சுற்றுப்புறவியல் கொடி "தேட்டா" என்னும் கிரேக்க எழுத்துடன்.

"ஃபிளாக்ஸ் ஆப் தி வேர்ல்ட்" என்னும் அமைப்பின் கூற்றுப்படி, "சுற்றுப்புறவியல் கொடி", ஓவியர் ரான் கோப் ஆல் உருவாக்கப்பட்டது. லாஸ் ஏஞ்செலீஸ் ஃப்ரீ பிரஸ் இல் 1969 நவம்பர் 7 ஆம் நாள் பிரசுரிக்கப்பட்டது, பிறகு பொதுச் சொத்தாக மக்கள் மத்தியில் வைக்கப்பட்டது.

பெட்சி வோகெல் ஒரு 16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவி. வித்தியாசமான பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு சுற்றுச்சூழல் கொள்கைப் பரப்பாளர் மற்றும் சமுதாயப் போராளி, முதல் புவி நாளைக் கொண்டாடும் பொருட்டு, ஒரு 6-அடி (1.8 m)[41]4 x பச்சை மற்றும் வெள்ளை "தேட்டா" சுற்றுப்புறவியல் கொடியை உருவாக்கினார். லுயிசியானாவின் ஸ்ரேவ்போர்ட் இல் உள்ள சி.ஈ.பைர்ட் உயர்நிலைப் பள்ளியில் அந்தக் கொடியைப் பறக்கவிட ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்ட வோகெல், பின்னர் லுயிசியானா மாநில சட்டமன்ற மற்றும் லுயிசியானா ஆளுநர் ஜான் மகேய்த்தனை அணுகி, [மேற்கோள் தேவை]புவி நாள் அன்று அக்கொடியைப் பறக்கவிட அதிகாரம் பெற்றார்.

புவி நாளைப் பற்றிய விமர்சனங்கள்

தொகு

அலெக்ஸ் ஸ்டெஃபன் போன்ற சில சுற்றுச் சூழல் ஆதரவாளர்கள், குறிப்பாக ஒளிரும் பச்சைச் சுற்றுச் சூழல் முகாமைச் சேர்ந்தவர்கள், புவி நாளை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். புவி நாள் என்பது சுற்றுச் சூழல் கரிசனையை ஓரங்கட்டிவிட்டதற்கான குறியீடாக மாறி விட்டிருக்கிறது; இந்தக் கொண்டாட்டங்களால் இனிப் பயனேதும் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.[27]

2009 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி தி வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு தலையங்கம் "ஆர்போர் டே" கொண்டாட்டத்தைப் புவி நாள் கொண்டாட்டத்துடன் ஒப்பிட்டது. ஆர்போர் டே என்பது ஒரு மகிழ்ச்சிகரமான, அரசியல் கலப்பில்லாத மரங்களின் கொண்டாட்டம்; ஆனால் புவி நாள் என்பதோ மனிதர்களை எதிர்மறை ஒளியில் சித்தரிக்கும் எதிர்மறையான அரசியல் சித்தாந்தம் என்றது.[28]

புவிநாள் பண்கள்

தொகு

’’புவிநாள் பண்’’

Our cosmic oasis, cosmic blue pearl

the most beautiful planet in the universe

all the continents and the oceans of the world united we stand as flora and fauna

புடவியின் பேரழகுக் கோளே!

அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!

ஒன்றி வாழ்வோம் ஒருநிரை யாக

கண்டங்களும் கடல்களும் களித்துயிர் களோடே!

united we stand as species of one earth

black, brown, white, different colours

we are humans, the earth is our home.

புவியில் வாழும் உயிரினங் களோடும்

கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ

மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.

மாந்தர் நாமே நம்குடில் பூமி!

Our cosmic oasis, cosmic blue pearl

the most beautiful planet in the universe

புடவிப் பெருவெளிப் பேரழகுக் கோளே! அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே!

all the people and the nations of the world

all for one and one for all

united we unfurl the blue marble flag

black, brown, white, different colours

we are humans, the earth is our home.

உலக நாட்டு இணைந்த மக்கள்யாம்

எலாமொருவருக்கு;ஒருவரெலார்க்கும்

நீலப் பளிங்குக்கொடி நெடிதுயர்த்தினோம்

கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ

மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம்.

மாந்தர் நாமே நம்குடில் பூமி! .

  1. இயற்றியவர்: அபய் குமார் (கவிஞர்-ஓவியர்: இந்தியா)

’’புவிநாள் பண்’’

எத்தனை வியப்புகள் புவியினிலே-அதை

எத்தனை எழிலுடன் புனைகின்றோம்

எளிய கொடைகளை இயற்கைதரும்-அட

எனினும் புவியோ வானாகும்

பெற்றவை போதும் சூளுரைப்போம்-அதைப்

பேணுவம் என்றும் புதிதாக

சிற்றிளங் கையால் தொடுகையிலே-உடற்

சிலிர்க்கணும் சிணுங்கணும் சிரித்துடனே-அட

புத்தம் புதியதாய் பொலியணுமே!

இதுவரை,

பெற்றவை போதும் சூளுரைப்போம்-அதைப்

பேணுவம் என்றும் புதிதாக

சிற்றிளங் கையால் தொடுகையிலே-உடற்

சிலிர்க்கணும் சிணுங்கணும் சிரித்துடனே-அட

புத்தம் புதியதாய் பொலியணுமே!

  1. இயற்றியவர்:வில்லியம் வாலசு

Earth Day Anthem

Joyful joyful we adore our Earth in all its wonderment

Simple gifts of nature that all join into a paradise

Now we must resolve to protect her

Show her our love throughout all time

With our gentle hand and touch

We make our home a newborn world

Now we must resolve to protect her

Show her our love throughout all time

With our gentle hand and touch

We make our home a newborn world[56]

  1. William Wallace

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Earth Day: The History of a Movement". Archived from the original on 2016-02-08. பார்க்கப்பட்ட நாள் 2015-04-21.
  2. Congressional Record, July 18, 2005, Section 22
  3. This American Life, Episode 383, [1]"Origin Story"
  4. Statement by Paul Leventhal on the 25th Anniversary of the Nuclear Control Institute, 6/21/2006 [2]http://www.nci.org/06nci/06/NCI25thAnniversary.htm
  5. 'Environmental Crisis' May Eclipse Vietnam as College Issue, New York Times, 11/30/1969
  6. "Earth Day :: Cleaning Up Our Planet" Kidzworld.com. Retrieved on 2009-03-25.
  7. "2004 Earth Day" பரணிடப்பட்டது 2014-04-25 at the வந்தவழி இயந்திரம் United Nations "Cyberschoolbus".
  8. Margaret Mead, "Earth Day," EPA Journal, March 1978.
  9. "Japanese Peace Bell" பரணிடப்பட்டது 2013-09-28 at the வந்தவழி இயந்திரம் United Nations "Cyberschoolbus"]
  10. "Earth Society Foundation"
  11. Brown, Tim ஏப்ரல் 11 2005 "What is Earth Day?" பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம் அமெரிக்க வெளியுறவுத்துறை
  12. "Fred Dutton 1923-2005".
  13. "Earth Day" பரணிடப்பட்டது 2009-04-16 at the வந்தவழி இயந்திரம், Santa Barbara Community Environmental Council.
  14. 14.0 14.1 "A Memento Mori to the Earth". டைம். 1970-05-04. Archived from the original on 2009-04-24.
  15. Environment பரணிடப்பட்டது 2008-08-21 at the வந்தவழி இயந்திரம் ஐக்கிய அமெரிக்க தூதரகம், வெலிங்க்டன், நியுசிலாந்து
  16. Lewis, Jack (November 1985)."The Birth of EPA" பரணிடப்பட்டது 2006-09-22 at the வந்தவழி இயந்திரம்அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு
  17. Nelson, Gaylord. "How the First Earth Day Came About" பரணிடப்பட்டது 2010-04-21 at the வந்தவழி இயந்திரம் Envirolink.org.
  18. 18.0 18.1 History of Earth Day பரணிடப்பட்டது 2009-04-25 at the வந்தவழி இயந்திரம் Earth Day Network.
  19. "About Earth Day Network"
  20. Christofferson, Bill, "The Man from Clear Lake: Earth Day Founder Gaylord Nelson", University of Wisconsin Press, Madison, 2004, p. 310
  21. Finney, John W. (April 15 1971). "MUSKIE SAYS F.B.I. SPIED AT RALLIES ON '70 EARTH DAY". The New York Times. p. 1. http://select.nytimes.com/gst/abstract.html?res=FB0917F73A5F127A93C7A8178FD85F458785F9. 
  22. Marriott, Alexander (2004-04-21). "This Earth Day Celebrate Vladimir Lenin's Birthday!". Capitalism Magazine. பார்க்கப்பட்ட நாள் 2007-04-22.
  23. "Of Leo and Lenin: Happy Earth Day from the Religious Right", Church & State, 53 (5): 20, May 2000
  24. "Arbor Day's Beginnings". The National Arbor Day Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-04-22.
  25. "City Celebrates Earth Week". City of Chicago. 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-04-01.
  26. E.g., [3]"Earth Day :: Cleaning Up Our Planet" Kidzworld.com. Retrieved on 2009-03-25.
  27. "WorldChanging: Tools, Models and Ideas for Building a Bright Green Future: Make This Earth Day Your Last!". Archived from the original on 2009-09-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-03.
  28. Arbor vs. Earth Day, The Washington Times, May 5, 2009

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புவி நாள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஏப்ரல் 22 புவி நாள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவி_நாள்&oldid=4162304" இலிருந்து மீள்விக்கப்பட்டது