மகதியிலுள்ள கோயில்கள், கர்நாடகா
இரங்கநாத சுவாமி மற்றும் சோமேசுவரர் கோயில்கள் (Ranganatha Swamy and the Someshwara temples) என்பது இந்திய மாநிலமான கர்நாடகவின் தலைநகரான பெங்களூரிலிருந்து சுமார் 41 கி.மீ தொலைவிலுள்ள வரலாற்று நகரமான மகதியில் அமைந்துள்ளது. இந்த கோயில்கள் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக உள்ளது. [1]
இரங்கநாத சுவாமி கோயில்
சோமேசுவர சுவாமி கோயில் மகதி நகரம் | |
---|---|
ராமநகரம் மாவட்டம், மகதியில் அமைந்துள்ள இரங்கநாதர் கோயில் | |
அடைபெயர்(கள்): மகதி இரங்கநாத சுவாமி | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ராமநகரம் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |

வரலாறு
தொகுபொ.ச. 1139இல் சோழர்களால் மகதி முதன்முதலில் நிறுவப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் பெங்களூரை நிறுவிய விஜயநகரப் பேரரசின் நிலக்கிழாரான கெம்பெ கவுடா இங்கு பிறந்துள்ளார். கெம்பே கவுடாவும் அவரைப் பின்தொடர்ந்த தலைவர்களும் இங்கு பல கோயில்களைக் கட்டினர். [2]
இரங்கநாதர் கோயில்
தொகுகோயிலின் பிரதான தெய்வம் திருமால் நின்ற கோலத்தில், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் உள்ளதைப் போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் பெயர் உண்மையில் பாசிமா வெங்கடச்சலபதி கோயில் என்பதாகும். இங்கு தெய்வம் மேற்கு நோக்கி உள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதி திருமலை என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும் இப்போதெல்லாம் இது இரங்கநாத சுவாமி கோயில் என மிகவும் பிரபலமாக உள்ளது. கோயில் சுவரில் இரங்கநாதரின் சிறிய உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பூசகரின் கூற்றுப்படி, 12 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோழ ஆட்சியாளரால் இக்கோயிலின் கருவறை புனிதப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த கோயில் புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டது. கோயிலுக்கு முன்னால் உள்ள கருடத் தூனிலுள்ள கல்வெட்டின் அடிப்படையில், கி.பி 1524 இல் புகழ்பெற்ற விஜயநகர மன்னன் கிருஷ்ணதேவ ராயனால் உயரமான அலங்கார கோபுரங்கள் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. மைசூரின் ஆட்சியாளர் திப்பு சுல்தானாலும், மைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜா உடையாராலும் கோயிலுக்கு பங்களிப்புகள் செய்யப்பட்டன. [3] இரங்கநாத கோயில் வளாகத்தில் பல ஆலயங்களும் உள்ளன. இதில் இந்து தெய்வங்களான சிவன் இராமர், சீதை, அனுமன், இலட்சுமி, கிருட்டிணன் மற்றும் இரங்கநாதன் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. பிரதான தெய்வத்தை (இரங்கநாதர்) மாண்டவ்ய முனிவர் நிறுவியதன் மூலம் இந்த இடத்திற்கு "மாண்டவ்ய சேத்திரம்" என்ற பெயரும் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் கவரக்கூடிய வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவில் நுழைவாயிலின் இருபுறமும் யானைகளின் இரண்டு பெரிய வண்ணமயமான உருவங்கள் உள்ளன. [4]
சோமேசுவரர் கோயில்
தொகுபுகழ்பெற்ற கல்வியியலாளரும் வரலாற்றாசிரியருமான பி. லூயிஸ் ரைஸ் என்பவரின் கூற்றுப்படி, பொ.ச 1569இல் ஆட்சிக்கு வந்த இரண்டாம் கெம்பே கவுடா என்பவரால் சோமேசுவரர் கோயில் கட்டப்பட்டது எனத் தெரிகிறது. [5] இருப்பினும், இந்த கோயில் உண்மையில் அவரது வம்சாவளியான மூன்றாவது கெம்பவீரா கவுடாவினால் பொ.ச. 1712இல் கட்டப்பட்டது என்ற மற்றொரு பார்வையும் உள்ளது. பெரிய கோயில் வளாகமான இதில் குறிப்பிடத்தக்க கட்டமைப்புகளாக ஒரு விசாலமான உட்பிரகாரம் (முற்றம்) உயரமான கோபுரங்கள், மண்டபங்கள் ஆகியவை தற்போது புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளன. தூண்களிலுள்ள புடைப்புச் சிற்பங்களில் நடனமாடும் பெண்கள், வீரர்கள், பறவைகள் மற்றும் சிங்கங்கள் போன்ற சிற்பங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் பார்வதிக்கு ஒரு சிறிய சன்னதி உள்ளது. வளாகத்திலிருந்து சிறிது தொலைவில் சிவபெருமானின் வாகனமான நந்திக்கு ஒரு மண்டபம் உள்ளது. [4]
புகைப்படங்கள்
தொகு-
மகதி இரங்கநாத சுவாமி கோயிலின் பின்புறம்
-
மகதி, சோமேசுவரர் கோயில் வளாகத்திலுள்ள நந்தி மண்டபம்
-
மகதி, சோமேசுவரர் கோயில் வளாகத்திலுள்ள பார்வதியின் சன்னதி
-
மகதி, சோமேசுவரர் கோயில் கோபுரத்தில் கீழுள்ள தூண்களில் யாளி உருவங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. Retrieved 18 December 2014.
- ↑ Various (2003), p8
- ↑ Achari, Soumya Narayan. "Magadi's Ancient Temple". Deccan Herald. Retrieved 2014-12-14.
- ↑ 4.0 4.1 Raghavendra, Srinidhi L.V. "Cradle of History". Deccan Herald. Retrieved 2014-12-14.
- ↑ Rice (1887), p22
குறிப்புகள்
தொகு- Various (2003). Tourist Guide to Bangalore. Bangalore: Sura Books. ISBN 81-7478-021-1.
- Rice, B.L. (1887). Gazetteer of Mysore-Compiled for Government. Bangalore: Sura Books. ISBN 81-206-0977-8.
- Achari, Soumya Narayan. "Magadi's Ancient Temple". Deccan Herald. Retrieved 2014-12-14.
- Raghavendra, Srinidhi L.V. "Cradle of History". Deccan Herald. Retrieved 2014-12-14.
- "Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. Retrieved 18 December 2014.