ரன்வீர் சேனா
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) சாதிவாரி நிலக்கிழாரிய படைகள் (பீகார்) கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
ரன்வீர் சேனா (Ranvir Sena இந்:रणवीर सेना) எனப்படுவது, பீகாரிய சாதிவாரி நிலக்கிழாரிய படையணிகளில் ஒன்றாகும்[1]. இது 1994ம் ஆண்டு தரிசன் சவுத்ரி மற்றும் பிரம்மேசுவர் சிங் ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் பூமிகார் நிலக்கிகிழார்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன் அவர்களது நில மேலாண்மையை உறுதி செய்வது ஆகும். இந்த இயக்கம் பல முறை தலித், பழங்குடி மற்றும் பொதுவுடமைவாதிகளின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மேலும் இலச்மண்பூர் பதே மற்றும் பதனி டோலா படுகொலைகளிலும் இது ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது[2][3][4]. இதன் காரணமாக இந்திய அரசு இதை ஒரு தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தியுள்ளது. பீகார் அரசும் இதனை யூலை 1995ல் முதல் சட்டப்பூர்வமாக தடை செய்துள்ளது[5].
பெயர் காரணம்
தொகுரன்வீர் எனும் பெயர் ரன்வீர் பாபா எனப்படும் பூமிகார் சாதியை சேர்ந்த ஒரு மகானின் பெயரில் இருந்து வந்தது. மேலும் 19ம் நூற்றண்டைச் சேர்ந்த பூமிகார் இராணுவ வீரரான ரன்வீர் சவுத்ரி என்பவரின் பெயரும் இதற்கான இன்னொரு முக்கிய காரணம். ரன்வீர் சவுத்ரி, அவரின் காலத்தில் போஜ்பூர் மாவட்டத்தில் நிலவி வந்த இராசபுத்திரர்களின் நில மேலாண்மையை தகர்த்து, பூமிகார் பிராமிண்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டியத்தில் முக்கிய பங்காற்றியவர்[6]. எனவே இவர்களின் பெயரை சேர்த்து ரன்வீர் சேனா (ரன்வீரின் படைகள்) என இந்த இயக்கம் பெயரிடப்பட்டது.
வரலாறு
தொகு1962ல் ஏற்பட்ட இந்திய சீனப் போரை தொடர்ந்து இந்திய பொதுவுடமைக் கட்சி இரண்டாக பிரிந்தது. இது மார்க்சிய லெனினிய இயக்கங்களின் தோற்றத்திற்கு அடிகோலாக அமைந்தது. ஆயுதம் தாங்கிய இந்த புரட்சிக் குழுக்கள் முதலில் மேற்கு வங்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கின. பின்னர் 1970களின் ஆரம்பத்தில் இவை பீகார் மாநிலத்திலும் தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கின. அடித்தட்டு மக்களின் சார்பாக இயங்கிய இந்த அமைப்புகள், பெரும் நிலக்கிழார்களிடமிருந்த நிலங்களைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தன. இது பெரும் நிலங்களைச் சொந்தமாகக் கொண்ட பிராமண மற்றும் ஆதிக்க சாதி மக்களுக்கு பெரும் நட்டத்தைத் தோற்றுவித்தது. மேலும் அதிக அளவிலான தாழ்த்தப்பட்ட மக்கள் இவ்வகையான புரட்சி இயக்கங்களில் சேர்வதும், அவற்றின் பலம் பெருகுவதும் தங்களின் நலனுக்கு எதிரானதாக இம்மக்களால் பார்க்கப்பட்டது.
எனவே இந்த இயக்கங்களை எதிர்க்கும் வகையில் தங்களுக்கான தனியார் படையணியை இம்மக்கள் அமைத்துக்கொண்டனர். இது ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் நிலக்கிழார்களின் கூட்டுப் படையணியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு 1979ல் இராசபுத்திரர்களால் கவுர் சேனா எனப்படும் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. தொடர்ந்து 1990 வரை பல்வேறு சாதியினராலும் வெவ்வேறான பகுதிகளில் வெவ்வேறான பெயர்களில் பல நிலக்கிழாரிய படைகள் அமைக்கப்பட்டன.
இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட படைகளில் சுவர்னா லிபரேசன் பிரண்ட் மற்றும் சன்லைட் சேனா ஆகியவற்றை இணைத்து, புதியதாக ரன்வீர் சேனா உருவாக்கப்பட்டது. இதனை தரிசன் சவுத்ரி எனபவர் செப்டம்பர் 1994ல் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பேளூர் எனும் கிராமத்தில் வைத்து ஆரம்பித்தார். பிரம்மேசுவர் சிங் இந்த இயக்கத்தின் தோற்றத்தில் பங்குகொண்டதுடன் அதன் தளபதியாகவும் இருந்தார்[7]. இந்த இயக்கமானது, அளவிலும் கட்டமைப்பிலும் மற்ற இயக்கங்களை விட சிறந்ததாக வடிவமைக்கப்பட்டது. பூமிகார் மற்றும் பிற பிராமணிய சாதியினர் மட்டுமே இதன் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இதன் தொண்டர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது[8].
கொள்கைகள்
தொகுபூமிகார் நிலக்கிழார்களின் நலன் காப்பது ரன்வீர் சேனாவின் முக்கிய கொள்கை. அதோடு பீகாரில் கம்யூனிச ஒழிப்பு என்பது மற்றொரு முக்கிய கொள்கை[5][8]. இதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுவது என்பதன் அடிப்படையில் இந்த இயக்கம் இயங்குகின்றது. இந்த இயக்கம் தனது தாக்குதல்களைப் பெரும்பாலும் தலித், பழங்குடி மற்றும் பொதுவுடமைவாதிகள் மீதே தொடுக்கின்றது. சில நேரங்களில் பிற சாதி மற்றும் இசுலாமியர்களின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தலித் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக, அந்த குழந்தைகள் பின்னாட்களில் நக்சலைட்டுகளாக மாறலாம் எனவும், பெண்கள் அவ்வாறான நக்சலைட்டுகளை பெற்றெடுக்கலாம் என்பதாவும் ரன்வீர் சேனா கூறுகின்றது[1][9]
தாக்குதல்கள்
தொகுரன்வீர் சேனா பல மனித உரிமை மீறல்களை பீகாரில் நடத்தியுள்ளது[10]. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
|
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Caste discrimination:a global concern" (PDF). Human Rights Watch. 2001. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.
- ↑ "NAXALISM, CASTE-BASED MILITIAS AND HUMAN SECURITY:LESSONS FROM BIHAR" (PDF). Tata Institute of Social Sciences. 2008. Archived from the original (PDF) on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.
- ↑ Arun Kumar (Apr 8, 2010). "16 to hang for killing 58 in Bihar village". The Times of India. Archived from the original on 2011-08-11. பார்க்கப்பட்ட நாள் 2013-11-14.
- ↑ http://www.thehindu.com/news/states/other-states/article3329111.ece?homepage=true
- ↑ 5.0 5.1 http://www.dinamalar.com/News_detail.asp?Id=478270
- ↑ Community Warriors: State, Peasants and Caste Armies in Bihar (2009), Ashwini Kumar, Anthem Press, ISBN 978184331709, p. 129
- ↑ http://www.network54.com/Forum/211833/thread/1109007810/1109041442/What+type+of+guns+are+they+carrying-
- ↑ 8.0 8.1 8.2 http://satp.org/satporgtp/countries/india/terroristoutfits/Ranvir_Sena.htm
- ↑ Human Rights Watch, Broken People, p. 5
- ↑ "Human Rights Watch World Report 2001: India: Human Rights Developments". Human Rights Watch. 2001. பார்க்கப்பட்ட நாள் 2009-07-13.