1930 உலகக்கோப்பை காற்பந்து

(1930 உலகக்கோப்பை கால்பந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

1930 உலகக்கோப்பை காற்பந்து ( 1930 FIFA World Cup) பன்னாட்டு ஆடவர் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையேயான முதல் உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி ஆகும். இது உருகுவை நாட்டில் 13 சூலை முதல் 30 சூலை 1930 வரை நடைபெற்றது. உருகுவை தனது முதல் அரசியலமைப்புச் சட்டத்தின் நூறாவது ஆண்டை அந்த ஆண்டில் கொண்டாடியதாலும் 1928 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் உருகுவை தேசிய காற்பந்து அணி காற்பந்து தங்கத்தை வென்றிருந்ததாலும் காற்பந்தாட்டங்களுக்கான பன்னாட்டு கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இப்போட்டியை நடத்த உருகுவை நாட்டை தேர்ந்தெடுத்தது. அனைது ஆட்டங்களும் உருகுவையின் தலைநகரமான மான்ட்டிவிடியோவில் நடந்தது. பெரும்பாலான ஆட்டங்கள் இப்போட்டிக்காக கட்டப்பட்ட எசுடேடியோ சென்டெனரியோவில் நடந்தது.

1930 உலகக்கோப்பை கால்பந்து
1er Campeonato Mundial de Fútbol
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுஉருகுவை
நாட்கள்13 சூலை – 30 சூலை
அணிகள்13
அரங்கு(கள்)(1 நகரத்தில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் உருகுவை (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் அர்கெந்தீனா
மூன்றாம் இடம் ஐக்கிய அமெரிக்கா
நான்காம் இடம் யூகோஸ்லாவியா
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்18
எடுக்கப்பட்ட கோல்கள்70 (3.89 /ஆட்டம்)
பார்வையாளர்கள்5,90,549 (32,808/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)அர்கெந்தீனா குயில்லெர்மொ இசுடேபில்
(8 கோல்கள்)
1934

பதின்மூன்று அணிகள் (தென் அமெரிக்காவிலிருந்து ஏழு அணிகளும் ஐரோப்பாவிலிருந்து நான்கு அணிகளும் வட அமெரிக்காவிலிருந்து இரண்டு அணிகளும்) இறுதியாட்டங்களில் பங்கேற்றன. தென் அமெரிக்காவிற்கு பயணிப்பது கடினமாக இருந்ததால் ஒருசில ஐரோப்பிய அணிகளே பங்கேற்றன. அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் வெற்றியாளரும் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் இரண்டு ஆட்டங்களும் ஒரே நேரத்தில் விளையாடப்பட்டன; பிரான்சு மெக்சிக்கோவை 4–1 கோல்கணக்கிலும் ஐக்கிய அமெரிக்கா பெல்ஜியத்தை 3–0 கோல்கணக்கிலும் வென்றன. பிரான்சின் லூசியன் லொரென்ட்டுக்கு உலகக்கோப்பையின் வரலாற்றில் முதல் கோலை அடித்தப் பெருமை கிட்டியது. போட்டியில் அலுவல்முறையாக "எந்த கோலும் வழங்காத" முதல் கோல்காவலராக அமெரிக்க ஜிம்மி டக்ளசு விளங்கினார்.

தங்கள் குழுக்களில் முறையே வெற்றி பெற்ற அர்கெந்தீனா, உருகுவை, ஐக்கிய அமெரிக்கா, யூகோஸ்லாவியா அரையிறுதிக்கு முன்னேறின. 93,000 பேர்கள் கண்டுகளித்த இறுதி ஆட்டத்தில், போட்டி நடத்திய உருகுவை அர்கெந்தீனாவை 4–2 என்ற கோல்கணக்கில் வென்று உலகக்கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது.

பின்புலம் தொகு

1914இல் ஒலிம்பிக் காற்பந்தாட்டப் போட்டியை ஃபிஃபா "தொழில்முறையல்லாதோருக்கான உலக காற்பந்துப் போட்டியாக" அங்கீகரித்து[1] அடுத்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் (1920 முதல் 1928 வரை) இந்த போட்டிகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 1908ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்தின் கால்பந்துச் சங்கமும் 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சுவீடிய காற்பந்துச் சங்கமும் இந்தப் பொறுப்பை ஏற்றிருந்தன.

லாசு ஏஞ்சலசில் நடந்த 1932ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வரைவு நிகழ்ச்சிநிரலில் காற்பந்து இடம் பெறவில்லை. ஃபிஃபாவிற்கும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவிற்கும் தொழில்முறையல்லா விளையாட்டு வீரர்களின் நிலை குறித்து பிணக்கு ஏற்பட்டது.[2] ஒலிம்பிக் விளையாட்டுகள் துவங்கிய அதே 26 மே 1928இல் ஆம்சுடர்டாமில் நடந்த ஃபிஃபாவின் மாநாட்டில் ஃபிஃபா தலைவராக இருந்த ஜூல்சு ரிமெட், தொழில்முறை விளையாட்டளர்கள் அனுமதிக்கப்பட்ட, அனைத்து ஃபிஃபா உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய, உலக காற்பந்துப் போட்டியொன்றை நடத்தும் திட்டத்தை வெளியிட்டார்.[3] இந்த முன்மொழிவை 25–5 என்ற வாக்கு எண்ணிக்கையில் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.[4]

மேற்சான்றுகள் தொகு