இணைப்புக்கோடு (தமிழ் நடை)
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.[1][2][3]
இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
நிறுத்தக்குறிகளுள் ஒன்று இணைப்புக்கோடு (dash) ஆகும். சிறிய அளவான இணைப்புக்கோடு (–) en dash; நீண்ட இணைப்புக்கோடு (—) em dash. சிறிய அளவான இணைப்புக்கோட்டை இணைப்புச் சிறுகோடு என்று அழைக்கலாம். Hyphen (-) என்பதையும் சிலர் இணைப்புச் சிறுகோடு என்றே அழைக்கின்றனர்.
இவண் இணைப்புக்கோடு என்பது (—) em dash என்னும் பொருளில் ஆகும்.
இணைப்புக்கோடு (—)/ இணைப்புச் சிறுகோடு (-)
தொகுஇணைப்புக்கோடு (dash) இணைப்புச் சிறுகோடு (hyphen) ஆகிய இரண்டு நிறுத்தக்குறிகளையும் வேறுபடுத்திக் காண்பது முறை.
தட்டச்சு செய்யும்போது ஒரே குறியை (-) இணைப்புச் சிறுகோடாகவும் குறும் இணைப்புக்கோடாகவும் பயன்படுத்துவதும் உண்டு. நெடும் இணைப்புக்கோடு இரண்டு சிறுகோடுகளால் குறிக்கப்படும் (--).
இணைப்புக்கோடுகள் பயன்படுத்துவது குறித்து சில வழிமுறைகள் எடுத்துக்காட்டுகளோடு கீழே தரப்படுகின்றன:
- 1) தனித்தனியாகக் கூறப்பட்டவற்றின் முடிவில் அவை ஒரு தொகுப்பு எனக் காட்டும் சொல்லின் முன் இணைப்புக்கோடு பயன்படுத்தப்படுகிறது.
- எடுத்துக்காட்டுகள்:
- வரிசைப் பற்கள், மோவாயின் வலது புறத்தில் கறுப்பு மச்சம், கருகருவென முடி — இத்தனையும் ஒன்றுசேரப் பாட்டி அழகாகக் காட்சியளித்தாள்.
- கால்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து — இவைதான் இந்த வார விளையாட்டு நிகழ்ச்சிகள்.
- 2) வாக்கியங்களை இணைக்கும் என்று, என்பது போன்ற சொற்களைத் தவிர்க்கும்போது இணைப்புக்கோடு பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டுகள்:
- "சென்னைக்குப் போவது இன்றா, நாளையா?" — கந்தனின் மனதில் எழுந்த கேள்வி (— = என்பது).
- "வாடா, போவோம்" — அந்த அம்மாள் முத்துவைத் தூக்கிப் பேருந்தில் உட்காரவைத்தாள் (— = என்று கூறி).
- 3) ஒரு வாக்கியத்தின் இடையே செருகப்படும் மற்றொரு தொடரின் முன்னும் பின்னும் இணைப்புக்கோடு பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டு:
- அப்போது, சுப்பிரமணியம் — சரளாவின் அப்பா — தமக்குள்ளே ஏளனமாக முணுமுணுத்துக்கொண்டார்.
- 4) தனி வாக்கியங்களுக்கு இடையில் உள்ள இலக்கண உறவைக் காட்டும் சொல்லுக்குப் பதிலாக இணைப்புக்கோடு பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டு:
- அவர் புகைபிடிக்கிறாரா — என்னால் நம்ப முடியவில்லையே! (— = அதை).
- 5) இயல்பான வாக்கிய அமைப்பை மாற்றி அமைக்கும்போது பெரும்பாலும் பயனிலைத் தொடரை முதலில் தரும்போது அந்தத் தொடரின் பின் இணைப்புக்கோடு இடலாம் (இந்த இடங்களில் இணைப்புக்கோட்டுக்குப் பதிலாகக் கால்புள்ளியைப் பயன்படுத்துவதே மிகுதி).
- எடுத்துக்காட்டு:
- இருவரும் ஒருவரையொருவர் ஏறெடுத்துப் பார்க்காமலே அமைதியாக நடந்தனர் — பேருந்து நிலையம் நோக்கி.
- 6) இடையில் என்னும் பொருளில் இரு சொற்களை இணைத்துக் காட்ட இணைப்புக்கோடு இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- இந்தியா — பாக்கிசுதான் புதிய ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம். (இந்தியாவுக்கும் பாகிசுதானுக்கும் இடையில்)
- 7) முதல்...வரை' என்னும் பொருள் தரும் முறையில் இரு இலக்கங்களுக்கு இடையில் இணைப்புக்கோடு இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- சங்ககாலம்: கி.மு. 300 — கி.பி. 200
- 8) மேற்கோளுக்கும் நூலின் பெயர் அல்லது ஆசிரியரின் பெயருக்கும் இடையில் இணைப்புக்கோடு இடுவது முறை.
- எடுத்துக்காட்டுகள்:
- "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்" — குறள்
- "காக்கைச் சிறகினிலே நந்தலாலா" — பாரதியார்
- 9) சொற்களையும் தொடர்களையும் என்னவென்றால் அல்லது எதுவென்றால் என்னும் பொருளில் தொடர்புபடுத்த இணைப்புக்கோடு இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- பெயர் — கண்ணன்
- பிறந்த ஊர் — திருநெல்வேலி
- 10) சொற்களையும் தொடர்களையும் என்பது என்னும் பொருளில் தொடர்புபடுத்த இணைப்புக்கோடு இடுவது முறை.
- எடுத்துக்காட்டுகள்:
- நீதிமன்றம் — வழக்குகள் விசாரிக்கப்பட்டு முறையான தீர்வு வழங்கப்படும் இடம்
- அரங்கம் — மக்கள் கூடுகின்ற பொதுவிடம்
இணைப்புச் சிறுகோடு இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
- 1) ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில் இருவேறு சொற்களை ஒன்றாகத் தொடுத்து ஒரு அலகாகக் காட்ட அவற்றின் இடையில் இணைப்புச் சிறுகோடு இடுவது முறை.
- எடுத்துக்காட்டுகள்:
- வினாடி-வினா நிகழ்ச்சி
- நெல்லை-சென்னை விரைவுப் பேருந்து
- பகல்-இரவுக் காட்சிகள் உண்டு
2) சுருக்கப்பட்ட சொல்லின் முதல் எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும் இடையில் இணைப்புச் சிறுகோடு இடுவது முறை.
- எடுத்துக்காட்டுகள்:
- எ-டு (எடுத்துக்காட்டு)
- உ-ம் (உதாரணம்)
(குறிப்பு: இவ்வழக்கம் இப்போது குறைந்து வருகிறது).
3) தொலைபேசி முதலியவற்றில் தனித்தனிக் கூறுகளாகக் காட்ட வேண்டிய தொகுதி எண்களுக்கு நடுவில் இணைப்புச் சிறுகோடு இடுவது முறை.
- எடுத்துக்காட்டுகள்:
- தொலைபேசி: 044-2345678
- தொலைநகல்: 91-44-2345679
4) ஒரு வரியின் முடிவில், இடம் இல்லாததன் காரணமாக ஒரு சொல்லைப் பிரிக்கும்போது முதல் பிரிவை அடுத்து இணைப்புச் சிறுகோடு இடலாம்.
- எடுத்துக்காட்டு:
நூலகம் சென்று சில மணி நேரம் படித்தபின் அரசு வீடு திரும்ப எண்ணி-
யிருந்தான்.
(குறிப்பு: தட்டச்சு முறையிலும் அச்சுக் கோப்பு முறையிலும் இவ்வழக்கம் அருகி வருகிறது. ஆனால், கையெழுத்து முறையில் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது).
இணைப்புச் சிறுகோடு தேவையில்லாத இடங்கள்:
1) எண்ணின் உட்பிரிவாக வரும் எழுத்துக்கு முன்னும் எழுத்தின் உட்பிரிவாக வரும் எண்ணுக்கு முன்னும் இணைப்புச் சிறுகோடு தேவை இல்லை.
- எடுத்துக்காட்டு:
- 10 ஆ, பெருமாள் தெரு
- பேருந்து எண் 7 B
(குறிப்பு: 10-ஆ, 7-B என்று தருவதைத் தவிர்க்கலாம்).
2) ஊர்ப்பெயருக்கும் அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கும் இடையில் இணைப்புச் சிறுகோடு தேவை இல்லை.
- எடுத்துக்காட்டு:
- நாகர்கோவில் 629 001
- திருச்சிராப்பள்ளி 620 001
(குறிப்பு: நாகர்கோவில்-629 001, திருச்சிராப்பள்ளி-620 001 என்பதைத் தவிர்க்கலாம்).
சான்றுகள்
தொகு1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.
மேற்கோள்கள்
தொகு- ↑ McMillin, Scott, ed. (2001). The First Quarto of Othello. United Kingdom: Cambridge University Press. pp. 21–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-56257-7.
- ↑ Shakespear, William (1619). M. VVilliam Shake-speare : his true chronicle history of the life and death of King Lear and his three daughters, with the unfortunate life of Edgar, sonne and heire to the Earle of Glocester, and his sullen and assumed humour of Tom of Bedlam. As it was plaid before the Kings Maiesty at White-Hall, upon S. Stephens night, in Christmas Hollidaies. By his Maiesties Seruants, playing vsually at the Globe on the Banck-side. Printed for Nathaniel Butter. p. 12r.
- ↑ Shakespeare, William (1622). The tragoedy of Othello, the Moore of Venice : as it hath beene diuerse times acted at the Globe, and at the Black-Friers, by his Maiesties Seruants (in ஆங்கிலம்). London: Nicholas Okes. pp. 19.