யுவான் அரசமரபு

கிழக்கு மற்றும் வட கிழக்கு ஆசியாவில் மங்கோலியர்களால் ஆளப்பட்ட முன்னாள் பேரரசு
(யுவான் வம்சம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யுவான் அரசமரபு (சீனம்: 元朝; பின்யின்: Yuán Cháo; மங்கோலிய மொழி: Dai Ön Yeke Mongghul Ulus, Их Юань улс, Ikh Yuanʹ Üls[1]) குப்லாய் கானால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் மங்கோலிய போர்சிசிங் (Borjigin) இனத்தைச் சேர்ந்தவர். இவர் தென் சீனாவை ஆட்சி புரிந்த சாங் அரசமரபு மன்னர்களை வெற்றி கொண்டவராவார். குப்லாய் கான்க்கு முன்னரும் மங்கோலியர்கள் சீனாவின் (தற்கால வடக்குச் சீனா) பகுதிகளை ஆட்சிபுரிந்துள்ளார்கள். ஆனால் 1271 இல் குப்லாய் கான் யுவான் அரசமரபைப் தோற்றுவிக்கும் வரை சீன மரபுப்படி புதிய அரசமரபு எதையும் உருவாக்கவில்லை.[2] 1271லிருந்து 1368 வரை இவர் தோற்றுவித்த யுவான் மரபு அரசர்கள் ஆட்சி புரிந்தனர். இதுவே சீனாவில் வெளிநாட்டவர் உருவாக்கிய முதல் அரசமரபாகும். இவர்கள் தற்காலத்திய சீனாவின் பெரும்பகுதிகளையும் தற்கால மங்கோலியாவையும் ஆட்சி புரிந்தார்கள்.

பெரும் யுவான் பேரரசு
大元帝國
1271–1368
கொடி of யுவான் அரசமரபு
கொடி
1294 இல் யுவான் அரசமரபு
1294 இல் யுவான் அரசமரபு
நிலைபேரரசு
தலைநகரம்தாது (தற்போது பீஜிங்)
பேசப்படும் மொழிகள்சீன மொழி
மொங்கோலிய மொழி
சமயம்
பௌத்தம் - சீன பௌத்தம் மற்றும் திபெத்திய பௌத்தம்
தாவோயிசம்
கன்பியூசியனிசம்
சீன கிராமிய சமயம்
தெங்கிரீசம்
கிறிஸ்தவம்
இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 1260–1294
குப்லாய் கான்
• 1333–1370 (தொடர்ச்சி.)
உஹாட்டு கான்
வேந்தர் 
வரலாற்று சகாப்தம்பாரம்பரியப் பதிவு சகாப்தம்
வசந்த காலம், 1206
• முறையான உருவாக்கம்
18 டிசம்பர் 1271
• சியாங்கியாங் போர்
1268-1273
• தென் சோங் வெற்றி
பெப்ரவரி 4, 1276
• யாமென் யுத்தம்
மார்ச் 19, 1279
• 
1351-1368
• தாதுவின் வீழ்ச்சி
14 செப்டம்பர் 14 1368
• வட யுவான் அரசமரபின் தோற்றம்
1368-1388
மக்கள் தொகை
• 1290
77,000,000
• 1293
79,816,000
• 1330
83873000
• 1350
87147000
நாணயம்பெருமளவில் தாள் காசும் (சாவோ), சிறிய அளவில் சீன நாணயங்களும் பாவனையிலிருந்தன.
முந்தையது
பின்னையது
மொங்கோலியப் பேரரசு
சோங் அரசமரபு
வட யுவான் அரசமரபு
மிங் அரசமரபு
தற்போதைய பகுதிகள் மியான்மர்
 சீனா
 இந்தியா
 வட கொரியா
 தென் கொரியா
 லாவோஸ்
 மங்கோலியா
 உருசியா
 ஆங்காங்
 மக்காவு
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும் வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு & தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங் மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங் சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை

அதன் பின் வந்த யுவான் மரபு ஆட்சியாளர்கள் மங்கோலியாவில் வட யுவான் மரபினர் என்று அழைக்கப்பட்டனர். யுவான் மரபினர் மங்கோலிய பேரரசு மற்றும் சீன அரச மரபினரின் வழி வந்தனர் என்று கருதப்பட்டார்கள். அதிகாரபூர்வ சீன வரலாறு சாங் மரபின் தாக்கம் யுவான் மரபிலும் இதன் தாக்கம் மிங் மரபிலும் இருந்ததெனக் கூறுகிறது. யுவான் மரபைத் தோற்றுவித்தது குப்லாய் கானாக இருந்த போதிலும் அவர் தன் பாட்டனார் செங்கிசு கானே இம்மரபை தோற்றுவித்தவரென அரச பதிவுகளில் குறிப்பிட்டப்பட்டுள்ளார். சீனாவின் பேரரசர் என்ற பட்டத்துடன் பெருமைக்குரிய கான் என்ற பட்டத்தையும் குப்லாய் கான் பெற்றார். இதனால் மற்ற கான்களுக்கு இவர் பெருந்தலைவர் என்று போற்றப்பட்டார். யுவான் பேரரசு சில சமயங்களில் பெருமைக்குரிய கான் பேரரசு என்றும் அழைக்கப்பட்டது இதற்கு உதாரணமாகும். யுவான் மரபு பேரரசர்களை மேற்கத்திய கான்கள் ஏற்றிருந்தாலும், தங்களுக்கான தனி அரசை வளர்ப்பதில்தான் அவர்கள் ஈடுபட்டார்கள்.[3][4][5]

வரலாறு

தொகு

குப்லாய் கானும் ஆரிக்கு புகாவும்

தொகு

1259ல் குப்லாய் கான் சாங் மரபு அரசர்களுக்கு எதிராகத் தென் சீனாவில் போர் புரிந்த சமயத்தில் அவரின் பெரிய சகோதரர் பெருமைக்குரிய கான் (பேரரசன்) மாங்கி இறந்துவிட்டார். குப்லாய் கானின் இளைய சகோதரர் ஆரிக்கு புகா மங்கோலியப் பகுதிகளை அப்போது கவனித்து வந்தார். மாங்கி கான் இறந்ததால் அப்போதைய மங்கோலியப் பேரரசின் தலைநகரான காரகோரத்தில் கூடிய பெரும் மன்றம் ஆரிக்கு புகாவை புதிய பெருமைக்குரிய கானாக மங்கோலிய முறைப்படி தேர்வு செய்தது. இச்செய்தியை கேள்வியுற்ற குப்லாய் கான் தன்னுடைய சீன படையெடுப்பை நிறுத்திவிட்டு கைபிங் (சாங்டு) நகரத்தில் போட்டி மன்றத்தைக் கூட்டி 1260ல் தன்னைப் பேரரசனாக (பெருமைக்குரிய கான்) அறிவித்துக் கொண்டார். மங்கோலிய முறைப்படி குப்லாய் கான் கூட்டிய மன்றம் முறையற்றது என்பதாலும் அப்போது ஆரிக்கு புகா தலைநகரில் இருந்ததாலும் அவரே பெருமைக்குரிய கான் (பேரரசன்) என முடிவு செய்யப்பட்டது.[6] குப்லாய் கான் சிறு மன்னர்களுக்குப் பெரும் தொகையைக் கையூட்டாகக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அரச சட்டப்படித் தன்னைப் பெருமைக்குரிய கானாக அரச மன்றம் தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களின் மேலான தீர்ப்பை மதிக்காமல் சீனால் இருந்துகொண்டு சீன சட்டங்களைப் பின்பற்றிக் கொண்டு குப்லாய் கான் மற்றவர்களை மதிக்காமல் தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவும் ஆரிக் புகா குற்றம் சாட்டினார்.[7]

ஆரிக்கு புகா முறையற்ற வழியில் அரச பதவியைப் பிடித்தவர் என்றதோடு சீன மரபின் படி தனது மரபுக்குச் சோங்டங் என்று குப்லாய் கான் பெயரிட்டார். சீன சாங் மரபு மன்னர்கள் தென்சீனத்தில் குப்லாய் கானை எதிர்த்துக்கொண்டிருந்த போதிலும் இவர் பேரரசர் (குவான் டி) என்ற பட்டத்தைப் பெற்றார். 1261 முதல் 1264 வரை ஆரிக்கு புகாவுக்கும் குப்லாய் கானுக்கும் சண்டை நடந்தது, இறுதியில் குப்லாய் வெற்றிபெற்றார். அந்த வெற்றியால் மற்ற கான்கள் (சிறு அரசர்கள்) இவருக்குத் துணையிருப்பார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் சில கான்கள் இவரைப் பெருமைக்குரிய கானாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் கைடு என்பவரின் தலைமையின் கீழ் குப்லாய் கானை நடு ஆசியாவில் எதிர்த்துப் பல ஆண்டுகாலம் போர்புரிந்தார்கள், இச்சண்டை குப்லாய் கானும் கைடும் இறக்கும் வரையிலும் நீடித்தது.[8]

அரசமரபை தோற்றுவித்தல்

தொகு
 
குப்லாய் கான் யுவான் மரபை தோற்றுவித்தவர்

1260ல் அரச பொறுப்பை ஏற்றதிலிருந்து ஆட்சிக்கான மரபுப் பெயர் உருவாக்குதல், நிருவாகக் கட்டுப்பாட்டுக்காகப் பணியாளர்களை நியமித்தலெனச் சீன அரசமரபுகள் கடைபிடிக்கும் பல கூறுகளைக் குப்லாய் கான் கையாண்டார். ஆட்சியின் தொடக்ககாலத்தில் இருந்தே சீன வரலாறு, தத்துவம் போன்றவற்றை சீன ஆசிரியர்களைக் கொண்டு கற்றும் அவர்களைத் தனக்கு ஆலோசனை சொல்லும் குழுவிலும் வைத்திருந்தார் [9]. 1264ல் தனது தலைநகரத்தை யூர்சென் சின் அரசமரபின் தலைநகர் இருந்த இடத்துக்கு மாற்றினார். 1266ல் தாடு என்ற புதிய தலைநகரத்தைக் கட்டினார், இதுவே தற்கால பெய்ஜிங். 1264ல் ஆட்சியின் மரபுப் பெயரை சாங்-டாங் என்பதிலிருந்து சய்-யுவான் என்று மாற்றினார். சீனா முழுமையையும் ஆளும் பொருட்டு, தான் ஆள்வதற்குக் கடவுள்களின் உத்தரவு கிடைத்துள்ளதாக அறிவித்தார். இதுவே சீனா முழுமையும் ஆண்ட ஆன் இனத்தவர்கள் அல்லாத முதல் அரசமரபாகும். இம்மரபின் அதிகாரபூர்வ பெயர் ’ட யுவான்’ (சீனம்: 大元) ஆகும். ’ட’ என்றால் சிறந்த அல்லது பெருமைக்குரிய என்று பொருள்படும். சீனாவில் ’ட’ (சீனம்: 大) என்பதை அதிகாரபூர்வ மரபுப் பெயராகக் கொண்டது யுவான் மரபே ஆகும்.

யுவான் அரசமரபின் தலைநகராகத் தாடு 1271ல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தென் சீனத்தில் ஆட்சிபுரிந்த தென் சாங் அரசமரபின் மீது, 1270ம் ஆண்டிலிருந்து குப்லாய் கான் பெரும்படையெடுப்பை மேற்கொண்டார். 1273ம் ஆண்டில் தனது கடற்படை கொண்டு யாங்சி ஆற்றைத் தடுத்து சிஆங்யாங் நகரை முற்றுகையிட்டார். 130,000 வீரர்கள் உடைய சாங் படைகள் 1275ம் ஆண்டில் யுவான் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. 1276ம் ஆண்டில் பெரும்பாலான சாங் பகுதிகள் யுவான் படைகளால் கைப்பற்றப்பட்டன. 1279 ல் சீன தளபதி சேங் கங் பேன் தலைமையிலான யுவான் படைகள் சாங் அரசின் இறுதி எதிர்ப்பை முறியடித்தது. இதுவே சாங் அரசின் முடிவாகக் கருதப்படுகிறது. தாங் அரசமரபுக்கு பின் சீனாவை ஒன்றுபடுத்தியது யுவான் அரசு என்று சீன வரலாற்று அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது.

அரசமரபை உருவாக்கியபின் குப்லாய் கானின் சீன ஆதிக்கத்தை மற்ற நாடுகள் ஏற்கச் செய்ய வேண்டுமென அவரின் உதவியாளர்கள் வேண்டினர். இது சீன அரசுகளின் பாரம்பரியமென அவர்கள் சொன்னார்கள். எனினும் நிப்பான் (இருமுறை), டாய் வியட் (இருமுறை [10]) ) சாவகம் போன்றவற்றுக்கு சென்ற தூதர்களால் நினைத்ததைப் பெறமுடியவில்லை. குப்லாய் கான் மியான்மரில் கைப்பாவை அரசை நிறுவினார். இது அப்பகுதியில் பல குழப்பங்களை ஏற்படுத்தியது. பாகன் பேரரசு பல சிறிய அரசுகளாகப் பிரிந்தது. மங்கோலியர்களுடன் போரைத் தவிர்ப்பதற்காகப் பின்னாளில் அன்னம், சம்பா போன்றவை யுவான் அரசுடன் சிறிய அளவில் உறவைப் பேணின.

குப்லாய் கானின் ஆட்சி

தொகு

அவருக்கு முந்தைய ஆட்சியாளர்களைப் போல் அல்லாமல் குப்லாய் கான் சீன ஆட்சி மரபுப்படி அரசையும் துணை அமைப்புகளையும் நிர்மாணித்தார். அரசின் கட்டுப்பாட்டிலேயே எல்லாம் நடக்க வேண்டுமெனக் கருதி அதற்கேற்ப குப்லாய் கான் சீன அமைப்புகளைச் சீரமைத்தார் [11], சீரமைப்பு முற்றாக நிகழப் பல ஆண்டுகள் ஆனது. இவருக்கு முந்தைய ஆட்சியாளர்களைப் போல் அல்லாமல், அரசரை மையப்படுத்தியே ஆட்சியில் எல்லாம் செயல்பட வேண்டுமெனக் கருதியவர் குப்லாய் கான்.[12]. இவர் பேரரசைச் சிங் சோங்சுசங் (行中書省) என்ற மாகாணம் அல்லது துணை செயலகம் என்ற பொருள்படும் முறையில் பிரித்தார். சிங் சோங்சுசங் என்பது அளவில் தற்காலத்தில் உள்ள மாகாணங்கள் இரண்டு அல்லது மூன்று சேர்ந்ததாக இருந்தது. இந்த முறைபின் வந்த மிங் குயிங் அரசமரபுகளிலும் பின்பற்றப்பட்டது. குப்லாய் கான் அரசாங்க பொருளாதார அமைப்புகளையும் சீர்திருத்தினார். குறிப்பாக வரிவசூற் துறை இதில் அடங்கும். குப்லாய் கான் சீனப் பாரம்பரிய அமைப்புகள்மூலம் ஆட்சி நடத்தத் தலைப்பட்டார்[13]. அதற்கு ஆன் சீனர்களை அதிகாரிகளாகவும் தனக்கு உதவியாளர்களகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தார். இருந்தபோதிலும் குப்லாய் அவர்களை முழுவதுமாகச் சார்ந்திருக்கவில்லை [14]. ஆன் சீனர்கள் பெரிய பதவிகளில் இருந்தபோதிலும் அவர்கள் அரசியல்ரீதியாகப் புறக்கணிக்ப்பட்டனர். கிட்டத்தட்ட எல்லா சிறப்புப் பதவிகளும் மங்கோலியர்களுக்கே தரப்பட்டன. மங்கோலியர்கள் அதிகம் உள்ள இடங்களில் தகுதியான மங்கோலியர்கள் கிடைக்காத நிலையில் ஆன் சீனர்கள் அல்லாதவர்கள் பதவியில் அமர்த்தப்பட்டனர். சமூகம் ஆனது மங்கோலியர்கள், செமு (நடு ஆசியர்கள்), வடக்கத்தியர்கள், தெற்கத்தியர்கள் என நான்காக அதிகாரங்களின் படிநிலையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தது[15]. குப்லாய் கான் தன் வாழ்நாளில் யுவான் அரசமரபுக்கு ’டடு’ வைத் தலைநகரமாக உருவாக்கினார். இதுவே தற்கால பெய்ஜிங். தலைநகரமாக இருந்த சாங்டு (சீனம்: 上都, மேல்/வடக்கு தலைநகரம்) கோடைகாலத் தலைநகரம் என அழைக்கப்பட்டது. இவர் சீன பெரும் கால்வாயின் நீளத்தை அதிகப்படுத்திச் சீனாவில் வேளாண்மையையும் முன்னேற்றினார். இவர் நெடுஞ்சாலைகளை மேம்படுத்தியதுடன், பொதுமக்கள் உணவையும் தானியங்களையும் சேமிக்கப் பெரும் பானைகளை அரசு செலவில் அமைத்தார். பொருளாதாரச் சிக்கலின் போது வரி விதிப்பை தளர்த்தி மக்களுக்குச் சிரமத்தைக் குறைத்ததாலும், இலவச மருத்துவமனைகளைக் கட்டியதாலும், அனாதை விடுதிகளைக் கட்டியதாலும். உணவை எளியவர்களுக்கு பகிர்ந்தளித்ததாலும் மார்க்கோ போலோ இவரின் ஆட்சியை மக்களுக்கு உகந்ததாக இருந்தது என்கிறார். [citation needed] இவர் அறிவியலையும் மதத்தையும் ஆதரித்ததுடன் ’பட்டுப் பாதை’ வழியாக வணிகம் நடைபெறுவதை ஆதரித்தார், இப்பாதையால் சீன அறிவியல் மேற்குநாடுகளின் அறிவியலுடன் கலக்க அனுமதித்தார். மார்க்கோ போலைவைச் சந்திக்கும் முன் குப்லாய் கான் நிகோலோ போலோவையும் மார்க்கோ போலோவின் அப்பா மேட்டோ போலோவையும் சந்தித்திருந்தார்.

 
1287ல் யுவான் அரசமரபில் பணம் அச்சடிக்க பயன்பட்ட அச்சுக்கட்டை.

குப்லாய் கான் தாளால் ஆன ’சோ’ (鈔)என்று அழைக்கப்படும் பணத்தை 1273ல் அறிமுகப்படுத்தினார். காகிதப் பணம் யுவான் மரபுக்கு முன்பே சீனாவில் புழக்கத்தில் இருந்தது. 960ல் சாங் அரசமரபினர் செப்பு தட்டுப்பாட்டினால் காகிதப் பணத்தை முதலில் பொதுப்பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். எனினும் சாங் மரபினரது ஆட்சியில் காகிதப் பணம் செப்பு நாணயத்துடன் இணைந்தே பயன்பட்டது. யுவான் மரபினரது ஆட்சியில் காகிதப் பணத்திற்கு முதன்மையான இடம் கொடுக்கப்பட்டு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. யுவான் அரசில் காகிதப் பணத்தை முசுக்கட்டையின் அடிமரப்பட்டையிலிருந்து தயாரித்தனர். கோவில்களில் குப்லாய் கானுக்கு ’சிசு’ (சீனம்: 世祖) என்ற பெயர் வழங்கப்பட்டது.

இறுதிக் காலம்

தொகு
 
எபாய் மாகாணத்தில் உள்ள பய்லின் கோயில், 1330ல் கட்டப்பட்டது

யுவான் அரசின் இறுதிக்காலம் பஞ்சம், உட்பூசல், பொது மக்களின் வெறுப்பு போன்றவற்றுக்கு ஆளாகியிருந்தது. குப்லாய் கானுக்குப் பின் வந்தவர்கள் ஆசியப் பகுதியில் பரவியிருந்த மங்கோலியர்களின் மீதான அதிகாரத்தை இழந்துவிட்டார்கள். யுவான் அரசர்கள் மங்கோலிய மரபுடையவர்களாக இருந்தபோதிலும் சீனக் கலாச்சாரத்தைப் பின்பற்றிச் சீனர்கள் ஆகிவிட்டதாக மங்கோலியர்கள் கருதினார்கள். யுவான் அரசர்கள் பின்னாளில் சீனாவிலும் செல்வாக்கை இழந்தார்கள். உட்பகை, அரசுரிமைக்கான போட்டி போன்றவைகளால் யுவான் அரசர்கள் நிருவாகத்தைக் கவனிக்கத் தவறி மக்களிடமும் படைவீரர்களிடமும் நெருக்கம் இல்லாமல் இருந்துவிட்டார்கள். யுவான் படைகளின் வலு குறைந்திருந்ததால் நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. சட்டவிரோதக் குழுக்களால் மக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. பின்னாளில் ஆட்சிக்கு வந்தவர்கள் குறுகிய காலமே ஆட்சியில் இருந்ததால் அவர்களால் உறுதியான அரசை உருவாக்க முடியவில்லை. நாட்டில் குழப்பங்களும் கிளர்ச்சிகளும் நடந்தன. நாட்டின் நிதி நிலைமை மோசமடைந்ததால் அதைச் சரிசெய்ய அரசின் சொத்துக்களை விற்றும் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டும் வருவாயை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது [16] . ஏசுன் துமுர் கான் 1328ல் சாங்டுவில் இறந்ததும், கிப்சாக் தளபதி எல் துமுரால் தாடுவுக்கு அழைக்கப்பட்டு அரசராகத் தக் துமுர் கான் (பேரரசர் வென்சாங்) பதவியேற்றார். அதேசமயம் ஏசும் துமுரின் மகன் அரிகாபா கான், சாங்டுவில் ஏசுன் துமுரின் ஆதரவளார்களின் துணையால் அரசராகப் பதவியேற்றார். இவருக்கு வட சீனாவில் உள்ள அரசு அதிகாரிகளும் பல இளவரசர்களும் அரசின் பல இடங்களில் உள்ளவர்களும் ஆதரவளித்தனர். ஆனால் அவருக்கும் தக் துமருக்கும் நடந்த உள்நாட்டுப் போரில் தக் துமர் 1329ல் வெற்றிபெற்றார். சாங்கடய் கானின் அரசரின் விருப்பத்தின்படி தக் துமுரின் மூத்த சகோதரர் குசலா அரசராகப் பதவியேற்றார். ஆனால் பதவியேற்ற நான்கு நாட்களிலேயே குசலா இறந்துவிட்டார். இவர் எல் துமுரால் நஞ்சு கொடுத்துக் கொல்லப்பட்டு [17] தக் துமுர் மீண்டும் அரசரானார். தக் துமுர் மேற்கத்திய மங்கோலிய கான் அரசுகளுக்குத் தூது அனுப்பி தன் தலைமையிலான யுவான் அரசுக்கு மங்கோலிய அரசுகளில் உயரியது என்ற மதிப்பு தரக் கோரினார் [18] . இவரின் இறுதி 3 ஆண்டு ஆட்சியில் எல் துமுரின் கைப்பாவையாகவே செயல்பட்டார். இதுவே யுவான் மரபின் இறுதி தொடங்கியதைக் குறிக்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

எல் தமுரின் ஆதிக்கம் அரசு நிர்வாகத்தில் அதிகம் இருந்ததால் தக் துமுர் அவருடைய கலாச்சார பங்களிப்புக்காக நினைவு கூறப்படுகிறார். இவர் கன்பூசியத்தை சிறப்பிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்தார். இவரால் சீன கலாச்சாரம் பெரிதும் சிறப்பிக்கப்பட்டது. சீன இலக்கியத்தைப் பயில 1329ல் இவர் சீன பண்பாட்டுக் கழகத்தைத் (Chinese: 奎章閣學士院), தோற்றுவித்தார். இக்கழகத்தால் நிறைய புத்தகங்கள் தொகுக்கப்பட்டும் பதிப்பிக்கப்பட்டும் இருந்தன. சு கையின் புதிய கன்பூசியம் இவரால் ஆதரிக்கப்பட்டது, ஆனால் இவர் பௌத்தத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அதற்குப் பல பணிகள் செய்தார்.

 
யுவான் காலத்து நாணயங்கள்

தக் துமுர் 1332ல் இறந்த அதே ஆண்டிலேயே குசலாவின் மகன் ரின்சின்பால் இறந்தார். 1333ல் எல் துமுர் இறந்ததும் 13 வயதுடைய குசலாவின் மகன் தோகன் துமுர் ஆட்சிக்கு வந்தார். இவரே யுவான் மரபின் இறுதி அரசரும் மங்கோலிய பேரரசின் இறுதி கானும் ஆவார். எல் துமுர் இறந்தபோதிலும் அவரைப் போல் அதிகாரமிக்க அதிகாரியாகப் பாயன் உருவானார். தோகன் துமுர் வளர்ந்ததும் பாயனின் தன்னிச்சையான அதிகாரத்தை ஒத்துக்கொள்ளவில்லை. 1340ல் தோகன் துமுர் பாயனின் மருமகன் தோகுட்ட உடன் சேர்ந்து பாயனை சதியின் மூலம் அகற்றினார். தோகுட்ட தன் நிருவாகத்தில் நல்ல பல புதிய வழிகளைப் புகுத்தினார். இவருடைய வெற்றிகரமான திட்டங்களில் சோ, சின், சாங் மரபுகளைப் பற்றி அதிகாரபூர்வமான வரலாறுகளை எழுதி முடித்ததாகும். 1345ல் இத்திட்டம் முடிவடைந்தது. ஆனால் தோகுட்ட தோகன் துமுரின் அனுமதியுடன் நிருவாகத்திலிருந்து விலகிவிட்டார். 1349ல் அவர் திரும்ப அழைக்கப்பட்டார்.

சீனர்களுக்கு இழைத்த கொடுமைகள், இனப் பாகுபாடுகள், அதிக வரி வதிப்பு, பஞ்சம், நீர்ப்பாசனத் திட்டங்களைக் கவனிக்காமல் விட்டது, அதனால் மஞ்சள் ஆற்றில் வந்த வெள்ளம் போன்றவற்றால் மக்களிடையே யுவான் அரசு செல்வாக்கை இழந்திருந்தது. 1351ல் மஞ்சள் ஆற்றங்கரையைப் பலப்படுத்த 150,000 சிறு விவசாயிகளை அனுப்பினார். அவர்கள் வேலை செய்வதைக் கண்காணிக்க 20,000 படை வீரர்களை அனுப்பினார். விவசாயிகள் அடிமைகளைப் போல் வேலை வாங்கப்பட்டனர். இதனால் அவர்கள் அரசுக்கு எதிரான சிவப்பு தலைப்பாகை குழுவிற்கு ஆதரவாக மாறினர். சிவப்பு தலைப்பாகைக் குழுவினர் வெள்ளைத்தாமரை என்ற பௌத்த இரகசிய அமைப்பின் துணையோடு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1354ல் சிவப்பு தலைப்பாகைக் குழுவினரை தோகுட்ட பெரும் படை கொண்டு அடக்கினார். தோகுட்ட தன்னை வஞ்சித்துவிடுவாரெனப் பயந்த தோகன் துமுர் அவரைப் பதவியை விட்டு நீக்கினார். சிறந்த நிருவாகியும் தளபதியுமான தோகுட்டவை இழந்ததால் யுவான் அரசு மேலும் பலவீனமடைந்தது. 1368ல் தென் சீனத்தில் சூ யுவான்சாங்க் தோற்றுவித்த மிங் படைகளிடமிருந்து தப்பிக்க தோகன் துமுர் தாடுவிலிருந்து வடக்கிலிருந்த சாங்டுவிற்கு சென்றார். மீண்டும் தாடுவைக் கைப்பற்ற முயன்று அதில் தோல்வியைச் சந்தித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் (1370) யிங்சாங் என்ற நகரில் இறந்தார். அவர் இறந்த சிறிது காலத்தில் யிங்சாங் மிங் படைகள் வசம் வந்தது.

வடக்கு யுவான்

தொகு

1370ல் யிங்சாங் நகரம் மிங் படைகளிடம் வீழ்ந்ததால் யுவான் படைகள் மங்கோலியாவுக்குப் பின் வாங்கின. சிறந்த\பெருமைமிகு யுவான் (大元) என்ற பட்டத்தை அதிகாரபூர்வமாகக் கொண்டிருந்தாலும் அவர்கள் வடக்கு யுவான் (北元) என்றே அழைக்கப்படலானார்கள் [19]. சீன அரசியல் மரபுப்படி ஒரு அரசமரபு மட்டுமே சீனாவை ஆளுவதற்கு இறைவனின் கட்டளையைப் பெற முடியும் என்பதால் மிங் மரபும் வடக்கு யுவான் மரபும் ஒருவரையொருவர் சீனாவை ஆளும் உரிமையுள்ளவர்களென ஏற்க மறுத்தன. முந்தைய யுவான் மரபைச் சீனாவை ஆளும் உரிமை கொண்டவர்கள் என்று மிங் மரபு அரசர்கள் ஒத்துக்கொண்டாலும் தற்போது சீனாவை ஆளும் உரிமை கொண்டவர்கள் தாங்களென யுவான் மரபு (வடக்கு யுவான்) அரசர்கள் கூறி மிங் மரபு ஆட்சியை ஏற்க மறுத்தார்கள். ஆனால் சீன வரலாற்றாளர்கள் யுவான் மரபுக்கு அடுத்து மிங் மரபே சீனாவை ஆளும் உரிமை கொண்டவர்கள் எனக் கருதினர்.

1372ம் ஆண்டு மிங் படைகள் வடக்கு யுவான் படைகளுடன் மங்கோலியாவில் போரிட்டதில் மிங் படைகள் தோல்வி அடைந்தன. 1380ல் மீண்டும் வடக்கு யுவான் படைகளுடன் போரிட்டு வெற்றி பெற்றதுடன் 70,000 மங்கோலிய வீரர்களைச் சிறைபிடித்தனர். வடக்கு யுவான்களின் (மங்கோலியர்களின்) தலைநகரம் காரகோரம் அழிக்கப்பட்டது [20]. எட்டு ஆண்டுகள் கழித்து ஆரிக் புகாவின் வழித்தோன்றலான யெசுடர் வடக்கு யுவானின் அரசாட்சிக்கு வந்தார். பல ஆண்டு காலம் வடக்கு யுவான் அரசர்கள் மிங் மரபுடன் அமைதியாகவும் சண்டையிட்டும் வந்தனர். அமைதியாக இருந்த காலங்களில் எல்லை வணிகம் சிறப்பாக நடந்தது. 1635ல் சிங் அரசமரபிடம் அடிபணிந்தபின் வடக்கு யுவான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

யுவான் ஆட்சியின் தாக்கம்

தொகு
 
யுவான் ஆட்சியின் மீன் வேலைப்பாடுள்ள நீல-வெள்ளை பீங்கான் தட்டு
 
யுவான் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி
 
ஆர்மினியாவின் பேராயர், சீன வேலைப்பாடுள்ள உடையை உடுத்தியுள்ளார், இது யுவான் ஆட்சி காலத்தில் மற்ற மதங்களும் மதிக்கப்பட்டதை உணர்த்துகிறது

யுவான் மரபின் ஆட்சியில் நாடகம், புதினம் போன்ற சீன கலாச்சாரத்தைச் சேர்ந்தவை நன்கு வளர்ச்சி பெற்றன. மேலும் செஞ்சீனத்தில் எழுதுவதை விட மாண்டரின் சீனத்தில் (மக்கள் மொழி) எழுதுவது அதிகரித்து இருந்தது. சீனாவும் நடு ஆசியாவும் அரசியல் முறையில் ஒன்றுபட்டு இருந்ததால் சீனாவுக்கும் மேற்கில் உள்ள நாடுகளுக்கும் இடையேயான வணிகம் மேம்பட்டது. மங்கோலியர்களின் மேற்கு ஆசிய ஐரோப்பிய தொடர்பு அவற்றுடன் சீனக் கலாச்சாரப் பரிமாற்றங்களைக் கொள்ள உதவியது. பரந்து இருந்த மங்கோலிய பேரரசு பாரசீகத்தில் இருந்த மற்ற நாடுகளுடன் கொண்ட நட்பு மற்றும் மற்ற இனத்து பண்பாடு, சீன பண்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவும் ஆசியாவில் வணிகம் சுமுகமாக நடக்கவும் உதவியது [21][22]. யுவான் ஆட்சியில் பௌத்தம் சிறப்பான நிலையை அடைந்திருந்தது. திபெத்திய பௌத்தமும் செல்வாக்கு பெற்று இருந்தது. யுவான் ஆட்சியில் இருந்த இசுலாமியர்களால் மத்திய கிழக்கின் வானவியல், மருத்துவம் போன்றவை சீனத்தில் அறிமுகமாயின.

 
யுவான் ஆட்சியில் புகழ்பெற்ற மரவேலைபாடு உடைய தட்டு

சீனாவின் கூத்து நடனம் போன்ற நிகழ்கலைகளில் மேற்கத்திய இசைக்கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவர்கள் காலத்தில் நடு ஆசியாவில் இருந்த மக்களில் பெரும்பாலோர் இசுலாம் சமயத்திற்கு மாறினர். ரோமன் கத்தோலிக கிறித்துவ சமயமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பௌத்த சமயம் பெரிதும் போற்றப்பட்டது. பௌத்தத்தை ஆதரிக்க வேண்டித் தாவோயியத்திற்கு ஆதரவு இல்லாமல் அதைக் கடைபிடிப்பவர்களுக்கு தண்டனையும் இருந்தது. சீனா பிளவுண்டிருந்தபோது கன்பூசியம் வடக்கு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இவர்கள் ஆட்சியில் சீனா ஒன்றுபட்டு கன்பூசியம் ஆதரிக்கப்பட்டது. பயண இலக்கியம், வரைபடவியல், அறிவியல் கல்வி போன்றவை முன்னேற்றம் கண்டன. தூய்மையான வெடியுப்பு, பீங்கான், அச்சுக் கலை, மருத்துவ இலக்கியம் போன்றவை மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் சீனாவிலிருந்து அறிமுகமாயின.

மிங் மரபின் பேரரசர் சூ யுவான்சாங்க் சீனாவை ஒன்றுபடுத்தியதற்காகவும் கோட்டை முறைகளைப் பெருமளவில் அறிமுகப்படுத்தியதற்காகவும் யுவான் மரபை மெச்சினார் [23]. வரலாற்றில் அறியப்பட்ட வகையில் யுவான் ஆட்சியிலேயே ஐரோப்பியர்கள் சீனாவிற்கு முதலில் வந்தார்கள். அதில் குறிப்பிடத்தகுந்தவர் மார்க்கோ போலோ. சீனாவிற்குச் சென்றதைப் பற்றித் தன் பயண நூலில் விரிவாகச் சொல்லியுள்ளார். சிலர் மார்க்கோ போலோ தன் நூலில் சீனாவைப் பற்றித் தெளிவாகச் சொல்லவில்லை என்கின்றனர். அவர் சீனப் பெருஞ்சுவர் பற்றியும் தேநீர் இல்லங்களைப் பற்றியும் தன் நூலில் குறிப்பிடாததே இதற்குக் காரணமாகும். சீனாவைப் பற்றிய தகவல்களைத் தன் பாரசீகத் தொடர்பு மூலமே இவர் அறிந்திருப்பார் என்றும் நிறைய பாரசீக இடங்களைத் தன் நூலில் குறிப்பிட்டுள்ளதை வைத்துச் சிலர் கருதுகிறார்கள் [24].

இவர்கள் ஆட்சி காலத்தில் சாலைகளும் கால்வாய்களும் சீரமைக்கப்பட்டன. பஞ்சத்திலிருந்து மக்களைக் காக்க சீனா முழுவதும் உணவைப் பாதுகாக்கும் பெரும் பானைகள் கட்டப்பட்டன. பெய்ஜிங் நகரம் செயற்கை ஏரிகளும் மலைகளும் பெரும் அரண்மனைகளும் உள்ளதாகக் கட்டப்பட்டது. சீரமைக்கப்பட்ட சீனப் பெருங் கால்வாயின் முனையமாகப் பெய்ஜிங் மாற்றப்பட்டது.

யுவான் மரபே சீனா முழுவதையும் ஆண்ட சீனாவைப் பூர்விகமாகக் கொள்ளாதவர்கள் ஆவர். வரலாற்று நோக்கில் சிலர் இம்மரபை மங்கோலியப் பேரரசின் தொடர்ச்சியாகக் கருதுகிறார்கள்[25]. சில சீன வரலாற்று அறிஞர்கள் சாங் மரபுக்கும் மிங் மரபுக்கும் இடைப்பட்ட காலத்திய முறையான மரபாக யுவான் மரபைக் கருதுகிறார்கள்.

அரச அமைப்பு

தொகு

யுவான் ஆட்சியின் கட்டமைப்பு குப்லாய் கான் காலத்தில் உருவானது. பின்னர் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் யுவான் மரபு முடியும் வரை இக்கட்டமைப்பு பெரிதும் மாறவில்லை. இக்கட்டமைப்பு உள்ளூர் சீன மரபுபோல் தோற்றமளித்தாலும் இது பல்வேறு பண்பாடுகளை எதிரொலிப்பதாக இருந்தது. இக்கட்டமைப்பு திபெத்தியர்கள், மங்கோலியர்கள், ஆன் சீனர்கள் போன்ற இனங்களின் பண்பாட்டை எதிரொலிக்கும் கலவையாக இருந்தது. சீன பாணி நடைமுறை சாங் மரபு, தாங் மரபு போன்ற ஆட்சிகளின்போது இருந்ததைப் போல இருந்தது. இதற்குக் காரணம் குப்லாய் கானின் சீன அமைச்சர்கள் ஆவர். சீன மரபுப்படி குடிசார், இராணுவம், சீர்மையருக்குரிய என மூன்றாக அரசு பிரிக்கப்பட்டிருந்தது.

அரச வாழ்க்கை முறை

தொகு
 
குப்லாய் கான் வேட்டைக்குச் செல்லும் ஓவியம் - 1280ல் சீன ஓவியர் வரைந்தது.

1269ல் திபெத்து, மங்கோலியன், சீனம் ஆகிய மொழிகளை எழுதுவதற்கு உரிய வரி வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இது பாக்பா வரிவடிவம் எனப்பட்டது. இதன் மூலம் மூன்று மொழிகளையும் ஒரே வரி வடிவத்தில் எழுதலாம். யுவான் ஆட்சி காலம் வரை இவ்வரிவடிவம் பாதுகாக்கப்பட்டது. பெரும்பாலான யுவான் ஆட்சியாளர்கள் சீன மொழியை நன்றாகப் பேசுபவர்களாகவும் அதை எழுத முடியாதவர்களாவும் இருந்தனர். மங்கோலிய மரபுப்படி ஆட்சியாளர்கள் மங்கோலிய இனத்திலேயே திருமணம் முடித்து அவர்களின் புதல்வர்களே ஆட்சிக்கு வந்தனர், அதனால் ஆட்சியாளர்கள் மங்கோலிய இனத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். துக் துமுர் காலம் வரை இது தொடர்ந்தது. துக் துமுரின் தாய் மங்கோலிய இனத்தைச் சாராதவர். இவ்வரசர்கள் பெரிய மாளிகைகளைக் கட்டினாலும் சிலர் நாடோடி வாழ்க்கையை விரும்பினர். சில ஆட்சியாளர்கள் குறிப்பாகத் துக் துமுர் போன்றோர் சீனப் புலவர்களையும், ஓவியத்தையும், சீன இலக்கிய செல்வங்களையும் ஆதரித்தனர்.[26] யுவான் ஆட்சியாளர்கள் பௌத்த சமயத்தைப் பெரிதும் ஆதரித்ததால் இவர்கள் ஆட்சியில் நிறைய பௌத்த நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டன. 1300க்குப் பின் பெரியளவில் பௌத்த சமயம் சார்ந்தவைகள் மங்கோலிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டன இவற்றில் பெரும்பாலானவற்றின் மூலம் திபெத்திய பௌத்த சமயம் சார்ந்தவையாகும். பல மங்கோலிய உயர்குடியினர் கன்பூச்சிய அறிஞர்களையும் மடங்களையும் ஆதரித்தனர். இதன் காரணமாகக் குறிப்பிடத் தக்க அளவில் கன்பூச்சியம் சார்ந்தவை மங்கோலிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன.

பண்பாடு

தொகு
 
யுவான் ஆட்சியில் செய்யப்பட்ட வெள்ளை நிற பீங்கான் புத்தர் சிலை

இவர்கள் ஆட்சிக்காலத்தில் ஓவியம், கணிதம், கூத்து, கவிதை, சீன எழுத்துக்களை நேர்த்தியாக எழுதும் முறை போன்ற கலைகள் வளர்ச்சியடைந்தன. இந்தக்கலைஞர்கள் பெரும்புகழ் பெற்றார்கள். சூ என்ற கவிதை முறை பெரும்புகழ் பெற்று விளங்கியது. சீன எழுத்துக்களை நேர்த்தியாக எழுதுவதில் சிறந்த பலர் இக்காலத்தில் உருவானார்கள். புலவர்கள் பலர் கூத்து கலை வளர்வதில் பெரும்பங்காற்றினார்கள். இவர்கள் ஆட்சியில் மக்கள் எழுத்து ( எளிய சீன எழுத்து) முறை சூ என்ற கவிதை முறையிலும் சசு என்ற நாடக முறையிலும் பயன்படுத்தப்பட்டது.

சமூகப் பிரிவு

தொகு

குப்லாய் கானால் உருவாக்கப்பட்ட அரச நிருவாக முறையானது மங்கோலியர்களின் தலைமுறை வாரிசுகள் சார்ந்ததையும் சீனர்களின் அதிகாரிகள் சார்ந்ததையும் கலந்து இருந்தது. இருந்தபோதிலும் சமூகத்தில் கற்ற சீனர்களுக்குச் சீனர்களின் ஆட்சி மரபில் இருந்ததை போன்ற சிறப்புக்குரியவர்கள் என்ற பட்டம் அளிக்கப்படவில்லை. மங்கோலியர்கள், செமு (நடு, மேற்கு ஆசியாவை சேர்ந்த குழுக்கள்) போன்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் மிக்க பதவி சீனர்களுக்குத் தரப்படவில்லை இது யுவான் மரபு அன்னியர்களுடையது என்ற தோற்றத்தை மக்களுக்குத் தந்தது [27]. சில சீனர்கள் உயர் பதவிகளைப் பெற்றார்கள். யுவான் ஆட்சியில் சீனர்கள் பாராமுகமாக நடத்தப்பட்டதை மிங் மரபு ஆட்சியாளர் யங்லோ பேரரசர் குறிப்பிட்டுள்ளார்[28]. குப்லாய் கானுக்கு முன்பே மங்கோலியர்கள் வெளிநாட்டவர்களைப் பணிக்கு அமர்த்தி இருந்தனர். குப்லாய் கான் ஆட்சி காலத்திலேயே நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற முறையில் சமூக படிநிலை உருவாக்கப்பட்டது. சமூகம் நான்காகப் பிரிக்கப்பட்டிருந்தது.

  • மங்கோலியர்கள்
  • செமு (நடு, மேற்கு ஆசியாவை சேர்ந்த குழுக்கள்)
  • வடக்கத்திய சீனர்கள், கொரியர்கள், சர்சென்
  • தெற்கத்திய சீனர்கள், சாங் மரபு ஆட்சியுடன் தொடர்புடையவர்கள் அனைவரும்.

இவர்கள் ஆட்சியில் முசுலிம்களுக்கு உயர் பதவிகள் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் சில வகையான சிக்கல்கள் இருந்தது. விருத்த சேதனம், அலால் முறைப்படி விலங்குகளைக் கொல்லுதல் போன்றவை தடை செய்யப்பட்டு அவர்கள் மங்கோலியர்கள் போலவே உணவு உண்ண பணிக்கப்பட்டனர் [29]. முசுலிம் படைத்தளபதிகள் ஆன் சீனர்களுடன் இணைந்து மங்கோலியர்களுக்கு எதிராகக் கலகம் புரிந்தனர். மிங் மரபைத் தோற்றுவித்த சூ யுவான்சாங்க் படையில் லான் யு என்ற முசுலிம் படைத்தளபதி பணியில் இருந்தார். இவர் யுவான்களுக்கு எதிராகக் கலகம் புரிந்து போரில் மங்கோலியர்களைத் (யுவான்) தோற்கடித்தவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Also the Yekhe Yuan Ulus. According to some sources such as Volker Rybatzki & Igor de Rachewiltz's The Early Mongols: Language, Culture and History (p. 116), the full Mongolian name was Dai Ön Yeke Mongghul Ulus.
  2. Cambridge History of China, vol 6, p624
  3. Micheal Prwadin – The Mongol Empire and its legacy
  4. J.J.Saunders – The history of Mongol conquests
  5. Rene Grousset – The Empire of Steppes
  6. Dalai, Ch. The struggle for the Khaan throne during Kublai and his successors. - In: Tataro-Mongoly v Azii i Evrope. Moscow, 1977, p.325.
  7. Ganbold et al., 2006. Ganbold, J., Munhtsetseg, T. Naran, A.D. and Puntsag, A. 2006. Mongolyn Yuan uls [The Mongolian Yuan State]. Ulaanbaatar.
  8. H.H.Howorth-History of the Mongols, vol.II p.288
  9. Dalai, 1977, op. cit., p.324.
  10. An earlier expedition had failed in 1257/1258.
  11. The Cambridge History of China, Volume 6, pg 424
  12. Wood, F. (1995). "Did Marco Polo go to China?", p. 1-7
  13. Rossabi, M. Khubilai Khan: His Life and Times, p56
  14. Rossabi, M. Khubilai Khan: His Life and Times, p115
  15. Ed. Herbert Franke, Denis Twitchett, John King Fairbank-The Cambridge History of China: Alien regimes and border states, 907-1368, p. 631
  16. The Cambridge History of China By Denis Twitchett, Herbert Franke, John K. Fairbank, vol6, p.551
  17. http://www.fofweb.com/History/MainPrintPage.asp?iPin=EME175&DataType=Ancient&WinType=Free[தொடர்பிழந்த இணைப்பு]
  18. The Cambridge History of China By Denis Twitchett, Herbert Franke, John K. Fairbank, vol6, p.550
  19. The Northern Yuan rulers had also buttressed their claim on China at least up to the 15th century, who held tenaciously to the title of Emperor (or Great Khan) of the Great Yuan (Dai Yuwan Khaan, or 大元可汗). For more information regarding the use of the name Yuan among Mongols and the memory of it in later ages, see [1].
  20. Michael Prawdin, The Mongol Empire, its Rise and Legacy p.389. Collier-MacMillan Ltd. Toronto
  21. Gregory G.Guzman - Were the barbarians a negative or positive factor in ancient and medieval history?, The historian 50 (1988), 568-70
  22. Thomas T.Allsen - Culture and conquest in Mongol Eurasia, 211
  23. C.P. Atwood - Encyclopedia of Mongolia and the Mongol Empire, p.611
  24. Frances, Wood. "Did Marco Polo Go to China (London: Secker & Warburg, 1995)
  25. The Mongol Empire By Michael Prawdin, Gerard Chaliand, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4128-0519-3
  26. Frederick W. Mote-Imperial China 900-1800, p.471
  27. Ed. Herbert Franke, Denis Twitchett, John King Fairbank-The Cambridge History of China: Alien regimes and border states, 907-1368, p. 491-492
  28. In response to an objection against the use of "barbarians" in his government, the Yongle Emperor answered: "... Discrimination was used by the Mongols during the Yuan dynasty, who employed only "Mongols and Tartars" and discarded northern and southern Chinese and this was precisely the cause that brought disaster upon them". David Morgan-Who Ran the Mongol Empire?, Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, No. 1 (1982), pp.124-136
  29. Donald Daniel Leslie (1998). "The Integration of Religious Minorities in China: The Case of Chinese Muslims" (PDF). The Fifty-ninth George Ernest Morrison Lecture in Ethnology. p. 12. பார்க்கப்பட்ட நாள் 30 November 2010..
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_அரசமரபு&oldid=3912397" இலிருந்து மீள்விக்கப்பட்டது