மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜர்


மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜர் (ஆங்கில மொழி: Mayavaram V. R. Govindarajar) (பிறப்பு மே 12, 1912, இறப்பு பெப்ரவரி 11, 1979) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞராவார்.

மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கோவிந்தராஜர்
பிறப்பு(1912-05-12)மே 12, 1912
பிறப்பிடம்வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம், இந்தியா
இறப்புபெப்ரவரி 11, 1979(1979-02-11) (அகவை 66)
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)வயலின் வாத்தியக்கலைஞர்
இசைத்துறையில்1925 - 1977

இளமையில்

தொகு

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் தாலூக்காவிலுள்ள வழுவூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர், தனது தாய் மாமனாகிய பிரபல நாதசுவர வித்துவான் [திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமியின் பாதுகாப்பில் வளர்ந்தார்.[1] ஆரம்ப பள்ளிப் படிப்பின் பின்னர் தொடக்கத்தில் சிமிழி சுந்தரத்திடமும் பின்னர் மாயவரம்[கு 1] பூதலிங்கத்திடமும் கருநாடக இசை கற்றுக்கொண்டார். ஒரு சமயம் இவருக்குக் கும்பகோணம் ராஜமாணிக்கம் முன்னிலையில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இவரது புலமையை மெச்சிய ராஜமாணிக்கம், வயலின் கற்பிப்பதற்காக இவரைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டார்.
குருகுல வாசத்தின்போது ஒவ்வொரு நாளும் இவரது பயிற்சி நள்ளிரவுக்குப் பின்வரை தொடர்ந்தது. மேலும், விடுமுறை நாட்களில் மாயவரம் செல்லும்போது தனது மாமனிடம் இசை அறிவை மேலும் மெருகேற்றிக் கொண்டார்.
அரியக்குடி இராமானுஜர், மகாராஜபுரம் விசுவநாதர், ஆலத்தூர் சகோதரர்கள், ஜி. என். பாலசுப்பிரமணியம், சித்தூர் சுப்பிரமணியம், ஆகியோருக்கு தனது குரு பக்கவாத்தியமாக வயலின் வாசிக்கும்போது இவர் பக்கத்திலேயே இருப்பார். இந்த வழக்கம் இவருக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்ததுடன் திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பையும் வழங்கியது. இதனால் பிற்காலத்தில் அந்தப் பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசிக்கும்போது அவரவருக்கு ஏற்றாற்போல வாசிக்க இவரால் முடிந்தது.[1]

குணாதிசயம்

தொகு

ஒரு தடவை ராஜமாணிக்கம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஏற்பாடு செய்தபடி செம்மங்குடி சீனிவாசரின் கச்சேரிக்கு வயலின் வாசிக்க முடியவில்லை. அந்த இடத்தில் மாயவரம் கோவிந்தராஜர் வயலின் வாசித்தார். அதற்காகக் கிடைத்த கொடுப்பனவை அவர் குருவிடம் ஒப்படைத்தார். ஆனால் குரு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் கோவிந்தராஜர் அடுத்து வந்த விஜயதசமியன்று அந்தப் பணத்தை குருதட்சணையாகக் கொடுத்துவிட்டார்.
கச்சேரிக்கு ஒப்புக்கொண்டு முன்பணம் வாங்கினால் அந்த கச்சேரி செய்து முடிக்கும்வரை வாங்கிய முன்பணத்தை செலவு செய்ய மாட்டார்.[1]
ஜி. என். பி. போலவே இவரும் ஒரு வாசனைத் திரவியப் பிரியர். இவர்கள் இருவருடன் இன்னொரு வாசனைத் திரவியப் பிரியரான (மிருதங்கம்) பழனி சுப்பிரமணியரும் சேர்ந்து கொண்டால் இசை அரங்கில் உண்மையாகவே இசை "மணம்" கமழும் என வேடிக்கையாகச் சொல்வார்கள்.[2]

வயலின் வித்துவானாக

தொகு

ஜி. என். பாலசுப்பிரமணியம், ஆலத்தூர் சகோதரர்கள், எம். எஸ். சுப்புலட்சுமி, மதுரை மணி உட்பட பிரபலமான பாடகர்களுக்குப் பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார். மதுரை மணி ஸ்வரங்களினால் மாலை தொடுப்பவர் என பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவரது இசைக்கச்சேரிகள் பற்றி புகழ்ந்து வருணித்துள்ளார்.[2] அத்தகைய மதுரை மணிக்கு ஈடுகொடுத்து இவர் வயலின் வாசிக்கும்போது மணி பல தடவை இவருக்கு "பேஷ், பேஷ்" போடுவார்.[1]
இவர் திருவனந்தபுரம் அரண்மனை வித்துவானாக இருந்தார்.[1]
தனியாகச் சில கச்சேரிகள் செய்திருந்தாலும், இவர் தனது குருவைப்போலவே பிரதான பாடகருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசிப்பதையே விரும்பினார். ஒரு தர்மபத்தினி (மனைவி) எவ்வாறு கணவனுக்குச் சேவை செய்வாளோ அதுபோல வயலின் வித்துவான் பாடகருக்குத் துணையாக இருக்க வேண்டும் எனத் தனது குரு கூறுவார் என்று தமிழிசைச் சங்கம் இவருக்கு அளித்த பாராட்டு விழாவில் நினைவு கூர்ந்தார்.[2]

இசை ஆசிரியராக

தொகு

கோவிந்தராஜர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இசைக் கல்லூரி தலைவராக கடமையாற்றினார். சர் சி. பி. இராமசுவாமி இவரை அப்பதவியில் நியமித்தார்.[1]
அகில இந்திய வானொலியின் திருச்சி, சென்னை நிலையங்களில் இசை தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[1]
சிக்கில் பாஸ்கரன், குத்தாலம் வைத்தியலிங்கம் ஆகியோர் இவரின் மாணாக்கர்கள் ஆவர்.[1]

விருதுகள்

தொகு

மறைவு

தொகு

நீண்ட கால உடல் நலக் குறைவின் பின் 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாள் மாயவரத்தில் தமது இல்லத்தில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "Felicity with the fiddle". Archived from the original on 2008-02-20. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  2. 2.0 2.1 2.2 2.3 In memory of a veteran by Sriram Venkatakrishnan

குறிப்புகள்

தொகு
  1. இப்போது இது மயிலாடுதுறை என பெயர் மாற்றப்பட்டுள்ளது.