சார்லஸ் (தமிழ்ப் போராளி)
சார்லஸ் என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் சண்முகநாதன் ரவிசங்கர் ( இறப்பு: 5 சனவரி 2008 ) என்பவர் இலங்கையின், தமிழ்ப் போராளி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவின் முன்னணி உறுப்பினர் ஆவார்.
Colonel Charles | |
---|---|
கேணல் சாள்ஸ் | |
தாய்மொழியில் பெயர் | கேணல் சாள்ஸ் |
பிறப்பு | எஸ். இரவிசங்கர் |
இறப்பு | மன்னார் மாவட்டம் | 5 சனவரி 2008
தேசியம் | இலங்கையர் |
மற்ற பெயர்கள் | அருள்வேந்தன் |
செயற்பாட்டுக் காலம் | 1985–2008 |
அமைப்பு(கள்) | தமிழீழ விடுதலைப் புலிகள் |
ரவிசங்கர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு திசம்பரில் இவர் பள்ளியில் படிக்கும் போதே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார், மேலும் சார்லஸ் என்ற இயக்கப் பெயரைப் பெயரைப் பெற்றார்.[1][2][3] பள்ளி முடிந்ததும் பருத்தித்துறை ராணுவ முகாமுக்கு அருகில் கண்காணித்து இருப்பதுதான் அவரது முதல் பணியாக இருந்தது.[2] இவர் 1987 இல் தனது கல்வியை கைவிட்டார்.[2] பின்னர் இவர் புலிகள் நடத்தும் ஒரு கடையில் பணிபுரிந்தார்.[2] சார்லசின் முதல் ஆயுதப் போர் 1987 மே மாதம் வடமராட்சி நடவடிக்கை (ஒப்பரேஷன் லிபரேஷன்) இதில் இலங்கை ஆயுதப் படைகள் வடமராட்சியின் பெரும் பகுதியை மீளக் கைப்பற்றின.[2] 1987 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள் நெல்லியடி மத்திய கல்லூரி இராணுவ முகாம் மீதான புலிகளின் பதிலடித் தாக்குதலில் இவர் கலந்து கொண்டார்.[2]
பின்னர் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்கும் விதமாக பருத்தித்துறை புலிகளின் தளபதியான கப்டன் மோரிசின் கீழ் சார்லஸ் பணியாற்றினார். சார்லஸ் பின்னர் யாழ்ப்பாணக் குடாநாடு திரும்புவதற்கு முன் மணலாற்றில் பணியாற்றினார்.[4] 1990இல் இந்திய அமைதிப் படை இந்தியாவுக்குத் திரும்பியபோது வடமராட்சிக்கான விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்தார்.[4]
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மானுக்கு அவரது மெய்க்காவலர் கிளி மூலம் சார்லஸ் அறிமுகமானார்.[2] பொட்டு அம்மான் தென்னிலங்கையில் தாக்குதல்களுக்கு ஒரு தளத்தை தயார் செய்ய சார்லசைத் தேர்ந்தெடுத்தார்.[4] 1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சார்லசும் சில உளவாளிகளும் கொழும்புக்கு அனுப்பப்பட்டனர்.[2] 1990ஆம் ஆண்டு சூன் மாதம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் மீண்டும் போர் வெடித்ததையடுத்து இவர் வட இலங்கைக்குத் திரும்பினார்.[2] யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது மனைவி மதிவதனியும் பூசையில் ஈடுபடும்போது, வே. பிரபாகரனைக் கொலை செய்ய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவும் கூட்டு நடவடிக்கைக் கட்டளைப் பிரிவினரும் திட்டமிட்டுள்ளதாக புலிகளுக்கு அப்போது புலனாய்வுத் தகவல் கிடைத்தது.[2][5] படுகொலை சதித்திட்டத்திற்கு புலிகளின் பதிலடியை தருவதற்காக சார்லஸ் 1991 சனவரியில் கொழும்புக்கு மீண்டும் அனுப்பப்பட்டார்.[2] 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் நாள் விஜேரத்ன படுகொலை செய்யப்பட்டார். மேலும் 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் நாள் கூட்டு நடவடிக்கைக் கட்டளைக் கட்டடம் தகர்க்கப்பட்டது. இந்த இரண்டு தாக்குதல்களிலும் சார்லஸ் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.[2][6] மேலும் இவர் கிளான்சி பெர்னாண்டோ (16 நவம்பர் 1992); லலித் அத்துலத்முதலி (23 ஏப்ரல் 1993); சனாதிபதி ரணசிங்க பிரேமதாசா (1 மே 1993); காமினி திசாநாயக்கா, ஒசி அபேகுணசேகரா, வீரசிங்க மல்லிமாரச்சி, ஜி. எம். பிரேமச்சந்திரா, காமினி விஜேசேகர (24 அக்டோபர் 1994) ஆகியோரின் படுகொலைகளில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.[2] கொலொன்னாவ எரிபொருள் சேமிப்பு வளாகம் (20 ஒக்டோபர் 1995), களனிதிஸ்ஸ மின் நிலையம் (14 நவம்பர் 1997) மீதான தாக்குதல்களிலும் அவர் பங்கேற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.[2][3] 1996 ஆம் ஆண்டு சனவரி 31 ஆம் நாள் மத்திய வங்கி குண்டுவெடிப்புக்கு மூளையாக சார்லஸ் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.[2][3][6] மத்திய வங்கி தாக்குதலில் சிறப்பாக செயல்பட்டதற்கு சார்லசுக்கு பிரபாகரன் மிட்சுபிஷி பஜேரோ மகிழுந்தை பரிசாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.[3][6] இதன் பிறகு, சார்லஸ் கொடிய கள முகவர் (TOSIS' deadliest field agent) என்ற ஒரு அச்சமூட்டும் பெயரைப் பெற்றார்.[7]
இவர் கொழும்பில் இருப்பதை இலங்கை அதிகாரிகள் அறிந்ததையடுத்து, சார்லஸ் கிழக்கிற்கு சென்றார், 1997 மற்றும் 2000 இக்கு இடையில் மட்டக்களப்பு-அம்பாறையில் புலிகளின் உளவுத்துறைத் தலைவராக பணியாற்றினார்.[1][2][3] இந்த நேரத்தில் இவர் நீலன் திருச்செல்வம் (29 சூலை 1999); லக்கி அல்காமா (8 டிசம்பர் 1999); சி. வி. குணரத்ன (7 ஜூன் 2000) ஆகியோரின் படுகொலைகளுக்கான சூத்திரதாரியாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது.[2] 1999 ஆம் ஆண்டு திசம்பர் 18 ஆம் நாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீதான வெற்றிபெறாத கொலை முயற்சியின் பின்னணியில் இவர் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.[2] 24 சூலை 2001 அன்று பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் மீதான வெற்றிகரமான அதிரடித் தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். இது விமானப்படைக்கும் வீனூர்தி நிலையத்திற்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
2002 போர்நிறுத்தத்தின் பின்னர் சார்லஸ் கொழும்பு பிராந்தியத்தில் குறிப்பாக காவல் துறை மற்றும் ஆயுதப்படைகளில் உள்ள சிங்கள உறுப்பினர்களிடையே புலிகளின் புலனாய்வு வலையமைப்பை விரிவுபடுத்தத் தொடங்கினார்.[2] இராணுவத்துக்கு ஆதரவாக செயல்படும் தமிழ் ஒட்டுக் குழுக்களின் உறுப்பினர்களையும், இலங்கை அதிகாரிகளுக்காக உளவு பார்க்கும் தமிழர்களையும் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டார்.[2] 2004 ஆம் ஆண்டில் இல் இவர் விடுதலைப் புலிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1][2][3] திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் (16 அக்டோபர் 2006) மற்றும் காலி துறைமுகத்தின் மீதான தாக்குதல் (18 அக்டோபர் 2006) ஆகியவற்றின் பின்னணியில் இவர் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.[2] 22 அக்டோபர் 2007 அன்று அனுராதபுரம் விமான தளம் தாக்கப்படுவதற்கு முன்னர் அது பற்றிய உளவுத் தகவல்களை சேகரிப்பதில் இவர் பங்கேற்றினார்.[2] பின்னர் இவர் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். மேலும் மன்னார் மாவட்டத்தின் சிறப்புப் போர்ப் பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[2]
2008 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மன்னார் மாவட்டம், விடத்தல்தீவில் கடல் புலிகளின் தளத்தை வலுப்படுத்துவதற்கு கடற் புலிகளின் தலைவர் சூசைக்கு சார்லஸ் உதவியாக இருந்தார். மன்னார் மாவட்டத்தில் இலுப்பைக்கடவைக்கும் பள்ளமடுவிற்கும் இடையில் மூடுந்தில் பயணித்த லெப்டினன்ட் கேணல் சார்ள்ஸ் மற்றும் மூன்று புலி உறுப்பினர்கள் 2008 ஆம் ஆண்டு சனவரி 5 ஆம் நாள் இராணுவத்தின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியினால் வைக்கப்பட்ட கிளைமோர் கண்ணி வெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவரது வயது குறித்து முரண்பட்ட தகவல்கள் வந்தன - இலங்கை இராணுவம் இவருக்கு 35 வயது என்று கூறியது, மற்றவர்கள் இவருக்கு 43 வயது என்று தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டம் கனகபுரத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "LTTE's Head of Military Intelligence killed in Claymore ambush". தமிழ்நெட். 6 January 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24197.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 "Mastermind behind LTTE attacks outside NE killed". The Nation (Sri Lanka). 13 January 2008. http://www.nation.lk/2008/01/13/newsfe1.htm.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "spy-wing leader Charles given a heroes cremation by Tamil Tigers". ஏசியன் டிரிபியூன். 7 January 2008. http://www.asiantribune.com/node/9019.
- ↑ 4.0 4.1 4.2 .
- ↑ "Three days to day of reckoning". த சண்டே லீடர். 13 January 2008. http://www.thesundayleader.lk/archive/20080113/parliament.htm.
- ↑ 6.0 6.1 6.2 "Charles: LTTE's prince of faceless terror". The Sunday Times (Sri Lanka). 13 January 2008. http://www.sundaytimes.lk/080113/Columns/sitreport.html.
- ↑ https://www.dailymirror.lk/print/dbs-jeyaraj-column/Army%E2%80%99s-LRRP-Ambush--of-LTTE%E2%80%99s-Military-Intelligence-Chief/192-203447