த பேசன் ஆப் த கிறைஸ்ட்

மெல் கிப்சனின் 2004ஆம் ஆண்டு திரைப்படம்

த பேசன் ஆப் த கிறைஸ்ட்[3] (The Passion of the Christ, பொருள்: இயேசுவின் பாடுகள்) என்பது 2004ஆம் ஆண்டு வெளி வந்த அமெரிக்க விவிலிய நாடகத் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை மெல் கிப்சன் தயாரித்து, பகுதி அளவுக்கு எழுதி மற்றும் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தில் இயேசுவாக ஜிம் கவீசலும், மரியாளாக மையா மோர்கென்ஸ்டெர்னும, மகதலேனா மரியாளாக மோனிக்கா பெலூச்சியும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் பெரும்பாலும் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோரின் நற்செய்திகளின்படி இயேசுவின் பாடுகளைச் சித்தரிக்கிறது. இயேசு பேசியதாகக் கருதப்படும் மொழியான அரமேயத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் இவரைக் குறிக்க அரமேயப் பெயரான யேஷுஆ (Yeshua) பயன்படுத்தப்பட்டிருந்தது. இப்பெயரைப் பயன்படுத்திய நன்றாக அறியப்பட்ட மேற்குலக கிறித்தவ வேலைப்பாடு இதுவே ஆகும்.[4]

த பேசன் ஆப் த கிறைஸ்ட்
த பேசன் ஆப் த கிறைஸ்ட் சுவரிதழ்
திரையரங்க வெளியீட்டுச் சுவரிதழ்
இயக்கம்மெல் கிப்சன்
மூலக்கதைவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் பாடுகள் மற்றும் அன்னே கேத்தரின் எம்மெரிச் எழுதிய த டாலரஸ் பேசன் ஆப் அவர் லார்டு ஜீசஸ் கிறைஸ்ட்
திரைக்கதை
  • மெல் கிப்சன்
  • பெனடிக்ட் பிட்ஸ்ஜெரால்டு
இசையோவான் டெப்னே
நடிப்பு
ஒளிப்பதிவுகலேப் டெஸ்சேனல்
படத்தொகுப்பு
  • ஜான் ரைட்
  • ஸ்டீவ் மிர்கோவிச்
கலையகம்நியூமார்க்கெட் பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 25, 2004 (2004-02-25)
ஓட்டம்2:07 மணி நேரம் [1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழி
ஆக்கச்செலவுஐஅ$30 மில்லியன் (214.5 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$612.1 மில்லியன் (4,377.5 கோடி)

இதன் தலைப்பை ஒத்து இந்தத் திரைப்படமானது இயேசு கிறிஸ்துவின் இறப்பிற்கு முன்னர் இறுதி 12 மணி நேரத்தை முதன்மையாகக் குறிப்பிடுகிறது. இவை "திருப்பாடுகள்" என்று அறியப்படுகின்றன. ஆலிவ் தோட்டத்தில் (கெத்சமனி) பெரும் துன்பத்துடன் இது தொடங்குகிறது, யூதாசு இஸ்காரியோத்துவின் துரோகத்துடன் தொடர்கிறது, தூணில் மிருகத் தனமான துன்புறுத்தல், சிமியோனால் குறி கூறப்பட்ட மரியாளின் துன்பங்கள், இயேசு சிலுவையில் அறையப்படுதல் மற்றும் மரணம், மற்றும் இவர் உயிர்த்தெழுந்ததன் ஒரு குறுகிய சித்தரிப்புடன் முடிவடைகிறது. இயேசுவின் இறுதி இராவுணவு மற்றும் மலைச் சொற்பொழிவு, மற்றும் இயேசுவின் தொடக்க வாழ்வின் தருணங்கள் போன்ற இயேசுவின் வாழ்வின் தருணங்கள் இடையிடையே இப்படத்தில் காணப்படுகின்றன. இந்தத் திரைப்படம் பெரும்பாலும் இத்தாலியில் படம் பிடிக்கப்பட்டது.[5] மீண்டும் உருவாக்கப்பட்ட யூத பாலத்தீனிய அரமேயம், எபிரேயம் மற்றும் இலத்தீன் ஆகிய மொழிகளில் இந்தத் திரைப்படத்தின் ஒட்டு மொத்த வசனங்களும் இருந்தன. இயக்குநர் கிப்சன் தொடக்கத்தில் எதிராக இருந்த பொழுதும் இந்தத் திரைப்படம் இறுதியாக வசன வரிகளுடன் திரையிடப்பட்டது.

இந்தத் திரைப்படம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. விமர்சகர்களிடமிருந்து எதிரெதிரான விமர்சனங்களைப் பெற்றது. சிலர் இந்தத் திரைப்படத்தை ஒரு சமய மற்றும் புனித அனுபவமாகக் கருதினர். நடிகர்களின் நடிப்பு, தயாரிப்பு மதிப்புகள் மற்றும் யோவான் டெப்னேயின் இசை ஆகியவற்றைப் பாராட்டினர். சிலர் இந்தத் திரைப்படத்தை யூத எதிர்ப்புக் கொள்கையுடையது என்று குறிப்பிட்டனர். விளக்கமான வன்முறைக் காட்சிகளானவை மட்டுமீறியதாக இருந்ததாகவும், உணர்ச்சிகளை வற்றச் செய்ததாகவும் கருதினர். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஐஅ$612.1 மில்லியன் (4,377.5 கோடி)-க்கும் மேல் வசூலித்தது.[6] இதன் திரையரங்க ஓட்டத்தின் முடிவில் சர்வதேச அளவில் 2004ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஐந்தாவது இடத்தைப் பெற்றது. [2]எக்காலத்திலும் வெளி வந்த கிறித்தவத் திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் (பண வீக்கக் கணக்கு ஒப்பிடப்படாமல்) இதுவாகும். மேலும், தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்படாமல் சுதந்திரமாகத் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய படமும் இதுவாகும்.[7][8] 2023ஆம் ஆண்டு நிலவரப்படி ஐக்கிய அமெரிக்காவில் ஆர் தரச்சான்றிதழ் பெற்ற திரைப்படங்களில் அதிக வசூலாக ஐஅ$370.8 மில்லியன் (2,651.8 கோடி)-ஐ இது வசூலித்தது.[9] 2005ஆம் ஆண்டு 77வது அகாதமி விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒப்பனை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இசை ஆகியவற்றுக்காக மூன்று விருதுப் பரிந்துரைகளை இப்படம் பெற்றது.[10] இயேசு உயிர்த்தெழுந்ததை மையமாகக் கொண்ட இரண்டாவது பாகம் தற்போது தயாரிப்பில் உள்ளது. 2025ஆம் ஆண்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.[11][12]

கதை தொகு

கெத்சமனியில் பாஸ்கா இரவின் போது இயேசு தன்னுடைய சீடர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருடன் பிரார்த்திக்கிறார். இயேசுவின் வேர்வை இரத்தமாக மாறுகிறது. சாத்தானின் உருவத்திலிருந்து ஒரு பாம்பு உருவான போது சாத்தான் இயேசுவுக்கு ஆசை காட்ட முயற்சிக்கிறது. பாம்பின் தலையை நசுக்குவதன் மூலம் பிறகு இயேசு சாத்தானைக் கண்டிக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் இயேசுவின் சீடர்களில் மற்றொருவரான யூதாசு இஸ்காரியோத்து கைபசு மற்றும் பரிசேயர் ஆகியோரால் 30 வெள்ளிக் காசுகள் இலஞ்சம் பெறுகிறார். கோயில் காவலர்களின் ஒரு குழுவைக் காட்டிற்குக் கூட்டிச் செல்கிறார். அங்கு இயேசுவுக்குத் துரோகம் செய்து காட்டிக் கொடுக்கிறார். காவலர்கள் இயேசுவைக் கைது செய்த போது அங்கு பிரச்சினை ஏற்படுகிறது. பேதுரு தன்னுடைய கத்தியை எடுக்கிறார். காவலர்களின் தலைவனான மால்குவின் காதை வெட்டுகிறார். பேதுருவைக் கடிந்து கொண்ட இயேசு மால்குவின் காயத்தை ஆற்றுகிறார். சீடர்கள் தப்பித்து ஓட, காவலர்கள் இயேசுவைக் கைது செய்கின்றனர். யூத தலைமைச் சங்கத்துக்குச் செல்லும் வழியில் அவரை அடித்துத் துன்புறுத்துகின்றனர்.

தன்னுடைய தூக்கத்தில் இருந்து விழிக்கும் இயேசுவின் தாய் மரியாள் ஏதோ தவறாக நடப்பதை உணர்கிறார். மகதலேனாவுடன் பேசுகிறார். யோவான் கதவை தள்ளிக் கொண்டு அவர்களது அறைக்குள் வருகிறார். கைது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கிறார். இயேசு மற்றும் அவரைக் கைது செய்தவர்களைத் தொடர்ந்து சென்ற பேதுருவுடன் இவர்கள் இணைகின்றனர். கைபசு விசாரணை நடத்துகிறார். இயேசுவுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த, இரகசியமாக இயேசுவுக்கு ஆதரவளித்த சில பூசாரிகள் விசாரணை மன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். இயேசு தன்னை கடவுளின் மகன் என கூறிய போது கைபசு கோபத்துடன் இயேசுவின் அங்கியைக் கிழிக்கிறார். கடவுள் நிந்தனை செய்ததற்காக இயேசுவுக்கு மரண தண்டனை என தீர்ப்பு வழங்கப்படுகிறது. இயேசு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது பேதுருவை கூட்டத்திலிருந்தவர்கள் கண்டு கொள்கின்றனர். ஆனால் தான் இயேசுவின் சீடர் கிடையாது என பேதுரு மறுக்கிறார். மூன்றாவது முறை மறுத்த போது அவர்களைச் சபிக்கிறார். பிறகு பேதுருவுக்கு இயேசு முன்னர் கூறியது நினைவுக்கு வருகிறது. கடுமையாக அழுது விட்டு அங்கிருந்து அவர் தப்பித்துச் செல்கிறார். இடைப்பட்ட நேரத்தில் குற்ற உணர்ச்சி கொண்ட யூதாசு இயேசுவை விடுவிக்க வேண்டும் என்பதற்காகத் தனக்குக் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால் பூசாரிகள் இதற்கு மறுக்கின்றனர். பேய்களால் துரத்தப்படும் யூதாசு ஓர் அழுகிக் கொண்டிருந்த கழுதையின் பிணத்திலிருந்த ஒரு கயிற்றை எடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார்.

கைபசுவும், கூட்டத்தினரும் இயேசுவை யூதேயாவின் உரோமை ஆளுநரான பொந்தியு பிலாத்துவுக்கு முன்னால் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகக் கொண்டு வருகின்றனர். இயேசு புனிதமானவர் என்று அறிந்திருந்த தன்னுடைய மனைவி குளௌதியாவின் வலியுறுத்தல், இயேசுவை விசாரித்ததற்குப் பிறகு எந்த ஒரு தவறையும் காணாததால் பிலாத்து எரோது ஆந்திபசின் அரசவைக்கு இயேசுவை அனுப்புகிறார். எரோது ஆந்திபசுவின் நிலப்பரப்பான கலிலேயாவைச் சேர்ந்தவர் இயேசு என்பதால் இவ்வாறு அனுப்புகிறார். ஆந்திபசு இயேசு தீங்கற்றவர் என்று கருதியதால் திருப்பி அனுப்புகிறார். பிலாத்து பிறகு கூட்டத்தினர் முன் இயேசுவை விடுவிக்கலாம் அல்லது கொலைகாரன் பரப்பாசை விடுவிக்கலாம் என்ற வாய்ப்பை வழங்குகிறார். பரப்பாசை விடுவித்து இயேசுவை சிலுவையில் அறையுமாறு கூட்டத்தினர் கோருகின்றனர். கூட்டத்தினரை சமாதானப்படுத்தும் முயற்சியாக இயேசுவுக்கு வெறுமனே கசையடி மட்டும் கொடுக்கப்படலாம் என பிலாத்து ஆணையிடுகிறார். ஆனால், உரோமானியக் காவலர்கள் இயேசுவை மிருகத்தனமாக அடித்துத் துன்புறுத்துகின்றனர். ஒரு பண்ணைக் கட்டடத்திற்கு இயேசுவைக் கூட்டி சென்று அவருடைய தலையில் முட்களால் செய்யப்பட்ட மகுடத்தை சூட்டுகின்றனர். பிலாத்து மற்றும் கூட்டத்தினர் முன் இயேசு நிற்க வைக்கப்படுகிறார். கூட்டத்தினரின் ஆதரவுடன் கைபசு இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டுமென தொடர்ந்து கோருகிறார். கிளர்ச்சி ஏற்படும் என்ற எண்ணம் காரணமாக பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு ஆணையிடுகிறார். தான் இதற்குப் பொறுப்பல்ல என்று குறிப்பிடுகிறார்.

இயேசு பிறகு கொல்கொதாவுக்குச் செல்லும் பாதையில் ஒரு கனமான மரச்சிலுவையைத் தாங்கிச் செல்கிறார். குரூரமான மகிழ்ச்சியுடன் இயேசுவின் துன்பத்தை சாத்தான் இரசிக்கிறது. செல்லும் பாதையில் காவலர்கள் மற்றும் வெறி பிடித்த கூட்டத்தினரால் இயேசு தொடர்ந்து சித்ரவதை செய்யப்படுகிறார். தன்னுடைய தாயைக் காண்கிறார். அவர் ஒரு குறுகிய நேரத்திற்கு இயேசுவின் துயரத்தை ஆற்றுகிறார். பிறகு காவலர்களால் அங்கிருந்து பிடித்து இழுக்கப்படுகிறார். சிலுவையைச் சுமக்க மனமில்லாத சீமோன் இயேசுவுக்கு உதவுகிறார். குருதியுடைய இயேசுவின் முகத்தை தன்னுடைய முக்காட்டின் மூலம் ஒரு பெண் துடைக்கிறார். ஆனால், அவரும் காவலர்களால் பிடித்து இழுக்கப்படுகிறார். இந்தப் பாதையின் முடிவில் தன்னுடைய தாய் மரியாள், மகதலேனா, யோவான் மற்றும் பல பிறர் காண்கையில் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். தன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னிக்குமாறு கடவுளிடம் பிரார்த்திக்கிறார். இயேசுவுக்கு அருகில் ஒரு குற்றவாளியும் சிலுவையில் அறையப்படுகிறான். அவனது வலிமையான நம்பிக்கை மற்றும் வருத்த உணர்வு ஆகியவற்றுக்காக இயேசு அவனை பாவ விமோசனம் பெற வைக்கிறார். தன்னுடைய தாய்க்கு ஆறுதல் கூறுகிறார். காயங்கள் காரணமாக இயேசு இறக்கிறார். பிறகு வானத்தில் இருந்து தரைக்கு ஓர் ஒற்றை மழைத்துளி விழுகிறது. நில நடுக்கம் ஏற்படுகிறது. யூதர்களின் இரண்டாம் கோயில் சேதமடைகிறது. மகா பரிசுத்த இடத்தை மூடியிருந்த துணியானது இரண்டாக கிழிகிறது. நரகத்தின் ஆழத்தில் தோல்வியடைந்ததன் காரணமாக சாத்தான் அலறுகிறது. இயேசுவின் உடலானது சிலுவையிலிருந்து எடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு இயேசு தன்னுடைய கல்லறையிலிருந்து உயிர்த்தெழுகிறார்.

நடிகர்கள் தொகு


மேலும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. "The Passion of the Christ (18)". British Board of Film Classification. February 18, 2004. பார்க்கப்பட்ட நாள் June 2, 2013.
  2. 2.0 2.1 "The Passion of the Christ (2004)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் February 5, 2009.
  3. Peggy Noonan (December 17, 2003). "'It is as it was': Mel Gibson's The Passion gets a thumbs-up from the pope.". The Wall Street Journal. http://www.opinionjournal.com/columnists/pnoonan/?id=110004442. 
  4. The Passion of the Christ, பார்க்கப்பட்ட நாள் 2020-01-23
  5. "The Passion of the Christ".[தொடர்பிழந்த இணைப்பு] Movie-Locations
  6. "The Passion of the Christ". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2020-11-04.
  7. "Christian Movies at the Box Office". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் April 23, 2019.
  8. Barker, Stephen (2020-10-17). "The 10 Highest-Grossing Independent Films Of All Time". ScreenRant (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-11.
  9. "Top Lifetime Grosses by MPAA Rating — R". Box Office Mojo. Archived from the original on 2023-04-05. பார்க்கப்பட்ட நாள் 2023-04-07.
  10. Gibson, Mel (February 25, 2004), The Passion of the Christ, பார்க்கப்பட்ட நாள் September 1, 2016
  11. Brew, Simon (February 24, 2023), Passion Of The Christ 2 set to be on eve of production, பார்க்கப்பட்ட நாள் April 18, 2023
  12. Legacy, Spencer (January 14, 2023), The Passion of the Christ 2 Reportedly Begins Filming This Year, பார்க்கப்பட்ட நாள் April 18, 2023

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_பேசன்_ஆப்_த_கிறைஸ்ட்&oldid=3939896" இலிருந்து மீள்விக்கப்பட்டது