ராம தேவ ராயன்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
வீர ராம தேவ ராயன் என்றும் அழைக்கப்பட்ட ராம தேவ ராயன் (Rama Deva Raya) (கி.பி. 1617-1632), 1617 ஆம் ஆண்டில் நடைபெற்ற கடும் சண்டைக்குப் பின்னர் விஜய நகரத்தின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.[1] 1614 ஆம் ஆண்டின் இவனது தந்தையான அரசன் இரண்டாம் ஸ்ரீரங்காவும், குடும்பத்தினரும், அவர்கள் இனத்தவனும் எதிர்க் குழாமைச் சேர்ந்தவனுமான ஜக்க ராயன் என்பவனான் கொலை செய்யப்பட்டனர். சிறுவனாயிருந்த ராம தேவ ராயன் இவர்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து விசுவாசமான தளபதியான யச்சம நாயுடுவால் வெளியே கடத்திவரப்பட்டதால் தப்பித்துக் கொண்டான்.
உள்நாட்டுப் போர்
தொகுஜக்க ராயன் என்பவன் அரசன் இரண்டாம் ஸ்ரீரங்காவைக் கொன்றபின், முன்னிருந்த இரண்டாம் வெங்கட ராயனின் மகன் என்று கருதப்பட்ட ஒருவனை அரசனாக்க முயற்சித்தான். தளபதி யச்சம நாயுடு இதற்கு எதிராக முறையான வாரிசாகிய ராம தேவ ராயனுக்கு அரசுரிமை கோரி வந்தான். இவ்விரு குழுக்களுக்கும் இடையே நீண்ட நாள் சண்டை நடைபெற்றது. இதிலே நாடு முழுவதும் ஈடுபட்டிருந்தது. இதில் ஜக்க ராயன் தோற்றான். நெல்லூருக்கு வடக்கே இருந்த அவனது சொத்துக்களும் யச்சம நாயுடுவால் கைப்பற்றப்பட்டன.
தோப்பூர்ச் சண்டை
தொகுதோற்றோடிக் காட்டில் தஞ்சம் புகுந்த ஜக்க ராயன், விஜய நகரப் பேரரசிலிருந்து துண்டித்துக் கொள்ள ஆவலாயிருந்த செஞ்சி மற்றும் மதுரை நாயக்கர்களின் உதவியுடன் மீண்டும் தாக்கினான். யச்சம நாயுடு, இன்னும் விஜய நகரத்துக்கு விசுவாசமாக இருந்த தஞ்சை நாயக்கர்களின் உதவியை நாடினான்.
ஜக்க ராயனும், அவனது கூட்டாளிகளும், சேர அரசனையும், சில போத்துக்கீசரையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு திருச்சிராப்பள்ளியில் பெரும் படையொன்றைத் திரட்டினர். யச்சம நாயுடு தனது படைகளை வேலூரிலிருந்து நடத்திச் சென்றான். நடுவில், தஞ்சை ரகுநாத நாயக்கனின் படைகளும் அவனுடன் சேர்ந்துகொண்டன. இப் படைகளுக்கு, கர்நாடகத் தலைவர்களினதும், ஒல்லாந்தரினதும், யாழ்ப்பாண அரசினதும் படை உதவிகள் கிடைத்தன.
இரண்டு படைகளும் காவிரியின் வட கரையில், திருச்சிராப்பள்ளிக்கும், கல்லணைக்கும் இடையே, தோப்பூரில் சந்தித்து மோதிக்கொண்டன. 1616 ஆம் ஆண்டுக் கடைசியில் இடம்பெற்ற இப் போரில், இரண்டு பக்கத்திலும் சேர்த்து பத்து இலட்சம் வீரர்கள் வரை கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. இது தென்னிந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
போர் முடிவு
தொகுஇப்போரில் ஜக்க ராயன் கொல்லப்பட்டான். அவனது படைகள் பின் வாங்கின. செஞ்சி நாயக்கன், செஞ்சிக் கோட்டை தவிர்ந்த அனைத்துக் கோட்டைகளையும் இழந்தான். அரசுரிமை கோரிய இரண்டாம் வேங்கட ராயனின் மகன் எனப்பட்டவனும் பிடிபட்டான். வெற்றி பெற்ற தஞ்சைப் படைகளும், யச்சம நாயுடுவும், வெற்றித் தூண்கள் அமைத்து வெற்றியைக் கொண்டாடினர். 1617 இன் தொடக்கத்தில் ராம தேவ ராயன் அவனது 15 ஆம் வயதில் முடிசூட்டப்பட்டான்.
தொடர்ந்த பகைமை
தொகுதோப்பூர்ப் போரில் தோற்றபின் ஜக்க ராயனின் தம்பியான யேத்தி ராயன் செஞ்சி நாயக்கனுடன் சேர்ந்து தஞ்சையைத் தாக்கினான். எனினும் இவர்கள் தோல்வியைத் தழுவியதுடன், செஞ்சி நாயக்கனும் கைது செய்யப்பட்டான். தொடர்ந்தும் எதிர்ப்புக் காட்டி வந்த யேத்தி ராயன் இறுதியில் ராம தேவ ராயனுக்குத் தனது மகளை மணம் செய்வித்து அவனுடன் சமரசம் செய்துகொண்டான். 1619 இல், அரசுக்கு உரிமை கோரிவந்த இரண்டாம் வேங்கட ராயனின் மகன் இறந்ததோடு ராம தேவனின் பிரச்சினைகள் சிறிது தணிந்தன.
கர்நூல் இழப்பு
தொகுவிஜய நகரத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைச் சாதகமாக்கிக் கொண்ட பீஜப்பூர் சுல்தான் 1620 ஆம் ஆண்டில் கர்னூலைத் தாக்கினான். எனினும் வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் 1624 இல் மீண்டும் அதனைத் தாக்கி அப்பகுதி முழுவதையும் கைப்பற்றினான்.
மேற்கோள்கள்
தொகு- Velcheru Narayana Rao, and David Shulman, Sanjay Subrahmanyam. Symbols of substance : court and state in Nayaka period Tamilnadu (Delhi ; Oxford : Oxford University Press, 1998) ; xix, 349 p., [16] p. of plates : ill., maps ; 22 cm. ; Oxford India paperbacks ; Includes bibliographical references and index ; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564399-2.
- Sathianathaier, R. History of the Nayaks of Madura [microform] by R. Sathyanatha Aiyar ; edited for the University, with introduction and notes by சா. கிருஷ்ணசுவாமி ஐயங்கார் ([Madras] : Oxford University Press, 1924) ; see also ([London] : H. Milford, Oxford university press, 1924) ; xvi, 403 p. ; 21 cm. ; SAMP early 20th-century Indian books project item 10819.
- K.A. Nilakanta Sastry, History of South India, From Prehistoric times to fall of Vijayanagar, 1955, OUP, (Reprinted 2002) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8.