மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (University of Science, Malaysia) (சுருக்கமாக:USM) என்பது மலேசியாவில் அரசு சார்ந்த ஒரு பொதுப் பல்கலைக்கழகமாகும். இதற்கு பினாங்கில் (முதன்மை வளாகம்), கிளாந்தானில் (சுகாதார வளாகம்), நிபோங் திபாலில் (பொறியியல் வளாகம்) என மூன்று வளாகங்கள் உள்ளன. இந்தியாவின் KLE பல்கலைக்கழகத்தின் ஓர் உடன்பாட்டு இணக்கத்துடன் ஒரு மருத்துவத் துறையும் இங்கு இயங்கி வருகிறது.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
University of Science Malaysia
Universiti Sains Malaysia
马来西亚科技大学
குறிக்கோளுரைWe Lead
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
நாம் முன்னணி
வகைஅரசு பல்கலைக்கழகம்
உருவாக்கம்1969
வேந்தர்மாண்புமிகு துவாங்கு சையட் சிராஜுடின் இப்னி துவாங்கு சையட் புத்ரா
துணை வேந்தர்பேராசிரியர் டத்தோ டாக்டர் ஒமார் ஒஸ்மான்[1]
மாணவர்கள்28.300
அமைவிடம்,
வளாகம்முதன்மை வளாகம் பினாங்கு, சுகாதார வளாகம் குபாங் கிரியான், கிளாந்தான், பொறியியல் வளாகம் நிபோங் திபால், பினாங்கு
இணையதளம்மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இணையத்தளம்

கோலாலம்பூர் கல்வி நகரத்தில் (KLCE), கோலாலம்பூர் உலகளாவிய வளாகம் எனும் ஒரு புதிய வளாகம் திறப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.[2][3] மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில், 2011ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி ஏறக்குறைய 30,118 இளங்கலை முதுகலை, முனைவர்த் துறை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.[4] இங்கு 1,495 முழுநேரக் கல்வியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதாவது 19 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் எனும் விகிதாசாரம் நடைமுறையில் உள்ளது.

வரலாறு தொகு

 
முதன்மை வளாகத்தின் நுழைவாயில்
 
பல்கலைக்கழக கலையரங்கம்
 
பல்கலைக்கழக அனைத்துலக அலுவலகம்
 
இந்தியாவின் KLE மருத்துவக் கல்லூரி

பினாங்கு மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது ஒரு தீர்மானத்தின் மூலமாகக் கொண்டுவரப்பட்ட ஓர் உடன்படிக்கையாகும். அந்தத் தீர்மானத்திற்கு பினாங்கு மாநிலச் சட்டமன்றம் 1962இல் ஒப்புதல் வழங்கியது. பினாங்கு, சுங்கை அராவில் ஒரு துண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அந்த நிலத்தில், 7 ஆகஸ்ட் 1967இல், அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அடிக்கல் நாட்டினார். 1969ஆம் ஆண்டில் மலேசியாவின் இரண்டாவது பல்கலைக்கழகமாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

முதன் முதலில் புலாவ் பினாங்கு பல்கலைக்கழகம் (Universiti Pulau Pinang) என்று அழைக்கப்பட்டது. பினாங்கு குலுகோர் பகுதியில் இருந்த மலாயா ஆசிரியர்ப் பயிற்சி கல்லூரியின் கட்டிடங்களில் பாடங்கள் நடத்தப்பட்டன.

பல்துறை ஆய்வுகளின் முன்னோடி தொகு

அதன் பின்னர், 1971இல் மிண்டென் எனும் தற்காப்பு அமைச்சின் வளாகத்தில் 239 ஹெக்டேர் பரப்பளவில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. இந்த முதன்மை வளாகத்தைத் தவிர, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கிளாந்தானில் சுகாதார வளாகம் என்று வேறு ஒரு வளாகம் உள்ளது. இங்கு அறிவியல் மருத்துவம், சுகாதார மருத்துவம், பல் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகின்றது.

பினாங்கு ஸ்ரீ அம்பாங்கில் உள்ள பொறியியல் வளாகத்தில் ஆறு பொறியியல் துறைகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தூய அறிவியல், பயன்பாட்டு அறிவியல், மருத்துவ அறிவியல், கட்டிடத் தொழில்நுட்ப அறிவியல், சமூக அறிவியல், மனிதநேயக் கல்வித் துறைகளில் பயிற்றுவிப்பதில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் முதன்மை வகிக்கின்றது. தவிர அத்துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கும் வழி வகுக்கின்றது.

ஆசிய புத்துருவாக்க விருது தொகு

ஆசிய புத்துருவாக்க விருதை (Asian Innovation Award) வென்ற முதல் மலேசியப் பல்கலைக்கழகமாகவும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் விளங்குகின்றது.[5] தற்சமயம், இந்தப் பல்கலைக்கழகத்தில் 30,118 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இயக்குநர்கள் வாரியம் தொகு

இயக்குநர்கள் வாரியத்தின் நிர்வாக அதிகாரத்தின் மூலமாகப் பல்கலைக்கழக நிர்வாகம் நடைபெறுகின்றது. இயக்குநர்கள் வாரியத்தில் பல்கலைக்கழக தேர்வு செய்த உறுப்பினர்கள், அரசாங்கத் துறைகளின் பிரதிநிதிகள், மற்றும் மலேசிய உயர்க்கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் அந்த இயக்குநர்கள் வாரியத்தில் இடம் பெற்றுள்ளனர்.

துணைவேந்தர் தலைமையில் மூன்று இணைவேந்தர்கள் உள்ளனர். தற்போதைய துணைவேந்தராகப் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஒமார் ஒஸ்மான் இருக்கிறார். இவர் அக்டோபர் 2011இல் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.[6] பேராசிரியர் ஒமார் ஒஸ்மான், பினாங்கு அம்னோ தொகுதிகளில் ஒன்றின் தலைவராக இருக்கும் டத்தோ சைனல் அபிடின் ஒஸ்மான் என்பவரின் சகோதரர் ஆகும்.

முறைகேள் மன்றம் தொகு

சைனல் அபிடின் ஒஸ்மான், பினாங்கு முதலமைச்சரின் மீது 30 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கைத் தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு ஜூன் 2012இல் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.[7]

ஆகஸ்ட் 2011இல் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்கும், அவர்களின் பிரச்சினைகளைச் சமாளிக்கவும், நிர்வாகத் தவறுகளை அம்பலப் படுத்துபவர்களைப் பாதுகாக்கவும் ஒரு புதிய முறைகேள் மன்றம் உருவாக்கப்பட்டது. அந்த மன்றத்திற்கு கைருல் சே ஆஸ்மி என்பவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை தலைவரும் ஆவார்.[8]

மிண்டென் தொகு

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் மிண்டென் (Minden) எனும் பெயரில் அழைக்கப்படுவதும் உண்டு. மிண்டென் என்பது ஒரு ஜெர்மனிய நகரத்தின் பெயர். 1759இல் பிரித்தானியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஜெர்மனிய நகரமான மிண்டெனில் ஒரு சண்டை நடந்தது. அதில் பிரித்தானியர்களுக்கு வெற்றி கிட்டியது.

அந்த வெற்றியை நினைவுபடுத்தும் வகையில், வெளிநாடுகளில் பிரித்தானிய படைகள் தங்கும் இராணுவ முகாம்களுக்கு அந்தப் பெயரும் வைக்கப்பட்டது.

அந்த வகையில் பினாங்கில் பிரித்தானிய படைகள் தங்கி இருந்த முகாமிற்கு மிண்டென் என்றும் பெயர் வைக்கப்பட்டது. இந்த மிண்டென் முகாம் இருந்த நிலப்பகுதியில்தான் இப்போதைய மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகமும் கட்டப்பட்டுள்ளது.

மிண்டென் முதன்மை வளாகத்தைத் தவிர கிளாந்தான், குபாங் கிரியான் நகரில் சுகாதாரத் துறை வளாகமும், நிபோங் திபால் ஸ்ரீ அம்பாங்கில் பொறியியல் துறை வளாகமும் நிறுவப்பட்டுள்ளன.

கல்வி வளாகங்கள் தொகு

பள்ளிகள் தொகு

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் தன்னுடைய கல்விப் பிரிவிற்கு பள்ளி (ஆங்கிலம்: Faculty), (மலாய்: Pusat Pengajian) எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. மற்ற மலேசியப் பல்கலைக்கழகங்கள் கல்விப் பிரிவு, கல்வித் துறை அல்லது கல்வி நிலையம் எனும் சொற்களைப் பயன்படுத்துகின்றன. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இருபத்து நான்கு கல்விப் பள்ளிகள், 7 கல்விப் பிரிவுகள், 14 கல்வி மையங்கள் உள்ளன.

இருபத்து நான்கு கல்விப் பள்ளிகளில் பயன்முறை அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் பயன்படுத்தும் 12 பள்ளிகள் உள்ளன. இந்தியாவின் KLE பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் மருத்துவத் துறை இயங்கி வருகிறது. இந்தப் படிப்பிற்கு இந்தியா, பெலகம் நகரில் இருக்கும் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் 40க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றுள் உயர்மட்ட ஆய்வுகளுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட ஆறு பல்கலைக்கழகங்களில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமும் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

14 கல்வி மையங்கள் தொகு

  • மொழிகள் மையம்
  • மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மையம்
  • தேசிய நஞ்சு மையம்,
  • மாசுக்கலப்பு கட்டுப்பாடு மையம்,
  • மலேசியத் தொல்பொருள் ஆராய்ச்சி மையம்,
  • தொழில்நுட்ப கல்வி மையம்
  • பல்லூடக மையம்,
  • கணினி மையம்,
  • கல்வி அறிவு மையம்,
  • தகவல் தொடர்பு மையம்
  • தொழில்நுட்ப மையம்
  • இஸ்லாமிய மையம்.

தொழில்நுட்பம் சார்ந்த பள்ளிகள் தொகு

தொழில்நுட்பம் சார்ந்த பள்ளிகள் (Technology-based) அனைத்தும் முதன்மை வளாகத்தில் உள்ளன.

  • குடிசார் பொறியியல்
  • விண்வெளிப் பொறியியல்
  • வேதிப் பொறியியல்,
  • மின்சார மின்னணு பொறியியல்
  • பொருட்கள், தாது வளப் பொறியியல்
  • இயந்திரப் பொறியியல்
  • வீடமைப்பு, கட்டிட திட்டமிடல்
  • தொழில்துறை தொழில்நுட்பம்

தாராளவாத பள்ளிகள் தொகு

தாராளவாத பள்ளிகள் (Liberal arts) என்று அழைக்கப்படுகின்றன. இவை முதன்மை வளாகத்தில் உள்ளன.

  • கலைத் துறை
  • தொடர்பு துறை
  • கல்விசார் துறை
  • மானுடவியல்
  • சமூக அறிவியல்
  • நிர்வாகத்துறை

தூய அறிவியல் பள்ளிகள் தொகு

தூய அறிவியல் பள்ளிகளில் (Pure science) என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் முதன்மை வளாகத்தில் உள்ளன.

  • உயிரியல் அறிவியல்
  • இரசாயன அறிவியல்
  • கணித அறிவியல்
  • கணினி அறிவியல்
  • இயற்பியல்

சுகாதார அறிவியல் பள்ளிகள் தொகு

சுகாதார அறிவியல் பள்ளி (Health science) கிளாந்தானில் உள்ளது.

  • மருத்துவம்
  • பல் மருத்துவம்
  • மனித நலம்
  • மருந்து அறிவியல்
  • மேம்பட்ட மருத்துவம்
  • மேம்பட்ட பல் மருத்துவம்

ஆய்வு வளர்ச்சிப் பணிகள் தொகு

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு வளர்ச்சிப் பணிகளுக்கு அறிவியல் நிதியம் முக்கிய ஆதாரமாக உள்ளது. மூளை நரம்பியல், சுற்றுச்சூழல் அறிவியல், மீன்வளர்ப்பு, உயிரிமருத்துவம், மருந்து ஆய்வுகள், இயற்கை மொழி செயலாக்கம், கணினி உதவியுடன் மொழிபெயர்ப்பு, தகவல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், பாலிமர் அறிவியல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், தொலைக் கல்வி, புவியியல் தகவல் முறைமை, கட்டமைப்பு ஆய்வு, பருப்பொருள் அறிவியல், பொறியியல், வேதியியல் போன்ற துறைகளுக்கும், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

கடலோர மாசு, சதுப்புநில சுற்றுச்சூழல் மற்றும் கடல் மீன்வளர்ப்பு போன்ற குறுகிய கால ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, பினாங்கு முதன்மை வளாகத்தில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு