வலைவாசல்:வரலாறு/நபர்கள்
பயன்பாடு
தொகுவரலாற்று நபர்கள் துனைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:வரலாறு/நபர்கள்/வடிவமைப்பு.
சிறப்புக் கட்டுரைகள் வரிசை
தொகுவலைவாசல்:வரலாறு/நபர்கள்/1
வரலாற்று நபர்கள்
சுவாதித் திருநாள் ராம வர்மா 1829 முதல் 1846 வரை இந்தியாவின் திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆண்ட மன்னராவார். இவருடைய தாய் மகாராணி கவுரி லட்சுமி பாய் 1810-1815- ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆங்கிலேயரின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியுடன் ஆண்டு வந்தார். மகாராணி லட்சுமி பாய் - இராசராச வர்மா கோயில் தம்புரான் தம்பதியருக்கு 1813 ஆம் ஆண்டு சுவாதித் திருநாள் ராம வர்மா பிறந்தார். இவர் பிறந்த ஆண்டிலேயே அரசராக அறிவிக்கப்பட்டார். மகாராணி கவுரி லட்சுமி பாய் இறந்த பின், 1815 ஆம் ஆண்டு முதல் 1829 ஆம் ஆண்டு வரை அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலுக்கு ஆள்பவர் என்ற முறையில் மகாராணி கவுரி பார்வதி பாய் ஆட்சி செய்தார். சுவாதித் திருநாள் 1829 ஆம் ஆண்டு தக்க அகவையடைந்ததும் முழு அரசாங்க அதிகாரத்தையும் ஏற்று திருவிதாங்கூர் அரசைத் தன அந்திமக் காலமான 1846 ஆண்டு வரை ஆண்டார். சுவாதித் திருநாள் சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்லாமல், சிறந்த இசை வல்லுனரும் இசைப் புரவலரும் ஆவார். இவர் 400க்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.
வலைவாசல்:வரலாறு/நபர்கள்/2
வரலாற்று நபர்கள்
ராணி லட்சுமிபாய் அல்லது சான்சி இராணி வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார். சான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா ராணி லட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் சான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் ராணி லட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்குத் தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல்நலமிழந்து இறந்தார்.
வலைவாசல்:வரலாறு/நபர்கள்/3
வரலாற்று நபர்கள்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன், எம்மண்டலமும் கொண்டருளியவன், எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழதேசப் படையெடுப்பும் ஒரு முக்கியக்காரணம்.
வலைவாசல்:வரலாறு/நபர்கள்/4
வரலாற்று நபர்கள்
பேரரசன் அலெக்சாண்டர் (கிமு 356-323) கிரேக்கத்தின் பகுதியான மக்கெடோனின் மன்னன். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன் போற்றப்படுகிறான். இவன் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டான். தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தான். இவன் இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். அலெக்சாண்டர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தான். இதனால் சில அறிஞர்கள் இவன் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தான் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினான். பன்னிரண்டு ஆண்டு காலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானான்.
வலைவாசல்:வரலாறு/நபர்கள்/5
வரலாற்று நபர்கள்
உமறு இப்னு அல்-கத்தாப் எனும் இயற்பெயர் கொண்ட உமர் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களுள் முக்கியமானவரும் ஆவார். உமறு முகம்மது நபியின் ஆலோசகரும் தோழருமாவார். முகம்மது நபியின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாகப் பொறுப்பேற்றார். இவர் கிபி 634 முதல் கிபி 644 வரை ஆட்சி செய்தார். இவரது நிருவாக மற்றும் போர்த் திறமையால் இசுலாமியக் கலீபகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து, இவரது ஆட்சிக் காலத்தில் ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆர்மீனியா ஆகிய பகுதிகள் அதன் கீழ் வந்தன. முஹம்மது நபியை விட வயதில் இளையவரான உமறு மக்காவிலே பிறந்தவர். அவர் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. கி.பி. 586-ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பர். துவக்கத்தில் உமறு, முகமதின் புதிய மார்க்கத்திற்கு கடுமையான எதிரியாக இருந்தார். ஆனால், திடீரென்று அவர் அம்மார்க்கத்தில் சேர்ந்து, அதன் வலிமைமிக்க ஆதரவாளர்களில் ஒருவரானார். நபியின் ஆலோசகர்களில் ஒருவராகித் தன் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்து வந்தார்.
வலைவாசல்:வரலாறு/நபர்கள்/6
வரலாற்று நபர்கள்
முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே. இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராச ராச சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
வலைவாசல்:வரலாறு/நபர்கள்/7
வரலாற்று நபர்கள்
சாஃபோ (Sappho) ஒரு பண்டைய கிரேக்கப் பெண் தன்னுணர்வுக் கவிஞர் ஆவார். லெஸ்போஸ் தீவில் பிறந்த இவரை பின் வந்த கிரேக்கர்கள் ஒன்பது தன்னுணர்வுக் கவிஞர்களுள் ஒருவராகக் கொள்வர். வரலாற்றிலும், கவிதையிலும் இவரை லெஸ்போஸ் தீவின் மிட்டிலீனி (Mytilene) என்னும் நகரத்துடன் தொடர்புபடுத்துவது உண்டு. இவர் பிறந்த இடமாக அதே தீவிலிருந்த இன்னொரு நகரான எர்சோஸ் என்னும் நகரையும் சொல்வது உண்டு. இவர் கிமு 630 க்கும் கிமு 612 க்கும் இடையில் பிறந்து கிமு 570 அளவில் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவரின் பெற்றோர்கள் ஸ்காமாண்டிரோனிமஸ், கிலெயிஸ் ஆவார்கள். இவருக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவளை தனது தாயின் நினைவாக கிளெயிஸ் என்று அழைத்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் எழுதி பண்டைக் காலத்தவர் படித்துச் சுவைத்ததாகச் சொல்லப்படும் பெரும்பாலான கவிதைகள் இன்று கிடைத்தில எனினும் தப்பியிருக்கும் பகுதிகள் மூலம் அவரது புகழ் நிலைத்துள்ளது.
வலைவாசல்:வரலாறு/நபர்கள்/8
வரலாற்று நபர்கள்
கிறித்தோபர் கொலம்பசு ஒரு கடல் பயணி மற்றும் வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார். கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும். உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர். ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.
முன்மொழிதல்
தொகுஇந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபர்களின் கட்டுரை தொடுப்பை இங்கு முன்மொழியவும்.
- தற்போது எதுவும் இல்லை.