திருச்சி மலைக் கோட்டை

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோட்டை
(திருச்சி மலைக்கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை (Tiruchirapalli Rock Fort) ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும். இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது. இம்மலைக் கோட்டையுள் அமைந்துள்ள கோயில்கள் உச்சிப் பிள்ளையார் கோயில், சிவன் கோயில்கள் ஆகும். இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது. இதற்குள் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. இக்கோட்டை, நாயக்கர்களுக்கும் பிஜாப்பூர், கர்நாடகம்,குரும்பர், மராத்திய ஆகிய அரசுகளுக்கும் இடையே இடம்பெற்ற பல போர்களைக் கண்டுள்ளது. இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த கர்நாடகப் போர்களில் இக்கோட்டை முக்கிய பங்கு வகித்துள்ளது.

திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டை
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஇந்து இசுலாமியத் திராவிடக் கட்டிடக்கலை.
நகரம்திருச்சிராப்பள்ளி
நாடுஇந்தியா
ஆள்கூற்று10°49′41″N 78°41′49″E / 10.828°N 78.697°E / 10.828; 78.697
கட்டுமான ஆரம்பம்பொ.ஊ. 580 முதல் பல கட்டங்களில்.
இடிக்கப்பட்டதுஇடிக்கப்படவில்லை.
செலவுதெரியாது
உரிமையாளர்இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தமிழ்நாடு அரசு
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)பலர் (பல்லவர், சோழர், மதுரை நாயக்கர்)
பொறியாளர்தெரியாது
வலைதளம்
www.thiruchyrockfort.org

வரலாறு

தொகு

இவ்விடம் முதன் முதலில் விசயநகரப் பேரரசால் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடக குரும்பர்களின் போர்களின் போது பிரித்தானியரால் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கோட்டைப் பகுதிக்குள் இருக்கும் அமைப்புக்களுள் காலத்தால் முந்தியது பொ.ஊ. 580ல் உருவாக்கப்பட்ட பல்லவர் காலக் குகைக் கோயில் ஆகும். பல்லவர்கள் இப்பகுதியைப் பாண்டியர்களிடம் இழந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியில் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினர். சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை இப்பகுதி அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதன் பின்னர் இவ்விடம் விசயநகரப் பேரரசின் கீழ் வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பின்னர் இப்பகுதி தில்லி சுல்தானகத்தின் கீழ் வந்தது. இவர்களைத் துரத்திவிட்டு விசயநகரப் பேரரசு இப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தியது. விசயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, அதன் சார்பில் இப்பகுதியில் ஆளுனர்களாகச் செயற்பட்ட மதுரை நாயக்கர்கள் இப்பகுதியைத் தமது நேரடி ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். இவர்கள் காலத்திலேயே திருச்சி செழித்திருந்ததுடன் இன்றைய நிலைக்கு வளர்ந்ததற்கான அடிப்படைகளும் உருவாயின. நாயக்கர்களே மலைக்கோட்டைக் கோயிற் குளத்தையும் முக்கியமான சுவர்களையும் கட்டினர். பின்னர் திருச்சியே அவர்களின் தலைநகரமுமானது. இக்கோட்டை மாளிகையிலேயே இராணி மீனாட்சி, சந்தா சாகிப்பிடம் ஆட்சியைக் கையளித்தார். சந்தா சாகிப் பிரான்சியர் துணையுடன் ஆட்சி நடத்தினார். கர்நாடகப் போரின் பின்னர் சந்தா சாகிப்பின் மாமனான ஆற்காடு நவாப் பிரித்தானியரின் துணையோடு திருச்சிராப்பள்ளிக் கோட்டையைக் கைப்பற்றினார். இதுவே பிரித்தானியர் தமிழ்நாட்டிலும் பின்னர் முழுத் தென்னிந்தியாவிலும் காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. தற்போது இக்கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வுப்பிரிவின் சென்னை வட்டத்தின் மேலாண்மையின் கீழ் பேணப்பட்டு வருகின்றது.

பின்புலம்

தொகு

இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.

பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.[1]

புராணங்கள்

தொகு

இதிகாசம்

தொகு

இக்குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி மற்றும் விநாயகர் வீற்றிருந்ததாகவும், ஆதிசேஷனுக்கும் வாயுவிற்கும் இடையில் ஏற்பட்ட பெரும்போரின் விளைவாக, இமயமலைத் தொடரிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் பறந்து சென்ற மலைத் தொகுதிகளில் இது ஒன்று எனவும் கூறுவர்.

 
திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தித் திருவிழா

தாயுமானவர் புராணம்

தொகு

இம்மலையின் இடைக்கோயிலின் மூலவரான செவ்வந்திநாதர் தாயுமானவர் என்றழைக்கப்படுவதற்கு ஒரு கதை கூறப்படுவதுண்டு. அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு புரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது, இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து, அதன் காரணமாகத் தாயும் ஆனவன் எனப் பெயர் பெற்றான் எனக் கூறுவர்.

உச்சிப் பிள்ளையார் புராணம்

தொகு

இராமாயணப் போருக்குப் பின்னர், இராமேஸ்வரம் துவங்கி இந்தியாவின் பல கோயில்களையும் தரிசித்த விபீஷணர், பள்ளி கொண்ட பெருமானை இலங்கைக்கு எடுத்து செல்ல விரும்பினாராம். அவ்வாறு அவர் செல்கையில், வழியில் காவிரியாறும் கொள்ளிடமும் குறுக்கிட்டன. அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவனிடம் பள்ளி கொண்ட நாதர் சிலையைக் கொடுத்து, தமது காலைக் கடன்களைக் கழிக்கச் சென்றார் விபீஷணர். சிறுவனாக வந்தவனோ விநாயகன். அவன், பள்ளி கொண்ட நாதர் அங்கிருந்து செல்வதை விரும்பாதவனாகச் சிலையை கீழே வைத்து விட, அச்சிலை அங்கேயே நிலை பெற்று விட்டது. திரும்பி வந்த விபீஷணர் அதனைப் பெயர்க்க இயலாது கோபமுற்று சிறுவனின் தலையில் குட்டியதாகவும், அவ்வாறு குட்டியதன் வடு இன்றும் உச்சிப் பிள்ளையாரின் பின் தலையில் காணலாம் என்றும் கூறுவர். அவ்வாறு பள்ளி கொண்ட நாதர் நிலைபெற்று விட்ட இடமே திருவரங்கமாகப் போற்றப்படுகிறது. பள்ளி கொண்ட நாதர் அரங்க நாதராகத் திகழ்கிறார்.

 
நூற்றுக்கால் மண்டபம்

வரலாற்றுச் சிறப்புகள்

தொகு

பல்லவர்களால் சிறு குகைக் கோயிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலைப், பின்னர், இதன் இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்ட நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோயில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜய நகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது.

நாயக்கர்கள் காலம்

தொகு

மதுரை நாயக்க வம்ச அரசர்களின் தலைநகரமாக இந்த மலை இருந்தமையால், இது பல பெரும்போர்களைக் கண்ணுற்றது. விஜய நகரப் பேரரசர்களுக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போர் அவற்றில் ஒன்றாகும். நாயக்கர்களின் வடமேற்கு அரணாக இக்கோட்டை விளங்கியது. அவர்களது அரசாட்சியின் இறுதி நூற்றாண்டுகளில் தஞ்சை மாயக்கர்கள், பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் மற்றும் படையெடுத்து வந்த பிஜாப்புர், மைசூர் மற்றும் மராத்திய அரசர்களிடமிருந்து இக்கோட்டை அரணாகக் காத்து வந்தது.

கர்நாடக நவாப் காலம்

தொகு

திருச்சி மலைக்கோட்டை சந்தா சாகிப் மற்றும் ஆற்காட்டு அலி ஆகியோரிடையே நிகழ்ந்ததான போருக்காக மிகவும் நினைவு கூறப்படுகிறது. ஆங்கிலப் படைகளிடமிருந்து தப்பி இக்கோட்டையில் ஒரு குகையினுள் சந்தா சாஹிப் ஒளிந்து கொண்டதாகக் கூறுவர்.

ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ்

தொகு

இப்போருக்குப் பிறகு, 18ஆம் நூற்றாண்டில், திருச்சி அநேகமாக ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்து விட்டது. மலைக்கோட்டையின் கதவு முதன்மை அரண் கதவு (Main Guard Gate) எனப்படலானது. இன்றும் அது அப்பெயரிலேயே வழங்கப்படுகிறது. இதனருகிலேயே ராபர்ட் கிளைவ் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடமும் உள்ளது. மலைக் கோயிலை ஒட்டிய மேற்கு வீதியில் உள்ள தெப்பக்குளத்தின் அருகில் இது உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சி_மலைக்_கோட்டை&oldid=3978972" இலிருந்து மீள்விக்கப்பட்டது