சலுப்பபட்டி
சலுப்பபட்டி (Saluppapatti) என்பது மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். இந்தக் கிராமம் மதுரையிலிருந்து மேற்கில் 45 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் அமைந்துள்ளது. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாப்டூர் பாளையத்துகுட்பட்ட ஒரு கிராமமாக இருந்தது. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் வேளாண்மைத் தொழில் செய்து வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊரிலிருப்பவர்களில் எண்பது விழுக்காடு இளைஞர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ராணுவத்தில் பணியாற்றச் செல்வதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
சலுப்பபட்டி | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | தேனி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | உசிலம்பட்டி |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 3,481 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தொழில்
தொகுஇவ்வூர் மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் இருக்கிறது. இங்குள்ள நன்செய் நிலங்களுக்கு சலுப்பபட்டி கண்மாய் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழை நீர் சாப்டூர், அத்திபட்டி கண்மாய்கள் நிரம்பிய பின்பு சலுப்பபட்டி கண்மாயை வந்தடைகிறது. சலுப்பபட்டி கண்மாய் குடிசேரி, சலுப்பபட்டி, தொட்டணம்பட்டி இந்த மூன்று கிராமங்களின் விவசாயப் பணிகளுக்குத் தேவையான நீரை வழங்குகிறது. நன்செய் நிலங்களில் பருவமழை காலங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. கோடைக் காலங்களில் பருத்தி, சோளம், கம்பு போன்றவை பயிரிடப்படுகின்றன. ஊரைச் சுற்றி அமைந்துள்ள படுகைக்காடு மற்றும் பொட்டல்காடு என்றழைக்கப்படும் நிலங்கள் கிணற்று நீரால் பாசனம் பெறுகின்றன. இங்கு பருத்தி, சோளம், வெங்காயம் போன்றவை பயிரிடப்படுகின்றன. ஊரின் தெற்கே அமைந்துள்ள கரிசல்காடு என்றழைக்கப்படும் கரிசல் மண் நிலங்களில் வானம்பாரி எனப்படும் மழை நீரை நம்பி மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. கிணற்று நீர் பாயும் கரிசல்மண் நிலங்களில் நெல், நிலக்கடலை, கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், தக்காளி, மிளகாய் போன்றவைகளை விளைவிக்கின்றனர்.
பள்ளிகள்
தொகுஇங்கு அரசு ஆரம்பப்பள்ளியும் அங்கன்வாடி மையம் என்றழைக்கப்படும் சத்துணவுக் கூடமும் உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இங்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. உயர்கல்வி ம்ற்றும் மேல்நிலை கல்விகளுக்கு ஊரின் மேற்கில் 1 கி.மீ தொலைவில் உள்ள அத்திபட்டி, ரா.ம.பெ.சு.இராமையா நாடார் மேல்நிலைப்பள்ளி அல்லது ஊரின் கிழக்கில் 2 கி.மீ தொலைவில் உள்ள கோட்டைப்பட்டி, பராசக்தி மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று பயில்கின்றனர்.
கோயில்கள்
தொகுஇவ்வூரில் கீழ்கண்ட கோவில்கள் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
- அக்கினி வீரண்டாள் கோவில்
- கொரளிக்கட்டயன் கோவில்
- கருப்பசாமி கோவில்
- பிள்ளையார் கோவில்
- ஜெலாண்டி அம்மன் கோவில்
- காளியம்மன் கோவில்
- முத்தாளம்மன் கோவில்
- சின்னச்சாமி கோவில்
- பெருமாள் கோவில்
- நத்தக்காட்டு முனீஸ்வரர்
- பட்டத்து அரசி அம்மன் கோவில்
- குறவீட்டு கருப்பசாமி கோவில்
போக்குவரத்து
தொகுஇங்கிருந்து மதுரை விமான நிலையம் 43 கி.மீ தொலைவிலும், திருமங்கலம் ரயில் நிலையம் 28 கி.மீ தொலைவிலும் உள்ளது. மதுரை, விருதுநகர், தேனி, திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி போன்ற ஊர்களிலிருந்து சலுப்பபட்டி வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.