அரைப்புள்ளி (தமிழ் நடை)
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.

இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
நிறுத்தக்குறிகளுள் புள்ளி என்பது அடிப்படையானது. அது கால்புள்ளி (comma), அரைப்புள்ளி (semicolon), முக்கால்புள்ளி (colon), முற்றுப்புள்ளி (full stop), புள்ளி (point), முப்புள்ளி (ellipsis) என்று வேறுபடுத்தப்பட்டு எழுத்தில் கையாளப்படுகிறது.
அரைப்புள்ளி இட வேண்டிய இடங்கள்
தொகுஎழுத்தில் கருத்துகளை வெளிப்படுத்தும்போது கால்புள்ளி குறிக்கின்ற இடைவெளியைவிட சற்றே மிகுந்த அளவு இடைவெளியைக் குறிக்க அரைப்புள்ளி பயன்படுகிறது. அரைப்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
- 1) ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.[1]
- எடுத்துக்காட்டு:
- புயற்காற்று வீசியதும் மரங்கள் சாய்ந்தன; ஒலைக் கூரைகள் பறந்தன; மண்சுவர்கள் இடிந்து விழுந்தன.
- 2) காரணத்தையும் விளைவுகளையும் குறித்து வரும் முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- காந்தி சொன்னார்; கதர் அணிந்தோம்.
- 3) ஒப்புமைப்படுத்துதல், மாறுபட்ட நிலைகளை இணைத்துக் காட்டுதல் என்னும் பொருட்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- அறிஞர்கள் அடக்கமாக இருப்பார்கள்; மூடர்கள் ஆரவாரம் செய்வார்கள்.
- 4) ஒரு தொகுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட விவரங்களைக் கொண்டிருக்கும்போது தொகுப்புகளுக்கு இடையில் அரைப்புள்ளி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டவர்கள்: செல்வி, மதுரை; அமுதன், குளத்தூர்; அறவாணன், திருவையாறு; கண்ணகி, பூம்புகார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Using semicolons". The Writing Center (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-11-11. Retrieved 2020-11-08.
A semicolon is most commonly used to link (in a single sentence) two independent clauses that are closely related in thought. When a semicolon is used to join two or more ideas (parts) in a sentence, those ideas are then given equal position or rank.
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.