முல்லைப் பெரியாறு அணை

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள அணை
(பெரியாறு அணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முல்லைப் பெரியாறு அணை அல்லது முல்லைப் பேரியாறு அணை (Mullaiperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.[1][3][6] இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது[1][7], தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.[1][8][9]. 1893ஆம் ஆண்டில் பென்னி குவிக் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி , உயரம் 155 அடி ஆகும்.[1] இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை is located in கேரளம்
முல்லைப் பெரியாறு அணை
Location of முல்லைப் பெரியாறு அணை in கேரளம்
அதிகாரபூர்வ பெயர்பெரியாறு அணை[1]
நாடுஇந்தியா
அமைவிடம்கேரளம்
நிலைசெயல்படுகிறது
கட்டத் தொடங்கியது1887
திறந்ததுஅக்டோபர் 10, 1895[2]
உரிமையாளர்(கள்)தமிழ்நாடு அரசு
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுபெரியாறு
உயரம் (அடித்தளம்)53.66 m (176 அடி)[1]
நீளம்365.85 m (1,200 அடி) (main)[1]
அகலம் (உச்சி)3.6 m (12 அடி)
அகலம் (அடித்தளம்)42.2 m (138 அடி)[3]
வழிகால்கள்13[4]
வழிகால் வகைChute
வழிகால் அளவு3,454.62 cubic metres per second (4,518 cu yd/s)[1]
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு443,230,000 m3 (359,332 acre⋅ft)
செயலில் உள்ள கொள் அளவு299,130,000 m3 (242,509 acre⋅ft)[5]
அதிகபட்சம் நீர் ஆழம்43.281 m (142 அடி)

முல்லைப் பெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும். மதராசு மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு 'பெரியாறு திட்டத்தின்' கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு சனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட[10] இவ்வணை, முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ’முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.[11]

நோக்கம்

தொகு
 
1899 இல் அணையின் தோற்றம்

பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் நீரை கிழக்கு நோக்கித் திருப்பி, மழைமறைவுப் பகுதியான மதுரை மாவட்டத்திற்குப் (சென்னை மாகாணம்) பயன்பட வகை செய்வதற்காகவே இவ்வணை கட்ட திட்டமிடப்பட்டது. அப்பகுதிகளுக்கு அங்குள்ள சிறிய ஆறான வைகையாற்றின் நீர்வளம் போதுமானதாக இல்லை.[10] அணை கட்டியதால் உருவான தேக்கடி நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி சுரங்கம் வழியாக வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. முதலில் அணையிலிருந்து குமுளிக்கு அருகிலுள்ள ஃபோர்பே அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து கீழ் பெரியாறிலுள்ள பெரியாறு மின்சக்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின் அங்கிருந்து சுருளியாற்றுக்கும், அதிலிருந்து வைகையாற்றையும் அடைகிறது.

அமைப்பு

தொகு

முல்லைப் பெரியாறு அணை சுண்ணக்கல் மற்றும் சுர்க்கி கலவையுடன் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட ஒரு எடையீர்ப்பு அணையாகும்.[12] பொதுவாக எடையீர்ப்பு அணைகளின் எடையும் ஈர்ப்பு விசையும் நீர்த்தேக்கப் பகுதியைத் தாங்கி, அவற்றை நிலைப்படுத்துகின்றன.[3][6] இதன் ஒரு பகுதியான முதன்மை அணையின் அதிகபட்ச உயரம் 53.6 m (176 அடி); நீளம் 365.7 m (1,200 அடி). இதன் உச்சிப்பகுதி 3.6 m (12 அடி) அகலமும் அடிப்பகுதி 42.2 m (138 அடி) அகலமும் கொண்டது. இதன் நீர்த்தேக்கம் 443,230,000 m3 (359,332 acre⋅ft) கொள்ளளவு உடையது. இதில் 299,130,000 m3 (242,509 acre⋅ft) பயன்பாட்டில் உள்ளது[3][5] முல்லை பெரியார் அணையின் வரைபடம் தற்போது கிடைத்துள்ளது. அதன் படி கேரள வனத்துறையினர் வாகன நிறுத்தமாக பயன்படுத்த ஒதுக்கிய இடமான புல்தகிடி என்ற இடம் அணையின் நீர்பிடிப்பு இடமாகும்.[13]

அணை வரலாறு

தொகு

முன் ஆய்வுகளும் நடவடிக்கைகளும்

தொகு

1790 மார்ச் 6ல் சென்னை மாகாணத்தில் மதுரை மாவட்டம் உருவானது. ஏப்ரல் 5ல் முதல் மாவட்ட ஆட்சியாளராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டுவரத் திட்டமிட்டார். இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.[14]

1807ல் மதுரை ஆட்சியாளர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார். ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார்.[10] 1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.[6]

1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.

 
கட்டுமானப்பணி

இறுதியாக 1882 இல் இந்தத் திட்டம் ஆங்கிலேய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேஜர் ஜான் பென்னிகுயிக்கிடம் அதன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதற்காக அவர் 1884 இல் தயாரித்து சமர்ப்பித்த செலவுத் திட்டமும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்றது.[10]

குத்தகை ஒப்பந்தம்

தொகு

அக்டோபர் 29, 1886 இல் திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளுக்கும் பெரியாறு நீர்ப்பாசனப் செயற்திட்டத்தின் இந்தியாவிற்கான பிரித்தானிய செயலாளருக்குமிடையே 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த குத்தகை ஒப்பந்தம் திருவிதாங்கூரின் திவான் வி. ராம் மற்றும் சென்னை மாகாணத்தின் மாநிலச் செயலாளர் ஜே. சி. ஹான்னிங்டன் இருவராலும் கையொப்பமிடப்பட்டது. 24 ஆண்டுகளாக திருவிதாங்கூருக்கும் பிரித்தானிய அரசுக்கும் இடையே நடைபெற்ற முயற்சிகளுக்குப் பின்னர் அந்த குத்தகை ஒப்புதலானது.

7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அணை கட்டவும், கட்டியபின் நீர்ப்பாசனம் மற்றும் அது தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும், மாநில செயலாளருக்கு அதிகாரமும், முழு உரிமையும், சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி அணையின் 155 அடி உயர நீர்த் தேக்கத்திற்கு 8000 ஏக்கர் நிலப்பரப்பும், அணை கட்டுவதற்கு 100 ஏக்கர் நிலப்பரமும் அளிக்கப்பட்டுள்ளது. நில வரியாக ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 5 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆண்டுக்கு 40,000 க்கு முல்லை பெரியார் அணையின் முழு நீரையும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியையும் பயன்படுத்தும் உரிமையை முழுமையாக அந்த ஒப்பந்தம் பிரித்தானிய அரசுக்கு அளித்துள்ளது.[15]

1947 இல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஜூலை 1, 1949 இல் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி இரண்டும் ஒன்று சேர்ந்து, இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. ஜனவரி 1, 1950 இல், திருவிதாங்கூர்-கொச்சி ஒரு மாநிலமாக அங்கீகாரம் பெற்றது. 1947 இல் சென்னை மாகாணம் சென்னை மாநிலமானது.

நவம்பர் 1, 1956 இல் மலபார் மாநிலம், திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தெற்கு வட்டங்கள் நீங்கலான பகுதி, காசர்கோடு வட்டம், தெற்கு கனரா ஆகியவைகளை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது.[16] பிரித்தானிய அரசும் திருவிதாங்கூர் அரசரும் செய்துகொண்ட முந்தைய ஒப்பத்தம் செல்லுபடியாகதென்றும் அது புதுப்பிக்கப்பட வேண்டுமென்றும் கேரள மாநில அரசு அறிவித்தது.

ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க கேரள அரசால் 1958, 1960, 1969 களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை. இறுதியாக 1970 இல் கேரள முதலமைச்சராக சி. அச்சுத மேனன் பொறுப்பிலிருந்தபோது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்படி, நிலவரி ஒரு ஏக்கருக்கு 30 ஆகவும், முல்லைப் பெரியார் அணை நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சக்திக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு 12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது. முல்லை பெரியாறு அணை நிலத்தையும் நீரையும் தமிழ்நாடு பயன்படுத்துவதற்குத் தமிழக அரசு ஆண்டுக்கு நில வரிப்பணமாக 2.5 இலட்சமும், உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சக்திக்கான உபரிவரிப்பணமாக 7.5 இலட்சமும் கேரள அரசுக்கு செலுத்திவருகிறது.[15][17]

இந்த ஒப்பந்தம் குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சை தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளது.[18][19][20][21] இச்சர்ச்சையினால் ஒரு மாநிலத்தில் கட்டப்பட்டு, வேறொரு அண்டை மாநிலத்தால் பயன்படுத்தப்படும் அணைகள் மற்றும் நீர்ப்பயன்பாடு குறித்த நடுவண் அரசின் அதிகாரமும் கேள்விக்குரிய நிலைமையாகி உள்ளது.[22]

கட்டுமானப் பணி

தொகு
 
முல்லை பெரியார் அணையின் குறுக்கு வெட்டு தோற்றம்.

இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது.[17] ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது. அணை சுண்ணக்கல், சுர்க்கி கலவையால் கட்டப்பட்டது.[6]

அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று[14] அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார். இவ்வணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

மின் உற்பத்தி

தொகு

1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது. 1970 ஆம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி இங்கு தமிழகம் 140 மெகா வாட் திறன் கொண்ட மின் நிலையத்தை அமைத்துள்ளது. இது தமிழகத்திற்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும்.

அணைப் பயன்பாடு

தொகு

இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 2,08, 144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூர், கம்பம், சின்னமனூர் மற்றும் தேனி - அல்லிநகரம் ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும், இந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது. இது தவிர மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், உசிலம்பட்டிவாடிப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றியப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் இப்பகுதிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.

போராட்டங்கள்

தொகு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு இல்லை என்கிற அச்சத்தில் கேரள அரசியல் கட்சிகளும், பாதுகாப்புடன் பலமாக இருக்கிறது என்கிற நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் உள்ளன. கேரள அரசியல் கட்சியினர் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று பல்வேறு போராட்டங்களைச் செய்து வருகின்றனர். தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் குமுளியிலும் பதற்றம் நிலவுவதால் இரு பகுதிகளிலும் இரு மாநிலக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இந்நிலையில் அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.

சிக்கல்

தொகு
 
அணை பாதிப்பு
 
அணை கசிவு மூட்டுகள்
 
நீர் கசிவை

1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் நீர்தேக்கும் அளவை மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த 2006 இல் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்க மறுத்தது. மார்ச் 18,2006 இல் தேதி கேரள சட்டமன்றத்தில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயம் செய்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ் வழக்கின் தீர்வை மே 7, 2014 இல் அறிவித்தது.[23]

தீர்ப்பின் விவரம்:

  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுத்து கேரள அரசு சட்டம் நிறைவேற்றி இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே அச்சட்டம் ரத்து செய்யப்படுகிறது.
  • மத்திய நீர்வளக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தலைவராகக் கொண்ட மூன்று பேர் குழுவின் கண்காணிப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும். 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இக்குழு அமல்படுத்த வேண்டும்.
  • இந்த குழுவில் தமிழகம் சார்பில் ஒருவரும் கேரளா சார்பில் ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும். இக்குழுவின் அலுவலகம் கேரளத்தில் அமைய வேண்டும்.குழுவின் செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
  • அணையின் நீர்மட்டத்தை உறுதி செய்வதுடன், பருவமழை காலங்களில் அணையின் நீர்மட்டம், பாதுகாப்பு குறித்து இக்குழு கண்காணிக்கும்.
  • உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் சார்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இக்குழு அனுமதி அளிக்க வேண்டும். *அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநில அரசுகளுக்கும் இக்குழு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். அந்த உத்தரவை இரு மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும்.
  • புதிய அணை கட்டும் விஷயத்தில், கேரள அரசு தன் முடிவை தமிழகத்தின் மீது திணிக்க முடியாது. புதிய அணை கட்டுவதென்றால், அது இரு மாநில அரசுகளின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும்.

கடலுக்குச் சென்ற தண்ணீர்

தொகு

136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால், 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.

ஆனந்த் குழு

தொகு

முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய 2010 பிப்ரவரியில் இந்திய உச்சநீதி மன்றத்தால் ஒரு குழு நியமிக்கப்பட உத்திரவிடப்பட்டது.[24] இதன்பேரில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்தைத் தலைவராகவும், இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி. டி. தட்டே, இந்திய அரசின் நீர் ஆணையத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் பி. கே. மோஹதா, தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி அரு. இலக்சுமணன், கேரள அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு ஐந்து பேர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு ஏப்ரல் 25, 2012 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அறிக்கையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.[25]

அணையின் உச்ச நீர் மட்டம்

தொகு
அணையின் நீர் மட்டம்
உயரம் அடி
மொத்த நீர் கொள்ளவு
(மி க அடி)
பயன்படுத்தக்கூடிய
நீர் கொள்ளவு (மி க அடி)
நீர் பரப்பு ஏக்கர்
104 5700 0
136 11210 5510 4677
142 12830 7130
152 15562 9862 6534
155 8000

துவக்கத்தில் அணையின் உச்ச நீர் மட்டம் 152 அடி ஆகவும் 144 அடிக்கு மேல் வந்தவுடன் உபரி நீர் வெளியேறும் வகையில் அணையின் வடபுறம் (அணையின் மேல் மட்டத்தைவிட 40 அடி அதிக உயரமாக இருந்த குன்றினை 420 அடி நீளத்திற்கு வெட்டி) தாம்போக்கி கலிங்கு அமைக்கப்பட்டது. 1904 இல் பெரியாற்றில் அதிக வெள்ளம் வந்தபோது இக்கலிங்கு வழியாகப் போதிய நீர் வெளியேற முடியாமல் அணையின் நீர் மட்டம் 162 அடி உயர்ந்து அணைக்கு மேல் நீர் வழிந்தது. மக்கள் பீதி அடைந்ததால், 1906 இல் குன்றினை மேலும் வெட்டி அணையின் நீர் மட்டம் 136 அடி உயர்ந்ததும் நீர் வெளியேறும் வகையில் தாம்போக்கி கலிங்கு மற்றும் 16 அடி உயரம் கொண்ட இரும்பு பலகைகள் (சட்டர்) மூடிய நிலையில் அணையின் உச்ச நீர் மட்டம் 152 அடியாக அமைக்கப்பட்டது.[26]

  • 1962 முதல் 1979 வரை இருமுறை அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்ந்தது
  • 35 ஆண்டுகளுக்கு பிறகு , அணையின் நீர் மட்டம் 142 அடியை, 21 நவம்பர் 2014 அன்று எட்டியது.[27].
  • மீண்டும் அணையின் நீர் மட்டம் 142 அடியை, 08 டிசம்பர் 2015 அன்று எட்டியது.[28]

[29] [30]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "National Register for Large Dams" (PDF). India: Central Water Commission. 2009. pp. 194–197. Archived from the original (PDF) on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 30 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. https://www.vikatan.com/news/coverstory/50577.html
  3. 3.0 3.1 3.2 3.3 Frye, Albert Irvin (1918). Civil engineers' pocket book: a reference-book for engineers, contractors, and students, containing rules, data, methods, formulas and tables (2nd (corrected) ed.). D. Van Nostrand Company. p. 859. பார்க்கப்பட்ட நாள் 30 November 2011.
  4. ET Bureau (2 December 2011). "Tamil Nadu tells Supreme Court to restrain Kerala on Mullaperiyar dam". Economic Times. http://articles.economictimes.indiatimes.com/2011-12-02/news/30467941_1_mullaperiyar-dam-new-dam-tremors. பார்த்த நாள்: 6 December 2011. 
  5. 5.0 5.1 "Mullaperiyar Environmental Protection Forum v. Union of India (UOI) and Ors" (PDF). Supreme Courth of India. pp. 1–2. பார்க்கப்பட்ட நாள் 30 November 2011.
  6. 6.0 6.1 6.2 6.3 T, Ramakrishnan (29 October 2011). "A dam steeped in history and controversy". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/cities/Chennai/article2580008.ece. பார்த்த நாள்: 27 November 2011. 
  7. "Medium River Basins Of The Country" (PDF). Ministry of Water Resources, Government of India. Archived from the original (PDF) on 19 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 10 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Tamil Nadu since the state is incontrovertible sole owner of the Mullaperiyar dam and all its appurtenant structures - Tamil Nadu Chief Minister Jayalalithaa".
  9. "Four dams - Mullaperiyar Dam, Parambikulam Dam, Thunakadavu Dam and Peruvaripallam Dam - are owned, operated and maintained by Tamil Nadu whereas they were situated in the territory of Kerala - Tamil Nadu Chief Minister Jayalalithaa". Archived from the original on 2014-10-20. பார்க்கப்பட்ட நாள் 2014-05-08.
  10. 10.0 10.1 10.2 10.3 Sandes, Lt Col E.W.C. (1935). The Military Engineer in India, Vol II. Chatham: The Institution of Royal Engineers. pp. 28–29. {{cite book}}: |access-date= requires |url= (help)
  11. "Dams in Kerala". Kerala: ENVIS Kerala: Environmental Information System Centre (ENVIS), Kerala. p. 1. பார்க்கப்பட்ட நாள் 30 November 2011.
  12. Pennycuik, John (26 January 1897). "Pennycuik on the Diversion of the Periyar". Minutes of Proceedings (London: Institution of Civil Engineers) 128 (Part 2): 140–163. http://www.archive.org/stream/minutesproceedi13unkngoog#page/n153/mode/2up. பார்த்த நாள்: 9 January 2012. 
  13. http://tamil.thehindu.com/ |தி இந்து தமிழ் 19.06.2014
  14. 14.0 14.1 "Mullaperiyar dam: An engineering marvel". CNN IBN. 26 November 2011 இம் மூலத்தில் இருந்து 29 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111129012257/http://ibnlive.in.com/news/mullaperiyar-dam-an-engineering-marvel/205900-60-118.html. பார்த்த நாள்: 6 December 2011. 
  15. 15.0 15.1 R. Krishnakumar (11–24 March 2006), "Verdict on Mullaperiyar", the Hindu, Frontline, Chennai, India, vol. 23 – Issue 05, {{citation}}: CS1 maint: extra punctuation (link)
  16. Plunkett, Richard (1 October 2001). South India. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86450-161-2. பார்க்கப்பட்ட நாள் 10 January 2012. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  17. 17.0 17.1 "Mulla Periyar Dam issue". New Delhi: Ministry of Water Resources, Government of India. p. 1. பார்க்கப்பட்ட நாள் 30 November 2011.
  18. ' "Mullaperiyar: Centre expresses willingness to act as "facilitator"", the Hindu, 23 November 2011 {{citation}}: Check |url= value (help)CS1 maint: extra punctuation (link)
  19. "Mullaperiyar: Ministers to visit Delhi", the Hindu, Chennai, India, 25 November 2011
  20. "Advise Kerala not to build the dam", the Hindu, November 24, 2011
  21. "‘Enact law declaring dam pact illegal’". Times of India. 30 November 2011 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103084439/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-30/kochi/30459170_1_new-dam-mullaperiyar-inter-state-dispute. பார்த்த நாள்: 6 December 2011. 
  22. Suhrith Parthasarathy (August 12, 2013). "Water Wars in India’s South" (blog "India Ink"). The New York Times. http://india.blogs.nytimes.com/2013/08/12/water-wars-in-indias-south/. பார்த்த நாள்: August 12, 2013. 
  23. பெரியாறு வழக்கு: தமிழகத்துக்கு பெரும் வெற்றி
  24. Venkatesan, J. (17 February 2010). "Supreme Court constitutes empowered committee to go into Mullaperiyar issues". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/national/article108195.ece. 
  25. http://www.thehindu.com/news/national/article3353151.ece Mullaperiyar dam structurally & hydrologically safe: panel
  26. "முல்லைப் பெரியாறு அணை: வரலாறும் தீர்வும் - ஆசிரியர்: இரா.வெங்கடசாமி". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  27. Mullaperiyar level touches 142 feet
  28. "Mullaperiyar water level hits 142 ft; shutters opened". Business Line. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  29. "Kerala raises alarm over rising water level in Mullaperiyar dam". http://indianexpress.com/. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015. {{cite web}}: External link in |publisher= (help)
  30. "142 அடி தண்ணீர் நிரம்பும் நிலையில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு அச்சம்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லைப்_பெரியாறு_அணை&oldid=3925582" இலிருந்து மீள்விக்கப்பட்டது