சி. பா. ஆதித்தனார்

இந்திய அரசியல்வாதி
(சி.பா.ஆதித்தனார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சி. பா. ஆதித்தனார் (27 செப்டம்பர் 1905 – 24 மே 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார்.[1]எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.[சான்று தேவை]

சி. பா. ஆதித்தனார்
பிறப்பு27 செப்டெம்பர் 1905
காயாமொழி
இறப்பு24 மே 1981 (அகவை 75)
படித்த இடங்கள்
பணிஅரசியல்வாதி

இளமைக் காலம்

தொகு

இவர்  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தர். கனகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தையார் ஒரு வழக்கறிஞர். தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். இலண்டனில் இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.

1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.

பத்திரிகைப் பணி

தொகு

இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில், தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.

தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.

மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.

சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.

அரசியலில் ஆதித்தனார்

தொகு

இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.

அமைச்சராக

தொகு

மு. கருணாநிதி 1969 பெப்ரவரி இல் ஆட்சியைப் பிடித்தவுடன் ஆதித்தனார் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆனார். இதில் ஸ்ரீவைகுண்டம் இருந்து அவர் அமைச்சரவைக்கு மறு தேர்வு செய்யப்பட்டார். 1971 தேர்தல்களில் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தலைவராக தொடர்ந்து பங்காற்றினார்.

பிற்கால அரசியல் வாழ்க்கை

தொகு

திமுகவிலிருந்து, 1972 இல் எம். ஜி. இராமச்சந்திரன் பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)வை உருவாக்கினார். பிறகு ஆதித்தனார் அதிமுகவை ஆதரித்தார். 1977 தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சாதான்குளத்திலிருந்து அதிமுகவை சுயாதீனமாக ஆதரித்தார். 1980 தேர்தலில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தோல்வியடைந்தார் .

சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் செயல்திறன்

தொகு
ஆண்டு நிலை தொகுதி கட்சி வாக்குகள் தொடர்ந்தவர்/வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1957 வெற்றி சாத்தான்குளம் சுயேச்சை 33,636 எஸ். கந்தசாமி இதேகா 22,429
1962 2வது இடம் திருச்செந்தூர் நாம் தமிழர் 27,994 எம். எஸ். செல்வராஜன் இதேகா 39,994
1967 வெற்றி ஸ்ரீவைகுண்டம் திமுக 41,828 ஆர். நாடார் இதேகா 22,767
1971 வெற்றி ஸ்ரீவைகுண்டம் திமுக 37,329 ஆர். ஏ. ஆர். அண்ணாமலை நிறுவன காங்கிரசு 27,724
1977 2வது இடம் சாத்தான்குளம் சுயேச்சை 17,507 ஆர். ஜெபமணி ஜனதா கட்சி 18,362
1980 3வது இடம் ஸ்ரீவைகுண்டம் சுயேச்சை 12,119 ஈ. ராமசுப்பிரமணியன் அதிமுக 26,502

மறைவும் மரபும்

தொகு

இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார். 2005 ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா 1928 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அவரது வீடு நினைவுச்சின்னமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பி.ராமச்சந்திரன் ஆதித்யன் (தேவி வீக்லியின் நிறுவனர்) மற்றும் பி.சிவந்தி ஆதித்யன். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளில், எஸ்.பி. ஆதித்தனார் மூத்த தமிழ் அறிஞர் விருது ரூ. 300,000 மற்றும் எஸ்.பி. ஆதித்தனார் இலக்கிய விருது ரூ. 200,000 தமிழ் அறிஞர்களுக்கும், இலக்கியத்தில் சிறந்து விளங்கும் மக்களுக்கும் ஆதித்தனாரின் மகனும், தினத்தந்தி குழுவின் முன்னாள் இயக்குநருமான சிவந்தி ஆதித்தனரால் வழங்கப்பட்டது.[2] சென்னையில் சாலையை இணைக்கும் எழும்பூர் செல்லும் அண்ணா சாலை , அவரது நினைவாக "ஆதித்தனார் சாலை" பெயரிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "நாம் தமிழர் என பெயர் வைத்த சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் இன்று".
  2. "Adithanar awards for Tamil scholar, poet". தி இந்து. 24 September 2004 இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041014035630/http://www.hindu.com/2004/09/28/stories/2004092813770300.htm. 
  3. "A tough ride for MTC buses on Adithanar Salai". தி இந்து. 28 February 2001 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107182952/http://www.hindu.com/thehindu/2001/02/08/stories/04084018.htm. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பா._ஆதித்தனார்&oldid=3673256" இலிருந்து மீள்விக்கப்பட்டது