குமரி விடுதலைப் போராட்டம்

குமரி விடுதலைப் போராட்டம் அல்லது தெற்கு எல்லைப் போராட்டம் என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கும் . இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. இப் போராட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்தி வெற்றி பெற்றதனால் குமரி மக்கள், நேசமணியை குமரித் தந்தை என்று அழைக்கின்றனர்.

வரலாறு

தொகு

இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது மன்னர் சமத்தானமான திருவிதாங்கூர் இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துடன் குமரிப் பகுதி இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரில் தென் தாலுக்காகளான நெய்யாற்றின்கரை, விளவக்கோடு, கல்குளம், அகத்தீசுவரம், மற்றும் தோவாளை ஆகியவற்றில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் இத் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களான சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், பெருஞ்சாணி அணைத் திட்டம், நெய்யாறு இடதுகரை கால்வாய்த் திட்டம், குழித்துறை நீரூற்றுத் திட்டங்களை மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மார்சல் ஏ. நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழர்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள்[சான்று தேவை] பல உயிர் தியாகங்களும், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இனைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதிக் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது.

போராட்டத்திற்கான காரணங்கள்

தொகு

தமிழர்கள் பெரும்பாலாக வாழ்ந்த திருவிதாங்கூர் சமத்தானத்தின் தெற்குப் பகுதிகளான கல்குளம், விளவங்கோடு, தோவாளை, மற்றும் அகஸ்தீசுவரம் ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க மூன்று காரணங்களைக் கூறப்படுகிறது.

முதல் காரணம்

தொகு

இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கினைந்த வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது. இதன் படி முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950 முதல் 1955 வரை செயல்படுத்தப் பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தீட்டப் பட்டது. அவை பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை நீரேற்றுப்பாசனம் (Lift irrigation) திட்டம், ஆகியன ஆகும். இம் முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல் படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்தனர். ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த திட்டங்களையும் செயல்படுத்த முன்வரவில்லை. மக்கள் தலைவர்கள் பலமுறை வேண்டிக் கேட்டுக் கொண்டும், இப் பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேண்டுமென்றே வட திருவிதாங்கூர் வளர்ச்சிக்கென திருப்பிவிட்டது. இதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் முற்றிலும் புறக்கணித்தது பட்டம் தாணு பிள்ளையின் அரசு. இத்தகைய தென் பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, தாய் தமிழகத்துடன் இணைவதற்கான கோரிக்கை வலுவடைய முக்கிய காரணியாக அமைந்தது.

இரண்டாம் காரணம்

தொகு

திருவிதாக்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் சாதிக் கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.

மூன்றாம் காரணம்

தொகு

தமிழ் மக்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணு பிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். மங்காட்டில் தேவசகாயம் நாடாரையும், கீழ்குளத்தில் செல்லையன் நாடாரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையில் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழக மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறுபேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் ஐந்துபேர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுக்காக்களில் நாடார் மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

காமராசர் உரை

தொகு

இப் போராட்டங்களின் தொடர்ச்சியாக 01-11-1956 அன்று கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி, தமிழகத்துடனே இணைந்தது. இணைப்பு நாளன்று தமிழக முதலமைச்சர் காமராசர், நாகர்கோவில் எசு. எல். பி கல்வி நிலைய வளாகத்தில் நடந்த ஏற்பு விழாவில் கீழ்கண்டவாறு ஏற்புரையாற்றினார் {{cquote|நீங்கள் கேரளத்தில் இருந்து வந்துள்ளீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும்.பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு இருந்து கொள்ளுங்கள் என்றார்.

பலன்கள்

தொகு

மக்களின் விழிப்புணர்வை மதித்த தமிழக அரசு, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-1961) நீர் பாசனத்திற்காக பெருஞ்சாணி அணை திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், விளத்துறை லிப்டு இரிகேசன் திட்டம் ஆகியவற்றிற்கு செயலாக்கம் தந்தது. குமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டமும், சித்த மருத்துவக் ஆய்வு மையம் தொடங்குவதற்கும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டம் தீட்டப் பட்டது. சுற்றுலாத்துறையைப் பொறுத்தமட்டில் நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் பயணிகள் விடுதிகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப் பட்டு திட்ட காலக் கெடுவில் முடிக்கப் பட்டது.

மேற்கோள்கள்

தொகு


வெளியிணைப்புகள்

தொகு
  1. http://www.indianetzone.com/47/history_kanyakumari_district.htm
  2. http://www.scribd.com/doc/113708/thesis-on-PONNAPPA-NADAR#fullscreen:on
  3. http://www.museumstuff.com/learn/topics/History_of_Kanyakumari_district::sub::Oppressed_Community_Since_1956
  4. http://www.nanjilonline.com/cityinfo/history.asp பரணிடப்பட்டது 2011-09-24 at the வந்தவழி இயந்திரம்
  5. http://www.nagercoil.co.in/history.php
  6. http://colleges.papyrusclubs.com/hc/achievers/about-her-thesis