சீக்கிய மேற்கோள் நூலகம்

சீக்கிய மேற்கோள் நூலகம் (Sikh Reference Library) இந்தியப் பஞ்சாபில் அமிர்தசரிசில் அர்மிந்தர் சாகிப் பொற்கோயிலில் நிலவிய 1500 அரிய கையெழுத்துப் படிகளைக் கொண்டவையே சீக்கிய மேற்கோள் நுலகமாகும். இது நீல விண்மீன் நடவடிக்கையில் அழிக்கப்பட்டது.[1]

சீக்கிய மேற்கோள் நூலகம் எரிக்கப்படும் முன் வரலாற்று நூல்கள், கையெழுத்துப் படிகள், கலைப்பொருட்கள் பற்றிய இந்திய அரசுதரப்பின் நிகழ்ச்சிக் குறிப்புகள் விவாதத்துக்குரியன.

1984 ஆம் ஆண்டு நூலகத்திலிருந்த ஆவணங்கள் எல்லாம் நடுவண் புலனாய்வுச் செயலகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பின் திட்டமிட்டபடியே காலியாக இருந்த நூலகக் கட்டிடம் முழுவதும் இந்திய இராணுவத்தால் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அண்மைக்காலத்தில் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு (SGPC) பறிமுதல் செய்யப்பட்டவைகளை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொண்டும் பெரியவளவிலான ஆவணங்கள் இன்னமும் மீட்டெடுக்கப்படவில்லை. நூலக கையெழுத்துப் பிரதிகள், கலைப்பொருட்களின் நிலைபற்றியத் தகவலேதும் கிட்டவில்லை. பெரும்பான்மையானவை இந்திய நடுவண் அரசிடம் உள்ளன; ஒருசில கோப்புகளும் கடவுச்சீட்டுகளும் மட்டுமே திருப்பியளிக்கப்பட்டன; கிட்டத்தட்ட 117 ஆவணங்கள் அரசுக்கு எதிரானவை என்று அழிக்கப்பட்டன.[1]

துவக்கம்

தொகு

இந்நூலகம் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவால் அக்டோபர் 27, 1946 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் நிறுவப்பட்டது.[1] மத்திய சீக்கிய நூலகத்தை நடத்திவந்த அமிர்தசரசு நகரின் கலாசாரக் கல்லூரியில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாளன்று நடந்த சீக்கிய வரலாற்று கழகக் கூட்டத்தில்தான் சீக்கிய மேற்கோள் நூலகம் துவக்கும் கருத்து பேசப்பட்டு[1], மத்திய சீக்கிய நூலகம் சீக்கிய மேற்கோள் நூலகமாக உருவெடுத்தது.

வரலாற்றுப் பொருட்கள்

தொகு

அழிக்கப்படுவதற்கு முன்பு சீக்கிய மதம், வரலாறு, பண்பாடு பற்றிய அரிய நூல்களும் கையெழுத்துப்பிரதிகளும், குரு கிரந்த் சாகிப்பின் கையெழுத்துப்பிரதிகளும் பல சீக்கியக் குருக்கள் கையெழுத்திட்ட ஆவணங்களும் இந்நூலகத்திலிருந்தன.[1][2] மேலும் இந்திய விடுதலை இயக்கம் தொடர்பான ஆவணங்களும் இருந்தன.

அழிவு

தொகு

இந்திய இராணுவத்தின் புளூஸ்டார் நடவடிக்கைக்கான வெள்ளையறிக்கையின்படி 1984 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று இரவு துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே சீக்கிய மேற்கோள் நூலகம் அழிக்கப்பட்டது.[3] ஜூன் ஆறாம் நாளன்று பொற்கோயிலை இராணுவம் கைப்பற்றியபோதும்கூட இந்நூலகம் நல்லநிலையில்தான் இருந்தது; ஜூன் ஆறாம் தேதிக்கும் 14 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் அது அழிக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கிறது என்பது வழக்கறிஞர் வி. எம். தார்குண்டேயின் கூற்று ஆகும். [3]

நூலகத்திலிருந்த பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக இந்திய இராணுவம் கூறினாலும், சிரோன்மணி குருத்வாரா பிரபந்த செயற்குழு சாட்சியங்கள் மூலம் அதனை மறுத்தது. அமிர்தசரசு நகரின் இளைஞர் மன்றத்தில் தற்காலிகமாக செயற்பட்டுவந்த மத்திய புலனாய்வுத்துறையின் அலுவலகத்திற்கு நூலகத்தில் இருந்த அனைத்தும் சாக்குகளில் இராணுவ வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டபின் காலி நூலகம்தான் எரிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.[1] செப்டம்பர் 1984 வரை நூலகப் பொருட்களை அட்டவணையிட்ட புலனாய்வுத்துறை யாருமறியாத ஓரிடத்துக்கு மாற்றிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

மூடிமறைத்தல்

தொகு

மத்திய புலனாய்வுத் துறையில் பணியாற்றிய இரஞ்சித் நந்தா என்ற ஆய்வாளர் 2003 இல் இடித்துரைப்பாளராக மாறி, அமிருதசரசு இளைஞர் மன்றத்தில் செயற்பட்ட புலனாய்வுத்துறை தற்காலிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீக்கிய மேற்கோள் நூலக ஆவணங்களை ஆய்வுசெய்த ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் தானும் ஒருவராய்ப் பணியாற்றியதை வெளிப்படுத்தினார்.[1] ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவுக்கு அன்றைய இந்தியப் பிரதம மந்திரியான இந்திரா காந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஒரு கடிதத்தைத் தனது துறையினர் தேடினர் என்றும், பிந்தரன்வாலாவுக்கு பிற தலைவர்கள் எழுதிய கடிதங்களைத் தான் அங்கு பார்த்ததாகவும் அறிவித்தார்.[1]

எஸ்ஜிபிசியின் முன்னாள் செயலாளர் இரஞ்சித் நந்தாவின் கூற்றை உறுதிப்படுத்தியதுடன் தேடிய அக்கடிதம் கிடைக்காத தோல்வியால்தான் நூலகத்தை இராணுவம் எரித்து விட்டது என்றும் கூறினார்.[1] சீக்கிய உயர் குருக்களின் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, நூலக ஆவணங்கள் ஒவ்வொன்றையும் சோதனை செய்த பின்னர் அவை 165 சாக்குகளில் அடைத்து இராணுவ வண்டிகளில் ஏற்றி அனுப்பப்பட்டதை இரஞ்சித் நந்தாவும் தெரிவித்தார்.[1] நூலக ஆவணங்களின் சோதனையின்போது அவரது பணியைப் பாராட்டி உயர் அதிகாரி எழுதிய கடிதமொன்றையும் அவர் காட்டினார்.[1]

மீட்டெடுக்கும் முயற்சிகள்

தொகு

1988 ஆம் ஆண்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களைத் திருப்பித் தருமாறு சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. ஆனால் ஒரு சில கோப்புகள் மட்டுமே அவர்களுக்குத் திருப்பிக் கிடைத்தது.[4]

2000 ஆம் ஆண்டு மே 23 அன்று அன்றைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் செயலர் குர்பச்சன் சிங் பச்சனுக்கு எழுதிய கடிதத்தில், நூலகத்திலிருந்த நூல்களையும் ஆவணங்களையும் இராணுவம் எடுத்து புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்ததை ஒத்துக்கொண்டு, புலனாய்வுத்துறை செயற்படும் பொதுநல அமைச்சகத்திடம் கேட்கும்படியும் எஸ்ஜிபிசிக்கு ஆலோசனை கூறினார்.[4][4] மேலும் அவர் ஜலந்தர் நகருக்குச் சென்றபோது, சீக்கிய மேற்கோள் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்டவற்றில் அரசுக்கு எதிரானது எனக் கருதப்பட்ட 117 ஆவணங்களை புலனாய்வுத்துறை அழித்துவிட்டதையும் அறிவித்தார்.[1]

2003 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட நூல்கள், ஆவணங்கள், கையெழுத்துப்பிரதிகள் திருப்பித் தரப்படும் என உறுதியளித்தார். ஆனால் அதன் பின்னர் அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.[5]

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று நடுவண் அரசு, இந்திய பஞ்சாப் அரசு, புலனாய்வுத்துறை மூவருக்கும் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்டவற்றைத் திருப்பித் தருமாறு பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.[6]

2009 ஆம் ஆண்டு பிப்ரவரி, மே மாதங்களில், இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சரான அ. கு. ஆன்டனி, இந்திய இராணுவத்திடம் இந்நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட எந்தவொரு பொருட்களும் இல்லையென நாடளுமன்றத்தில் தெரிவித்தார்.[7][8] அதனால் பல்வேறு நாடாளுன்ற உறுப்பினர்களும் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவும் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்துவதாக அவரைப் குற்றஞ்சாட்டினர்.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 Walia, Varinder (June 7, 2003). "Fire of controversy in Sikh library still smoulders". The Tribune. http://www.tribuneindia.com/2003/20030607/windows/note.htm. பார்த்த நாள்: 21 February 2011. 
  2. The Smoking Gun Recovered, United Sikhs documentary" | https://www.youtube.com/watch?v=i6AFP1NiF-U
  3. 3.0 3.1 Kaur, Jaskaran; Crossette, Barbara (2006). Twenty years of impunity: the November 1984 pogroms of Sikhs in India (PDF) (2nd ed.). Portland, OR: Ensaaf. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9787073-0-3.
  4. 4.0 4.1 4.2 "George Fernandes admits Army removed items from Golden Temple during Operation B". Bombay: Indian Express Newspapers (Bombay) Ltd.. May 25, 2000 இம் மூலத்தில் இருந்து 11 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121011195811/http://www.expressindia.com/ie/daily/20000525/ina25042.html. பார்த்த நாள்: 21 February 2011. 
  5. Rana, Yudhvir (Mar 25, 2003). "Precious books will be returned: Kalam assures SGPC chief - The Times of India". Indiatimes இம் மூலத்தில் இருந்து 2012-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104211005/http://articles.timesofindia.indiatimes.com/2003-03-25/chandigarh/27269547_1_sgpc-harbeant-singh-kirpal-singh-badungar. பார்த்த நாள்: 21 February 2011. 
  6. "Material seized during Bluestar to be returned". The Tribune (Chandigarh: The Tribune). http://www.tribuneindia.com/2004/20040427/punjab1.htm#38. பார்த்த நாள்: 21 February 2011. 
  7. 7.0 7.1 Bharadwaj, Ajay (Feb 27, 2009). "SGPC, Centre spar over Golden Temple’s missing manuscripts - India - DNA". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் (Chandigarh). http://www.dnaindia.com/india/special_sgpc-centre-spar-over-golden-temples-missing-manuscripts_1234589. பார்த்த நாள்: 22 February 2011. 
  8. 8.0 8.1 Walia, Varinder (May 21, 2009). "No Sikh reference books with us: Antony". The Tribune (The Tribune). http://www.tribuneindia.com/2009/20090522/punjab.htm#1. பார்த்த நாள்: 22 February 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்கிய_மேற்கோள்_நூலகம்&oldid=3584185" இலிருந்து மீள்விக்கப்பட்டது