களக்காடு

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி


களக்காடு (ஆங்கிலம்:Kalakkad), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இதனருகே 6 கி.மீ. தொலைவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், 12 கி.மீ. தொலைவில் உள்ள நாங்குநேரியில் உள்ளது.[4]

களக்காடு
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
களக்காடு
இருப்பிடம்: களக்காடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°30′53″N 77°33′05″E / 8.514817°N 77.551289°E / 8.514817; 77.551289
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் நாங்குநேரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

30,923 (2001)

1,819/km2 (4,711/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17 சதுர கிலோமீட்டர்கள் (6.6 sq mi)
இணையதளம் https://www.tnurbantree.tn.gov.in/kalakadu/

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல் தொகு

களக்காடு பேரூராட்சியின் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று களக்காடு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[5]

அமைவிடம் தொகு

மாவட்டத் தலைமையிட நகரமான திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும்; மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும்; நாங்குநேரியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும்; வள்ளியூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும்; சேரன்மாதேவியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் களக்காடு உள்ளது.

நகராட்சியின் அமைப்பு தொகு

17 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 234 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி, நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 9,377 வீடுகளும், 30,923 மக்கள்தொகையும் கொண்டது.[7][8]

பெயர்க் காரணம் தொகு

முற்காலத்தில் பல (போர்) களங்களை கண்ட பெருமை கொண்டதால் களக்காடு எனப் பெயர் பெற்றதாகவும், ”களா” மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது களக்காடு என பெயர் கொண்டதாகவும் கூறுவர். சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்களையும், குளங்களையும் கொண்டதாக விளங்குகிறது களக்காடு. இவ்வூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் பெயர்கள் ”குளம்” என்று தான் முடிகிறது. ஊரின் மையப் பகுதியில் கௌதம நதி ஓடுகிறது. இந்த நதியின் மூலம் தான் நான்குநேரியின் நான்கு ஏரிகளும் நிரம்பி வந்தன.

சுற்றுலா தலங்கள் தொகு

1. செங்கல்தேரி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மேல் அமைந்துள்ள அழகான பகுதி செங்கல்தேரி ஆகும். களக்காடு முண்டன் துறை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனியில் உள்ள மாவட்ட வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்றே இங்கு செல்ல வேண்டும்.

2. தலையணை: களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது தலையணை. இங்கு பெரிய பெரிய பாறைகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. தெளிந்த நீரோட்டம் உள்ள இந்த பகுதியில் பெரும்பாலான பாறைகள் பெரிய அளவு கூழாங்கற்களைப் போல் காட்சியளிக்கும். தலையணைக்கு சற்று கீழே தேங்காய் உருளி உள்ளது. இது கிட்டத்தட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஆகும். தலையணை மற்றும் தேங்காய் உருளி பகுதிகளுக்கு களக்காடு சுற்றுப் பகுதி மக்கள் வார நாட்களில் சென்று குளித்து மகிழ்வர். காணும் பொங்கல் தினத்தில் இந்தப் பகுதி முழுவதும் களை கட்டும்.

3. பச்சையாறு அணை: களக்காடு நகரின் வடமேற்கே உள்ள மஞ்சுவிளை பகுதியில் உள்ளது இந்த பச்சையாறு அணை.

பெரிய கோவில் வரலாறு தொகு

இங்கு ஒரு பழமையான சிவன் கோவிலும் உண்டு.

இறைவர் திருப்பெயர்: சத்தியவாகீஸ்வரர், பொய்யாமொழியார்.
இறைவியார் திருப்பெயர்: கோமதியம்பாள், ஆவுடைநாயகி.
தல மரம்: புன்னை.
தீர்த்தம்: பச்சையாறு, சத்திய தீர்த்தம்.
வழிபட்டோர்: தேவர்கள், இராமன், சீதை, இலக்குவனன்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3).

தற்போது 'களக்காடு' என்று வழங்குகிறது. களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது. இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்று வழங்கப் பெற்றது. இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு. ஒருமுறை, காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார். தேவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய, சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார். இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு "சத்தியவாகீசர், பொய்யாமொழியார்" என்றும், இப்பதிக்கு "சத்திய நகரும்" என்றும், இங்குள்ள தீர்த்தம் "சத்திய தீர்த்தம்" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது.

தல சிறப்புகள் தொகு

இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும். ராஜ கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது - 156 அடி உயரம். மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும் இசைத் தூண்களும் அமைந்து உள்ளன. 21 கதிர்கள் உள்ள தூண்களில் தட்டினால் மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாகின்றன. திருப்பெருந்துறையில் உள்ளது போலவே, 32 கொடுங்கைகள் உள்ளன. இத்தலத்திற்கு சோராரணியமென்றும், புன்னைவனமென்றும் பெயர்களுண்டு. சுவாமிக்கு 1. புன்னைவனநாதர், 2. பிரமநாயகன், 3. பரிதிநாயகன், 4. சுந்தரலிங்கம், 5. களந்தை லிங்கம், 6. பைரவ லிங்கம், 7. வீரமார்த்தாண்ட லிங்கம், 8. திரிபுரஹரன், 9. வைரவநாதர், 10. சாமள மகாலிங்கர், 11. சோம நாயகர், 12. குலசை நாயகர் முதலிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. கோயிலின் முன் வாயிலில் இக்கோயில் திருப்பணி செய்த வீரமார்த்தாண்டவர்மனும், சுந்தரரும், சேரமானும் இருபுறமும் உள்ளனர். மார்ச்சு மாதம் 20, 21, 22 ஆகிய நாள்களிலும், செப்டம்பர் 20, 21, 22 ஆகிய நாள்களிலும் சூரியனின் கதிர்கள் சுவாமி மீது படும் அற்புதக் காட்சி கண்டு மகிழத்தக்கது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.

வழித்தடங்கள் தொகு

திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி.மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு.

திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். திருநெல்வேலி - நாங்குநேரி - களக்காடு மார்க்கமாக தனியார் பேருந்தான கணபதி பேருந்து இயங்குகிறது. கணபதி பேருந்து திருநெல்வேலி - மீனவன்குளம் வழியாகவும் களக்காடு வருகிறது. மேலும் திருநெல்வேலி - சிங்கிகுளம் மார்க்கமாகவும் களக்காடு வரலாம்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் - தென்காசி, நாகர்கோவில் - புளியரை செல்லும் அரசு பேருந்துகள் களக்காடு வழியாகவே இயங்குகின்றன.

நகராட்சிப் பகுதிகள் தொகு

  1. நாகன்குளம்
  2. சிதம்பராபுரம்
  3. மூங்கிலடி
  4. சிங்கம்பத்து
  5. கருவேலன்குளம்
  6. கட்டார்குளம்
  7. பத்மனேரி
  8. குடில்தெரு (அ) சிவசண்முகபுரம்
  9. மடத்து தெரு
  10. கீழப்பத்தை
  11. மேலப்பத்தை
  12. மஞ்சுவிளை
  13. பெல்ஜியம் (Island of Peace)
  14. தம்பி தோப்பு
  15. அம்பேத்கார் நகர்
  16. கக்கன் நகர்
  17. புதுத்தெரு
  18. சிவபுரம்
  19. கோட்டை
  20. கோவில்பத்து
  21. வியாசராஜபுரம்
  22. மேல வடகரை

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் காணவும் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=களக்காடு&oldid=3774396" இருந்து மீள்விக்கப்பட்டது