சென் குவோ (Shen Kuo) அல்லது ஷென் குவா (Shen Gua, சீனம்: 沈括பின்யின்: Shěn Kuòவேட்-கில்சு: Shen K'uo; 1031–1095) சீன அறிவியலாளரும் அரசியல்வாதியும் ஆவார். சொங் அரசமரபு காலத்தில் வாழ்ந்தவராவார். பல்துறையறிஞரான சென் குவோ, சீனக் கணிதம், சீன வானியல், வானிலையியல், நிலவியல், விலங்கியல், தாவரவியல், மரபுவழி சீன மருத்துவம், வேளாண்மை, தொல்லியல், இனவரைவியல், நிலப்படவரைவியல், கலைக்களஞ்சியம், பொதுவறிவு, நீர்ம விசையியல் போன்ற துறைகளிலும் பேராளர், கண்டுபிடிப்பாளர், பேராசிரியர், நிதியமைச்சர், அரசு ஆய்வாளர், கவிஞர், இசைக்கலைஞர் என்ற நிலைகளிலும் சிறப்பெய்தினார். சொங் அரசவையில் வானியல் குழுவின் தலைவராகவும் அரச விருந்தோம்பல் துணை அமைச்சராகவும் இருந்தார்.[1] அரசவையில் சீர்திருத்த கொள்கைகள் முன்வைத்த முதன்மை அமைச்சர் வாங் அன்ஷி குழுவுடன் இணக்கமாக இருந்தார். இசை, ஓவியக் கலை, வனப்பெழுத்து, மெய்யியல் போன்ற துறைகளில் இவருக்கு ஆர்வம் இருந்தது.

தற்கால ஓவியரின் கைவண்ணத்தில் சென் குவோ

வானியலைப் பயன்படுத்தி பல முதன்மையான படைப்புக்களை வழங்கியுள்ளார். புவி படிப்படியான காலநிலை மாற்றத்தை மேற்கொள்கிறது என்பதை முதலில் பரிந்துரைத்தவர்களில் ஒருவராவார்.

தனது கனவு மழை கட்டுரைகள் நூலில்[2] (夢溪筆談; Mengxi Bitan) 1088இல், பயண வழிகாட்டலுக்குப் பயன்படும் காந்த ஊசி திசைகாட்டியை முதன்முதலில் விவரித்துள்ளார்.[3][4] சென் காந்த ஒதுக்கத்தின் வட முனை நாட்டத்தை வைத்து உண்மை வடக்கு குறித்த கருத்தியலை முன்வைத்தார்.[4]

தனது தோழர் வீ பு உடன் இணைந்து நிலவு, மற்றும் கோள்களின் சுற்றுப்பாதைகளை பதிவுசெய்ய ஐந்தாண்டுகள் ஒவ்வொரு நாளும் கவனிப்புகளை குறித்து வந்தார். இந்த முயற்சியை அரசியல் எதிரிகள் முறியடித்தனர்.[5] தனது கண்டுபிடிப்புகளுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு சென் குவோ ஆர்மிலக் கோளங்கள், நிழற்கடிகாரம், நீர்க்கடிகாரம், காண் குழாய் போன்ற கருவிகளின் வடிவமைப்பை மேம்படுத்தினார். புவி உருவாக்கத்திற்கான நிலவியல் கருதுகோளை முன்மொழிந்தார். நிலப்பகுதிகளில் கிடைத்த கடல்சார் தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டும் மண் அரிமானம் குறித்த அறிவு, மற்றும் கரம்பை படிதல் கொண்டும் நில உருவாக்கலை யூகித்தார.[6] தவிரவும் படிப்படியான காலநிலை மாற்றம் ஏற்படுவதை கண்டறிந்தார். வறண்ட வடக்குப் பகுதிகளில், அவர் வாழ்ந்த காலத்தில், மூங்கில் வளர வானிலை உதவியாக இல்லை; ஆனால் இப்பகுதிகளில் புவிக்கடியில் கிடைத்த தொன்மையான கல் மரம் மூங்கில்கள் கொண்டு இவ்வாறு வானிலையில் மெதுவான மாற்றங்கள் நிகழ்கின்றன என்று முன்மொழிந்தார். சீன இலக்கியப் படைப்புக்களில் இவர் மட்டுமே நாவாய்களை செப்பனிட வறண்ட துறைமுகங்களின் பயன்பாட்டைக் குறிப்பிட்டுள்ளார். கால்வாய்களில் புதியதாக கடைபிடிக்கத் தொடங்கியிருந்த மடையின் பயன்பாட்டைக் குறித்தும் எழுதியுள்ளார். இருட்படப் பெட்டி குறித்து இபின் அல் ஹய்தம் (965–1039) முன்னரே விவரித்திருந்தாலும் சீனாவில் முதன்முதலில் விவரித்தது சென் தான். இதேபோல பை செங் (990–1051) நகரும் அச்சு கொண்டு அச்சிடலை கண்டுபிடித்திருந்தாலும் சென் குவோவின் எழுத்துக்களாலேயே பை செங்கின் கண்டுபிடிப்பை பிற்காலத்தினருக்கு அறியச் செய்தது.[7] சீனாவின் தொன்மையான மரபைப் பின்பற்றி சென் நிலப்படங்களை புடைத்த தெளிவுடன் படைத்தார். தொன்மையான குறுக்குவில்லைக் குறித்த சென்னின் விவரணத்திலிருந்து அது ஓர் நில அளவியல் கருவியெனத் தெரிகிறது; இத்தகைய கருவியை ஐரோப்பாவில் 1321இல்தான் லெவை பென் கார்சன் கண்டுபிடித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Needham (1986), Volume 4, Part 2, 33.
  2. John Makeham (2008). China: The World's Oldest Living Civilization Revealed. Thames & Hudson. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-25142-3.
  3. Bowman (2000), 599.
  4. 4.0 4.1 Mohn (2003), 1.
  5. Sivin (1995), III, 18.
  6. Sivin (1995), III, 23–24.
  7. Bowman (2000), 105.

நூற்கோவை

தொகு
  • Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 1, Introductory Orientations. Taipei: Caves Books, Ltd.
  • Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 3, Mathematics and the Sciences of the Heavens and the Earth. Taipei: Caves Books, Ltd.
  • Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 4, Physics and Physical Technology, Part 1, Physics. Taipei: Caves Books Ltd.
  • Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 4, Physics and Physical Technology, Part 3: Civil Engineering and Nautics. Taipei: Caves Books, Ltd.
  • Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 5, Chemistry and Chemical Technology, Part 1: Paper and Printing. Taipei: Caves Books, Ltd.
  • Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 5, Chemistry and Chemical Technology, Part 7, Military Technology; the Gunpowder Epic. Taipei: Caves Books, Ltd.
  • Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 6, Biology and Biological Technology, Part 1: Botany. Taipei, Caves Books Ltd.
  • Bowman, John S. (2000). Columbia Chronologies of Asian History and Culture. New York: Columbia University Press.
  • Mohn, Peter (2003). Magnetism in the Solid State: An Introduction. New York: Springer-Verlag Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-43183-7.
  • Nathan Sivin (1995). Science in Ancient China: Researches and Reflections. Brookfield, Vermont: VARIORUM, Ashgate Publishing.
  • Sivin, Nathan. (1984). "Why the Scientific Revolution Did Not Take Place in China—Or Didn't It?" in Transformation and Tradition in the Sciences: Essays in Honor of I. Bernard Cohen, 531–555, ed. Everett Mendelsohn. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-52485-7.
  • Sivin, Nathan. "Science and Medicine in Imperial China—The State of the Field," The Journal of Asian Studies, Vol. 47, No. 1 (Feb., 1988): 41–90.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_குவோ&oldid=3688744" இலிருந்து மீள்விக்கப்பட்டது