லேமேன் விசத் தவளை

Unikonta

லேமேன் விசத் தவளை அல்லது சிவப்பு பட்டை விசத் தவளை என்பன ஓபேகா லேமன்னி (Oophaga lehmanni) சிற்றினத்தைச் சார்ந்த தவளைகளைக் குறிக்கின்றது. இச்சிற்றினமானது டெண்ட்ரோபேட்டிடே (Dendrobatidae) குடும்பத்தின் கீழ் உள்ளது. இத்தவளைகள் கொலம்பியாவின் மேற்கு பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன.[2] இதன் இயற்கை வாழ்விடங்கள் வெப்பமண்டல மழைக் காடுகளின் அடிப்பகுதிகளாகும். வாழிட இழப்பு மற்றும் செல்லப்பிராணி வர்த்தகத்திற்காக இத்தவளைகளை இயற்கை வாழிடங்களிலிருந்து சேகரித்தல் உள்ளிட்ட காரணங்களால் இதனுடைய எண்ணிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தவளைகள் பன்னாடு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் “மிக அருகிய இனம்" என்று பட்டியலிடப்பட்டுள்ளது.[1] இத்தவளை கொலம்பியா இயற்கைவள பாதுகாப்பு உயிரியலாளரான ஃபெடரிகோ கார்லோசு லேமன் நினைவாகப் பெயரிடப்பட்டது.

லேமேன் விசத் தவளை
Lehmann's poison frog
red morph
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
தவளை
குடும்பம்:
நச்சு அம்புத் தவளை
பேரினம்:
ஓபேகா
இனம்:
O. lehmanni
இருசொற் பெயரீடு
Oophaga lehmanni
(மெய்யர்சு & டேலி, 1976)
வேறு பெயர்கள் [2][3]

டெண்டிரோபேட்டிசு லேமன்னி மெய்யர்சு & டேலி, 1976

விளக்கம்

தொகு

லேமேன் விசத் தவளை ஒரு மென்மையான சருமத்துடன் அச்சுறுத்தும் நிறத்தினைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இதனை வேட்டையாடும் பிற உயிரிகளுக்கு, உண்ணத்தக்கவல்ல என எச்சரிக்கிறது. இந்த தவளை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் கருப்பு அல்லது அடர் பழுப்பு நிற பின்னணியில் காணப்படும். இப்பின்னணி நிறமானது உடலைச் சுற்றிக் காணப்படும் இரண்டு பிரகாசமான, பரந்த வண்ண பட்டைகள் மற்றும் கை கால்களில் காணப்படும் வண்ண பட்டைகளுடன் வேறுபடுகிறது. முதல் கால்விரல் இரண்டாவது விரலை விடக் குறுகியதாகவும் ஆண்களின் கால்விரல்களின் நுனிப்பகுதியில் வெள்ளி வண்ணத்தில் உள்ளன. இந்த தவளையின் நீளம் சுமார் 31 முதல் 36 mm (1.2 முதல் 1.4 அங்) வரையுள்ளது.[3] இது ஹார்லெக்வின் விஷத் தவளை ( ஓபகா ஹிஸ்ட்ரியோனிகஸ் ) உடன் தோற்றத்தில் மிகவும் ஒத்திருக்கிறது. மேலும் இத்தவளையுடன், கலப்பினமாக்கக்கூடிய ஒரு இனமாகும். இதனால் இது உண்மையில் ஒரு தனி இனமா என்பது குறித்துத் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் வாழிடவரம்பில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் காணப்படும் ஆண் தவளைகளின் குரல்களில் தனித்துவமான வேறுபாடுகள் உள்ளன. [3]

பரவல்

தொகு

லேமேன் விசத் தவளை கொலம்பியா வெப்ப மண்டலக் காடுகளில் மட்டுமே காணக்கூடியவை. இங்குக் காணப்படும் அன்சிகயா ஆற்றின் வடிகாலிலிருந்து மேற்கே டாகுஅ (வாலே டெல் காக டிபார்ட்மெண்ட்) வரையும், சாகோ டிபார்ட்மெண்ட் கோர்டிலெரா ஒக்சிடெண்டல் சரிவுகளிலும் காணப்படுகிறது. இது 600–1,200 m (1,969–3,937 அடி) உயரம் வரைக் காணப்படும்.[1][2][4] தனித்தனி குழுக்களாக சுமார் 10 km2 (3.9 sq mi) க்கு குறைவான பகுதிகளில் இத்தவளைகள் காணப்படுகின்றன.

வாழ்க்கை

தொகு

லேமேன் விசத் தவளை சிறிய பூச்சிகளை உணவாக உண்ணும் பகல்நேர வாசியாகும். இத்தவளை தாவரங்கள் குறைவாகக் காணப்படும் பகுதிகளில் காணப்படும். இனப்பெருக்கமானது மழைக்கால முடிவில் நடைபெறுகிறது. ஆண் பொருத்தமான இடத்தைத் தேர்வுசெய்து பெண் தவளையினை ஈர்க்க மீண்டும் மீண்டும் ஒலி எழுப்பும். பெண் தவளை பெரிய அளவிலான முட்டைகளைக் குறைந்த எண்ணிக்கையில் தரை தளத்திலிருந்து 120 செமீ உயரத்தில் காணப்படும் இலையின் மீது இடும். அவற்றை ஆண் தவளைகள் கருவுறச் செய்கின்றன. ஆண் தவளைகள் முட்டைகளை ஈரப்பதமாக வைத்து, சில காலம் கழித்து (இரண்டு முதல் நான்கு வாரம்) முட்டைகளை தமது முதுகில் சுமந்து, மரங்களில் கிளைகளுக்கிடையே காணப்படும் நீர், மரப்பொந்துகளில் உள்ள நீர், மூங்கில் தண்டுகள் போன்ற இடங்களில் உள்ள சிறிய தற்காலிக நீர்த் தேக்கங்களில் தனித்தனியாக விடுகின்றது. இங்கே தலைப்பிரட்டைகள் உருவாகின்றன. கருவுறா முட்டைகளைப் பெண் தவளை அவ்வப்போது தண்ணீரில் விடுகின்றன. இச்சிறு நிலைகளில் அதிக அளவில் தலைப்பிரட்டைகள் காணப்படும்போது அவை ஒன்றையொன்று உண்ணும் நிலை ஏற்படுகிறது. [3] இயற்சூழலில் காடுகளில், காணப்படும் லேமேன் விசத் தவளை நச்சுத்தன்மை வாய்ந்தது. ஆனால் வளர்க்கப்படும் தவளைக்கு வழங்கப்படும் உணவின் காரணமாக நச்சுத்தன்மையினை இழந்து காணப்படும்.[3]

தற்கால நிலை

தொகு

லேமேன் விசத் தவளை கொலம்பியாவின் மிகச் சிறிய பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. இது அதன் சொந்த நாட்டில் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனம் என சிட்டியிசு பின் இணைப்பு II இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[1] முன்பு அதிகமாகக் காணப்பட்ட இத்தவளை இனம் அண்மைக்கால ஆய்வின்படி மிகவும் அரிதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[5] இது பார்க் நேஷனல் நேச்சுரல் ஃபாரலோன்ஸ் டி காலியில் உள்ளது. மரத்தளவாடங்கள் தயார் செய்ய மரங்களை அழித்தல், வனப்பகுதியில் சட்டவிரோத விவசாயம், செல்லப்பிராணி வர்த்தகத்திற்கான சேகரிப்பு முதலிய காரணங்களால் இதன் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[6] வனவிலங்குகளின் தொடர்ச்சியான சட்டவிரோத சேகரிப்பை எதிர்கொள்ளும் முயற்சியாக, இந்த சிற்றினத்தையும் பிற கொலம்பிய விசத் தவளைகளையும் பாதுகாக்கும் விதமாகப் பண்ணை ஒன்று கொலம்பியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்லப்பிராணி சந்தைக்கு சட்டப்பூர்வமாக தவளைகளை வழங்குகின்றன. இதனால் சட்டவிரோத காட்டுப்பகுதியில் தவளைகளைப் பிடிப்பது தடுக்கப்படுவதோடு உள்ளூர் சமூகத்திற்கு வருமானத்திற்கும் வழிவகுப்பதாக உள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Wilmar Bolívar; Fernando Castro; Stefan Lötters (2004). "Oophaga lehmanni". IUCN Red List of Threatened Species 2004: e.T55190A11255085. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T55190A11255085.en. https://www.iucnredlist.org/species/55190/11255085. 
  2. 2.0 2.1 2.2 Frost, Darrel R. (2014). "Oophaga lehmanni (Myers and Daly, 1976)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 5 September 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Phoebe Lehmann (2003-01-11). "Oophaga lehmanni". AmphibiaWeb. பார்க்கப்பட்ட நாள் 2014-06-17.
  4. Acosta-Galvis, A.R. (2014). "Oophaga lehmanni (Myers & Daly, 1976)". Lista de los Anfibios de Colombia V.03.2014. www.batrachia.com. Archived from the original on 5 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Pool, J.R. (18 November 2015). "Farmed and legally exported Colombian poison frogs take on the illegal pet trade". Mongabay. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
  6. Diemer, Doug (2001). "Oophaga lehmanni". Animal Diversity Web. University of Michigan. பார்க்கப்பட்ட நாள் 2014-06-17.
  7. Rueda, M.; C. Garcia (24 May 2019). "Colombian breeds rare frogs to undermine animal traffickers". AP News. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேமேன்_விசத்_தவளை&oldid=3570336" இலிருந்து மீள்விக்கப்பட்டது