பேர்கன் நகர வரலாறு

பேர்கன் நகரம்
பற்றிய கட்டுரைகள்

நோர்வேயின் இரண்டாவது பெரிய நகரமான பேர்கன் நகரத்தின் வரலாறு கிபி 11ம் நூற்றாண்டுகளில் ஆரம்பமாகிறது. இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழம்பெரும் நகரம் ஆகும். இந்நகரம் 11ஆம் நூற்றாண்டிலிருந்து பலநூறு ஆண்டுகள் சர்வதேச வணிகம், கப்பல் வணிகம் போன்ற துறைகளில் முன்னணியில் இருந்தது.

பேர்கன் நகரம், Harald Hardråde என்பவரின் மகனான Olav Kyrre (1067-1093) அரசனால் கி.பி. 1070 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஒரு நம்பிக்கை நிலவியதனால்[1], 1970 இல் 900 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. ஆயினும், புதிய ஆராய்ச்சிகள் ஏற்கனவே 1020ஆம், அல்லது 1030 ஆம் ஆண்டுகளிலேயே பேர்கனில் வணிக குடியேற்றங்கள் ஏற்பட்டு விட்டதாகச் சொல்கின்றது[2]. பேர்கன் என்ற பெயரையும் Olav Kyrre அரசனே "மலைகளிடையேயான பசும்புல் நிலம்" என்ற அர்த்தத்தில் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது[3].
பேர்கன் முக்கிய வணிக மையமாக மாறத்தொடங்கியதும், மிக விரைவாக வளர்ச்சியடைந்து, 1100-1600 ஆண்டுகளில் நோர்டிக் நாடுகளில் மிகப் பெரிய நகரமாகவும், 1830 ஆம் ஆண்டு வரையில் நோர்வேயின் மிகப் பெரிய நகரமாகவும் விளங்கி வந்தது. 12ஆம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்து (1217), 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் (1314) பல ஆண்டுகள் பேர்கன் நோர்வேயின் தலைநகரமாகவும் இருந்தது.

1100 ஆம் ஆண்டளவில், நோர்வேயின் வடக்குக் கடற் கரையோரமிருந்து பெறப்படும் Cod மீன் கருவாட்டு வணிகத்தினால் பேர்கன் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றது[4]. 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பேர்கன், நோர்வேயின் மிக முக்கிய வணிக மையமாக நிறுவப்பட்டது[5]. அந்தக் கால கட்டத்தில், வட ஐரோப்பாவின் முக்கியமான வணிக நகரங்களை இணைத்து செயற்பட்ட Hanseatic League அமைப்பில், மிக முக்கிய நகரமாக பேர்கனே இருந்து வந்தது[6].

Bryggen வரலாற்று முக்கியத்துவம்

தொகு

பேர்கன் நகரின் மையப் பகுதியில் Bryggen என்றழைக்கப்படும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் உள்ளது. இப்பகுதியில், நகரின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்ட கட்டிடத் தொகுதி இருப்பதைக் காணலாம். இந்த கட்டிடத் தொகுதி 1070 ஆம் ஆண்டளவில் நோர்வேஜிய மக்களால் கட்டப்பட்டு இருந்தாலும், 1360 – 1764 காலப் பகுதியில் அந்த இடம், ஜேர்மனியர்கள் வசம் இருந்தபோது மிகவும் பிரசித்தமடைந்து இருந்தது. ஆரம்பத்தில் நோர்வேஜிய மக்கள் இந்த இடத்தை தமது வியாபார நோக்கத்திற்கு பாவித்து வந்தனர். இந்த கட்டடத் தொகுதிக்கு அண்மையாக கடல்நீரேரி வருவதனால், பெரிய கப்பல்களும் நேரடியாக, கட்டிடத் தொகுதிக்கு அண்மையாக கொண்டு வரப்படுவது வியாபாரிகளுக்கு இலகுவாக இருந்தது. பேர்கன் மிக முக்கிய பண்டமாற்று வியாபாரத் தலமாக அமைந்திருந்தது. நோர்வேயில் இருந்து உலர் மீன்கள் (dry fish) அதிகளவில் வெளிநாடுகளுக்கு சென்றது. இந்த உலர் மீன்கள் உப்பு சேர்க்கப்படாமல், காற்றில் உலர்த்தப்பட்டு பெறப்படுபவை. 1980 ஆம் ஆண்டளவில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்படும்வரை, நோர்வேயின் பொருளாதாரம் மீனிலும், கப்பல் கட்டும் தொழிலிலுமே தங்கி இருந்தது.

1360 ஆம் ஆண்டில் நோர்வேயை ஆண்ட ஒரு டென்மார்க் அரசனால், Hanseatic League என்றழைக்கப்பட்ட, ஜேர்மனிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டுக்குள் நோர்வேயின் வியாபாரம் வந்து சேர்ந்தது. Hansa வணிக அமைப்பின் முக்கியமான நான்கு அலுவலகங்கள் Bergen, Brugge, London og Novgorod ஆகிய நகரங்களில் அமைந்திருந்தது. பேர்கன் நகரில், Bryggen இலுள்ள இந்த கட்டடத் தொகுதி ஜேர்மனியர்கள் வசமாகியபோது, 1360 ஆம் ஆண்டில், ஜேர்மனிய வர்த்தகர்கள் தமது அலுவலகத்தை இந்த கட்டடத்தில் வைத்திருந்ததுடன், ஜேர்மனிய வியாபாரிகளே இந்த குடியிருப்புக்களில் இருந்தனர்.

Panorama av Bryggen i Bergen. De seks husene til venstre er kopier av dem som brente i 1955. Resten ble reist i gammel stil etter bybrannen i 1702 og fikk kledning på 1800-tallet

இந்தக் கட்டடத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு கட்டடங்களும், அண்ணளவாக 68 படுக்கை அறைகளைக் கொண்டு அமைந்த 10-15 தனிவீடுகள் போன்று, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் வேலை பழகுபவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனேகமாக வேலைபழகுபவர்கள் (apprentices) 13 வயது வந்த சிறுவர்களாக இருப்பார்கள். அவர்களை கவனித்துக் கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முகாமையாளர் இருப்பார். ஒரு கட்டடத் தொகுதிக்கு ஒரு சொந்தக்காரர் இருப்பார். அவர் மட்டும் திருமணம் செய்து ஜேர்மனில் வசிப்பார். ஏனையோரில் திருமணமானவர்கள் தமது குடும்பத்தை விட்டுவிட்டு தனியாகவே பேர்கனில் வாழவேண்டியவர்களானார்கள். அத்துடன் அந்த வணிகர்களில் எவரும் அந்த குறிப்பிட்ட குடியிருப்பிலன்றி வேறு எங்கும் வாழ அனுமதிக்கப்படாததோடு, நோர்வேயில் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. பெண்களுடன் பேசுவதற்குகூட தடை இருந்தது. எனவே இந்த முழுமையான கட்டடத் தொகுதியில், முற்று முழுவதுமாய் ஆண்கள் மட்டுமே வசித்து வந்தார்கள். இவற்றில் அனேகமானோர் ஆயுதங்கள் வைத்திருக்கும் இளம் ஆண்களாகவே இருந்தார்கள். அவர்கள் நோர்வேஜிய பெண்களுடன் தொடர்புகொண்டால், முகாமையாளராக இருந்தாலும், அதற்கு தண்டனை உண்டு. முகாமையாளருக்கு அதிகுறைந்த தண்டனை எல்லோருக்கும், ஒரு அண்டா பியர் (barrel bear) வாங்கிக் கொடுப்பது. தொழில்பழகும் இளவயதினருக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுவதுண்டு.

இந்த கட்டடங்கள் முற்றிலும் பலகைகளால் ஆனதாய் இருப்பதனால், இங்கே எதையும் சூடாக்கவோ, விளக்குகள் வைத்திருக்கவோ, மெழுகுதிரி வைத்திருக்கவோ அனுமதி இருக்கவில்லை. அனைவரின் வீட்டிலும் தீயணைப்பதற்காக கட்டாயமாக நீர் கொள்கலன் இருக்க வேண்டும். குளிர் காலங்களில் அனேகமானோர் பின்னே இருக்கும் ஓய்வறையிலேயே அதிக நேரத்தை செலவளிப்பார்கள். அந்த காலங்களில் வியாபாரமும் மிகவும் மந்த நிலையிலேயே நடைபெறும். ஒவ்வொரு குடியிருப்பிலும் அமைந்திருக்கும் அனைத்து வீடுகளுக்கும் பொதுவான ஓய்வறை ஒவ்வொரு குடியிருப்பின் பின் பக்கம் அமைந்திருக்கும். அந்த ஓய்வறை கல்லால் ஆனது. அங்கே வேலை பழகுபவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்படுவதுடன், கூட்டங்களும் நடத்தப்படும். சமையல் செய்வதற்கென ஒவ்வொரு குடியிருப்பின் பின் பகுதியிலும் பொதுவான, தனியான சமைக்கும் வீடு கட்டப்பட்டிருக்கும். குடியிருப்புக்கு முன்பாக, கடலை அண்டி, சரக்குகள் இறக்கி வைப்பதற்கான கட்டடம் உண்டு. அத்துடன், ஒவ்வொரு குடியிருப்புக்கும் பொதுவாக ஒரே ஒரு மலசல கூடமும் முன்புறத்தில் அமைத்திருந்தார்கள்.

எத்தனை பாதுகாப்புடன் இருந்தாலும், காலத்துக்கு காலம் இந்த குடியிருப்பு நெருப்பின் தாக்கத்துக்கு உட்படுவதும், மீள அமைக்கப்படுவது நடந்திருக்கின்றது. இந்த Bryggen கட்டடத் தொகுப்பில் காலத்துக்கு காலம் பல திருத்த வேலைகள் செய்யப்பட்டாலும், இது ஒரு பரம்பரைச் சொத்தாக கணிக்கப்பட்டு, அதே பழைய நிலையில் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றது. 1764 இல் நோர்வேஜிய அரசனால், மீண்டும் நோர்வேஜிய வர்த்தகர்கள் வசம் அந்த வர்த்தக முக்கியத்துவம் பெற்ற இடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போதும் சரித்திர முக்கியத்துவம் கருதி, அந்த இடம் அதே பழைய நிலையில் இருந்தாலும், அந்த கட்டடத் தொகுதியின் பகுதிகள், உல்லாசப்பயணிகளுக்கான பொருட்கள் விற்கப்படும் கடைகளால் நிறைந்து இருக்கின்றது. கடலை அண்டிய பகுதியில் அமைந்திருந்த மலசல கூடங்கள் நகரின் அழகு கருதி, அகற்றப்பட்டுவிட்டன.

Bryggen சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதுடன், மிகப் பழமை வாய்ந்த கட்டடத் தொகுப்பைக் கொண்ட (counting house என்று அழைக்கப்படுகிறது) குடியிருப்பாக இருந்ததனால், யுனெஸ்கோவினால் 1972 இல் உருவாக்கப்பட்ட உலக பாரம்பரியக் களப் பட்டியலில் இல் 1979 ஆம் ஆண்டில் Bryggen உம் சேர்த்துக் கொள்ளப்பட்டது[7].

Hansa அமைப்பு

தொகு

Hanseatic League அமைப்பினரே பேர்கன் வர்த்தகத்தில் ஆட்சியுடையவர்களாக இருந்திருப்பினும், ஏனைய ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்களும், நோர்வே வர்த்தகர்களும்கூட இந்த வியாபார மையத்தை முக்கியமாக பாவித்து வந்தனர். Hanseatic League அமைப்பினார் தாமே முன்னணியில் இருக்க விரும்பியதனால், இவ்வமைப்பினருக்கும், ஏனைய வர்த்தகர்களுக்குமிடையே இடையிடையே மோதல்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. 1500 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இவ்வமைப்பினரில் பலர் நோர்வே வதிவிட அனுமதியைப் பெற்று நோர்வேயிலேயே வாழத் தொடங்கினர். 1669 இல் இவ்வமைப்பு கலைக்கப்பட்டது. இருந்தாலும் 1754 ஆம் ஆண்டுவரை ஜேர்மனிய அலுவலகம் அங்கே அமைந்திருந்தது. இது பின்னர் நோர்வே அலுவலகமாக 1754 இல் மாற்றப்பட்டாலும், அதே சட்டதிட்டங்களுடன் இயங்கி வந்தது. பின்னர் 1899 இல் அலுவலகம் அந்த கட்டடத் தொகுதியிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது[8].

நகரில் நெருப்பு

தொகு

சரித்திரத்தில் பல கால கட்டங்களில் பேர்கன் நகரானது பெரு நெருப்பின் தாக்கத்திற்கு உட்பட்டது. 1170 இல் முதன் முதலில் Bryggen பகுதியில் பெருநெருப்புனால் அழிவு ஏற்பட்டது. பின்னர் 1198 இல் Bagler என அழைக்கப்படும் ஒரு அமைப்பினர், தமது கட்டுப்பாட்டுக்குள் நகரின் சில பகுதிகளைக் கொண்டு வர முடியாமல் போன கோபத்தில் சில பகுதிகளை எரியூட்டி அழித்தனர். 1248 இல் மீண்டும் Bryggen உட்பட பல பகுதிகளும் 11 கிறிஸ்தவ தேவாலயங்களும் நெருப்பினால் அழிக்கப்பட்டன. பின்னர் 1393, 1428, 1429 ஆம் ஆண்டுகளில் ஜேர்மனிய கடல் கொள்ளையர்களால் நகரம் கொள்ளையடிக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. 1476 இல் சரக்குகள் நிறைந்த இடத்தில் ஆரம்பித்த நெருப்பு அழிவை ஏற்படுத்தியது. 1623 இல் Vågsbunnen இன் கரையோரப்பகுதி முற்றாக எரிந்து நாசமானது. 1702 இல் ஏற்பட்ட நெருப்பில் நகரின் 90% எரிந்து அழிந்தது. 1756 இல் கடற்கரையில் ஆரம்பித்த நெருப்பின் அழிவில் 1500 கட்டடங்கள் எரிந்து போயின. 1916 இல் ஏற்பட்ட நெருப்பில் 380 கட்டடங்கள் எரிந்தன. கடைசியாக 1955 இல் Bryggen இன் வடக்குப் பகுதி எரிந்தது. பேர்கனில் 36 தடவைகள் நெருப்பு அழிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொள்ளை நோய்கள்

தொகு

1349 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலிருந்து வந்த கப்பல் ஒன்றிலிருந்தவர்களால் ஒரு கொடிய நோய் பேர்கன் நகருக்குள் வந்தது[9]. அந்த நோயினால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட நோர்வேயின் அரைவாசி மக்கள் இறந்து போயினர். அதனால் அந்த காலத்தை கறுப்பு இறப்பு என அழைக்கின்றனர். 1600 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கொள்ளை நோயால் கிட்டத்தட்ட 3000 மக்களும், பின்னர் 1618 இல் ஏற்பட்ட ஒரு நோயால் கிட்டத்தட்ட 4000 மக்களும் இறந்தனர். 1848 இலும், மீண்டும் 1849 இலும் வந்த கொலரா கொள்ளை நோயால் 1800 மக்கள் இறந்தனர்.

போராட்டங்கள்

தொகு

1130-1240 ஆண்டுகளில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்களில் பேர்கன் போரின் முக்கிய இடமாக இருந்தது. அவ்வேளையில் அரச உறவினர்களிடையே கூட வெறுப்பு இருந்து அரசர்கள் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். 1393, 1428 இல் Hanseatic League அமைப்பின் சார்பாக ஜேர்மனி கடற் கொள்ளையர்கள் பேர்கன் நகரத்தை தாக்கினர். பின்னர் 1429 ஆம் ஆண்டில் 1455 ஆம் ஆண்டில் இப்படி கலகத்துக்கென வந்தவர்களை நோர்வேஜியர்கள் எதிர் கொண்டதன் மூல Hanseatic League அழிக்கப்பட்டது.
1665 இல் பேர்கன் நகரில் வைத்து, டச்சு கடற்படையினரை, ஆங்கிலேயர்களின் போர்க்கப்பல் ஒன்று தாக்கியது. 1765 இல் புதிய மேலதிக வரிக்கு எதிராக கிட்டத்தட்ட 2000 விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 1808 இல் டச்சுக்காரரை துரத்திய ஆங்கிலேயர்களை எதிர்த்து நோர்வேஜியர்கள் போராடினர். 1868 இல் ஏழைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
1940 இல் கடல் வழியாக வந்த 1900 ஜேர்மனியர்கள் பேர்கன் நகருக்குள் பிரவேசித்து நகரைக் கைப்பற்றினார்கள். 1944 இல் ஜேர்மனியின் ஆயுதக் கப்பல் ஒன்று வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது. அந்த வெடிப்பில் 98 பேர் இறந்தும், 4800 பேர் காயமடைந்தும், 131 வீடுகள் முற்றாக அழிந்தும், 117 வீடுகள் பயன்பாட்டுக்கு உகந்ததாக அல்லாதவையாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேவருடத்தில் ஜேர்மன் நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியர்கள் தாக்கினர். அப்போது, 151 பாடசாலைக் குழந்தைகளும்கூட இறந்து போயினர்.

அடிக்குறிப்பு

தொகு
  1. Elisabeth Farstad (2007). "Om kommunen" (in Norwegian). Bergen kommune. Archived from the original on 5 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 16 September 2007.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. NRK, "Bergens historie må skrives om"
  3. Brekke, Nils Georg (1993). Kulturhistorisk vegbok Hordaland (in Norwegian). Bergen: Hordaland Fylkeskommune. p. 252. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 82-7326-026-7.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Marguerite Ragnow (2007). "Cod". பார்க்கப்பட்ட நாள் 14 August 2007.
  5. Alf Ragnar Nielssen (1 January 1950). "Indigenous and Early Fisheries in North-Norway" (PDF). The Sea in European History. http://www.stm.unipi.it/Clioh/tabs/libri/1/12-Nielssen(6).pdf. பார்த்த நாள்: 2009-07-22. 
  6. Kloster, Robert (1952). Castle and City: Through historical Bergen.
  7. UNESCO (2007). "World Heritage List". பார்க்கப்பட்ட நாள் 14 August 2007.
  8. "tradisjonsfisk.ivest.no". Archived from the original on 2010-02-11. பார்க்கப்பட்ட நாள் 2010-09-10.
  9. Carl Hecker, Justus Friedrich (1833). The Black Death in the Fourteenth Century.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்கன்_நகர_வரலாறு&oldid=3565329" இலிருந்து மீள்விக்கப்பட்டது