எழுத்தர்களின் கட்டிடம்

எழுத்தர்களின் கட்டிடம் (Writers' Buildings) என்பது கொல்கத்தாவின் பி. பி. டி. பாகில் அமைந்துள்ளதொரு கட்டிடம். இக்கட்டிடத்தில், மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலகம் செயற்பட்டு வந்தது. இக்கட்டிடத்தின் மொத்த நீளம் 150 மீட்டர். இதன் முழுநீளமும் பிபிடி பாகின் நடுவிலமைந்துள்ள லால் தீகியின் (சிவப்பு ஏரி) வடக்குக் கரையோரம் அமைந்துள்ளது.

எழுத்தர்களின் கட்டிடம்
মহাকরণ
முகப்புத் தோற்றம்
Map
பொதுவான தகவல்கள்
முகவரிH8FX+GGJ, பினோய் பாதல் தினேஷ் பாக் வடக்குத் தெரு, பினோய்-பாதல்-தினேஷ் பாக், கொல்கத்தா – 700001
நகரம்கொல்கத்தா, மேற்கு வங்காளம்
நாடு இந்தியா
ஆள்கூற்று22°34′25″N 88°20′59″E / 22.57369°N 88.349634°E / 22.57369; 88.349634
கட்டுமான ஆரம்பம்1777
திறக்கப்பட்டது1780; 244 ஆண்டுகளுக்கு முன்னர் (1780)
உரிமையாளர்மேற்கு வங்காள அரசு
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை3
தளப்பரப்பு37850 சதுர அடி
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)தாமசு லியான்

துவக்கத்தில் இக் கட்டிடம், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணிபுரிந்த இளநிலை எழுத்தர்களின் அலுவலமாக இருந்தது. 1777 ஆம் ஆண்டில் தாமசு லியான் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்துவந்த காலங்களில் பல விரிவாக்கங்கள் செய்யப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர், பிற அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோரின் அலுவலகமாக இருந்தது. அக்டோபர் 4, 2023 இல் கட்டிடத்தின் மறுசீரமைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பெரும்பான்மையான மேற்கு வங்காள அரசுத்துறை அலுவலகங்கள் ஹவுராவிலுள்ள நபன்னா கட்டிடத்திற்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

555,000 சதுர அடிகொண்ட எழுத்தர்களின் கட்டிடமானது ஒரு குட்டி-நகரமென அழைக்கப்பட்டது. மாநிலத் தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படும் முன்னர், இக்கட்டிடத்தில் மாநில அரசின் 34 துறை அலுவலகங்கள் கிட்டத்தட்ட 6000 பணியாட்களுடன் இயங்கி வந்தன.[1] அக்டோபர் 2023 இலிருந்து இங்கு புதுப்பிப்புப் இங்கு நடைபெற்று வருகிறது.

வரலாறு

தொகு

இந்தியாவில் வணிகத்தை ஒருங்கிணைக்கவும் வங்காள சுபாவில் மேற்கொண்ட வரிச் செயற்பாடுகளை ஒருமுகப்படுத்தவும் எண்ணிய பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிக்காக, இக் கட்டிடம் 1777 ஆம் ஆண்டு தாமசு லியானால் வடிவமைக்கப்பட்டது. காலப்போக்கில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக நோக்கம் விரிவடைந்துதோடு, அது வங்காள நவாபுகளையும் தோற்கடித்தது. இதனால் இக்கட்டிடம் உருவான நோக்கமும் மாற்றமடைந்தது. பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமையகமாகவும், பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானிய இந்தியப் பேரரசின் தலைமையகமாகவும் விளங்கியது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பிரித்தானிய அரசின் மையமாகவும் வங்காள மாகாண அரசின் இருப்பிடமாகவும் அங்கம் வகித்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்திய விடுதலை இயக்கத்தின்போது கிளர்ச்சிகள், வன்முறைச் செயல்கள், கொலைமுயற்சிகள் நடக்கும் இடமாகவுமானது.[2] 1947 இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இக்கட்டிடம் மாநிலத் தலைமைச் செயலகமானது.

காலக்கோடு

தொகு
 
எழுத்தர் கட்டிடத்தின் மேற்பகுதியிலுள்ள மினெர்வா சிலை
  • 1777-1780: கட்டுமானம்

இடிக்கப்பட்ட செயின்ட் ஆனியின் தேவாலயம் இருந்த இடமும் அதனையொட்டிய பகுதியும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் "எழுத்தர்" என அழைக்கப்பட்ட இளநிலை பணியாளர்களுகானக் கட்டிடம் கட்டுவதற்காக தாமசு லாயினிடம் அளிக்கப்பட்டன. இந்தத் தாமசு லாயினின் பெயரால்தான் எழுத்தர் கட்டிடத்திற்குப் பின்புறமுள்ள தெரு "லாயின்சு ரேஞ்சு" என அழைக்கப்படுகிறது. இங்கிலாந்தில் தச்சராகவும் பின்னர் கொல்கத்தாவில் ஒரு கட்டிடக் கலைஞராகவும் இருந்த லாயின், கட்டிடத்தைக் கட்டி முடித்தார். அன்றைய இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் இத்திட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தினார். இதுவே கொல்கத்தாவின் முதலாவது மூன்றடுக்கு கட்டிடமாகும். 37850 சதுர அடியுள்ள இக்கட்டிடத்தின் முதன்மைப் பகுதி 1780 இல் கட்டி முடிக்கப்பட்டது. அன்று "குளச் சதுக்கம்" என்றழைக்கப்பட்ட (பினோய்-பாதல்-தினேஷ் பாக்) சதுக்கத்தின் ஒருபுறத்தின் முழுவதுமாக இது அமைந்தது. முதலில் அலங்கார அமைப்புகள் எதுவுமின்றி, ஒரு நேரான முகப்புடனும் பின்புறமாக ஒரு சுற்றுச் சுவருடனும் வெறும் பணிபுரியுமிடமாக மட்டுமே இது கட்டப்பட்டது. துவக்கத்தில் 19 தங்குமிடங்களுடன் மூன்று சாளரத் தொகுப்புகளுடன் அன்றைய ஆங்கிலேயர்களுக்கு பிடித்தமில்லாத வொன்றாகச் சாதாரணத் தோற்றம் கொண்டிருந்தது.[2][3]

1800: கல்லூரி

உள்ளூர் மொழிகளில் எழுத்தர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக திறக்கப்பட்ட 'போர்ட் வில்லியம் கல்லூரி' இக்கட்டிடத்துக்கு இடம் மாற்றப்பட்டது. அடுத்து வந்த 20 ஆண்டுகளில் கட்டிட அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டது: 32 மாணவர்களுக்கான விடுதி, தேர்வெழுதும் அறை, நான்கு நூலகங்கள், இந்தி, பாரசீக மொழிகளைப் பயிற்றுவிக்கும் அறைகள் அமைக்கப்பட்டன.[3]

1821: முகப்பு அமைத்தல்

32 ft உயரமுள்ள தூண்கள் கொண்ட 128 ft-நீளத் தாழ்வாரம்l முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் அமைக்கப்பட்டது.[3]

 
எழுத்தர் கட்டிடத்தின் மேற்பகுதியிலுள்ள சிலைகள்

1830: அரசு பொறியியல் கல்லூரி போர்ட் வில்லியம் கல்லூரி இக்கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர் இக்கட்டிடம் தனிநபர்களின் வசமானது. அவர்கள் கட்டிடத்தைக் கடைகளாகவும், வசிப்பிடங்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றினர். சில காலம் அரசு பொறியியல் கல்லூரி இங்கிருந்தது.

1871–74: தொடருந்துசேவை தலைமையகம்

துணைநிலை ஆளுநராக இருந்த ஜார்ஜ் காம்ப்பெல் (1824–1892) பணிகளைத் துரிதமாக முடிப்பதற்கு ஒரு தலைமைச் செயலகம் தேவை என நினைத்தார். ஆனால் எழுத்தர் கட்டிடத்தின் அதிகப் பகுதியை ஆக்கிரமித்திருந்த கிழக்கிந்திய இரயில்வே நிறுவனத்திற்கு விரைவில் மாற்றிடம் கிடைக்காததால் அவரது எண்ணம் நிறைவேறுவது தாமதமானது.

1877–82: வங்காள மாகாணத்தின் தலைமைச் செயலகம்

வங்காளத்தின் துணைநிலை ஆளுநராக இருந்த ஆஷ்லி ஏடன், சடர் தெரு மற்றும் சௌரங்கியில் செயற்பட்டுக்கொண்டிருந்த முக்கிய அலுவலகங்களை எழுத்தர் கட்டிடத்துக்கு மாற்றுமாறு பணிக்கப்பட்டார். எனவே எழுத்தர் கட்டிடத்தின் இடப் பற்றாக்குறையப் போக்குவதற்காக மேலும் மூன்று தொகுதிகள் (இன்றைய 1, 2, 5 தொகுதிகள்) புதிதாகக் கட்டப்பட்டன.[3]

1879–1906: மேற்படி விரிவாக்கம்

இரும்பு படிக்கட்டுகளுடன் மேலும் இரு தொகுதிகள் கட்டப்பட்டன (இன்றைய 3, 4 தொகுதிகள்) புதிதாகக் கட்டப்பட்ட ஐந்து தொகுதிகளின் தரைப்பரப்பளவு மொத்தம் 58825 சதுர அடி. நடுப்பகுதியில் கட்டப்பட்ட முகப்புடனும் செங்கலின் வெளித்தோற்ற சிவப்புப் பரப்புடனும் எழுத்தர் கட்டிடம் கிரேக்க-ரோமனியத் தோற்றத்தைப் பெற்றது. விக்டோரிய கால பிரித்தானிய அரசு இக்கட்டிடத்துக்கு வலுவான அழகான தோற்றமளிக்க விரும்பியதால் மேற்பக்கத்தில் சிலைகளமைக்கப்பட்டு பிரெஞ்சு மறுமலர்ச்சி பாணியில் மேலும் பொலிவுற்றதானது. [2][4][3]

1930: பேரரையர் என். எஸ். சிம்ப்சனின் கொலை

 
எழுத்தர் கட்டிடத்துக்கு முன்னுள்ள பினோய், பாதல், தினேஷ் மூவரின் சிலை

திசம்பர் 8, 1930 அன்று வங்காள தொண்டர் படையைச் சேர்ந்த பினாய் பாசு, பாதல் குப்தா, தினேஷ் குப்தா ஆகிய மூன்று பேர் ஆங்கிலேயர்களைப்போல உடையணிந்து துப்பாக்கிகளோடு எழுத்தர் கட்டிடத்தை நோக்கிச் சென்றனர். கட்டிடத்துக்குள் சென்றதும் அங்கிருந்த சிறைத்துறை காவல் தலைமை ஆய்வாளர் என். எஸ் சிம்ப்சனைச் சுட்டுக் கொண்றனர். சிறைபிடிக்கப்பட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை மோசமாகக் கொடுமைப்படுத்தியதால் சிம்ப்சன் இந்தியப் போராட்டக்காரர்களின் கடும் கோபத்துள்ளாகியிருந்ததே இக்கொலைக்குக் காரணமாக அமைந்தது. சிம்ப்சனைச் சுட்டுக் கொன்றபின் மூவரையும்கொல்கத்தா காவற்துறையினர் சூழ்ந்துகொண்டனர். காவலர்களிடமிருந்து தப்ப முடியாதென்பதை உணர்ந்த பாதல், சயனைடு அருந்தி உடனடியாக மாண்டான். மற்ற இருவரும் தங்களையே சுட்டுக் கொண்டதில் தினேஷ் இறந்துவிட, பினோய் காவலரிடம் சிக்கினான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் சூலை 7, 1931 அன்று தூக்கிலிடப்பட்டான்.

 
எழுத்தர் கட்டிடத்தின் முன்னுள்ள பினோய், பாதல், தினேஷ் நினைவுச் செதுக்கல்

இம்மூவரின் பெயரால் அன்றைய டல்ஹவுசி சதுக்கம் தற்போது பி. பி. டி. பாக் என அழைக்கப்படுகிறது. எழுத்தர் கட்டிடத்துக்கு முன்பு இம்மூவரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.[5]

1945-47: விரிவாக்கத்தால் மூடப்பட்ட திறந்த முற்றங்கள்

அதிகப்படியான இடத்தேவையால் கட்டிடத்தின் முற்றத்தில் A, B, C, D தொகுதிகள் கட்டப்பட்டன. இதனால் கட்டிடத்தின் பரப்பளவு 19314 சதுர அடி அதிகமானது.[2][3]

1947 இலிருந்து: மேலதிக விரிவாக்கமும் மேற்கு வங்காள அரசியலும்

இந்தியா விடுதலையான 1947 இல் இக்கட்டிடம் ஏழு தொகுதிகளுடன் பெரிய முற்றத்துடன் இருந்தது. 1950 களின் இடைக்காலத் துவக்கத்தில் மேலும் E, F தொகுதிகள் பெரிய செவ்வக முற்றத்தில் கட்டப்பட்டன. இவை பின்புறத்தில் ஏற்கனவே இருந்த தொகுதிகளைப் பிரித்தன. தற்போது இக்கட்டிடத்தில் மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன.[4][3]

படத் தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kolkata's iconic Writer's Building gets ready for a facelift". The Weekend Leader. 4 October 2014. http://www.theweekendleader.com/Culture/2014/london-dreams.html. 
  2. 2.0 2.1 2.2 2.3 Srinath Perur (10 April 2005). "The Writers' Building, Kolkata: a history of cities in 50 buildings, day 13". The Guardian. https://www.theguardian.com/cities/2015/apr/10/writers-building-kolkata-history-cities-50-buildings. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Writers' Buildings (Mahakaran) Through The Passage of Time" (PDF). Public Works Department, Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 17 October 2020.
  4. 4.0 4.1 Das, Soumitra (20 May 2011). "Writ of Writers'". telegraphindia.com இம் மூலத்தில் இருந்து 9 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111009165553/http://www.telegraphindia.com/1110520/jsp/calcutta/story_14006107.jsp. 
  5. Ghosh, Durba (2017-07-20). Gentlemanly Terrorists: Political Violence and the Colonial State in India, 1919–1947 (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107186668.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தர்களின்_கட்டிடம்&oldid=3828793" இலிருந்து மீள்விக்கப்பட்டது