2013 தமிழக மாணவர் எதிர்ப்புப் போராட்டங்கள்

2013 மார்ச்சு தமிழக மாணவர் எதிர்ப்புப் போராட்டங்கள் எனப்படுபவை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழகத்தின் கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும்.

பின்புலம் தொகு


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

நவம்பர் 2012 காலப் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அமைதியான எதிர்ப்புப் போராட்டத்தை இலங்கைப் படைத்துறை வன்முறை கொண்டு அடக்கியது.[1]. இது புகலிட மற்றும் தமிழக மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது. பெப்ரவரி, மார்சு 2013 காலப் பகுதியில் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் இனப்படுகொலைகள் தொடர்பாக மேலதிக ஒளிப்பட, நிகழ்பட மற்றும் பிற ஆதாரங்கள் வெளிவந்தன. மேலும், மார்ச்சு 2013 இல் ஐ. நா. மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தப் பின்னணியில் மாணவர் போராட்டங்கள் தொடங்கின.

நிகழ்வுகள் காலக் கோடு தொகு

  • மார்ச்சு 8 - சென்னை இலயோலாக் கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர்.
  • மார்ச்சு 10 - இலயோலாக் கல்லூரி மாணவர்கள் தமிழக காவல்துறையால் கைது செய்யப்படுகிறார்கள். போராட்டம் வேகமாகப் பரவுகிறது.[2]
  • மார்ச்சு 16 - தமிழக அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காலவரையற்று மூடுகிறது.
  • மார்ச்சு 16 - சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது.[3]
  • மார்ச்சு 18 - தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது.[4]
  • மார்ச்சு 19 - சிறு வணிகர்கள், நெசவாளர்கள், வழக்கறிஞர்கள், திரைப்படத் துறையினர் உடப்பட்ட சமூகத்தின் பல துறையினர் மாணவர்களோடு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கெடுக்கத் தொடங்கினர்.[5]
  • மார்ச்சு 20 - பெரும் எதிர்ப்புப் போராட்டம்.
  • மார்ச்சு 25 - சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் .[6]
  • மார்ச்சு 27 - திருச்சியில் காங்கிரசு கூட்டத்தைக் குழப்பி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காங்கிரசு கட்சியினர் கத்தி, கம்புகளால் தாக்கி 30 மாணவர்கள் காயம், 7 பேர் நிலை கவலைக்கிடமான நிலையில்.[7]
  • ஏப்பிரல் 4 - சட்ட கல்லூரி மாணவர்களின் கலந்தாய்வு கூட்டம்
  • ஏப்பிரல் 5 - புதுவையில் சட்டக் கல்லூரி மாணவர் கைது.
  • ஏப்பிரல் 8 - தமிழீழமும் மாணவர் கடமையும் - பொதுக் கூட்டம்
  • ஏப்பிரல் 20, 21 - "போற்குற்றமல்ல இனப்படுகொலையே.. இலங்கை அல்ல தனி தமிழீழமே" - ஒளிப்பட, ஓவிய, நிகழ்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கு

நோக்கங்களும் கோரிக்கைகளும் தொகு

பல்வேறு பகுதிகளிலுள்ள பலதரப்பட்ட மாணவர்களால் நடத்தப்படும் இப்போராட்டங்களில் எழுப்பப்படும் கோரிக்கைகள் சற்று வேறுபட்டாலும், அடிப்படை நோக்கம் ஒன்றே என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இவற்றில் பின்வருவன அடங்கும்:

  • இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சுதந்திரமான அனைத்துலக போர்க்குற்ற விசாரணை. இதனை இந்திய அரசு ஐ. நா. வில் வலியுறுத்த வேண்டும்.[8]
  • இலங்கையில் நடந்தது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லல்.
  • ஐ. நா. வில் அமெரிக்காவின் தீர்மானத்தைத் தாண்டிய வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐ. நா. வில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும்.[9]
  • இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கு இந்தியா உரியனவற்றைச் செய்யக் கூறி, குறிப்பாக தமிழர் தாயகப் பகுதிகளின் தன்னாட்சி தொடர்பான சுதந்திரமான வாக்கெடுப்பை வேண்டி.

போராட்ட வடிவங்கள் தொகு

காலவரையறையற்ற உண்ணாநிலை, அடையாள உண்ணாநிலை, சாலை மறியல், தொடர்வண்டி மறியல், அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல், உருவபொம்மை எரித்தல், உள்ளிருப்புப் போராட்டம், வகுப்புகளைப் புறக்கணித்தல், அமைதிப் பேரணி போன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தினர். மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்டுதல் நடந்தது. ஃபேஸ்புக்கில் படங்கள் மூலம் ஆதரவு திரட்டுதல்[10], குழுக்களை உண்டாக்கி மாணவர்களை இணைத்தல் போன்றவை நடந்தன.

விளைவுகள் தொகு

பொது மக்கள் தொகு

தமிழகம் தழுவிய மாணவர்களின் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பொது மக்கங்களில் ஆதரவு பெரிதும் இருந்தது. பல துறையினர் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் இவர்களின் போராட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் தொகு

புலம் பெயர் தமிழர்கள் பலர், குறிப்பாக தமிழ் இளையோர் அமைப்புக்கள் தமிழக மாணவர்களுக்கு உணர்வுத் தோழமை தெரிவித்தனர். மாணவர்களுக்கு ஆதரவு தரும் வகையில் தாமும் வெவ்வேறு நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாக புலம்பெயர் கல்வியாளர் சேரன் "மாணவர்களின் அறிவுத் தேடல் மிகுந்த உணர்வு பூர்வமான எழுச்சி ஈழத் தமிழர்களுக்கும் உவகையையும் ஊட்டத்தையும் வழங்கி உள்ளது. ஈழத்தமிழர்களது பல்வேறு தோழமைச் சக்திகளுக்கும் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து எங்களை ஆதரித்து வருகிற பல்வேறு தரப்பினருக்கும் உங்களுடைய எழுச்சி ஒத்தடமாகவும் உயிரூக்கியாகவும் அமைகிறது." என்று கூறினார்.[11]

தமிழக அரசு தொகு

மாணவர்களின் இந்தப் போராட்டங்களைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறையை அறிவித்தது.[9]

கல்லூரிகள் தொகு

போராட்டத்தைத் தடுப்பதற்காக பல கல்லூரிகளும் விடுமுறைகளை அறிவித்து, மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றின.[12] கிண்டி பொறியியல் கல்லூரியில் போராட்டம் நடத்துவதைத் தடுப்பதற்காகக் கல்லூரி நிர்வாகம் மூலம் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில், "போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், வருங்காலத்தில் அரசு வேலைகளுக்குத் தேர்வு செய்யப்படின் அவர்களது தேர்வு செல்லாததாக்கப்பட்டு, அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள்" என்ற பத்திரிக்கைச் செய்தியைக் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்திருந்தது. பின்னர், மார்ச்சு 18 அன்று நன்பகலில், மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. மேலும், கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு விடுதி மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஏப்ரல் 3ம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது [13]

காவல்துறை தொகு

தமிழக காவல்துறை கைதுகளை மேற்கொண்டும் இடையூறுகளை விளைவித்தும் மாணவர் எதிர்ப்புப் போராட்டங்களை கடும்போக்காக கையாண்டது. இப் போராட்டத்தில் ஈடுபடுவர்கள் நக்சலைடுகள் அல்லது தமிழீழ ஆதரவு அமைப்புகளால் தூண்டப்படுகிறார்கள் என்று சில காவல்துறை அதிகாரிகள் கருத்து கூறினர். மேலும், நடுவண் உளவு நிறுவனங்கள், இப் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஆவணப்படுத்த, தமிழக காவல்துறையினரிடம் இருந்து அடையாளப்படுத்தல் ஆதாரங்களைக் கோரின.[14]

இவற்றையும் பார்க்க தொகு




மேற்கோள்கள் தொகு

  1. Briefing Notes
  2. Students’ protests gain momentum across Tamil Nadu
  3. "மெரினா அருகே திடீர் உண்ணாவிரதம் : சட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைது". Archived from the original on 2013-03-17. பார்க்கப்பட்ட நாள் 2013-03-17.
  4. Hundreds of students arrested in Chennai for anti-Lanka protests
  5. Protests in Tamil Nadu pick up steam
  6. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
  7. கத்தி , கம்புகளால் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் கட்சி: 30 பேர் காயம், 7 பேர்
  8. Students protest continues in Tamil Nadu to press Centre for UN resolution against Sri Lanka
  9. 9.0 9.1 Tamil Nadu shuts down colleges to prevent student protests against Sri Lanka
  10. "facebook image". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 17, 2013.
  11. தமிழக மாணவர் எழுச்சிக்குக் கவிஞர் சேரன் வாழ்த்து
  12. http://www.ndtv.com/article/south/tamil-nadu-shuts-down-colleges-to-prevent-student-protests-against-sri-lanka-342962
  13. ஏப்ரல் 3 பொறியியல் கல்லூரிகள் திறப்பு என அறிவிப்பு
  14. Students across Tamil Nadu join anti-Lanka stir

வெளி இணைப்புகள் தொகு