அ. சிவசைலம்

இந்தியத் தொழிலதிபர்

அனந்தராமகிருஷ்ணன் சிவசைலம் (Anantharamakrishnan Sivasailam) (24 ஆகஸ்ட் 1934 - 11 ஜனவரி 2011) ஓர் இந்தியத் தொழிலதிபரும், கல்வியாளரும், கொடையாளரும் மற்றும் அமல்கமேசன்ஸ் குழும நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குநரும் ஆவார். இது 12,000 (2011 ஆம் ஆண்டு நிலவரப்படி) பணியாளர்களைக் கொண்ட 70 பில்லியன் நிகர மத்திப்பு கொண்ட குழுமமாகும். [1] 2015 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் போர்ப்ஸ் என்ற வணிக இதழால் இந்தியாவில் 37 வது பணக்கார நிறுவனமாக பட்டியலிடப்பட்ட வணிக குடும்பத்திற்கு இவர் தலைமை தாங்கினார். [2] இவர் இந்திய தானுந்து உற்பத்தியாளர்கள் சங்கம் (1970, 1971) [3] மற்றும் இந்திய வர்த்தக சபை ஆகியவற்றின் தலைவராக இருந்தார். மேலும், 1969-1970 இல் சென்னையின் செரிப் பதவியையும் வகித்தார். [4] இந்தியத் தொழில்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2007 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [5]

அ. சிவசைலம்
இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்கள் 5 ஏப்ரல் 2007 அன்று குடியரசுத் தலைவர் இல்லத்தில் சிவசைலம் அவர்களுக்கு பத்மசிறீ விருது வழங்கும் நிகழ்ச்சி
பிறப்பு(1934-08-24)24 ஆகத்து 1934
ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு11 சனவரி 2011(2011-01-11) (அகவை 76)
கஸ்தூர்பா மருத்துவமனை, மணிப்பால், கருநாடகம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிதொழ்லதிபர்
கல்வியாளர்
கொடையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1957–2011
அறியப்படுவதுஅமால்கமேசன்ஸ் குழுமம்
பெற்றோர்சி. அனந்தராமகிருட்டிணன் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
இந்திரா சிவசைலம்
பிள்ளைகள்மல்லிகா சீனிவாசன்
ஜெயசிறீ வெங்கட்ராமன்
வலைத்தளம்
Website of Amalgamations Group

சுயசரிதை தொகு

சிவசைலம் ஆகஸ்ட் 24, 1934 அன்று தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சியில், அமல்கமேசன்ஸ் குழுமத்தின் நிறுவனர்சி. அனந்தராமகிருட்டிணனின் இரண்டு மகன்களில் மூத்தவராக பிறந்தார். சென்னை, இலயோலாக் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்ற இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்பை முடித்து, இலண்டனில் உள்ள ஒரு பட்டய கணக்காளர் நிறுவனத்தில் கணக்காளராக தனது பணியைத் தொடங்கினார். அங்கு இவர் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டில், இவர் தனது தந்தையின் குடும்ப வணிகத்தில் ஒரு கட்டுப்பாட்டாளராகவும், பொருளாளராகவும் சேர்ந்தார். மேலும், டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE) நிறுவனத்தை 1960 இல் தொடங்கி 1961இல் அதன் பொது மேலாளராகவும் ஆனார். தொடர்ந்து 7 ஆண்டுகள் அந்த நிறுவனத்திற்குத் தலைமை தாங்கினார். 1964 இல் இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இவர் குழும வணிகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 1968 இல் அதிகாரப்பூர்வமாக குழுமத்தின் தலைவராக ஆனார். இவரது சகோதரர் அ. கிருட்டிணமூர்த்தி அதன் துணைத் தலைவராக இருந்தார். இவர் 2011 இல் தான் இறக்கும் வரை பதவியில் இருந்தார். மேலும் இந்தக் குழுமமானது 48 துணை நிறுவனங்கள் மற்றும் 12,000 வலுவான பணியாளர்களைக் கொண்ட 350 மில்லியன் வணிகத்திலிருந்து 70 பில்லியன் கூட்டு நிறுவனமாக வளர்ந்தது. குழுமத்தின் முதன்மை நிறுவனமான டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட், இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும், உழவு இயந்திரங்களின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகவும் ஆண்டுக்கு 100,000 உழவு இயந்திரங்கள் உற்பத்தி மற்றும் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.[6]

தொழில் தொகு

இந்திய வணிக நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சிவசைலம், இந்தியத் தானுந்து உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து இரண்டு முறை (1970, 1971) இருந்துள்ளார். மேலும் 1969 முதல் 1970 வரை இரண்டு ஆண்டுகள் சென்னையின் ஷெரிப்பாகவும் பணியாற்றினார் சென்னையின் வணிக நிறுவனச் சங்கம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றுடன் தொடர்புள்ள இவர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பரமகல்யாணி குழுமம், ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.

விருதுகள் தொகு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியல் முனைவர் பட்டம் ( மதிப்புறு முனைவர் பட்டம் ) வழங்கி கௌரவித்தது. தேசிய தரக் காப்பீட்டு நிறுவனம் இவருக்கு சிறந்த தொழிலதிபர் விருதை வழங்கியது. [1] இவர் இந்திய தானுந்து பொறியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய தானுந்து உற்பத்தியாளர்கள் சங்கம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் , அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் சிறப்புமிக்க சேவை விருதையும் பெற்றார். [1] இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொன்விழா வாழ்நாள் பங்களிப்பு விருதையும் பெற்ற இவர், இலண்டனில் உள்ள தொழில்முனைவோர் நிறுவனத்தின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் 2007 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் குடியரசு தின மரியாதை பட்டியலில் சேர்க்கப்பட்டு பத்மசிறீ விருதைப் பெற்றார்.

குடும்பம் தொகு

சிவசைலம், இந்திரா என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு இரு பெண் குழந்தைகள்.[7] மூத்த மகள், மல்லிகா சீனிவாசன், வார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பழைய மாணவர்.[8] டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார். இவரின் கணவர் டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் ஆவார்.[9] இளைய மகள் ஜெயஸ்ரீ வெங்கட்ராமன், டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் இயக்குனராக இருக்கிறார். இவரின் கணவர் சென்னையைச் சேர்ந்த தொழில் குழுமமான டபிள்யூஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி வெங்கட்ராமன் ஆவார் .[4]

இறப்பு தொகு

சிவசைலம், 11 ஜனவரி 2011 அன்று மாரடைப்பால் மணிப்பாலில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் இறந்தார். [10] இவருடைய மனைவி இந்திரா சிவசைலம் இவருக்கு முன்னரே இறந்து விட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Industrialist A. Sivasailam passes away". The Hindu. 12 January 2012. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  2. "Amalgamations family". Forbes. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  3. "Society of Indian Automobile Manufacturers President". 2016. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  4. 4.0 4.1 "Sivasailam – gentle, yet forceful". 12 January 2011. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  5. "Padma Awards" (PDF). 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  6. "History in Making". Slide Share. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  7. "Indira Sivasailam passes away". 24 December 2008. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  8. "Amalgamations Group's succession planning focus on theme 'unity': Mallika Srinivasan". 8 November 2011. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  9. "Next gen of Chennai-based family biz groups sits pretty at helm". 6 March 2013. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
  10. "Amalgamations group chief Sivasailam passes away". 12 January 2011. பார்க்கப்பட்ட நாள் 14 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சிவசைலம்&oldid=3938621" இலிருந்து மீள்விக்கப்பட்டது