ப. சுப்பராயன்

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
(சுப்பராயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பரமசிவ சுப்பராயன் (P. Subbarayan)(செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) சென்னை மாகாணத்தின் மேனாள் பிரதமர்[1] (முதல்வர்) ஆவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், மாநிலங்கவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராட்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.

ப. சுப்பராயன்
1934-ல் சுப்பராயன்
மகாராஷ்டிர மாநில ஆளுநர்
பதவியில்
ஏப்ரல் 17, 1962 – அக்டோபர் 6, 1962
பிரதமர்நேரு
முன்னையவர்ஸ்ரீ பிரகாசா
பின்னவர்விஜயலட்சுமி பண்டிட்
நடுவண் போக்குவரத்துத் துறை அமைச்சர்
பதவியில்
1959–1962
பிரதமர்நேரு
திருச்செங்கோடு மக்களவை உறுப்பினர்
பதவியில்
1957–1962
பிரதமர்நேரு
முன்னையவர்எஸ். கந்தசாமி பேபி
பின்னவர்க. அன்பழகன்
இந்தோனேசியா விற்கான இந்திய தூதர்
பதவியில்
1949–1951
பிரதமர்நேரு
சென்னை மாகாணத்தின் உள்துறை, காவல்துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 23, 1947 – 1948
பிரதமர்ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
ஆளுநர்ஆர்ச்சிபால்டு நை
சென்னை மாகாணத்தின் சட்ட, கல்வித் துறை அமைச்சர்
பதவியில்
சூலை 14, 1937 – அக்டோபர் 29, 1939
பிரதமர்சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
ஆளுநர்ஜான் எர்ஸ்கைன்
சென்னை மாகாணத்தின் பிரதமர்
பதவியில்
திசம்பர் 4, 1926 – அக்டோபர் 27, 1930
ஆளுநர்ஜார்ஜ் கோஷன்
முன்னையவர்பனகல் அரசர்
பின்னவர்முனுசாமி நாயுடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1889-09-11)செப்டம்பர் 11, 1889
சேலம் மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இறப்புஅக்டோபர் 6, 1962(1962-10-06) (அகவை 73)
சென்னை
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ராதாபாய் சுப்பராயன்
பிள்ளைகள்பி. பி. குமாரமங்கலம்,
கோபால் குமாரமங்கலம்
மோகன் குமாரமங்கலம்,
பார்வதி கிருஷ்ணன்
முன்னாள் கல்லூரிமாநிலக் கல்லூரி, சென்னை, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்

பிறப்பும் படிப்பும்

தொகு

சுப்பராயன் 1889 ஆம் ஆண்டு, சேலம் மாவட்டம் (தற்போதைய நாமக்கல் மாவட்டம்), திருச்செங்கோடு, குமாரமங்கலத்திற்கு அருகேயுள்ள போக்கம்பாளையத்தில் பிறந்தார். இவரது தந்தை குமரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தார் பரமசிவ கவுண்டர்; தாயார் பெயர் பாவாயி. சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அயர்லாந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப்பயிற்சி பட்டமும் (LLD) பெற்றார். 1918 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.[2][3][4][5][6][7][8][9]

சட்டப் பேரவையில்

தொகு

சுப்பராயன் 1922 ஆம் ஆண்டு தென்மத்தியப் பிரதேச நிலச்சுவான்தார்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பேரவையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் நீதிக்கட்சிக்குச் சார்பாக செயல்பட்ட சுப்பராயன் பின்னர் சட்டமன்றத்தில் ஆளும் நீதிக்கட்சிக்கு எதிராகவே செயல்படத் தொடங்கினார். 1923 ஆம் ஆண்டு நீதிக்கட்சி முதல்வர் பனகல் அரசரின் அரசுக்கு எதிராக சி. ஆர். ரெட்டி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்தார்.[6][10][11]

முதல்வராக

தொகு

1926 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், நீதிக்கட்சி தோற்று, சுயாட்சிக் கட்சி (இந்திய தேசிய காங்கிரசின் அரசியல் பிரிவு) வென்றது. ஆனால் இரட்டை ஆட்சி முறையின் கீழ் ஆட்சி அமைக்க விருப்பமில்லாமல், பதவி ஏற்க மறுத்து விட்டது. சுப்பராயன் இத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றிருந்தார். சென்னை ஆளுநர் ஜார்ஜ் கோஷன் சுப்பராயன் தலைமையில் சுயேச்சைகள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அரசவை ஒன்றை உருவாக்கினார். இந்த அரசு ஆளுநரின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் கருதிய நீதிக்கட்சியினரும், சுயாட்சிக் கட்சியனரும் சுப்பராயனுக்கு ஆதரவளிக்க மறுத்து விட்டனர். சுப்பராயன் அரசு இரு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைச் சந்திக்க நேர்ந்தது. 1927 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் சென்னைக்கு வந்த போது அதனை சுப்பராயன் ஆதரித்தாலும், அவரது அமைச்சரவையிலிருந்த ரங்கநாத முதலியாரும், ஆரோக்யசாமி முதலியாரும் அதனை எதிர்த்தனர். அமைச்சரவையில் இருந்த குழப்பத்தால் சுப்பராயன் பதவி விலகினார். பின்னர் ஆளுநரின் தலையீட்டால் நீதிக்கட்சியினர் சுப்பராயனுக்கு ஆதரவளித்து, அவரது பதவி காப்பற்றப்பட்டது. பதவி விலகிய அமைச்சர்களுக்குப் பதில் முத்தையா முதலியாரும், சேதுரத்தினம் ஐயரும் அமைச்சரவையில் இடம் பெற்றனர்..[4][12][13]

சுப்பராயனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் முதன் முறையாக அரசாங்க வேலைகளில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணை (Communal G. O. 1071) அமல் படுத்தப்பட்டது. இதன்படி அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் பன்னிரெண்டில் ஐந்து பங்கு (5/12) பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டது. பிராமணர், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்கள் ஆகியோருக்கு தலா 2/12 பங்கும், தாழ்த்தப் பட்டோருக்கு 1/12 பங்கும் ஒதுக்கப்பட்டது. இவ்வாணை 1947 இல் இந்தியா விடுதலை பெறும் வரை அமலில் இருந்தது.[14][15] 1947 இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இது சற்றே மாற்றியமைக்கப்பட்டது. பிரமணரல்லாத இந்துக்களுக்கு பதினான்கில் ஆறு பங்கும் (6/14), பிராமணர், தாழ்த்தப்பட்டோர், ஹரிஜனர் ஆகியோருக்கு தலா 2/14 பங்கும், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்களுக்கு தலா 1/14 பங்கும் வழங்கப்பட்டன.

காங்கிரசு கட்சியில்

தொகு

1930 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது தேசியவாத சுயேட்சைகள் கூட்டணி பத்துக்கும் குறைவான இடங்களை மட்டுமே கைப்பற்றியது. நீதிக்கட்சியின் முனுசாமி நாயுடு முதல்வரான போது சுப்பராயன் எதிர்க்கட்சித் தலைவரானார். சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல் படுத்தினார்.[16][17] காங்கிரசு, நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்கு இந்து ஆலயங்களுள் நுழைய அனுமதி வழங்கும் சட்டதிருத்தம் கொண்டு வந்த போது, சுப்பராயன் அதை ஆதரித்தார். தமிழ்நாடு அரிஜனர் சேவா சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். 1933 ஆம் ஆண்டு காங்கிரசில் முறையாக இணைந்தார்.[18] 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு மாநில சுயாட்சி வழங்கப்பட்டபின், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜகோபாலாச்சாரி அமைச்சரவையில் சட்டம் மற்றும் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இரண்டாம் உலகப் போரில் இந்தியா ஈடுபடுத்தப் பட்டதைக் கண்டித்து 1939 இல் மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து பதவி விலகினார். 1937-38 இல் இந்திய கிரிக்கெட்டு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[19] 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார்.[3] 1946இல் மீண்டும் காங்கிரசு ஆட்சி ஏற்பட்ட போது, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[4] 1947-49 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை இயற்றிய முதலாம் இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.[20]

இந்தியக் குடியரசில்

தொகு

1949-51 இல் இந்தோனேசிய நாட்டிற்கு இந்தியத் தூதராகச் சென்று பணியாற்றினார்.[21] சிறிது காலம் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றினார்.[22] 1954-57 இல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.[4] நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட முதல் ஆட்சிமொழிக் குழுவின் உறுப்பினராக இருந்த போது, ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தொடர வேண்டுமென வலியுறுத்தினார்.[23][24] 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு,[25] 1959-62 இல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இரண்டாவது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[26] 1962 இல் மீண்டும் திருச்செங்கோட்டிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.[27] ஏப்ரல் 1962 இல் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சுப்பராயன் பதவியில் இருக்கும் போதே அக்டோபர் 6 1962 இல் மரணமடைந்தார்.[28][29]

குடும்பம்

தொகு

சுப்பராயன் மாநிலக் கல்லூரியில் தன்னுடன் படித்த ராதாபாய் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ராதாபாய் பின்னர் நாடளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர்களது பிள்ளைகள் - பார்வதி கிருஷ்ணன் (நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்), மோகன் குமாரமங்கலம் (இந்திரா காந்தி அமைச்சரவையில் உறுப்பினர்), கோபால் குமாரமங்கலம், பி. பி. குமாரமங்கலம் (பின்னாளில் இந்தியத் தரைப்படை முதன்மைத் தளபதி) ஆகியோர் ஆவர். சுப்பராயனின் பேரன் ரங்கராஜன் குமாரமங்கலம் பிற்காலத்தில் இந்திய நடுவண் அமைச்சராகப் பணியாற்றினார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "நடராசன் புகழுடம்பு எய்திய கதை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
  2. Kohli, A. B. (1988). Directory of Union Ministers, 1947-1987. Reliance Pub. House. p. 122.
  3. 3.0 3.1 Dictionary of Indian Biography. Indian Bibliographic Centre. 200. pp. 438. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185131155, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185131153.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Rajya Sabha Who's Who". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 2009-01-04.
  5. The Times of India Directory and Year Book, Including Who's who. Bennett, Coleman & Co. 1965. p. 775.
  6. 6.0 6.1 The Congress in Tamilnad: Nationalist Politics in South India, 1919-1937. Manohar. 1977. p. 236. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0908070004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780908070008.
  7. The Social Service Quarterly. Bombay: Social Service League. 1961. p. 32.
  8. Chatterjee, Ramananda (1941). The Modern Review. Prabasi Press Private, Ltd. p. 280.
  9. Panikkar, Kavalam Madhava (1954). Sardar K.M. Panikkar: Shashtyabdapoorthy Souvenir. Mathrubhumi Press. p. 92.
  10. The India Office and Burma Office List. Harrison and Sons,Ltd. 1922. p. 78.
  11. South Indian Celebrities, Pg 101
  12. Encyclopedia of Political Parties, Pg 189-196
  13. "Kumaramangalam family's role in development remembered". தி இந்து. October 17, 2004 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 19, 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050119213301/http://www.hindu.com/2004/10/17/stories/2004101704590400.htm. 
  14. "Tamil Nadu swims against the tide". The Statesman இம் மூலத்தில் இருந்து 2007-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070929090135/http://www.thestatesman.net/page.arcview.php?clid=4&id=155652&usrsess=1. பார்த்த நாள்: 2009-01-05. 
  15. Jaffrelot, Christophe (2003). India's silent revolution: Rise of lower castes in North India. C. Hurst & Co. Publishers. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் [[Special:BookSources/1850656703, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781850656708|1850656703, [[பன்னாட்டுத் தரப்புத்தக எண்]] [[Special:BookSources/9781850656708|9781850656708]]]]. {{cite book}}: Check |isbn= value: invalid character (help)
  16. Mohan, Pullam Ethiraj (1993). Scheduled Castes, History of Elevation, Tamil Nadu, 1900-1955: History of Elevation, Tamil Nadu, 1900-1955. New Era Publications. p. 132.
  17. South Indian Celebrities, Pg 108
  18. Bakshi, Sri Ram (2008). Madhya Pradesh Through the Ages. Sarup & Sons. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8176258067, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176258067. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  19. "Presidents of the Board of Control for Cricket in India (BCCI)". பார்க்கப்பட்ட நாள் 2008-12-11.
  20. Rao, B. Shiva (1966). The Framing of India's Constitution. Bombay: Indian Institute of Public Administration. pp. 302. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  21. "Previous Indian Ambassador's to Indonesia". Embassy of India, Jakarta. Archived from the original on 2007-08-17. பார்க்கப்பட்ட நாள் 2008-12-11.
  22. Nalanda Year-book & Who's who in India: An Indian and International Annual of Current Statistics, Events and Personalities. 1951. p. 738.
  23. Simpson, Andrew (2007). Language and national identity in Asia. Oxford University Press. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199267480, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199267484. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  24. Kumar, Virendra (1993). Committees and commissions in India. Concept Publishing Company. pp. 53–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8175963123 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175963122. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  25. "Statistical Reports of the general elections 1957 to the First LokSabha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-05-29. பார்க்கப்பட்ட நாள் 2009-01-04.
  26. Eminent Indians who was Who, 1900-1980, Also Annual Diary of Events. Durga Das Pvt. Ltd. 1985. p. 329.
  27. "Statistical Reports of the general elections 1962 to the First LokSabha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-05-29. பார்க்கப்பட்ட நாள் 2009-01-04.
  28. Singh, H. D. (1996). 543 Faces of India: Guide to 543 Parliamentary Constituencies. Newmen Publishers. p. 248.
  29. The Social Service Quarterly. Bombay: Social Service League. 1961. p. 32.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சுப்பராயன்&oldid=4096670" இலிருந்து மீள்விக்கப்பட்டது