வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)
வேட்டையாடு விளையாடு (Vettaiyaadu Vilaiyaadu) 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இப்படம் 1999-ல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
வேட்டையாடு விளையாடு | |
---|---|
![]() | |
இயக்கம் | கௌதம் மேனன் |
தயாரிப்பு | மாணிக்கம் நாராயணன் |
கதை | கௌதம் மேனன் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | கமல்ஹாசன் ஜோதிகா கமலினி முகர்ஜி பிரகாஷ் ராஜ் |
விநியோகம் | போட்டான் பேக்டரி |
வெளியீடு | 25 ஆகத்து 2006 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹25 கோடி |
மொத்த வருவாய் | ₹60 கோடி |
வகை தொகு
நடிகர்கள் தொகு
- கமல்ஹாசன் - டிசிபி ராகவன்
- சோதிகா - ஆராதனா
- பிரகாஷ் ராஜ் - அசோக் ராஜ்
- ராஜஸ்ரீ - அசோக் ராஜ் மனைவி
- கமலினி முகர்ஜி - கயல்விழி ராகவன்
- டேனியல் பாலாஜி - அமுதன்
- அதுதி சர்மா - கமிஷ்னர்
- ஜானகி சுபேஸ் - ஆன்டர்சன் தாய்
- முமைத் கான்
கதை தொகு
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ராகவன் (கமல்ஹாசன்), தமிழக காவல்துறை இணை ஆணையர் ஆவார். இவருடைய நண்பரும் சக அதிகாரியுமான ஆரோக்கியராஜின் (பிரகாஷ் ராஜ்) மகள் ராணி காணாமல் போன வழக்கை விசாரிக்கும் அவர், அப்பெண் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். மகளை இழந்த சோகத்தை கரைக்க நியூயார்க் செல்லும் ஆரோக்கியராஜும் அவரது மனைவியும் தொடர்ந்து திட்டமிட்டு கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். இவ்வழக்கை விசாரிக்க அமெரிக்கா விரையும் ராகவன், அமெரிக்காவில் நிகழ்ந்த சில கொலைகளுக்கும் ராணியின் கொலைக்கும் உள்ள ஒற்றுமைகளை கண்டறிகிறார். இதற்கிடையே கணவரைப் பிரிந்து இருக்கும் அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான ஆராதனாவைச் (ஜோதிகா) சந்தித்துப் பழகுகிறார். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு மருத்துவம் படிக்க வந்திருக்கும் இளமாறன், அமுதன் ஆகியோரே கொலைகாரர்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள் வீடு வரை செல்லும் ராகவனை காயப்படுத்திவிட்டு, கொலைகாரர்கள் இந்தியாவுக்கு தப்புகின்றனர். கொலைகாரர்களை பிடிக்க இந்தியா திரும்பும் ராகவனுடன் ஆராதனாவும் திரும்புகிறார். தன் மனைவி கயல்விழியை (கமாலினி முகர்ஜி) தன் பணியின் காரணமாக எழுந்த பகைக்கு பலி கொடுத்த துயரில் இருக்கும் ராகவன், ஆராதனாவை மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார். சிறிய தயக்கத்திற்குப் பின் ஆராதனாவும் இதை ஏற்றுக் கொள்கிறார். கொலைகாரர்களை சிக்க வைக்க ராகவன் எடுக்கும் கெடுபிடிகளால் கடுப்படையும் அவர்கள், ராகவனை தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் வகையில் ஆராதனாவை கடத்திச் செல்கின்றனர். இறுதியில் இளமாறன், அமுதன் ஆகியோரை கொன்று ஆராதனாவை ராகவன் மீட்கிறார்.
திறனாய்வு தொகு
கதை நாயகன் கமலஹாசனையும் திரைப்படத்தையும் ஒயிலாக படம் பிடித்துள்ளதாக பலராலும் பாராட்டப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களுக்கு புதிய வரவான நாயகி கமலினி முகர்ஜியின் நடிப்புத் திறனும் மெச்சப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பு நன்றாக உள்ளதாக சிலரும் முந்தைய திரைப்படங்களின் இசையமைப்பு அளவுக்கு இல்லையென்று சிலரும் கருதுகின்றனர். கதை நகர்த்தும் விதம், கதை மாந்தர் படைப்பு, பெயர்கள் ஆகியவை இயக்குனரின் முந்தைய திரைப்படமான காக்க காக்க-வை ஒத்திருப்பதாக குறைகாணப்படுகிறது. கொலை வழக்கை துப்பறியும் கதைக்கு இன்னும் ஆர்வமூட்டும் திரைக்கதையமைப்பும் மர்ம முடிச்சும் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. அமெரிக்க மற்றும் தமிழ்நாட்டு காவல்துறையினரை திறன் குறைந்தவர்களாக காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாயகன் - வில்லன், அவர்களுக்கு இடையில் தனிப்பட்ட பகை, நாயகன் - நாயகி, அவர்களுக்கு இடையில் என்ற வழக்கமான கதையும் தேவையற்ற இடங்களில் வணிகக் கட்டாயங்களுக்காக பாடல்கள் புகுத்தப்பட்டிருப்பதும் சலிப்பூட்டுவனவாக உள்ளன.
பாடல்கள் தொகு
வேட்டையாடு விளையாடு | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 2006 |
இசைப் பாணி | திரைப்படத்தின் ஒலிப்பதிவு |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | ஹாரிஸ் ஜயராஜ் |
ஹாரிஸ் ஜயராஜ் அவர்கள் இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார்.
பாடல் வரிகள் தாமரை எழுதியுள்ளனர்.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் |
1 | கற்க கற்க | தேவன் ஏகாம்பரம், திப்பு, நகுல், ஆண்ட்ரியா ஜெரெமையா | தாமரை | 04:54 |
2 | பார்த்த முதல் | பாம்பே ஜெயஸ்ரீ, உண்ணிமேனன் | 06:06 | |
3 | மஞ்சள் வெயில் | ஹரிஹரன், கிரிஷ், நகுல் | 05:54 | |
4 | உயிரிலே | மகாலட்சுமி ஐயர், ஸ்ரீநிவாஸ் | 05:13 | |
5 | நெருப்பே | பிராங்கோ சைமன், சுலேர் சாய், சௌம்யா ரவ்ஹ் | 04:50 |
விருதுகள் தொகு
- சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
- சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன்
மேற்கோள்கள் தொகு
- ↑ கோபாலகிருஷ்ணன், ச. (25 ஆகஸ்ட் 2020). "வேட்டையாடு விளையாடு வெளியான நாள்: உயர்தரமான போலீஸ் த்ரில்லர்". இந்து தமிழ். 25 ஆகஸ்ட் 2020 அன்று பார்க்கப்பட்டது.