தமிழ்த் தேசியம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை, தமிழக மக்களைக் கொண்டு அமையும் தேசியமே தமிழ்த் தேசியம் ஆகும்.[1] எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த்தேசம் இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் எமது இலக்கு என்னும் கருதுகோளே தமிழ்த்தேசியம்.[2] அது தமிழர்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களான பிறமொழியினர் தமிழர்கள் மீது நடத்தும் ஆதிக்கம் மற்றும் சமூக, பொருளியல், அரசியல் சிக்கல்களிலிருந்து தம்மைத் தாமே தனிதன்மையோடு செயல்படும் நோக்கில் உருவாகியுள்ள கருத்தியல் ஆகும். இது தமிழர்களின் நிலப்பரப்பு, மொழி, சமூகம் ஆகியவற்றின் இணைவினைக் குறிக்கும் கோட்பாடாக அமைந்துள்ளது. மேலும் தமிழ் தேசியம் கொள்கையானது இன்றைய தமிழகத்தின் புவியல் அரசியலுக்கு ஒவ்வாத கொள்கை என்று பெரும்பாலாக புறக்கணிக்கபடுகின்றது.
தமிழ்த்தேசியம் சொல் வரலாறு
தொகுதமிழ்த்தேசியம் என்ற சொற்கோவையில் உள்ள தமிழ் என்ற சொல், தமிழையும் தமிழ்பேசும் இனத்தையும் குறிக்கிறது. தேசியம் என்பது தேச இருப்பு அதற்குறிய அரசியல் உரிமை, பண்பியல் ஆகியவற்றைக் குறிக்கிறது.[3] தேயம் எனும் சொல் நாட்டைக் குறிக்க பழந்தமிழர்கள் பயன்படுத்திய சொல்லாகும். கழக(சங்க) இலங்கியங்கள் பலவற்றுள் தேயம் எனும் சொல் மொழிவழியில் தம் நாட்டையும் பிறநாட்டையும் குறித்து நிற்கின்றன. மொழிபெயர் தேயம் என்கிறது அகநானூறு 295 பாடல். தமிழ்த்தேசியம் என்கிற சொல் தமிழக அரசியல் உலகில் ம.பொ.சி அவர்களின் கட்சியான தமிழரசுக் கட்சிக்காலத்திலேயே தோன்றிவிட்ட ஒரு சொல்லாகும். இந்தியாவின் பல்வேறு இனங்களை தேசிய இனங்கள் என்று விளித்துப் பேசினார். அவர் சிலப்பதிகாரத்தை தமிழ்த்தேசியக் காப்பியம் எனக் கூறிப் பரப்பினார். அவ்வப்போது ம.பொ.சி உள்ளிட்டோரால் தமிழ்த்தேசியம் எனும் சொல் பொதுவாக ஆளப்பட்டது. திமுகவிலிருந்து பிரிந்து ஈ.வெ.கி சம்பத் தொடங்கிய தமிழ்த்தேசியக் கட்சி இச்சொல்லை தேர்தல் அரசியலில் அறிமுகம் செய்தது. ஆயினும் தமிழ்த்தேசியம் எனும் சொல்லுக்குப் பல காலமாக அரசியல் உலகில் நிலைத்தன்மை கிடைக்கவில்லை. 1980களில் தமிழகத்தில் தோன்றிய தமிழ்த்தேசிய இயக்கங்கள், தமிழ்த்தேசியத் தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோரால் இச்சொல் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டது. 1990களில் பொது அரசியல் வெளியில் வேர்கொள்ளத் தொடங்கியது. 2009 காலகட்டத்தின் முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலைக்குப் பிறகு தமிழ்த்தேசியம் தமிழர்களின் அறியப்பட்ட பொது அரசியல் கருத்தியலாக வளர்ந்தது. இவ்வாறாக தற்காலத்தில் தமிழர்கள் தமிழ் என்னும் தங்களின் தேசிய மொழியாலும் நிலப்பரப்பாலும் தம்மை அணிதிரட்டிக்கொள்ள ஊக்குவிக்கும் ஒரு கருத்தியலைச் சுட்டுவதாகவும் தமிழ்த்தேசியம் எனும் சொல் முதிர்ச்சியடைந்துள்ளது.
தமிழ்த்தேசியம் எனும் கருத்தியல்
தொகுதேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.[4] ம.பொ.சியின் செங்கோல் ஏடு தமிழ்த்தேசியக் கருத்தியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியது [5] தமிழர் இனப்பெருமை பேசுவதோ, தமிழ்மொழிப் பெருமை பேசுவதோ மட்டும் தமிழ்த்தேசியம் ஆகாது[6]. தமிழ்த்தேசியத்தின் உட்பிரிவுகளாக தமிழகத் தமிழ்த்தேசியம், தமிழீழத் தேசியம் ஆகியன உள்ளன. இவற்றுள் பல்வேறு வேறுபாடுகள் இருந்தபோதிலும் மெய்யியல் நோக்கில் தமிழ்த்தேசியம் எளிமையானதாக இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் தங்களைத் தேசிய இனமாகத் திரட்டிக்கொள்வதை நோக்கிய கருத்தோட்டம் எனக்கூறலாம். மேலும் தமிழ்த்தேசியம் என்பது இனவிடுதலைக் கொள்கையாகவும் விளக்கப்படுத்தப்படுகிறது. தமிழ்த்தேசியம் சாதியொழிப்பிற்கும் பெண் விடுதலைக்குமான உயர்நுட்பக்கருவி எனலாம்.[7] மொழிவாரித்தேசியர்கள் சாதிய முரணைப் பின்னுக்குத் தள்ளி மொழி மற்றும் தேசி இன அடிப்படையிலான முரண்களை முதன்மைப்படுத்த முனைந்தனர்.[8] இவ்வாறு திரட்டிக்கொள்வதற்கு அவர்களுக்கு இரு பற்றுக்கோடுகள் நடைமுறையில் உள்ளன. நிலப்பரப்பு மற்றும் மொழி ஆகியவனவே அவையாகும். தமிழ்த்தேசியம் தனக்கு முன் அரசியல் களத்தில் முதன்மையாக நின்று நிலவிய திராவிடம், இந்தியத்தேசியம், தலித்தியம் ஆகிய கருத்தோட்டங்களிலிருந்து வேறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.
தமிழ்த்தேசியத்தின் வரலாறு
தொகுதமிழ்த்தேசம் உருவாகுமுன்பே தமிழ்த் தேசியம் முகிழ்த்துவிட்டது. அது தேசம் இல்லாத தேசியமாகத்தான் இருந்தது. அது உணர்வாக, பண்பாடாக, அறநெறியாக இருந்தது. தேச உள்ளடக்கத்தைப் பெற்ற பின் ஒரு முழுமைப்பட்ட அரசியல் கருத்தியலாக மலர்ந்தது. தேச உருவாக்கத்துக்கு தேசியம் உதவிற்று. தேசியத்தின் வளர்ச்சிக்குத் தேச உருவாக்கம் பொருத்தமான அடித்தளத்தை வழங்கிற்று.[9] தமிழ்த்தேசியத்தின் வரலாறு இந்தியத்தேசியத்தின் வரலாற்றுக்கும் முன் தொடங்குகிறது.
தமிழர்கள் தொடக்கக் காலங்களில் மொழியை வைத்தே ஒரு தேசத்தை, நாட்டை அடையாளம் கண்டுவந்தனர். இதனைத் தமிழர்களின் பழம் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பிழிஆர் மகிழ்நர். கலிசிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேயம் இறந்தனர் ஆயினும்
விலங்கிருஞ் சிமையக் குன்றத்து உம்பர்
வேறுபல மொழிய தேயம் ஆயினும்
(அகநானூறு 215) என்பதாக மொழியைச் சுட்டியே தேசம் அடையாளம் காணப்பட்ட செய்திகளை தமிழரின் பழைய இலக்கியங்களில் பார்க்க முடிகிறது.[10]
தமிழகத்தை ஒரு நாடாகவும் தமிழ்நிலமாகவும் கண்ட தொன்மையான குறிப்புகள் தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. தமிழ்மொழியைத் தம் அடையாளமாகக் கூறுவதும், தமிழ்நாட்டின் நில ஓர்மையை விளக்குவதும் தமிழ்த்தேசியத்தின் படிவுகளாக உள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள் வழி பண்டைத் தமிழ்ச்சமூகம் பற்றி நாம் அறியத்தக்க செய்திகள் குறிப்பாக இரண்டு.
ஒன்று, பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் பிறப்பு அடிப்படையில் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ நோக்கும், இயற்கையோடு இயைந்த சமயச் சார்பற்ற பண்பாட்டு நெறியும் கொண்டதாக விளங்கி வந்திருக்கிறது.
மற்றொன்று, அவர்கள் தங்கள் தாயகம் பற்றிய தெளிவான புரிதலுடன் “ வடவேங்கடம் தென்குமரி ஆயிடை” என அதன் எல்லை அறிந்து அதைத் “ தமிழ் கூறும் நல்லுலகு என்றோ, தமிழகம், தமிழ்நாடு, தென்னாடு என்றோ பலவாறு பெயரிட்டு அழைத்துத் தாய்மண் மீது பற்று , பெருமிதம் கொண்டவர்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர்.[11]
தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரத்தில் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு எனும் வரிகள் தமிழர்கள் வாழும் நில எல்லைகளைக் குறித்தன.
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18) |
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5) |
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38) |
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62) |
இதுபோன்ற நில எல்லை வரையறுப்புகளும் தமிழர்கள் வாழும் நிலத்தை பதிற்றுப்பத்து, புறநானூறு, சிலப்பதிகாரம் முதற்கொண்டு பாரதியார்வரை தொடர்ச்சியாக தமிழ்நாடு, தமிழகம் என அழைத்து வந்ததும் தமிழ்த்தேசியத்தின் நிலவியல் வரலாற்றுக்கான இலக்கிய சாட்சியமாக உள்ளன. தமிழ்நாடு சேர சோழ பாண்டியர் உள்ளிட்ட மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்திலும் அறிவர் உலகில் தமிழ்நாடு எனச் சுட்டப்பட்டது. இது தமிழ்த்தேசியத்தின் தோற்றக்காலப் படிவாகும். தமிழ்நாடு எனும் சொல் பலகாலமாக தமிழ் அறிவுத்துறையில் ஆளப்பட்டமை தமிழர்கள் தங்கள் நிலப்பரப்பை தங்களின் நாடாக, தேசமாக உணர்ந்திருந்த அறிந்துணர்வின் வெளிப்பாடாகும். இது தமிழ்த்தேசியத்தினைப் பிற்காலத்தில் உருவாகிடச் செய்த காரணிகளில் ஒன்றாக உள்ளது.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிங்க நாட்டு அரசன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டுச் செய்திகளிலிருந்தும், அக்காலத்தமிழ் இலக்கியப் பதிவுகளிலிருந்தும் மூவேந்தர்களின் ஒருங்கிணைவுச் செய்திகளை அறியலாம்.
ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் இருவரும்
உடனிலை திரியீராயின் திரைப்
பௌவம் உடுதவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவுத பொய்யா காதே
அதனால்,
நல்ல போலவும், நயவ போலவும்,
தொல்லோர் சென்ற நெறிய போலவும்
காதல் நெஞ்சின்நும் இடைபுகழ் கலமரும்
ஏதின் மக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும் உணர்ச்சி
-என்ற (புலவர் காரிக்கண்ணனாரின் புறநானூற்றுப் பாடல் எண் 58) புறநானூற்றுப் பாடல்வழி, அன்றைய மூவேந்தர்களும் ஒன்றிணைவு குறித்த குறிப்பினை அறியலாம்.[12] வரலாற்றில் தமிழ்த்தேசியம் கடந்துவந்த நீண்ட வரலாற்றுப்பாதையில் தன்னாளுமையுடன் (சுய அதிகாரத்ததுடன்) இருந்த காலம் மிகவும் குறைவு. களப்பிரர், பல்லவர், நாயக்கர், முசுலீம்கள், மராட்டியர், ஆங்கிலேயர் ஆகிய வேற்று மொழி மக்கள் ஆண்ட காலங்களில் தமிழர்கள் தம் அடையாளத்தைக் கலாச்சாரத்தைப்பேணிக் காத்துக்கொள்ள முயன்றனர். வேற்றுச்சமயங்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் அந்த சமயங்களை எதிரப்பதற்காகத் தமிழ் மொழியை, எதிர்ப்புணர்வுக்குரிய கருவியாகவும் பயன்படுத்தும் போக்கு இருந்ததையும் காண நேரிடுகின்றது.[13]
நவீனத் தமிழ்த்தேசியம் ஓர் அரசியல் கருத்துருவாக உருவாகி ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆகின்றன. தமிழரின் அடையாளங்கள் எவை? தமிழ்மொழியே தமிழரின் முதன்மையான அடையாளம் என்ற ஒரு பதிலை 19ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்தே உருவாக்கி வந்தனர். வேதங்களே இந்தியரின் அடையாளம். வேதாந்தமே இந்தியரின் ஆகப்பெரும் தத்துவம் , இந்து மதமே இந்தியரின் பேரடையாளம் என்ற அலை வேகமாக வீசி அடித்த காலத்தில் சமயம் சாராத, சாதி சாராத, மொழியை அடையாளமாக்கியவர்கள் தமிழர்கள் என்பது ஒரு சாதனையாகும்.[14] பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயோத்திதாசப் பண்டிதர் தமிழ்த்தேசிய அடையாளங்களின் தொடக்கப்படிவுகளைக் கண்டடைந்தார். சாதியைக் கடக்காமல் தமிழர்கள் இன ஓர்மைகொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்த அவர் ஒரு பைசாத் தமிழன், தமிழன் என இதழ்கள் தொடங்கி நடத்தினார். ‘தமிழன்’ என்ற தேசிய இனப்பெயரை அதன் அரசியல் சமூகப் பொருளோடு பயன்படுத்திய முதல் தமிழ்ச் சிந்தனையாளர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவர்.[15] அவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர்களைத் தமிழன் என்று பதிவுசெய்திடக் கோரிக்கை விடுத்தார். இந்திய மண்ணில் சாதி அமைப்பின் மூலமாகத்தான் (பூர்வ) அறம் அழிந்து போனது என்பது அவரின் வாதம். அயோத்திதாசப்பண்டிதர் அன்று நசிந்துகொண்டிருந்த வேளாண் உழைப்பாளிகளை மையப்படுத்தினார். இது தமிழ் அடையாள உருவாக்கத்தில் அவரது தனிப்பெரும் பங்களிப்பாகும். அயோத்திதாசருக்கு முன்போ பின்போ இவ்வளவு தெளிவாகத் தமிழ் அடையாளத்தை விவசாயிகளோடு தொடர்பு படுத்தியவர்கள் எவரும் இலர். பண்டிதரில் நிலம், உழைப்பு, அறம், பூர்வத்தொன்மை, தமிழ்மொழி, பௌத்தம் ஆகியவை இணைந்து நிற்கின்றன.[16] இவர் போன்ற அறிஞர்களின் செயற்பாடுகள் தமிழர்கள் தங்களின் தேசிய அடையாளத்தைக் கண்டடையும் பயணத்தின் விளைபொருட்களாகும். அதன்பின் வரதராசல நாயுடு தொடங்கிய தமிழ்நாடு இதழ், மொழிவாரியாகக் காங்கிரசு தன்னை அமைத்துக்கொண்டபோது உருவான தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி எனும் பெயர்தோன்றிய நிகழ்வு இவையனைத்தும் உருவாகிவந்த தமிழ்த் தேசியக் கருத்தியலின் முளைகளாகும். அதாவது தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என அடையாளப்படுத்துதல், தனிநபர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துதல், தமிழ் மொழியை தங்களின் இணைப்புக்குரிய கருவியாகப் பார்த்தல் ஆகியவை தமிழ்த்தேசியத்தின் தொடக்ககாலக் கூறுகளாக இருந்தன. இவற்றுள் சாதி மதங்களைக் கடந்து இன ஓர்மை பெறுவதன் தேவையும் உணரப்பட்டிருந்தது.
கிழக்கிந்திய நிறுவனம் இந்தியப் பரப்பில் ஆதிக்கம் செலுத்த முனைந்த தொடக்க அவதானிப்புகள் தமிழகத்தில் எழுந்தன. அவற்றினூடாக எழுந்த இந்தியத்தேசியத்தையும் திராவிடத்தேசியத்தையும் மறுத்து தமிழ்த்தேசியம் வளர்ந்தது. நீதிக்கட்சி பெயர்மாற்றக் காலகட்டத்தில் தமிழ்த்தேசியம் தீவிரமாக வெளிப்பட்டது. நீதிக்கட்சி தமிழர் கழகம் எனப் பெயர்மாற்றப்பவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய அண்ணல் தங்கோ[17] கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தலைவர்கள் தமிழ்த்தேசியத்தை உட்கிடையாகத் தம் கண்ணோட்டத்தில் கொண்டிருந்தனர். இதுகுறித்த எழுந்த உரையாடலே தமிழகத்தில் திராவிடத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இடையே நடந்த முதன்மையான உரையாடல்களுள் ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றது. பல நூற்றாண்டுகாலமாக தமிழர்களுக்கான உரிமைகள், தமிழுக்கான முதலுரிமை ஆகியன பற்றிய விழிப்புணர்வு மிக்க தலைவர்கள் செயல்பட்டுவந்தனர். அவர்களின் தொடர்ச்சியாக பிரிட்டிசு எதிர்ப்புக் காலத்தின் விளைவாகத் தமிழ்த்தேசியம் தேசிய அறிந்துணர்வோடு (பிரக்ஞையோடு) தன்னை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தன்னை வெளிப்படுத்தியது. இராசாசி சென்னை மாகாணத் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்று இந்தித்திணிப்பில் ஈடுபட்டதும், அதற்கெதிராகத் தமிழறிஞர்களும் பெரியாரும் 1938இல் அறப்போர் தொடுத்ததும் இந்தியத்தேசியத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்குமான முதல் அரசியல் மோதலைக் குறித்தது.[18] 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிதொடங்கி முனைப்பாகத் தமிழத்தேசிய உரையாடல்களை, செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களுள் கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, ம.பொ.சி ஆகியோர் அடங்குவர். ம.பொ.சி 1946 மே 1 ஆம் நாள் தமிழ் முரசு எனும் மாத இதழைத் தொடங்கி நடத்தினார். அதே ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் தமிழரசுக் கழகம் அமைப்பினை ம.பொ.சி தொடங்கினார். அந்த அமைப்பின் குறிக்கோளாக 1950களுக்குப்பிறகு பாவலரேறு பெருஞ்சித்திரனார், சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட பலர் அடங்குவர். இவர்களில் பெருஞ்சித்திரனார் இறுதிவரை தமிழ் தேசியத்தின் அத்தனை கூறுகளிலும் நின்று களம் அமைத்தார். ஆதலால் தமிழ்த்தேசியத் தந்தை என்ற அடைமொழியை பெற்றார். 1980 தொடங்கி தமிழ்த்தேசிய இயக்கங்கள் பல தமிழ்த்தேசியக் கருத்தியலை முழுமையாக ஏற்று இயங்கிவருகின்றன. திராவிடம், தலித்தியம், இந்தியத்தேசியம் ஆகிய அரசியல் கருத்துருவாக்கங்களுக்கு உள்ள வரலாற்றோடு ஒப்பிடுகையில் தமிழத்தேசியம் நீண்டதாகும்.
தமிழ்த்தேசிய அமைப்புகள்
தொகு- தமிழரசுக் கழகம்
- தமிழ்த்தேசியக் கட்சி
- உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்
- தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி
- தமிழ்நாடு மார்க்சிய இலெனினியக் கட்சி
- தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
- தமிழ்த்தேச மக்கள் கட்சி
- தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
- தமிழ்த் தேசிய பேரியக்கம் அல்லது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
- நாம் தமிழர் கட்சி
- தமிழர் தேசிய இயக்கம்
தமிழ்த்தேசியமும் சாதியொழிப்பும்
தொகுசாதிக் கட்டமைப்பு என்பது ஒருங்கிணைந்த ஒன்று. இதில் ஒரு பகுதியை மட்டும் மாற்ற முடியாது. அது ஒருமைப்பட்ட முழுமை (integral whole). அதனைப் பகுதிபகுதியாக அழிக்கவோ மாற்றவோ முடியாது. அடியோடு அழித்தால்தான் உண்டு. அறவே ஒழித்தால்தான் உண்டு. எல்லா உறுப்புகளையும் கழற்றிப் போட்டு மாற்றிப் பூட்டியாக வேண்டும். அதுதான் சாதி ஒழிப்பு.[19] தமிழ்த்தேசியப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதியாக சமத்துவ சமூக அமைப்புத் திட்டம் உள்ளது.[20] தமிழகத்தின் சாதியொழிப்பு அரசியலில் தமிழ்த்தேசியம் தீர்மானகரமான பங்காற்றியுள்ளது. தமிழ்த்தேசிய ஆளுமைகளுள் முதன்மையானவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவர் தான் நடத்தி வந்த தென்மொழி இதழில் சாதி ஒழிப்புக்கான ஒரு திட்டத்தை வகுத்து வெளியிட்டார். திட்டவட்ட சாதியொழிப்பு அரசியல் மற்றும் தமிழ்நாடு விடுதலை எனும் தமிழ்த்தேசிய அரசியலோடு இணைத்து தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி நிறுவனர் தமிழரசன் அவர்களால் கோட்பாடாக முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையே தமிழ்த்தேசியத்திற்கும் சாதியொழிப்புக்குமான உறவினைத் தெளிவுபடுத்தும் முதன்மையான வரலாற்று ஆவணமாக உள்ளது. இவ்வறிக்கை 1985இல் மீன்சுருட்டி எனும் ஊரில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை ஆகியவை தொடர்ச்சியாக சாதியொழிப்பை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய அரசியலை நடைமுறையில் செய்துவந்தன. தமிழ்த்தேசிய இயக்கங்கள், கட்சிகள் எதுவும் சனாதன தர்மம் எனும் சாதிய அடிப்படையிலான சமூகப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ இல்லை. சாதியையும் மதத்தையும் கடந்து தமிழர்கள் இன ஓர்மை பெறவேண்டும் என்பதே அவ்வியக்கங்கள் முன்வைக்கும் கருதுகோள் ஆகும். சாதிதோன்றிய காலம் மிகத்தொன்மைக் காலமாகும். அதுமுதல் தமிழின் எழுதப்பட்ட வரலாற்றில் சாதியொழிப்புக் கருத்தோட்டங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இந்த சாதியொழிப்பு மரபினைப் பல தமிழ்த்தேசிய இயக்கங்கள் தம் மரபாகக் கருதுகின்றன. திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் கூற்றும், சித்தர் மரபுகளும் , வள்ளலார் , பாரதியார், பாரதிதாசன் என சாதியொழிப்பு மற்றும் சாதியெதிர்ப்பு வழித்தடமே தமிழ்த்தேசியக் கருத்தியலின் சாதியொழிப்புப் பார்வையின் சாரமாக உள்ளது.
நிலப்பரப்பு
தொகு- தமிழ்த்தேசியம் இருபெரும் தேசியப் பிரிவுகளைக்கொண்டுள்ளது. தமிழகத் தமிழ்த்தேசியம் மற்றும் தமிழீழத் தமிழ்த்தேசியம் ஆகியவையே அவை. தமிழகத்தைப்பொறுத்து 1956 உருவான மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு நிலவும் தமிழ்நாடு எல்லைகளே பெரும்பாலான தமிழ்த்தேசிய இயக்கங்கள் (சிறுசிறு வேறுபாடுகளோடு) ஏற்றுக்கொண்ட நிலப்பரப்பாக உள்ளது. தமிழீழ எல்லை வரையறைகள் தமிழீழ விடுதலை இயக்கங்களால் வரையறைப்படுத்தப்பட்டுள்ளன.
- ஆயினும் தமிழ்த்தேசியம் பேசுவோரில் சி. பா. ஆதித்தனார் தமிழக மாநிலமும் தமிழக மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டதாக தமிழர்கள் கருதும் தமிழகத்தின் அண்டை மாநில நிலப்பகுதிகளையும் தமிழீழத்தையும் இணைத்து தனி தேசமாக தமிழ் தேசம் அமைய வேண்டும் என்று விரும்பினார்.[21]
- இதுபோன்ற கருத்தியல்கள் பின்னாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரை அகண்ட தமிழ்நாடு அமையப் போராடியவர்களாக சித்தரிக்க முயன்ற இந்திய அரசால் பரப்பப்பட்டன. எந்த ஒரு இயக்கமும் அமைப்பும் தமிழகத்தையும் ஈழத்தையும் இணைத்த ஒரு தேசத்தைப் படைக்கவேண்டும் என்ற இயங்குவதாக வெளிப்படையாக அறிவித்ததில்லை என்பதே இன்றைய நிலையாகும்.
- ஆனால் பின்னாளில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் சிங்கள பேரீனவாதத்தை எதிர்த்து தமிழீழம் தனிநாடு கேட்டு போராடியது எல்லாம் இலங்கையில் வாழும் தமிழர்–சிங்களர் இடையேயான உரிமைபோர் அடிப்படையிலான உள்நாட்டு பிரச்சனையே தவிர அதில் தமிழ் தேசிய கொள்கைவாதம் எல்லாம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
- மேலும் தமிழகத்தில் தமிழ் தேசிய கொள்கையானது தமிழகத்தின் புவியல் அரசியல் நோக்கில் நீராதாரம், பொருளாதாரம், இயற்கை கனிமவளங்கள், விவசாயம், பொருள் உற்பத்தியின் பல விதமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபார நோக்கில் தமிழகம் பக்கத்து மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருப்பதாலும் மேலும் தமிழகத்தில் பல்லாண்டு காலமாக அம்மாநில மக்கள் நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் வாழ்வாதாரம் பெற்றதால் தமிழ் தேசியம் கொள்கையானது நடைமுறைக்கு சாத்தியமில்லாத கொள்கை என்று புறக்கணிக்கபட்டு பழம்பெரும் திராவிட நாடு கொள்கை வழியிலே செயல்பட்டுவருகின்றது.
தமிழ்த் தேசியம் நோக்கி கருத்து நிலைகள்
தொகுதமிழ்த் தேசியம் எதை நோக்கி அமைகின்றது என்று மேலே சுட்டப்பட்டாலும், அதைப் பல்வேறு வழிகளில் வெவ்வேறு நபர்கள் வரையறை செய்துள்ளார்கள். அவற்றின் தொகுப்பு கீழே:
“ | வரலாற்று வளர்ச்சியால் உள் வாங்கப்படாத சில, சிறுசிறு பழங்குடிகள் தவிர உலகின் எப்பகுதியிலும் வாழும் எந்த மக்கள் சமூகமும் இன்று ஏதாவதொரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறதேயன்றி மரபினமாக அல்ல. இன்றைய சமூக வரலாற்றுச் சூழலில் அது சாத்தியமுமல்ல. இவ்வாறே, தமிழ்ச் சமூகமும் தமிழ்த்தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறது. அடையாளப்படுத்தவும் படுகிறது இதற்கு மொழியும், வாழ்நிலமுமே முதன்மையான காரணிகளாய் அமைகின்றன.
- இராசேந்திரசோழன் |
” |
“ | உலகமயத்தால் நசுக்கப்படும், உழவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்குண்ட சாதியினர், ஒதுக்கப்படும் சிறுபான்மையினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முதலிய புரட்சிகர சக்திகளை உலகமய எதிர்ப்பில் ஒன்றிணைக்கிற மகத்தான புரட்சிகர ஆற்றல் தமிழ்த் தேசியம் தான். சூழல் பாதுகாப்பு, மரபான தொழில் நுட்பப் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகிய தளங்களில் உலகமயத்திற்கு எதிராகக் களம் அமைப்போர் ஒன்றிணைய வேண்டிய தளமும் தமிழ்த் தேசியம் தான். தமிழ்த் தேசியப் புரட்சிதான் உலகமயத்தை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது. | ” |
“ | தமிழ்த் தேசியம் என்பதுதான் -மொழி- மொழி பேசுகிற இனம்- அதனுடைய நிலப்பரப்பு- அதனுடைய பண்பாடு- அதனுடைய உளவியல் உருவாக்கம்- அதனுடைய பொருளியல் பிணைப்பு என்று எல்லா அப்படைகளிலும் தேசம் என்பதற்குரிய வரலாற்று வழிப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் உண்மையான நேர்வகையான தேசம். தமிழ்த் தேசம் என்கிறபோது- அப்படி இருப்பது அங்கீகரிக்கப்படாமல் மறுக்கப்பட்டும் பிறிதொரு அரசமைப்புக்குடபட்டும் இருக்கிறபோது இயல்பாகவே அது ஒரு ஒடுக்குண்ட தேசத்தின் தேசியமாக இருக்கிறது. | ” |
- தியாகு
தமிழ்த்தேசியமும் இந்தியத்தேசியமும்
தொகுதமிழ்த்தேசியத்தின் புறப்பகையாக இருப்பது இந்தியத் தேசியம் என்ற பெயரிலான தில்லி ஏகாதிபத்தியம். அகப்பகையாக இருப்பது சாதியம்.[22] இந்தியத் தேசியம் வெவ்வேறுபட்ட பல தேசிய இனங்களின் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துகிறது. ஆனால், தமிழ்த்தேசியம் அப்படி அல்ல. இது வெவ்வேறு தேசிய இனங்களில் உள்ள வேறுபாடுகளை அல்ல, மாறாக ஒரே தேசிய இனத்திற்குள் இருக்கும் சாதிய வேற்றுமைகளை ஒழிக்கக் கோருகிறது.[23] தேசம் எனப்படுவது ஒரு பொது மொழி, தொடர்ச்சியான நிலப்பகுதி, பொதுவான பொருளியல் வாழ்க்கை, வரலாற்றுப் பூர்வமான உளவியல் உருவாக்கம் இவற்றைக்கொண்டு அமைவது என்பது பொதுவான சமூக அறிவியல் நோக்கு. இந்நோக்கில் இந்தியா ஒரு தேசமல்ல என்பதும், அது பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்பதும், சமூக ஆய்வாளர்களது கருத்து.[24] இந்திய தேசிய இனம் பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கு முன் இருந்ததில்லை.[25] ஆயினும், இந்தியப் பொதுவுடமை இயக்க அகரமுதலியில் தேசியம் என்ற சொல்லுக்கு இந்தியத் தேசியம் என்பதுதான் பொருள். இந்திய விடுதலை இயக்கத்தைத் தேசிய இயக்கம் என்றுதான் காங்கிரசுகாரர்களும் பேசினார்கள். பொதுவுடமையாளர்களும் வழிமொழிந்தார்கள். இந்தியா ஒரு தேசம் என்பதுதான் மறுக்கப்படாத விதியாக இருந்தது.[26] ஆனால், தமிழ்த்தேசியம் இந்தியத்தேசியத்திலிருந்து கோட்பாட்டு வரையறைகளின் அடிப்படையில் முற்றிலும் மாறுபட்டது ஆகும். இந்தியத் தேசியம் பிரிட்டிசு குடியேற்றக் காலத்தில் உருவான அரசியல் கருத்தாக்கமாகும். தமிழ்த்தேசியம் அதே குடியேற்றக் காலத்தில் உருவானதாக இருப்பினும் அடிப்படையில் மொழியினச் சமூக அடிப்படையில் உருவானதாகும். இந்தியத்தேசியம் பிரிட்டிசு எதிர்ப்பில் ஒருங்கிணைந்த பல்வேறு தேசிய இனங்களின் கூட்டிணைவின் விளைவாக உருப்பெற்றது. பிரிட்டிசு ஆட்சிக்குப் பின் இந்தியத்தேசியம் பிரிட்டிசு இந்தியாவை பல மாறுதல்களுடன் தனதாக்கிக்கொண்டது. வரையறைகள் ஏதுமற்று, தமது குடியேற்ற நலனுக்கும் சுரண்டல் வசதிக்கும் ஏற்ப பல்தேசிய மக்களை வலுக்கட்டாயமாக இணைத்து பிரிட்டிசார் இந்தியா எனும் அரசுக்கட்டமைப்பை உருவாக்கினர். அதனூடாக வளர்ந்த இந்தியத் தேசியம் தன் பெயர் உட்பட அனைத்திற்கும் பிரிட்டிசாரையே சார்ந்து நின்றது. பாகித்தானும் பங்களாதேசும் இலங்கையும் பர்மாவும் பிரிட்டீசு இந்தியாவில் உள்ளடங்கியிருந்தன. அவை தனித்தனியே பிரிந்துசென்றுவிட்ட போதிலும் இந்தியா எனும் கட்டமைப்பு தொடர்கிறது. இதுவே , வரையறையற்ற, கற்பிதமான இந்தியத்தேசியக் கருத்தாக்கத்தின் தன்மைக்கான சான்றாக உள்ளது. தமிழ்த்தேசியம் என்பது மொழியினம் மற்றும் நிலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதால் நிலமும் மொழியும் இதன் அடிப்படைகளாக அமைகின்றன. இவ்விரு வரையறைகளை நீக்கிவிட்டால் தமிழ்த்தேசியம் இல்லை. அதற்கு மாறாக இந்தியத்தேசியத்திற்கு நிலமும் மொழியும் வரையறையாக இல்லை. அரசுக் கட்டமைப்பே அதன் இருத்தலுக்கான ஆதாரமாக உள்ளது. அதாவது, இந்தியத்தேசியம் இந்திய அரசுத்தேசியம் என்ற அளவிலேயே அமைகிறது. பிரிட்டிசு அரசு தோற்றங்கொண்டபிறகே இந்தியா எனும் தேசியக் கட்டமைப்புக்கான கருத்தியலுக்கான வரையறைகள் தோற்றங்கொண்டன. தமிழ்த்தேசியத்தின் சாரமான வரையறைகள் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே உருவாகி நிலைபெற்றவையாகும். தொல்காப்பியரின் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் எனும் வரையறுப்பு தொடங்கி தமிழர் சமூகம் தன் நிலத்தையும் மொழியையும் தன் சமூக அறிந்துணர்வில் (பிரக்ஞையில்) தொடர்ச்சியாகப் பெற்றுவந்துள்ளது. இதுகுறித்து ஏற்படும் புரிதலை வைத்து இந்திய தேசியம் வலியுறுத்தும் “வேற்றுமையில் ஒற்றுமையையும், தமிழ்த்தேசியம் வலியுறுத்தும் “ சாதியம் களைந்த ஒற்றுமையையும்” பெருமளவு விளங்கிக்கொள்ளலாம்.[23]
தமிழ்த்தேசியமும் திராவிடத்தேசியமும்
தொகுதிராவிடத்தேசியம் என்று ஒன்று கிடையாது. நேரடியாக அதற்கு அப்படி ஒரு வரையறுப்பும் முன் வைக்கப்பட்டதாகவும் சொல்ல முடியாது.[27] எந்த வரையறுப்பும் இல்லாமலேயே, திராவிட நாடு, திராவிடத் தேசியம் என்னும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது[27]. மேட்டிமைச் சக்திகளாக இருக்கும் பிராமணர்களைத் தவிர்த்து பிற தென்னிந்தியர்களின் சமூக மேம்பாடு ஆகும். நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம், மராட்டியத்தில் அம்பேத்கர் மற்றும் புலே ஆகியோர் உருவாக்கிய இயக்கங்கள் ஆகியவறிற்கு ஒரு பொதுப்பண்பு உண்டு. இந்தியச் சமூக முரண்பாட்டை, அடிப்படையில் சாதிய வடிவில் அமைந்துள்ளதாகப் பார்ப்பதே இந்தப் பொதுப்பண்பு.[28] திராவிடத்தேசியம் 1956க்கு முற்பட்ட சென்னை மாகாண அரசியலாகத் தோற்றம் கண்டது. கோட்பாட்டளவில் தென்னிந்தியர் அனைவரையும் திராவிடர் எனக் கூறினாலும் நடைமுறையில் சென்னை மாகாண மக்கள் நடுவில் மட்டுமே இக்கருத்தாக்கம் செல்வாக்கு செலுத்தியது. திராவிடத்தை முன்னெடுத்த இயக்கங்கள் ஆரியத்தை மொழியடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் சிலவகையில் எதிர்த்துப்பேசினாலும் ஆரியத்தின் அரசியல் அதிகாரக் கருவான இந்தியத்தை வீழ்த்துவற்கான செயல் திட்டமின்றி, அந்த இந்தியத்திற்கு அடிபணியவே செய்தன. இனத்தால் திராவிடன் நாட்டால் இந்தியன் என மயங்கின, தமிழர்களை மயக்கின.[29] திராவிட நாடு என்பதற்கு திட்டவட்ட வரையறைகள் கிடையாது. இந்தியத்தேசியத்தின் உடன்விளைவாகத் தோன்றிய திராவிடத்தேசியம் தமிழ்த்தேசியம் போன்று நிலத்தையும் மொழியையும் வரம்பெல்லைகளாகக் கொண்டிருக்கவில்லை. திராவிடத்தேசியம் பிரிட்டீசு ஆட்சியின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட சென்னை மாகாணம் எனும் நில எல்லைக்குள் பிராமணர்களின் மேலாதிக்கத்தின் எதிர்ப்பரசியலாகத் தோன்றி வளர்ந்தது. இது உள்ளீட்டில் பல்தேசிய இனத்தன்மை கொண்டும், நிலம் குறித்த அறிதலற்றும் முதன்மையாகச் சமூகச்சிக்கல்களைக் கொண்டும் இருந்தது. இதன் தொடக்கக் கட்டம் தமிழ்த்தேசியத்துடன் தீவிர முரண்களை எட்டியது. இதற்கு திராவிடர் கழகம் பெயர்சூட்டல் விவகாரம் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. ஆனால், திராவிடர் இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் உருவான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்த்தேசிய உள்ளீட்டினைப் பெற்று வளர்ந்தது. தமிழர் வரலாற்றுப் பெருமைகள், தமிழ்மொழியின் சிறப்புகள், தமிழர் என்ற அடையாளப்படுத்தல் போன்றவற்றை திமுக பல்வேறு கட்டங்களில் தனதாக்கி வளர்த்தது. இவ்வாறாக திராவிடத் தேசியம் தொடக்கத்தில் முரண்பட்டும் பிறகு இணக்கமாகவும் தமிழ்த்தேசியத்துடன் உறவு கொண்டிருந்தது. திராவிடர் இயக்கத்தின் செல்வாக்கு மங்கத்தொடங்கிய 1990களில் தமிழ்த்தேசியம் மீள் உயிர் பெற்றது. தமிழ்த்தேசியத்திற்கும் திராவிடத்தேசியத்திற்கும் இடையேயான முதன்மையான வேறுபாடு இந்தியத் தேசியத்தோடு அவை கொண்டுள்ள உறவிலேயே தங்கியுள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடத்தேசியம் இந்தியத்தேசியத்தோடு நட்புமுரணாகவும் தமிழ்த்தேசியம் இந்தியத்தேசியத்தோடு பகைமுரணாகவும் உறவுகொண்டுள்ளன. இரண்டாம் வேறுபாடு நில இறையாண்மை குறித்த நிலைப்பாடு சார்ந்தது. அதாவது திராவிட இயக்கத்தின் கோட்பாட்டில் வாழும் நிலத்தின் மீது மக்கள் சமூகத்திற்கு இருக்கவேண்டிய இறையாண்மைக்கு இடமில்லை. ஆனால், தமிழ்த்தேசியத்திற்கு நிலம் இன்றியமையாத கூறாக உள்ளது. தமிழ்நாட்டின் எல்லைப்போராட்டக் காலமான 1950களில் தமிழ்த்தேசிய அக்கறை கொண்டிருந்த தமிழரசுக்கட்சி போன்ற கட்சிகள் தமிழர் நில உரிமைக்கு முன்னுரிமை கொடுத்தன. ஆனால், திராவிட இயக்கம் இதுகுறித்த அறிந்துணர்வற்று (பிரக்ஞையற்று) இருந்தது. இவ்வாறாக வாழும் நிலம் குறித்த நிலைப்பாடு திராவிடத்தேசியம் மற்றும் தமிழ்த்தேசியம் ஆகியவற்றுக்கும் இடையேயான இரண்டாவது வேற்றுமையாகும். இன்னமும் பல்வேறு வேற்றுமைகள் முரண்கள் இவ்விரு மெய்யியல் போக்குகளுக்கு இடையே நிலவுகின்றன.
தமிழ்த்தேசியமும் தலித்தியமும்
தொகுதலித்தியம் என்ற பெயரில் ஒரு கோட்பாட்டை அம்பேத்கர் அறிவிக்கவில்லை என்றாலும், இன்றைய தலித்தியம் அம்பேத்கரியக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளதை அறிய முடிகிறது[30]. தலித்தியம் என்ற கோட்பாட்டின் சாரம், இந்திமயமாதலும், இந்தியத் தேசியத்தை ஏற்றலும் தமிழர் அடையாளங்களைக் கைவிடலும் என்று தமிழ்த்தேசியவாதிகள் கருதுகின்றனர்[31]. மேலும், தலித்தியத்தின் பிரிக்கமுடியாத கூறு இந்தியத் தேசியமும் மொழிவழித் தேசிய இன மறுப்பும் ஆகும் என்றும் தமிழ்த்தேசியவாதிகள் எண்ணுகின்றனர்.[32] இந்தியாவில் தலித்திய அரசியல் அம்பேத்கருக்கு சற்று முன்னே அரசியல் வடிவம் பெற்றது. சாதியச் சமூகத்தில் ஒரு தாராளவாத அரசுசார்ந்த சீர்திருத்தங்களைத் தன் அரசியல் இலக்குகளாகக் கொண்டு தலித்தியத்தின் குறிக்கோள்கள் அமைகின்றன. தலித் எனும் சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர் என்று பொருள் ஆகும். தலித்தியம் என்றால் ஒடுக்கப்பட்டவர் மெய்யியல் என்று பொருள்படுத்தலாம். ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தலித்தியம் என்றால் சாதியால் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களையே நடைமுறையில் குறிக்கிறது தலித் என்பவர் தீண்டாமைக் கொடுமையால் பாதிப்புற்றவர் என்பதே பொருளாகக் கருதப்படுகிறது. தலித்தியம் இந்தியச் சமூகத்தை சாதிய அடிப்படைக் கட்டமைப்பாக அணுகுகிறது. இந்தியாவில் சாதிகள்தான் உள்ளன. தேசிய இனங்கள், மொழியினங்கள் போன்ற எந்த வகைப்பாடும் வெளித்தோற்றமே. உள்ளீடு சாதியக் கட்டமைப்பைத் தவிர வேறில்லை என்பது இதன் கருதுகோளாக உள்ளது. தலித்தியத்திற்கு மொழி ஒரு பொருட்டில்லை. சாதியால் தாழ்த்தப்பட்டோர் அனைவரும சமூக உரிமையால் தலித்துகளாக உள்ளனர். ஆகவே, தலித்தியம் சாதியொழிப்புக் கருத்தியலாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. தலித்தியம் ஒரு கோட்பாடாக எழுச்சி பெற்ற 1990களில் (அம்பேத்கர் நூற்றாண்டு எழுச்சிக் காலம்) ஓர் அடையாள அரசியலாய் வீறுடன் எழுந்தது. சாதியொழிப்பு குறித்த அக்கறையையும் தேவையையும் முன்வைத்த தலித்தியம் தமிழ்த்தேசியத்துடன் நெருக்கமாக இருந்திட அதன் அகில இந்திய தலித்தியத் தலைவர்களின் இந்தியச்சார்பு அனுமதிக்கவில்லை என்று அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் அடையாளங்களை தமிழகத்தின் தாழ்த்தப்பட்டோர் கைவிடவேண்டும் என்றும் தமிழ்ப்பண்பாடு இந்தியப்பண்பாட்டுடன் தொடர்புடையது என்றும் இந்தியத் தலித் தலைவர்கள் கூறுகின்றனர்.[33] ஆயினும், தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்த்தேசியத்தையும் தாழ்த்தப்பட்டோர் விடுதலை அரசியலையும் ஒருங்கே முன்வைக்கும் கட்சியாக விளங்குகிறது. மேலும், “இந்து ராச்சியத்தை எதிர்த்தும், பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தும் தமிழனையும் தமிழையும் பாதுகாக்க மூரிக்கிளர்ந் தெழுந்த முதற்குரல் தமிழ்த்தேசியத் தலித்தியக்குரல்தான் என்று அயோத்திதாசரை அடையாளப்படுத்துவதே சரியாக இருக்கும்[34] என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தமிழ்த் தேசியம் நோக்கி நேர்நிலை திறனாய்வுகள்
தொகுதமிழ்த்தேசியம் பின்வரும் கூறுகளை நேர்நிலைத் திறனாய்வுகளாகக்கொண்டு விளங்குகின்றது.
- தமிழ்த்தேசியத்தின் வரலாறு முறையாக அறிஞர்களால் தொகுக்கப்படவில்லை. அதன் வரையறைகள் திட்டவட்டமாகச் சமூகத்தில் தோன்றியிருப்பினும் அவை தொகுக்கப்படாததால் பொது அறிவுப்புலத்தில் தமிழ்த்தேசியம் பன்முகப்பட்ட சிக்கலான கருத்துருவாக முன்வைக்கப்படுகிறது.
- உலகமயச்சூழலில் தங்களின் மொழி மரபு நிலம் இயற்கை வளம் ஆகியவற்றைக் காப்பாற்றிக்கொள்ள தேசிய எழுச்சி இன்றியமையாதது என்று மெய்யியல் தளத்தில் நிறுவிட போதிய ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை.
- தமிழ்த்தேசியத்தின் வரலாற்று ஆவணங்கள் முறைப்படுத்தப்பட்டு வெளியிடப்படவில்லை. தமிழ்த்தேசியத்திற்கான நீண்ட வரலாற்றில் அவற்றின் ஆவணங்கள் தொகுத்து அறிவுத்துறை முன்னும உலகச் சமூகத்தின்முன்னும் வைக்கப்படாத நிலை தமிழ்த்தேசியம் என்பது உணர்வுவயப்பட்ட மொழிவெறியர்களின் அரசியல் என்பதாகப் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
- தமிழ்த்தேசியத்தின் உட்கூறுகள் குறித்த ஐயங்கள் நேர்மையாக அணுகப்பட்டுத் தீர்க்கப்படவில்லை. நீண்ட வரலாற்று மரபு காரணமாக தமிழர்கள் தம்முள் சிக்கலான சமூக உறவுநிலைகளைக் கொண்டுள்ளனர். அவர்களின் பல்வேறு தரப்பினருக்கு தமிழ்த்தேசியம் குறித்து பல்வேறு கடும் ஐயங்கள் உள்ளன. ஆனால், அவை தீர்ப்பதற்குரிய வாய்ப்பில்லாத காரணத்தினால் தமிழர்களின் பல்வேறு சமூகப்பிரிவினரே தமிழ்த்தேசியம் குறித்த அறிதலற்று உள்ளனர்.
- சாதியொழிப்புக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இடையே உள்ள உள்ளார்ந்த உறவினை தெளிவுபடுத்தும் அரசியல் முயற்சிகள் செய்யப்படவில்லை. தமிழ்த்தேசிய இயக்கங்கள் வெளிப்படையாக சாதிய சனாதனக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும், இந்தியாவில் தோன்றிய எல்லா அரசியல் செயற்பாட்டாளர்கள் போலவே தமிழ்த்தேசியக் களத்திலும் பலர் சாதியச் சார்புடன் இயங்குகின்றனர். அவர்களின் தனிப்பட்ட செயற்பாடுகள் தமிழ்த்தேசியத்தின் சாதியொழிப்பு அரசியலின்பாலான ஐயங்களாக வெளிப்படுகின்றன.
தமிழ்த்தேசியம் நோக்கி எதிர்நிலை திறனாய்வுகள்
தொகுபல்வேறு தளங்களில் இருந்து தமிழ்த் தேசியம் நோக்கி விமர்சனங்கள் உண்டு. அவற்றின் தொகுப்பு கீழே:
- தமிழ்த் தேசியம் தமிழரிடையே இனத்துவ மொழித்துவ உணர்வுகளை வளர்த்து மனிதப் பொதுவுணர்வை மழுங்கடிக்கின்றது. அந்த உணர்வுகள் துவோச, ஆதிக்க, வன்முறை உணர்வாக வெளிப்படவும் உந்துகின்றது. இன்றைய பல்பண்பாட்டு, பல் இன அல்லது கலப்பின, உலகமயமாதல் சூழலில் தமிழ்த்தேசியம் குறுகிய எல்லைகளைத் தமிழருக்கு நிர்மானிக்கின்றது.
- அன்றாட வாழ்வின் முதல் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையாக இருக்க, தமிழ்த் தேசியம் மொழியை முன்னிறுத்தி முற்போக்கான போராட்ட சக்திகளை வீணடிக்கின்றது. மனிதரிடையே காணப்படும் ஏழ்மை, ஏற்றதாழ்வுகள், வேலையின்மை போன்ற அடிப்படை பொருளாதார சிக்கல்களுக்கு தகுந்த முக்கியத்துவம் தராமல் தமிழ்த் தேசியம் கவனத்தை சிதறடிக்கின்றது. தமிழரிடையே சமத்துவத்தை முன்வைத்து எழுந்த பொதுவுடமை, இடதுசாரி போக்குகளுக்கு தமிழ்த் தேசியம் வலுச்சேர்க்கவில்லை. மாறாக வலதுசாரிப் போக்குக்களையே தமிழ்த் தேசியம் வெளிப்படுத்தியிருக்கின்றது.
- தமிழ்த் தேசியம் தமிழ் மேற்குடி மக்களின் கருத்தியலாகவே இருக்கின்றது. நுண்கலைகள், இலக்கியத் தமிழ் சராசரித் தமிழருக்கு அப்பாலேயே இருக்கின்றன.
- தமிழ்த் தேசியம் தனிப்பட்ட அரசியல், ஊடக, வணிக சுரண்டலுக்கான கருத்தியலாக இருக்கின்றதே தவிர, தமிழரின் அன்றாட வாழ்வியலுக்கு உதவும் ஒரு கருத்தியல் இல்லை.
- தமிழ்த் தேசியக் கருத்தியல்களில் சிலசமயங்களில் வெளிப்படும் பாசிசப் போக்கு.
- "இன்றைவரைக்கும் தமிழ்த் தேசியவாதத்தால் முழுமையாக முகம்கொடுக்க இயலாத பிரச்சினையாகச் சாதியம் இருப்பதற்குக் காரணம், தமிழ்ச் சமூகத்துக்கு உள்ளே இருக்கிற ஒடுக்குமுறைகளை மழுப்பியே இதுவரை தமிழ்த் தேசியம் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளதே என்பேன். புலம்பெயர் சூழலில் சாதிக்கு அர்த்தமில்லை என்ற வாதம் தருக்கரீதியாக ஏற்கக்கூடியது. அப்படியானால் நாட்டைவிட்டு நிரந்தரமாகவே புலம்பெயர்ந்தோரிடையே தொடரும் தேசிய உணர்வும் அர்த்தமற்றதாகாதா?"
பேராசிரியர் சி. சிவசேகரம் [1] பரணிடப்பட்டது 2007-09-16 at the வந்தவழி இயந்திரம்
- "அகண்ட தமிழ் தேசியம் பேசுகின்ற தோழர்களில் பலருக்கு ஈழ விடுதலையின் வரலாறு கூட சரியாகத் தெரியவில்லை, “மூர்க்கமான, அனுமானங்களில் தங்கள் கனவுகளை உரமூட்டி வளர்க்கும் ஒரு வேறுபாட்டை விரும்பும் இளையோர் கூட்டமாக” சமூகவியலாளர்கள் இவர்களைக் கருதுகிறார்கள் என்பது கூடுதல் செய்தி." - கை.அறிவழகன்
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ நூல்: இந்தியம், திராவிடம், தமிழ்த்தேசியம், ஆசிரியர்: இராசேந்திர சோழன், பக்கம்35, மங்கை பதிப்பகம், சென்னை
- ↑ பெ.மணியரசன்: ஒரு முடிவுக்கு வாருங்கள் நூல் பக்கம் 21 பன்மை வெளி வெளியீடு
- ↑ பெ.மணியரசன்: தமிழ்த்தேசக் குடியரசு நூல் பக்கம் 5 , பன்மை வெளி பதிப்பகம்
- ↑ பெ.மணியரசன்: தமிழ்த்தேசக் குடியரசு நூல் பக்கம் 11 , பன்மை வெளி பதிப்பகம்
- ↑ தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் சனவரி 25,2018, தியாகு- தமிழ்த்தேசியத்தின் வரலாற்று வழித்தடம் சில அறிமுகக்குறிப்புகள் கட்டுரை பக்கம் 28, வெளியீடு :தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) , சென்னை
- ↑ பெ.மணியரசன்: தமிழ்த்தேசக் குடியரசு நூல் பக்கம் 8 , பன்மை வெளி பதிப்பகம்
- ↑ விழுதுகள் நூல், பதிப்பகம் : தமிழக ஆய்வரண், ஆசிரியர்: குணா பக்கம் 43
- ↑ ம.பொ.சி. எழுதிய தமிழகத்தில் பிறமொழியினர் , (பக்கம் 10) நூலின் முன்னுரையில் ஆய்வாளர் அ.மார்க்சு,
- ↑ தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் சனவரி 25,2018, தியாகு- தமிழ்த்தேசியத்தின் வரலாற்று வழித்தடம் சில அறிமுகக்குறிப்புகள் கட்டுரை பக்கம் 23, வெளியீடு :தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) , சென்னை
- ↑ பொழிலன், தமிழ்த்தேச விடுதலைப்போராட்டம் பக்கம் 95-96 , மன்பதைப் பதிப்பகம்
- ↑ நூல்: இந்தியம் திராவிடம் தமிழ்த்தேசியம், நூலாசிரியர் : இராசேந்திர சோழன், பக்கம் 295, வெளியீடு : 2011, மங்கை பதிப்பகம், சென்னை.
- ↑ பொழிலன், தமிழ்த்தேச விடுதலைப்போராட்டம் ஒரு வரலாற்றுப்பார்வை நூல் பக்கம் 95
- ↑ கோ. கேசவன் , திராவிட இயக்கமும் மொழிக்கொள்கையும் நூல்
- ↑ நூல்: தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல், ஆசிரியர்: ந. முத்துமோகன் (பக்கம் 131) பதிப்பகம்: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்
- ↑ நூல்: தேசியமும் மார்க்சியமும், ஆசிரியர்: தணிகைச் செல்வன், பக்கம் 146, வெளியீடு அலைகள் வெளியீட்டகம், சென்னை.
- ↑ நூல்: தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல், ஆசிரியர்: ந. முத்துமோகன் (பக்கம் 156, 157 ) பதிப்பகம்: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்
- ↑ செ.அருள்செல்வன் (2017 ஏப்ரல் 13). "அண்ணல் தங்கோ எனும் ஆளுமை!". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 13 ஏப்ரல் 2017.
- ↑ தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் சனவரி 25,2018, தியாகு- தமிழ்த்தேசியத்தின் வரலாற்று வழித்தடம் சில அறிமுகக்குறிப்புகள் கட்டுரை பக்கம் 25, வெளியீடு :தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) , சென்னை
- ↑ தியாகு: தலித்தியமும் தமிழ்த்தேசியமும் நூல் பக்கம் 18 , தமிழ்த்தேசம் வெளியீடு (2018)
- ↑ பெ. மணியரசன் எழுதிய சாதியும் தமிழ்த்தேசியமும் நூல் பக்கம் 120
- ↑ Udayakumaran, சுப உதயகுமாரன் / Supa (1 December 2014). "பச்சை தழிழ் தேசியம் / Pachai Thamizh Desiyam". காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 ஜனவரி 2016 – via Google Books.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ தியாகு: தலித்தியமும் தமிழ்த்தேசியமும் நூல் பக்கம் 46, தமிழ்த்தேசம் வெளியீடு
- ↑ 23.0 23.1 நூல்: இந்தியம் திராவிடம் தமிழ்த்தேசியம்- ஆசிரியர்: இராசேந்திர சோழன், பக்க எண் 43, வெளியீடு: 2011 மங்கை பதிப்பகம், சென்னை
- ↑ இராசேந்திர சோழன்: இந்தியம்,திராவிடம், தமிழ்த்தேசியம் நூல், பக்கம் 243, வெளியீடு: மங்கை பதிப்பகம்
- ↑ தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் சனவரி 25,2018, ஆய்வாளர் சிவசுந்தர்- தேசியம் பற்றி- கட்டுரை பக்கம் 41, வெளியீடு :தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) , சென்னை
- ↑ தணிகைச் செல்வன்: தேசியமும் மார்க்சியமும் நூல் பக்கம் 53, அலைகள் வெளியீட்டகம்
- ↑ 27.0 27.1 இராசேந்திர சோழன் : இந்தியம், திராவிடம், தமிழ்த்தேசியம் நூல் பக்கம் 27
- ↑ ம.பொ.சி. எழுதிய தமிழகத்தில் பிறமொழியினர் , (பக்கம் 9) நூலின் முன்னுரையில் ஆய்வாளர் அ.மார்க்சு,
- ↑ தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் சனவரி 25,2018, பொழிலன்- தமிழ்த்தேசம் எங்கே நிற்கிறது? கட்டுரை பக்கம் 67, வெளியீடு :தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) , சென்னை
- ↑ பெ.மணியரசன்: சாதியும் தமிழ்த்தேசியமும் நூல் பக்கம் 19
- ↑ பெ.மணியரசன்: சாதியும் தமிழ்த்தேசியமும் நூல் பக்கம் 18
- ↑ பெ.மணியரசன்: சாதியும் தமிழ்த்தேசியமும் நூல் பக்கம் 36
- ↑ தலித் முரசு இதழ் 2007 ஆகஸ்ட், உத்தரப்பிரதேச தலித்தியலாளர் விவேக்குமார் நேர்காணல்
- ↑ நூல்: மார்க்சியமும் தேசியமும், ஆசிரியர் : தணிகைச் செல்வன், பக்கம் 147 , வெளியீடு: 2007, அலைகள் வெளியீட்டகம், சென்னை.
வெளி இணைப்புகள்
தொகு- பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்
- தழைத்தோங்கும் தமிழ்த்தேசியம். பழ.நெடுமாறன்
- தலித் எழுச்சியே தமிழ்த் தேசியத்தை உருவாக்கும் - ஞான. அலாய்சியஸ்
- திராவிடக் கட்சிகளின் தமிழ்த் தேசியம், *
- [2] - சபேசன்
- தமிழ்தேசியம் - பிபிசி தமிழ் கட்டுரை
- தமிழ்நாட்டு விடுதலை இயக்கங்கள் - வரலாறும் விளக்கங்களும் (தமிழ்த் தேசியம்)