அனுர குமார திசாநாயக்க

இலங்கை ஜனாதிபதி
(அனுர திசாநாயக்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake, சிங்களம்: අනුර කුමාර දිසානායක, பிறப்பு: 24 நவம்பர் 1968), இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 2024 செப்டம்பர் 23 அன்று இலங்கையின் 9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] திசாநாயக்கா நாடாளுமன்ற உறுப்பினராக 2000 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்துள்ளார். இவர் 2024 முதல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராகவும், 2019 முதல் தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் உள்ளார். 2019 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். 2024 அரசுத்தலைவர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஊழல் எதிர்ப்பாளராகப் பரப்புரை செய்து, தேர்தலில் வெற்றியாளராக வெளிப்பட்டார்[3]

அனுர குமார திசாநாயக்க
Anura Kumara Dissanayake
අනුර කුමාර දිසානායක
இலங்கையின் 9-ஆவது அரசுத்தலைவர்
(10-ஆவது சனாதிபதி)
பதவியில் உள்ளார்
பதவியில்
23 செப்டம்பர் 2024
முன்னையவர்ரணில் விக்கிரமசிங்க
எதிர்க்கட்சியின் தலைமை ஆசான் (கொறடா)
பதவியில்
3 செப்டம்பர் 2015 – 18 திசம்பர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்டபிள்யூ. டி. ஜெ. செனிவிரத்தின
பின்னவர்மகிந்த அமரவீர
மக்கள் விடுதலை முன்னணி
பதவியில் உள்ளார்
பதவியில்
29 செப்டம்பர் 2014
முன்னையவர்சோமவன்ச அமரசிங்க
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 சூலை 2019
முன்னையவர்புதிய பதவி
நாடாளுமன்ற உறுப்பினர்
கொழும்பு மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2015
நாடாளுமன்ற உறுப்பினர்
குருணாகல் மாவட்டம்
பதவியில்
1 ஏப்ரல் 2004 – 8 ஏப்ரல் 2010
நாடாளுமன்ற உறுப்பினர்
தேசியப் பட்டியல்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 17 ஆகத்து 2015
பதவியில்
18 அக்டோபர் 2000 – 7 பெப்ரவரி 2004
விவசாயம், நிலம், கால்நடைத்துறை அமைச்சர்
பதவியில்
10 ஏப்ரல் 2004 – 24 சூன் 2005
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர்மகிந்த ராசபக்ச
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
திசாநாயக்க முதியன்சிலாகே அனுர குமார திசாநாயக்க

24 நவம்பர் 1968 (1968-11-24) (அகவை 55)
 தம்புத்தேகமை, அனுராதபுரம் மாவட்டம், இலங்கை
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் சக்தி
துணைவர்மல்லிகா திசாநாயக்க
பிள்ளைகள்1
முன்னாள் கல்லூரிகளனி பல்கலைக்கழகம்
கையெழுத்து
இணையத்தளம்www.akd.lk

திசாநாயக்க தனது பள்ளிப் பருவத்திலிருந்தே மக்கள் விடுதலை முன்னணியுடன் தொடர்புடையவராக இருந்தார். 1995-இல் ஜேவிபி அரசியல் தலைமையகத்தில் இணைவதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியலில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். செப்டம்பர் 2000 முதல் தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்பட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டோ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். திசாநாயக்க அன்றைய அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் 2004 முதல் 2005 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர்.

தொடக்க வாழ்க்கை

தொகு

அனுர குமார திசாநாயக்க இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார்.[4] இவரது தந்தை ஒரு அலுவலக ஊழியர்.[5] இவருக்கு ஒரு சகோதரி உள்ளார்.[6]

அனுர குமார தனது பள்ளிப்படிப்பை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும், தம்புத்தேகமை மத்திய கல்லூரியிலும் கற்றார். தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக இவர் விளங்கினார்.[6] பாடசாலை நாட்களிளில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக விளங்கிய அனுர குமார, அக்கட்சியில் 1987 இல் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1987-89 ஜேவிபி புரட்சியின் தொடக்கத்துடன் 1987 முதல் முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.[6] பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பிறகு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறினார். ஓராண்டு கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு, 1995 இல் இளம் அறிவியல் பட்டத்துடன் வெளியேறினார்.[7]

அரசியல் வாழ்க்கை

தொகு

அனுர குமார 1995 இல் சோசலிச மாணவர் சபையின் தேசிய அமைப்பாளராகவும், மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 1998 இல் மவிமு இன் அரசாயத்திற்கு நியமிக்கப்பட்டார்.[7] அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கீழ் மீண்டும் நாடாளுமன்ற அரசியலில் நுழைந்த மக்கள் விடுதலை முன்னணி 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசை ஆதரித்தது. இருப்பினும், கட்சி பின்னர் குமாரதுங்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தது.

அனுர 2000 நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்றார். 2001 தேர்தலில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார். 2004 இல், மவிமு இலங்கை சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் 2004 தேர்தலில் போட்டியிட்டு 39 இடங்களை நாடாளுமன்றத்தில் கைப்பற்றியது. அனுர குமார குருணாகல் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். குமாரதுங்கவின் அமைச்சரவையில் விவசாயம், கால்நடைகள், நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக 2004 பெப்ரவரியில் நியமிக்கப்பட்டார்.[8] 2005 சூன் 16 இல் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார், ஜேவிபி தலைவர் அமரசிங்க, அரசுத்தலைவர் குமாரதுங்க அரசின் சர்ச்சைக்குரிய விடுதலைப் புலிகளுடனான வட, கிழக்கு மாகாணங்களின் சுனாமி நிவாரண ஒருங்கிணைப்புப் பொறிமுறையை எதிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு மவிமு தலைவர் அமரசிங்க எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து, மற்ற மவிமு அமைச்சர்களுடன் சேர்ந்து அனுரவும் 2005 சூன் 16 இல் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்தார்.[9][10] பின்னர் செப்டம்பர் 2015 முதல் திசம்பர் 2018 வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடாவாகப் பணியாற்றினார்.[11]

2014 பெப்ரவரி 2 அன்று, ஜே.வி.பி.யின் 17வது தேசிய மாநாட்டின் போது, சோமவன்ச அமரசிங்கவிற்குப் பின், கட்சியின் புதிய தலைவராக அனுர குமார திசாநாயக்க நியமிக்கப்பட்டார்.[12]

2019 அரசுத்தலைவர் தேர்தல்

தொகு

2019 ஆகத்து 18 அன்று, ஜே.வி.பி தலைமையிலான அரசியல் கூட்டமைப்பான தேசிய மக்கள் சக்தி, 2019 அரசுத்தலைவர் தேர்தலில் திசாநாயக்க தனது அரசுத்தலைவர் வேட்பாளராக இருப்பார் என்று அறிவித்தது. இத்தேர்தலில் திசாநாயக்க 418,553 (3%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார்.[13]

2024 அரசுத்தலைவர் தேர்தல்

தொகு

2023 ஆகத்து 29 அன்று, திசாநாயக்க மீண்டும் 2024 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவித்தது.[14] தொடரும் இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் முந்தைய அரசாங்கங்களின் அதிருப்தியைப் பெருமளவில் தனது பரப்புரையில் பயன்படுத்தி தேர்தலில் 5,634,915 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றார்.[15]

அரசியல் நிலைப்பாடுகள்

தொகு

திசாநாயக்க ஒரு மார்க்சியவாதியாகவும்,[16] ஒரு நியோ-மார்க்சியவாதியாகவும் என ஊடகங்களில் வர்ணிக்கப்படுகிறார்.[17] திசாநாயக்க ஆட்சிக்கு வந்து 45 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைத்து தனது கொள்கைகளுக்கு பொது ஆணையை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். அவர் 2024ஆரசுத்தலைவர் தேர்தலில் ஊழல் எதிர்ப்பு மற்றும் வறுமை எதிர்ப்பு தளத்தில் போட்டியிட்டார்.[18] கொழும்பைத் தளமாகக் கொண்ட சந்தை சார்பு சிந்தனைக் குழுவான அட்வக்காட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத் பெர்னாண்டோ என்பவர், திசாநாயக்க "இப்போது வணிக-சார்பு அணுகுமுறை, கட்டணக் கட்டமைப்பை எளிமைப்படுத்துதல், வணிகச் சூழலை மேம்படுத்துதல், வரி நிர்வாகத்தை சீர்திருத்துதல், ஊழலுக்கு முடிவு கட்டுதல் ஆகியவற்றுக்காக வாதிடுகிறார், இருப்பினும், தனியார் துறையை வளர்ச்சியின் இயந்திரமாக நிலைநிறுத்துவது, கடன் பேச்சுவார்த்தைகளில் அவரது நிலைப்பாடு தெளிவாக இல்லை." என்று குறிப்பிடுகிறார்.[19]

மேற்கோள்கள்

தொகு
  1. "Anura Kumara to be sworn in as President today". www.adaderana.lk. பார்க்கப்பட்ட நாள் 2024-09-23.
  2. Radhakrishnan, R. K. (2024-09-22). "Anura Kumara Dissanayake Wins Sri Lanka Presidential Election 2024". Frontline. Archived from the original on 23 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  3. "Anura Kumara Dissanayake elected President of Sri Lanka". www.adaderana.lk. Archived from the original on 23 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  4. "Who is Sri Lanka's new president Anura Kumara Dissanayake?". BBC இம் மூலத்தில் இருந்து 23 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240923003701/https://www.bbc.com/news/articles/c206l7pz5v1o. 
  5. Ellis-Petersen, Hannah (23 September 2024). "Anura Kumara Dissanayake: who is Sri Lanka's new leftist president?". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 24 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240924023958/https://www.theguardian.com/world/2024/sep/23/anura-kumara-dissanayake-who-is-sri-lanka-new-leftist-president. 
  6. 6.0 6.1 6.2 David, Anusha. "Anusha David speaks to Anura Kumara Dissanayake". jvpsrilanka.com. JVP. Archived from the original on 8 February 2024. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
  7. 7.0 7.1 "A look back into the life of the NPP Presidential candidate; Anura K.". Newsfirst இம் மூலத்தில் இருந்து 23 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240923011037/https://www.newsfirst.lk/2019/08/18/a-look-back-into-the-life-of-the-npp-presidential-candidate-anura-k/. 
  8. "Agriculture Minister Anura Kumara Dissanayake will launch tomorrow Tank renovation scheme at Yapahuwa". Archived from the original on 25 September 2015. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
  9. "JVP leaves coalition Government". தமிழ்நெட். 16 June 2005 இம் மூலத்தில் இருந்து 23 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240923013235/https://www.tamilnet.com/art.html?catid=13&artid=15172. 
  10. Weerasinghe, Chamikara (17 June 2005). "VP leaves Govt with regret". Daily News, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 5 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605020409/http://www.dailynews.lk/2005/06/17/. 
  11. "Parliament of Sri Lanka – Chief Opposition Whips". parliament.lk. இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 19 September 2024.
  12. Liyanasuriya, Sathya (6 February 2014). "Can Anura's logical oratory spur people's imagination?". Daily Mirror இம் மூலத்தில் இருந்து 5 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191005064231/http://www.dailymirror.lk/print/opinion/can-anuras-logical-oratory-spur-peoples-imagination/172-42702. 
  13. "NPPM Declares JVP Leader Anura Kumara Dissanayake As Its 2019 Presidential Candidate". கொழும்பு டெலிகிராஃபு. 18 August 2019. Archived from the original on 10 August 2022. பார்க்கப்பட்ட நாள் 19 August 2019.
  14. "JVP on the track before race is announced". Daily Mirror. Archived from the original on 6 November 2023. பார்க்கப்பட்ட நாள் 6 November 2023.
  15. "Sri Lanka presidential elections: What victory of Marxist Anura Kumara Dissanayake tells about the popular mood". The Indian Express. 2024-09-22. பார்க்கப்பட்ட நாள் 2024-09-25.
  16. "Marxist Dissanayake wins Sri Lanka's presidential election as voters reject old guard". NPR. அசோசியேட்டட் பிரெசு. 22 September 2024. Archived from the original on 23 September 2024. பார்க்கப்பட்ட நாள் 23 September 2024.
  17. Reed, John; Ratnaweera, Mahendra (22 September 2024). "Neo-Marxist Dissanayake upsets odds to win Sri Lanka presidency". பைனான்சியல் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 23 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240923013705/https://www.ft.com/content/a4d7218c-7760-44e0-9222-5cd72662fe14. 
  18. Ganguly, Sudipto; Jayasinghe, Uditha (22 September 2024). "Sri Lanka's president-elect breaks a tradition of political lineage". ராய்ட்டர்ஸ். https://www.reuters.com/world/asia-pacific/sri-lankas-marxist-leaning-dissanayake-promises-change-his-popularity-soars-2024-09-20/. 
  19. Pathirana, Saroj (13 September 2024). "Could Marxist Anura Dissanayake become Sri Lanka's next president?". Al Jazeera. Archived from the original on 22 September 2024. பார்க்கப்பட்ட நாள் 23 September 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுர_குமார_திசாநாயக்க&oldid=4146777" இலிருந்து மீள்விக்கப்பட்டது