உசேன் ஓன்
உசேன் பின் டத்தோ ஓன் (Hussein bin Dato' Onn, பெப்ரவரி 12, 1922 — மே 29, 1990) என்பவர் மலேசியாவின் மூன்றாவது பிரதமர். 1976 லிருந்து 1981 வரை பிரதமர் பதவியை வகித்தவர்.
உசேன் ஓன் Hussein Onn 胡先翁 | |
---|---|
மூன்றாவது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 1976 ஜனவரி 15 – 1981 ஜுலை 16 | |
ஆட்சியாளர்கள் | யாஹ்யா பெத்ரா கிளாந்தான் அகமட் ஷா பகாங் |
Deputy | துன் மகாதீர் பின் முகமது |
முன்னையவர் | துன் அப்துல் ரசாக் உசேன் |
பின்னவர் | துன் மகாதீர் பின் முகமது |
மூன்றாவது மலேசியத் துணைப் பிரதமர் | |
பதவியில் 1973 ஆகஸ்ட் 13 – 1976 ஜனவரி 15 | |
பிரதமர் | துன் அப்துல் ரசாக் உசேன் |
முன்னையவர் | இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் |
பின்னவர் | துன் மகாதீர் பின் முகமது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜொகூர் பாரு, மலாயா (இப்போது மலேசியா) | 12 பெப்ரவரி 1922
இறப்பு | 28 மே 1990 சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 68)
அரசியல் கட்சி | சுயேட்சை (அரசியல்வாதி) (1987–1990) தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு (1968–1987) மலாயா விடுதலை கட்சி (1951–1963) தேசிய கட்சி (Parti Negara) (1963–1968) |
துணைவர் | சுகைலா நோ |
பிள்ளைகள் | 6 |
முன்னாள் கல்லூரி | இந்திய தேசிய இராணுவம் லிங்கன்ஸ் இன் (சட்டத் துறை) |
தொழில் | வழக்குரைஞர் |
இவர் ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாரு நகரில் 1922 பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தவர். தகப்பனாரின் பெயர் டத்தோ ஓன் ஜாபார். தாயாரின் பெயர் டத்தின் ஹலிமா உசேன். மலேசியாவில் பிரசித்தி பெற்று விளங்கும் கோலாலம்பூர் துன் உசேன் ஓன் கண் மருத்துவமனை தோற்றுவிக்கப்படுவதில் முக்கிய பங்கு வகித்தவர்.[1]
வாழ்க்கை வரலாறு
தொகுதுன் உசேன் ஓன், தன்னுடைய தொடக்கக் கல்வியை சிங்கப்பூர், தெலுக் குராவ் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக் கல்வியை ஜொகூர், ஆங்கிலக் கல்லூரியில் பெற்றார். 1940இல் ஜொகூர் இராணுவப் படையில் பயிற்சி மாணவராக சேர்ந்தார். அதன் பின்னர் ஓர் ஆண்டு கழித்து அவர் வட இந்தியா, உத்தராகண்டம், டேராடூன் நகரில் இருக்கும் இந்திய இராணுவக் கழகத்திற்கு, மேல் பயிற்சிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.[2]
இந்திய இராணுவத்தில்
தொகுஇராணுவக் கழகத்தில் மேல் பயிற்சிகளை முடித்துக் கொண்டதும் அவர் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின் போது அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போருக்குப் பின்னர், ராவல்பிண்டியில் இருந்த மலாயா காவல் துறை பயிற்சி முகாமில் பயிற்றுநகராகவும் சேவை செய்தார்.[3]
1945இல் மலாயாவுக்குத் திரும்பிய அவர், ஜொகூர் பாரு காவல் முகாமில் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4] மறுவருடம் அவர் மலாயா குடிமைப் பணித் துறையில் (Malaya Civil Service) சேர்ந்து, ஜொகூர், சிகாமட்டில் துணை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அடுத்து அவர், சிலாங்கூர், கிள்ளான், கோலா சிலாங்கூர் பகுதிகளுக்கு மாவட்ட அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.[5]
ஆழமான தேசிய உணர்வுகளையும், அரசியல் பின்னணிகளையும் கொண்ட குடும்பத்தில் இருந்து துன் உசேன் ஓன் வந்தவர். அந்த அரசியல் பின்னணிகள் இவரையும் விட்டு வைக்கவில்லை. அரசாங்கப் பொதுச் சேவைகளில் இருந்து வெளியேறிய இவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1949இல் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு என்று அழைக்கப்படும் அம்னோவில் சேர்ந்து, அதன் இளைஞர் அணியின் முதல் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.
மலாயாவில் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பை உருவாக்குவதில் துன் உசேன் ஓன் அவர்களின் தந்தையார் டத்தோ ஓன் ஜாபார் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். 1950இல் துன் உசேன் ஓன், அம்னோவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் 1951இல், அம்னோவை விட்டு விலகி, தன் தந்தை டத்தோ ஓன் ஜாபார் உருவாக்கிய மலாயா விடுதலை கட்சியில் இணைந்தார்.[6]
லண்டன் பயணம்
தொகுதுன் உசேன் ஓன், மலாயா விடுதலை கட்சியில் சேர்ந்த காலத்தில், அக்கட்சியின் செல்வாக்கு குறைந்து வந்தது. இந்தக் கட்டத்தில் அவர் லண்டன் லிங்கன்ஸ் இன் (Lincoln's Inn) சட்டக் கல்லூரியில் சட்டம் பயில சென்றார். மாவழக்கறிஞர் பட்டத்தையும் (Barrister-at-Law) பெற்றார். நாடு திரும்பிய அவர் மலாயா, கோலாலம்பூரில் வழக்குரைஞராகச் சேவை செய்தார்.[7]
அதன் பின்னர் இவர் பல ஆண்டு காலம் அரசியலில் ஈடுபடவில்லை. 1968ஆம் ஆண்டில், அப்போது பிரதமராக துன் அப்துல் ரசாக் உசேன், இவரை அம்னோவில் மறுபடியும் சேருமாறு கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக, 1969 மலேசியப் பொதுத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் மலேசியக் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பிரதமர் பதவி
தொகு1973 ஆகஸ்ட் 13இல் துன் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் காலமானதையொட்டி, அவர் மலேசியாவின் மலேசிய துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.[8]
மூன்று ஆண்டுகள் கழித்து, 1976 ஜனவரி 15இல் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் இரத்தப் புற்று நோய் காரணமாக லண்டனில் காலமானார். துன் அப்துல் ரசாக்கின் இறப்பிற்குப் பின்னர், துன் உசேன் ஓன் மலேசியாவின் பிரதமரானார்.[9] எனினும், உடல்நிலை காரணமாக அவர் 1981 ஜுலை 16 ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
துன் உசேன் ஓன் கண் மருத்துவமனை
தொகுபிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், அவர் தொடர்ந்து சமூகநலத் திட்டங்களில் அதிக அக்கறை காட்டி வந்தார். உலகளாவிய நிலையில் பிரசித்தி பெற்று விளங்கும் கோலாலம்பூர் துன் உசேன் ஓன் கண் மருத்துவமனை உருவாக்கப்படுவதில் முக்கியப் பங்காற்றினார்.
இறப்பு
தொகுமாரடைப்பு காரணமாக அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ சீட்டோன் மருத்துவமனையில் 1990 மே 29இல் காலமானார். அப்போது அவருக்கு வயது 68. அவருடைய மகன் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் உசேன் ஓன், தற்போது மலேசிய அமைச்சரவையில் தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
குடும்பம்
தொகுதுன் உசேன் ஓன் அவர்களின் தகப்பனாரின் பெயர் டத்தோ ஓன் ஜாபார். இவர் மலாயாவின் ஒரு விடுதலைப் போராட்டவாதி. அம்னோ எனும் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பை உருவாக்கியவர். துன் உசேன் ஓனின் தாத்தா டத்தோ ஜாபார் ஹாஜி முகமட் என்பவர் ஜொகூர் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர் ஆகும்.
இவருடைய தாயார் ஹனீம் ரொகாயா துருக்கியில் இருக்கும் ஸ்கார்சியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். துன் உசேன் ஓனின் மனைவியின் பெயர் சுகைலா நோ. டேவான் ராக்யாட்டின் முதல் சபாநாயகரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான டான் ஸ்ரீ ஹாஜி முகமட் நோ ஓமார் அவர்களின் புதல்விதான் சுகைலா நோ. துன் உசேன் ஓன், மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக் உசேன், அவர்களின் மைத்துனர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tun Hussein Onn realized the necessity to have a dedicated Eye Hospital which will provide state-of-the-art Eye care to the Malaysians to prevent unnecessary blinding disorders". Archived from the original on 2013-04-26. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.
- ↑ "In 1940 and was sent a year later to the Indian Military Academy in Dehra Dun, India. Upon completion of his training, he was absorbed into the Indian Army". Archived from the original on 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.
- ↑ "After the war, his vast experience prompted the British to employ him as an instructor at the Malayan Police Recruiting and Training Centre in Rawalpindi". Archived from the original on 2013-05-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.
- ↑ Tun Hussein came back to Malaysia in 1945 and was appointed Commandant of the Johor Bahru Police Depot.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ The following year he joined the Malaya Civil Service as an assistant administrative officer in Segamat, Johor. He was later posted to the state of Selangor, becoming Kelang and Kuala Selangor’s district officer.
- ↑ Tun Hussein however left UMNO in 1951 to join his father in forming the Independence of Malaya Party (IMP).
- ↑ Tun Hussein went to London to study law at Lincoln's Inn, qualifying as a Barrister-at-Law.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Tun Hussein’s meteoric rise continued when on August 13, 1973 he succeeded the late Tun Dr Ismail as the Deputy Prime Minister.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Due in part to leukemia, Abdul Razak died on January 14, 1976 while seeking medical treatment in London.