சொறி மீன்

கடல் வாழ் உயிரினம்
(கடல் இழுது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சொறி மீன் (Jellyfish) என்பது குழியுடலிகள் இனத்தைச் சேர்ந்த கடலில் வாழும் ஒரு உயிரினமாகும். இவை மீன் என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இவை மீன் அல்ல. சொறி மீன்கள் கடல் மற்றும் பெருங்கடல் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றது. கடல் உயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான உயிரினம் சொறி மீன் ஆகும். இவை கடலின் ஆழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலாத அளவுக்குப் பரந்த நீர்நிலைகளில் காணப்படுகின்றன. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகான உயிரினமாகவும், கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும்போது மிகுந்த தீங்கு விளைவிக்கக்கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன. இதுவரை 2000க்கும் மேற்பட்ட சொறி மீன் சிற்றினங்கள் உலகில் அறியப்பட்டுள்ளன. இவை கடலின் ஆழத்திலும் உலவும் பண்புள்ளதால், இன்னும் இதன் ஏராளமான இனங்கள் அறியப்படாமல் இருக்கின்றன.

கடல் இழுது
பசிபிக் கடல் வலை (Chrysaora fuscescens)
கடல் இழுது வரிசைகள்:
Scyphozoa — உண்மையான இழுதுமீன்
Cubozoa — பெட்டி இழுதுமீன்
Staurozoa — தண்டுள்ள இழுதுமீன்
சில Hydrozoa — சிறு இழுதுமீன்

சொறி மீன் நிடேரிய (Cnidaria) என்ற உயிரினத்தொகுதியைச் சேர்ந்தது. பவழப்பாறைகளை உண்டாக்கும் பவளங்களும், கடற்சாட்டைகளும் (Sea whip), கடற்சாமந்திகளும் இவ்வகையைச் சேர்ந்தவையே. இவ்வுயிர்கள் நிடேரியத் தொகுதியில் காணப்படும் எளிமையான முதுகெலும்பிலிகளாகவும், அதே நேரத்தில், நகருந்தன்மையில் இதே தொகுதியைச் சேர்ந்த பிற உயிரினங்களிலிருந்து மாறுபட்டும் காணப்படுகின்றன.

வரலாறு

தொகு

சொறி மீன்கள் பல காலங்களில் அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு வந்தாலும், இது பெரிதும் அறிவியல் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது அக்டோபர் 2007 ஆம் ஆண்டே. அப்போது கண்டுபிடிக்கப்பட்ட சொறி மீனின் புதைபடிமங்கள் அதன் வரலாற்றை உலகிற்கு உணர்த்தியது. அவை 205 மில்லியன் ஆண்டுகளுக்குப் பழைமையானவை என்பது அறிவியல் உலகில் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் இன்றும் பல அரிய புதிய சொறி மீன் வகைகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

2004 ஆம் ஆண்டு அறிஞர்கள் மூன்று புதிய வகை இருகாண்ட்சி குடும்ப சொறி மீன்களைக் கண்டறிந்தனர். இது இவர்களுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியது. இது மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டது; கண்டுபிடிக்கப்பட்டவைகளுள் இது தான் மிகக்கொடிய நச்சுடையதாக இருந்தது. அதாவ்து நீரில் இருக்கும் போதும், நீரில் இல்லாத போதும் இது நச்சுத்தன்மையைக் கொண்டிருந்தது. அதே ஆண்டில் இவ்வினத்தினைப் பெருக்க ஒரு இனவுற்பத்தித் திட்டமும் நடைமுறைப் படுத்தப்பட்டது.

1952 ஆம் ஆண்டு இருகாண்ட்சி நோய் என்பது சொறி மீன் கொத்துதலில் வரும் நோய் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த யூகோ பிலிக்கர் என்பவர் விளக்கினார். மேலும் தாக்கப்பட்ட நபருக்கு ஒரு மணி நேரத்திற்குள்ளாக வாந்தி, பின் முதுகில் மிகுந்த வலியும் மார்பு வலியும் ஏற்படும் எனவும் விவரித்தார். 1964 ஆம் ஆண்டு சாக் பார்னசு என்னும் அறிஞர் சிறிய வகை சொறி மீன் தாக்கினால் நோயும் மரணமும் நேரும் என்பதை நிரூபித்தார். இதை அவர் தன் மேலும் தன் மகன்மீதும் சோதித்து ஒரு மருத்துவரின் துணையுடன் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார்.

சில சொறி மீன்களின் மின்னும் தன்மையைக் கடந்த சில ஆண்டுகளாக அறிஞர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒரு காலத்தில் இதன் தாக்கத்திற்கு மருந்துக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் அளவுக்கு வளருமென நம்பப்ப்படுகின்றது.

உடற்கட்டமைப்பு

தொகு
 
சொறி மீன்

இதன் உடற்தோற்றம் மைய அச்சிலிருந்து வட்டமாக வரையப்பட்டதைப் போன்று சிறப்பான ஆரச் சமச்சீர்மையான நிலையில் உள்ளது. இதன் சமச்சீர்மையான தோற்றம் உடலின் எந்தப் பகுதியிலிருந்து இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருக்க உதவுகின்றது. இதன் உடல் குடை வடிவமானது. கைப்பிடி போன்று கீழ் நோக்கிச் செல்லும் வாய்த்தண்டு ஒன்று இதற்கு உள்ளது. இதன் ஒரு துளையின் முனையில் வாயும், பின்முனையில் கழிவு நீக்க உறுப்பும் இடம் பெற்றுள்ளன. இதன் வாய் சதுர வடிவமானது. வாயின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒரு கை வீதம் நான்கு முதல் எட்டு கைகள் இதற்கு உள்ளன. இவற்றை வாய்க்கரங்கள் அல்லது வாய்நீட்சிகள் என்பர். இவை உணவை வாயினருகில் கொண்டுவருவதற்கு உணர்கொம்புகளுடன் (Tentacles) இணைந்து உதவுகின்றன.
குடை போன்ற பகுதியின் ஓரம் எட்டு மடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மடல்களுக்கு இடைப்பட்ட பள்ளத்தில் உணர்கொம்புகள் நிறைந்துள்ளன. குடைப்பகுதியின் விளிம்பில் ஏராளமான குழல் போன்ற கொட்டு நூல்கள் அமைந்துள்ளன. இதன் உடலில் நரம்பு மண்டலம் மட்டும் இருக்கின்றது. அது ஒளி, மணம், அழுத்தம் மற்றும் புறத்தூண்டல்களை உணரும் உணர்வேற்பிகளைக் (nerve receptors) கொண்டுள்ளது. அதற்கு மூளை போன்று தனியமைப்புக் காணப்படுவதில்லை. இதன் உடலின் வெளிப்பகுதியாகப் புறத்தோல் (epidermis), உட்பகுதியாகக் குடற்தோல் (gastrodermis) என்னும் பகுதி குடற்பகுதிகளைப் போர்த்தியது போலவும் காணப்படுகின்றன. புறத்தோலுக்கும் குடற்தோலுக்கும் இடைப்பட்ட பகுதியாக அடர்ந்த, இழுவை வழவழப்புத்தன்மையுள்ள இடைப்பசை (mesoglea) பகுதி காணப்படுகிறது. சொறி மீன்கள் பல வடிவங்களிலும், அளவிலும் வண்ணங்களிலும் காணப்படுகின்றன. இவைகளில் சில ஒரு அங்குலத்திற்குக் குறைவாகவும், சில ஏழடிக்கு மிகுந்த விட்டத்தையுடையதாகவும் இருக்கின்றன. அவற்றில் அதன் உணர்கொம்புகள் 100 அடிக்கு மிகுந்தும் காணப்படுகின்றன.

இடப்பெயர்ச்சி

தொகு
கடல்வாழ்வில் சொறி மீனின் நகர்வு, முனீச், செர்மனி

சொறி மீன்கள் செங்குத்து நகர்வு, பக்கவாட்டு நகர்வு, மற்றும் மேல் நோக்கிய நகர்வு ஆகியவை மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன. எவ்வளவுப் பெரிய உடலமைப்பைக் கொண்டிருந்தாலும், அதன் செங்குத்து நகர்த்தல் மூலம் தனது உடலைக் கட்டுப்படுத்துகிறது. இவற்றில் பெரும்பாலானவை அலைகளின் அசைவுகளோடு இழுத்துச் செல்லப்படும் அலைவிலங்குகளே யாகும். அதன் பக்கவாட்டு நகர்வு முற்றிலும் காற்றையும் நீரோட்டத்தையும் பொறுத்தே அமைந்துள்ளன. அதன் குடை போன்ற அமைப்பு சுருங்கி புறத்தை நோக்கி உந்தி தள்ளுவதால் இவைமேல் நோக்கி உந்தப்பட்டு மேலே செல்லுகின்றன.

உணவு முறை

தொகு

இதன் உணவு மண்டலம் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டு தொண்டைப்பகுதி, இரைப்பை குடற்பகுதிகளைக் கொண்டிருக்கும். இதன் மொத்த உடற்பகுதியில் 5% மட்டுமே திடப்பொருளாகும். மீதியனைத்தும் திரவப்பொருளான நீரால் உருவாக்கப்பட்டவையாகும். சொறி மீன்கள் அதன் உணர்கொம்புகளைக் கொண்டு குத்தும் ஆற்றல் பெற்றவை. இது நீரில் மிதந்து கொண்டிருப்பது பெரும்பாலும் கண்களுக்குப் புலப்படாது. அமைதியாக மிதந்து செல்லும் இதன் அருகே சிறு மீன் போன்ற உயிரினம் ஏதாவது வந்து உணர் கொம்புகளில் பட்டுவிட்டால் உடனே உணர் நீட்சியாக உள்ள கொட்டு நூல்களை வெளியே வீசி இரையை மடக்கிக் காயப்படுத்திச் சிக்க வைத்து விடுகிறது. இவ்வுணர் கொம்பில் உள்ள நச்சுகள் இரையை செயலிழக்கச் செய்து அவை தப்பிப்பதிலிருந்து தடுக்கிறது. பின்னர் இரையானது செரிமானக் குழாயில் செலுத்தப்பட்டு செரிக்கப்படுகிறது. இவ்வுணர் கொம்புகளை சொறிமீன்கள் வேட்டையாடுவதற்குப் பயன்படுத்துகின்றன. சிற்சில நேரங்களில் அவை தன்னைப் பாதுக்காக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றன.தன்னை விழுங்க வரும் எதிரியைக் கண்டால் குடையின் கீழுள்ள நீரை இவை விசையுடன் பீச்சும். அவ்வாறு பீச்சுவதன் மூலம் எதிர்த் திசையில் உந்தி உந்தி வேகமாக நீந்திச் செல்லும்.

பெயர்க்காரணம்

தொகு
 
பூந்தொப்பி சொறிமீன்

இவைகள் அழகானவையாக இருந்தாலும் இன்னல்களைக் கூட்டவல்லவையாக உள்ளன. இவ்வுணர்கொம்புகளின் உறையமைப்பினுள் வலிகளை உண்டுசெய்யக்கூடிய நஞ்சு நிரப்பப்பட்டுள்ளது. உணர் கொம்புகளுடன் வெளிப்பொருட்கள் தொடர்பில்வரும்போது, அந்நச்சுகள் பாய்ச்சப்படுகின்றன. மனிதனைப் பொறுத்தவரையில் இந்நச்சுகள் சிறு இடையூறுகளை உண்டாக்குகின்றன. இவைகள் மனித உடலில் சிரங்கு, சொறி, அழற்சியை உண்டாக்குவதால்தான், இவைகளுக்கு 'சொறிமீன்' என்ற பெயர் உருவாகியது. அவை உடலில் பலவித எதிர்ப்பாற்றலை ஏற்படுத்திச் சொறியை உண்டு செய்வதால் பெயரின் முற்பகுதி தோன்றியது. இதன் சமச்சீரான உடற்தோற்றமும், அதன் அழகான முட்டைவடிவத் தலையமைப்பும், இதற்குச் சொறிமுட்டை அல்லது முட்டைசொறி என்ற பெயர் உருவாகக் காரணமானது.[1] இதனை 'ஜெல்லிமீன்' என்றும் 'மெடுசா' (Medusa) என்றும் அழைக்கின்றனர். மெடுசா என்பது இவ்வகையான உயிரினங்களில் பாலினத் தோற்றவமைப்பைக் குறிக்கும் பெயராகும். (நிடாரியா (Cnidaria) தொகுதியைச் சேர்ந்த உயிரினங்களின் பல்லுருத்தோற்றத்தின் ஒரு தோற்றவமைப்பே இந்த மெடுசா ஆகும்.)

பண்புகள்

தொகு
 

சொறிமீன் ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இவற்றுள் சில கடலின் மேற்புறத்திலும் சில கடலின் அடிப்பகுதியிலும் வாழக்கூடியது. இவற்றின் உருவம் மிகச் சிறிய அளவிலிருந்து, பெரிய அளவு வரை வேறுபடுகின்றது. சிறிய நகக் கணுவளவானவையும், ஒரு குளிர்ச்சாதனப்பெட்டி அளவானவையாகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இதன் உடல் பெரும்பாலும் ஒளி ஊடுருவும் தன்மையுள்ளதாகவும், சில அடர் வண்ணங்களிலும் இருக்கின்றன. இவற்றுள் சில செவ்வூதா, மஞ்சள் மற்றும் காவி நிறங்களிலும் காணப்படுகின்றன. இதன் உடலில் அதிகப்படியான நீர்த் தன்மையும், வழவழப்புத் தன்மையும் கூடியுள்ளதால் அறிஞர்கள் இதை வழும்பலைவிலங்குகள் பிரிவில் பகுத்துள்ளனர்.

இவை முதுகெலும்பு, முதுகெலும்பிகள் போன்ற சுவாசமண்டலங்கள் பொறிமுறை அற்று இருக்கின்றன. இது தன் உடலை உயிர்வளியால் நிரப்ப நீரில் விரவிக்கிடக்கும் வளியை பரவல் (diffusion) என்னும் முறையால் உள்வாங்கிக்கொள்கின்றன. இவை நன்றாக நீந்தும் தன்மையற்றவையாக உள்ளன. இவை தமது நகர்விற்கு நீரோட்டத்தையும், காற்றையும் சார்ந்து இருக்கின்றன. ஒரு இடத்தில் பல இழுதுமீன்கள் கூட்டமாகக் காணப்பட்டால் அதை திரளென விவரிக்கிறோம். இக்கும்பலில் 100 இலிருந்து 1000 வரையும் இழுதுமீன்கள் காணப்படும். அதிலும் பெட்டி இழுதுமீனின் கும்பலாக இருந்தால் மிகவும் தீங்கானவையாக, உயிர்ச்சேதம் விளைவிக்கூடியவையாக இருக்கும்.

இனப்பெருக்க முறை

தொகு
 
சொறிமீனின் குடை வாழ்வு சுழற்சி
1-8: பிளானுக்குடம்பி மற்றும் வளர்சிதைமாற்றம் நடந்து பாலிப்பாக உருமாறல்.
9-11: ஒடுங்கி (துண்டாகி இனப்பெருக்கம்) எப்பிக்குடம்பியாக மாறல்.
21- 14: எப்பிரென் என்னும் பருவத்திலிருந்து முதிர்ந்த/நன்கு வளர்ச்சியடைந்த சொறிமுட்டை

சொறிமுட்டை இனத்தைச் சேர்ந்த ஆண், பெண் இரண்டும் முறையே விந்துவையும், முட்டையையும் உற்பத்திச் செய்து நீரில் வெளியிடும். இவை எந்தவிதப் பாதுகாப்பின்றியும் நீரிலிருந்து, பின்னர் பருவச்சூழ்நிலை ஏற்படும் காலங்களில், கருக்கட்டலுக்கு உட்பட்டு, குஞ்சுகள் தோன்றி வளர்ந்து ஒரு புது உயிராக வடிவம்பெறும். இதன் வாழ்நாள் சில மணிநேரங்களில் தொடங்கி, சராசரியாக ஆறுமாதக் காலம்வரை நீளும். இதில் ஒரு சிற்றினம் இவற்றுள் மாறுபட்டு மரணத்தை ஒதுக்கி மீண்டும் தன் ஆயுளைத் தொடங்கும் தன்மையுள்ளதாக நம்பப்படுகிறது.

நச்சுத்தன்மை

தொகு

சொறிமீன்களின் உடலில் காணப்படும் தூரிகை போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமீன்களைத் தூண்டி அதற்கு வினையாக அவை கொத்துகின்றன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்கம் சில ஊறுகளையும், சில வலியையும் உண்டு செய்கின்றன. அதிலும் கடற்சாட்டை (Sea whip) வகையான சொறிமீன் மனிதர்களுக்கு மூச்சடைப்பை ஏற்படுத்துவதுடன், இதயத்தையும் செயலிழக்கச் செய்து, மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளன. இக்கொம்புகளின் வீரியம் மிதவெப்பமண்டல கடற்பகுதிகளில் உள்ள சொறிமுட்டைகளில் மிகக்கூடுதலாகவும், ஆளைக் கொல்லும் அளவுக்கு வலிமையுள்ளதாகவும் இருக்கிறது.[2] இந்த நஞ்சு மனிதனை முப்பது நொடிகளுக்குள் கொல்லக்கூடியது. இதனால் ஆஸ்திரேலியா நாட்டுக் கடற்படையினர் கடலில் செல்லும்போது சொறிமீன் ஊடுருவ முடியாத சிறப்புவகை நெகிழி உடைகளை அணிந்து கொள்கின்றனர்.

வாழ்வியல்

தொகு

சொறிமீன்கள் உலகம் முழுவதும் உள்ள கடற்பகுதிகளில் மேல்பகுதியிலிருந்து அடி ஆழம் வரைக் காணப்படுகின்றன. சமீப காலங்களில் இதன் எண்ணிக்கை கூடி வருவதாக ஆசுதிரேலிய அறிஞரான அந்தோனி ரிச்சார்ட்சன் தெரிவித்துள்ளார். இதற்குக் காரணம், நாம் மிகக் கூடிய அளவில் மீன் பிடிப்பதும், கடற்பரப்பில் நாம் புறந்தள்ளும் சாக்கடைக்கழிவு மற்றும் உரக்கழிவில் இருந்து பெறப்படும் ஊட்டமும்தானென அவர் விவரிக்கிறார்.

 
பசிபிக்கடலில் கூட்டமாகக் காணப்படும் சொறிமீன் வகை - கிரைசவோரா பச்செசன்சு ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

சாதாரணமாக சொறிமீனின் எண்ணிக்கை பருவத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது. அத்துடன் அவைகளுக்கு கிடைக்கும் உணவைப் பொறுத்தும் வேறுபடுவதுண்டு. அவற்றிற்கான உணவு கிடைப்பது அரிதாகவும், காலச்சூழ்நிலையைச் சார்ந்தும் உள்ளன. வெப்பநிலை மற்றும் கடலளவு கூடும் காலங்களில் குறிப்பாக வசந்தகாலம் மற்றும் கோடை காலங்களில் பாசி மற்றும் இதர உயிரினங்களின் இனப்பெருக்கம் கூடுவதால் இவைகளின் எண்ணிக்கையும் கூடும்.

இடத்தைப் பொறுத்தும் இவ்வகை சொறிமீன்களின் எண்ணிக்கை மாறுபடும். யப்பானில், இரண்டு மீ. நீளமும், அதே அளவுக்கு விட்டமுடையதாகவும், 200 கி.கி.எடைகொண்டதாக உள்ள 'நொமுரா சொறி மீன்' என்கிற இனம், எண்ணிக்கையில் கூடி தொழிற்சார்ந்த மீனவர்களுக்குப் பெரும் குழப்பத்தையும் இன்னலையும் விளைவிக்கின்றன. இதன் திரட்சி உலகின் பல பகுதிகளான கருங்கடல், காஸ்பியன் கடல் பகுதிகளில் பெரும் ஏற்றத்தைக் கண்டுவருகின்றன. மேற்குப் பகுதியில் உள்ள கடல் நீர்நிலைகளிலும், மெடிட்டேரினியன் கடல் பகுதிகளிலும் இவ்வுயிரினம் கடும் ஏற்றத்தைப் பெற்று வருகின்றன. இவ்வாறு சமீபக்காலங்களில் மிகக்கூடுதலாகத் திரள் உண்டாகிவருவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக மீன் பிடித்தல் தொழிலிலும், அதன் விற்பனையுலகிலும் பல மாறுதல்களைச் சந்திக்க நேரிடும். சொறிமீன்களின் எண்ணிக்கைக் கூடக்கூட அது சமச்சீர் சூழ்நிலை உருவாவதைத் தடுக்கிறது.

  • வேறு கடல் வாழ் உயிரிகளுக்கு உணவு கிடைக்காமல் எல்லாவற்றையும் இவையே உண்ணும் நிலை ஏற்படும்.
  • கடற்கரைப் பகுதிகளில் குளிக்கச் செல்பவர்கள், கண்டிப்பாக அதன் தாக்குதலுக்கு உட்பட நேரிடும்.
  • சுற்றுலாத்துறையும் கடும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது.

இவைகளின் எண்ணிக்கை கூடுதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற கடலுயிரினங்களுக்கும் ஊறுதான். முதன்மையாக இதனால் தாக்கப்பட்டு உயிர்ச்சேதம் நேர வாய்ப்புள்ளது. சில உயிரினங்கள் முற்றிலும் அழியும் நிலை ஏற்படலாம். சமீபத்தில் நமீபியா கடற்பகுதியில் நடந்த ஒன்று சிறந்த எடுத்துக்காட்டாகும். இதில் மிகுதியான மீன்பிடிப்பு மத்தியின வகை மீனை அக்கடற்கரைப் பகுதியிலிருந்தே குறைத்துவிட்டது. கூடுதல் உணவு கிடைக்கவே, சொறிமீன்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி அவை ஆக்கிரமிப்புச் செய்து மத்தியின மீன்களை முற்றிலும் அழித்துவிட்டன.

கடற்காஞ்சொறி

தொகு

சில பெரிய சொறிமீன்கள் விட்ட அளவில் ஒரு மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். இவற்றின் கொட்டணுக்கள் மனிதனுக்குக் கூடக் காஞ்சொறியைத் தீண்டினால் ஏற்படுவது போன்ற வலியை உண்டாக்கும் எனவே இதை முன்னர் கடற் காஞ்சொறிகள் என்று அழைத்தனர். இவற்றின் கொட்டு மனிதனுக்கு ஆபத்தானதும் கூட.

படத்தொகுப்பு

தொகு

ஓவியத் தொகுப்பு

தொகு

உசாத்துணை

தொகு

ஆனைவாரி ஆனந்தன், 'பல்துறை அறிவியல்' மணியம் பதிப்பகம். 1989

மேற்கோள்

தொகு
  1. Chidambaram L, 1984, Export oriented processing of Indian Jelly fish (Muttai Chori, Tamil) by Indonesian method at Pondicherry region, Mar. Fish. Infor. Serv. T & E Ser., 60: 1984 http://eprints.cmfri.org.in/3057/1/MFIS_60-2.pdf
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 2011-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொறி_மீன்&oldid=3978683" இலிருந்து மீள்விக்கப்பட்டது