வி. வி. சடகோபன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

வி. வி. சடகோபன் (Veeravanallur Vedantam Sadagopan, 29 சனவரி 1915; காணாமல் போனது 11 ஏப்ரல் 1980) பழம்பெரும் திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும், கல்வியாளரும், இசையமைப்பாளரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.[3] மதுரை காந்திகிராம் கிராமப் பல்கலைக்கழகத்தில் இசை இயக்குநராகவும், தில்லிப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.[4]

வி. வி. சடகோபன்
பிறப்புவீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன்
(1915-01-29)29 சனவரி 1915
வீரவநல்லூர், திருநெல்வேலி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
காணாமல்போனது11 ஏப்ரல் 1980 (அகவை 65) [1]
குதூர், நெல்லூர் மாவட்டம் (தற்போது திருப்பதி மாவட்டம்), ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தகுதிகாணாமல் போய் 44 ஆண்டுகள், 6 மாதங்கள் மற்றும் 22 நாட்கள்; இறந்திருக்கலாம்
தேசியம்இந்தியர்
கல்விபல்கலைக்கழகக் கல்வி
பணிபேராசிரியர்
அறியப்படுவதுநடிகர், கருநாடக இசைப் பாடகர், எழுத்தாளர், இசையமைப்பாளர்
சமயம்வைணவர்
பெற்றோர்வேதாந்தம் ஐயங்கார்
வாழ்க்கைத்
துணை
இரங்கநாயகி
பிள்ளைகள்ராதிகா, தேவிகா, விஜயா, கிருஷ்ணகுமார்[2][3]

ஆரம்ப வாழ்க்கை

தொகு

சடகோபன் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் என்ற ஊரில் 1915 சனவரி 29 இல் வைணவக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். தந்தை வேதாந்தம் ஐயங்கார் காப்பீட்டு முகவராகப் பணியாற்றியவர். சடகோபன் ஆங்கிலம், கணிதம், சமசுக்கிருதம் ஆகிய பாடங்களில் தேர்வு பெற்று இந்தியக் குடியுரிமை சேவையில் இணைவதற்காக அதற்கான சோதனையில் பயிற்சி எடுக்கும் பொருட்டு சென்னை வந்தார்.[3]

சென்னையில் எழுத்தாளர் வரா உடன் தொடர்பு ஏற்பட்டதில், ஊடகவியலில் நுழைந்தார். ஆனந்த விகடன் பத்திரிகையில் இசை பற்றிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எனப் பலதும் எழுதினார்.[3] ஆங்கிலத்திலும் நிறையக் கட்டுரைகள் எழுதினார்.[5] இந்தியன் மியூசிக் ஜெர்னல், தியாகபாரதி ஆகிய ஆங்கில, தமிழ் மாத இதழ்களைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.[4]

நடிகர்

தொகு

வி. வி. சடகோபன் நவயுவன் (1937) திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். இத்திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார்.[6] இத்திரைப்படத்தின் காட்சிகள் இலண்டனில் எடுக்கப்பட்டது. வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.[5] பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற ஒருவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் இத்திரைப்படத்துடன் காண்பிக்கப்பட்டது.[7] இதன் பின்னர் அதிர்ஷ்டம் (1939),[6] ஜெமினியின் மதனகாமராஜன் (1941)[8], கடைசியாக வேணுகானம் (1941) ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.[6] 1942 இல் வெளியான ஜெமினியின் ஜீவன்முக்தி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் விஷ்ணுவாக வசனம் எதுவும் பேசாமல் நடித்திருக்கிறார்.[9] இதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதைக் கைவிட்டு, இசைப்பணிக்குத் திரும்பினார்.[6]

கருநாடக இசைப் பாடகர்

தொகு

சடகோபன் நாமக்கல் சேச ஐயங்காரிடமும் அரியக்குடி இராமானுஜ ஐயங்காரிடமும் கருநாடக இசையை முறைப்படி பயின்றார்.[10] வைணவ இலக்கியத்தை ஆழமாகப் பயின்றார். கம்பராமாயணப் பாடல்களை தமது கச்சேரிகளில் பாடினார்.[3] அனைத்திந்திய வானொலியிலும் கச்சேரிகள் செய்திருக்கிறார். அனைத்திந்திய வானொலியின் ஒலித்திறமையைக் கண்டறியும் குழுவில் உறுப்பினராகவும், சென்னை இசைக் கழகத்தின் வல்லுநர்கள் குழுவிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றினார். இந்தியாவின் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் இவரது சொற்பொழிவுகளும், கச்சேரிகளும் இடம்பெற்றுள்ளன. 1966 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற இந்திய இசையின் நூற்றாண்டு விழாக்களில் பங்குபற்றினார்.[5] ஆத்திரேலியாவின் பேர்த் நகரில் 1974 இல் நடைபெற்ற பன்னாட்டு இசை மாநாட்டில் பங்குபற்றினார்.[4]

இசை ஆசிரியர்

தொகு

வி. வி. சடகோபன் மாணவர்களுக்கு இசையைக் கற்றுக் கொடுக்க தியாகபாரதி என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்.[3] பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவர்களுடன் கருநாடக இசையைப் பாடியும் ஆடியும் மகிழ்வார்.[3] தியாகபாரதி என்ற பெயரில் இசைப்பள்ளியையும் ஆரம்பித்தார்.[11] நேருவின் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த சௌந்தரம் இராமச்சந்திரன் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தபோது, சடகோபனை அவர் இசைப் படிப்புகளுக்கான பணிப்பாளராக நியமித்தார்.[3] 1959 இல் சடகோபனின் தயாரிப்பில் மேடையேற்றப்பட்ட குறவஞ்சி நாட்டிய நாடகத்தைப் பார்வையிட்ட சவகர்லால் நேரு, சடகோபனை தில்லிப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராக நியமித்தார். 1975 வரை இப்பணியில் அவர் நிலைத்திருந்தார்.[3] இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றின் கல்வி வாரியங்களில் உறுப்பினராக இருந்து பணியாற்றியுள்ளார்.[5] தில்லி சங்கீத சமாஜம் என்ற அமைப்பின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.[11]

இவரது சொற்பொழிவுகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ஒன்று நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய பல கட்டுரைகளை இவரது மாணவர் சிறீராமபாரதி என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.[4]

இசையமைப்பாளர்

தொகு

வி. வி. சடகோபன் கிருத்திகள், கீர்த்தனைகள், இராகமாலிகைகள், பதம்கள், கிளிக்கண்ணிகள் போன்ற பல உருப்படிகளை, பல மொழிகளில் உருவாக்கியுள்ளார்.[5] காரைக்குடி கம்பன் கழக விழாவில் முதல் தடவையாக கம்ப இராமாயணப் பாடல்களை முழுமையான ஒரு கச்சேரியாகப் பாடினார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களை இசையமைத்துப் பாடியுள்ளார்.[5]

மறைவு

தொகு

வி. வி. சடகோபன் 1980 ஏப்ரல் 10 அன்று தில்லியில் இருந்து ஜி.டி. விரைவு வண்டியில் சென்னை நோக்கிப் புறப்பட்டார். பின்னர் இவர் ஏப்ரல் 11 இல் ஆந்திரப் பிரதேசம் கூடூர் தொடருந்து நிலையத்தில் இறங்கினார். அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.[3][4] இவரைப் பின்னர் வாரணாசியிலும், இமயமலைப் பகுதிகளிலும் கண்ணுற்றதாக வதந்திகள் வெளிவந்தன. ஆனாலும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Kolappan, B. (15 December 2018). "A talented musician, an illustrator and a gas connection". https://www.thehindu.com/news/cities/chennai/a-talented-musician-an-illustrator-and-a-gas-connection/article25754597.ece. 
  2. Through the Notes Of V V Sadagopan
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 Mystic gone with the wind..
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "சங்கீத மும்மூர்த்திகள்". தினமணி கதிர். 1984-01-01. http://s-pasupathy.blogspot.com/2015/01/47_28.html. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 V V Sadagopan Adharam Neethan Endru
  6. 6.0 6.1 6.2 6.3 V.V.Sadagopan
  7. "1937 – நவ யுவன்". Archived from the original on 2016-09-14. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
  8. Madanakamarajan (1941)
  9. ராண்டார் கை. "Venugaanam 1941". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2017.
  10. V V Sadagopan
  11. 11.0 11.1 என். ராஜகோபாலன் (1992). Another Garland. சென்னை.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வி._சடகோபன்&oldid=3725143" இலிருந்து மீள்விக்கப்பட்டது