வானொலி ஆர்வலர்
வானொலி ஆர்வலர்கள் (Radio Enthusiasts[1]) எனப்படுவோர் பூமிப் பந்தின் பல்வேறு நாட்டு வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை செவிமடுத்து (DXing)[2], அந்தந்த வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிகள் பற்றி கருத்துப் பரிமாறுவோர், ஒலிபரப்பின் தொழிநுட்ப தரம் பற்றி அறிக்கைகள் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவோர் (DXers)[3], வானலைகளூடாக இருவழித் தொடர்பு ஏற்படுத்தி உரையாடுவோர் (HAM Radio)[4] என பலதிறப்பட்ட, வானொலி பயன்பாட்டில் துடிப்புள்ள, பயனர்களாவர்.
இளைய தலைமுறையினருக்கு
தொகுஇருபத்தோராம் நூற்றாண்டின் இளவயதினர் வானொலி பற்றி அறிந்தது பண்பலை, இணையம் என்பவற்றில் வரும் எண்ணியல் தொழிநுட்பத்துடன் கூடிய இசை வழங்கும் நிலையங்களே. இந்த நிலையங்கள் பெரும்பாலும் செய்திகளையோ, தகவல்களையோ அளிப்பதில்லை.
ஆனால் 1920 களிலிருந்து 1990 வரை வானொலி கேட்டல் மக்களின் அன்றாட அலுவல்களில் ஒன்றாக இருந்தது. வானொலி நிலையங்களும் செய்திகளையும் பல்வேறு தகவல்களையும் ஒலிபரப்பின. மாணவர்கள், அலுவலர்கள், விவசாயிகள், மாதர்கள், விளையாட்டு வீரர்கள், நோயாளிகள், உல்லாச பயணம் போவோர் என பலதரப்பட்ட மக்களுக்கும் தேவையான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. பாரம்பரிய இசை, சாஸ்திரீய இசை, மெல்லிசை, வாத்திய இசை, திரை இசை, நாட்டுப் பாடல்கள் என பலவகையான இசை நிகழ்ச்சிகளையும் வானொலி நிலையங்கள் ஒலிபரப்பின. இவற்றுடன் அரசியல், சமூகம், பண்பாடு, விளையாட்டு ஆகிய துறைகள் பற்றிய செய்திகளும் ஒலிபரப்பாகின.
சிற்றலை ஒலிபரப்புகள் (shortwave broadcasts) மூலம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி ஒலிபரப்புகள் மக்களை சென்றடைந்தன. இதன் மூலம் ஒரு நாட்டில் நடக்கும் சம்பவங்கள் பற்றி அந்த நாட்டிலிருந்தே ஏனைய இடங்களிலுள்ள மக்கள் கேட்கக் கூடியதாக இருந்தது.
இங்கிலாந்திலே இரண்டு கவுன்டி அணிகளுக்கிடையே ஒரு கால்பந்தாட்ட போட்டி நடந்தால் அதை உள்ளூர் வானொலி நிலையம் வர்ணனை செய்ய இந்தியாவில் உள்ள ஒரு கால்பந்தாட்ட ஆர்வலர் அதைக் கேட்க முடியும். இலத்தீன் அமெரிக்க இசையை திரினிடாடிலுள்ள ஒரு வானொலி நிலையம் ஒலிபரப்பினால் தாய்லாந்தில் உள்ள ஒரு இசைப் பிரியர் அதனைக் கேட்க முடியும்..
இப்போது இணையத்திலும், திறன்பேசிகளிலும் (Smart Phone) இந்த வசதி ஓரளவு உள்ள போதிலும் அதற்காகும் செலவை கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். வானொலியில் எத்தனை மணி நேரம் கேட்டாலும் எல்லாம் இலவசமே. வானொலிக் கருவியை பயன்படுத்த தேவைப்படும் மின்வலுவுக்கு ஆகும் செலவு மிக மிக சொற்பமே.
வானொலி ஒலிபரப்புகளின் இன்றியமையாமை
தொகுமுதலாம் உலகப் போரின் போது சிறிதளவிலும், இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவிலும் வானொலி பயன்படுத்தப் பட்டது. சாதாரண காலங்களிலும் கடலில் செல்லும் கப்பல்கள், வானில் பறக்கும் விமானங்கள் என்பவற்றின் சரியான தடத்துக்கும் பாதுகாப்புக்கும் வானொலி மட்டுமே உதவியது.
வானொலி ஆர்வலர்களின் சேவை
தொகுஇயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து மற்ற எல்லா விதமான தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் Ham radio ஆர்வலர்கள் (வானலை ஊடாக இருவழித் தொடர்பு கொள்வோர்) மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பேருதவியாக இருந்திருக்கிறார்கள்.
1978ஆம் ஆண்டு இலங்கை மட்டக்களப்பு நகரை சூறாவளி தாக்கியது[5]. பெருமளவு மரங்கள் வீழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வீடுகள் மட்டுமன்றி கடைகளினதும் மேற்கூரைகள் பிய்த்துக் கொண்டு போனதால் பொருட்கள் எல்லாம் மழையில் நனைந்து மக்கள் உணவுக்கே திண்டாடிய நிலை. ஆனால் தலைநகர் கொழும்புக்கு தகவல் அனுப்ப எந்த தொடர்பும் இல்லை. அந்த நேரத்தில் ஒரு வானொலி ஆர்வலரே மின் ஆக்கியிலிருந்து வலு பெற்று வானொலிக் கருவி மூலம் தலைநகருடன் தொடர்பு ஏற்படுத்தினார். தனது குடும்பத்தினரை படைத்தவன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு மூன்று நாட்கள் அவர் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்ததால் பல ஆயிரம் மக்கள் பயனடைந்தனர். புனரமைப்பு நடைபெற்ற போது எல்லா அரச நிறுவனங்களுக்கும் வானொலி தொடர்பு சாதனங்கள் வழங்கப்பட்டன.
உலகம் முழுவதிலும் இதுபோன்ற எண்ணற்ற சந்தர்ப்பங்களில் வானொலி ஆர்வலர்கள் தங்கள் சொந்த நலனைப் புறக்கணித்து பணியாற்றியிருக்கிறார்கள்.
வானொலி ஒலிபரப்பு ஆர்வலர்கள்
தொகுநிகழ்ச்சி ஆர்வலர்கள்
தொகுஅப்போதைய காலகட்டத்தில் ஏறக்குறைய எல்லா மக்களுமே வானொலி ஒலிபரப்புகளை கேட்டு வந்தார்கள். உள்நாட்டு ஒலிபரப்புகளைக் கேட்டதோடு அயல் நாடுகளிலிருந்து தமது மொழியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் கேட்பதில் ஆர்வம் காட்டினார்கள். தமிழ் ஒலிபரப்புகள் இந்தியா, இலங்கை நாடுகளிலிருந்து ஒலிபரப்பாகின. இந்தியாவில் இலங்கை வானொலி மிகப் பிரபலமாக இருந்தது. அதே போல இலங்கையில் இருந்த கருநாடக மற்றும் நாதசுவர இசை விரும்பிகள் திருச்சிராப்பள்ளி, சென்னை வானொலி நிலையங்களை விரும்பிக் கேட்டார்கள்.
அமெரிக்காவுக்கும் முந்தைய சோவியத் ஒன்றியத்துக்குமிடையே இருந்த பனிப்போர் போல இலங்கை, இந்திய வானொலி ஒலிபரப்புகளிடையே
ஒரு மறைமுக பனிப்போர் இருந்தது[6].
இலங்கையில் 1983ல் இன அழிப்பு கலவரம் நடைபெற்றபோது அங்குள்ள தமிழ் மக்கள் செய்திகளை அறிய அகில இந்திய வானொலி, பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுநிறுவனத்தின் தமிழ் ஒலிபரப்பு போன்ற தமிழ் ஒலிபரப்புகளை செய்தி நேரத்துக்காக காத்திருந்து கேட்டனர்.
ஆனால் இவர்களைப் பொறுத்தவரை வானொலி கேட்டல் ஒருவழிப் பாதையாகவே இருந்தது. துடிப்புள்ள சில வானொலி ஆர்வலர்கள் அதை இருவழிப் பாதையாக மாற்றினர்.
நிகழ்ச்சிகள் பற்றி கருத்துத் தெரிவித்தும் விமரிசனம் செய்தும் வானொலி நிலையங்களுக்கு அவர்கள் கடிதம் எழுதுவார்கள். வானொலி நிலையத்தினர் அதற்கென தனியாக ஒரு நிகழ்ச்சி ஏற்படுத்தி, அக்கடிதங்களைப் படிப்பதுடன் தேவையான போது பதில் அளித்தும் வந்தார்கள். இடைவிடா ஆர்வலர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் பெரும்பாலும் ஏற்கப் பட்டு நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்படுவதுண்டு. இதனால் கேட்போர் அனைவருக்கும் பயன் விளையும்.
தொழிநுட்ப ஆர்வலர்கள்
தொகுஇந்த இருவழிப் பாதையில் இன்னும் சில ஆர்வலர்கள் ஒலிபரப்புகளின் தொழிநுட்ப தரம் பற்றி வானொலி நிலையங்களின் தொழிநுட்ப பிரிவினருக்கு தெரிவிப்பார்கள். இத்தகைய ஆர்வலர்களுக்கு உதவும் பொருட்டு வானொலி நிலையங்கள் ஒரு குறியீட்டு முறையை அறிமுகம் செய்தன. இதன்படி வானொலி ஆர்வலர்கள் ஒலிபரப்பின் தொழிநுட்ப தரம் தங்கள் பகுதியில் எவ்வாறு இருக்கிறது என மதிப்பீடு செய்து அறிக்கையாக வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.
இதனை SINFO எனக் கூறுவார்கள். S=Signal Strength (அலை வலு), I=Interference (குறுக்கீடு), N=Noise (இரைச்சல்), F=Fading (ஒலி ஏற்றத் தாழ்வு), O=Overall performance (ஒட்டுமொத்த செயல்திறன்). சிலர் SINPO என்றும் கூறுவார்கள். இதில் F=Fading என்பது P=Propagation (பரப்பல் அல்லது செலுத்துகை) என வரும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒன்று தொடக்கம் ஐந்து வரை மதிப்பீடு கொடுக்க வேண்டும். ஒன்று மிக மோசம், ஐந்து மிகச் சிறந்தது. 55555 என்றால் மிகச் சிறந்த தொழிநுட்பத் தரம்.
இந்த அறிக்கையில் மதிப்பீட்டுடன் தாங்கள் ஒலிபரப்பைக் கேட்ட இடம், திகதி, நேரம் மற்றும் தாங்கள் பயன்படுத்திய வானொலி வாங்கியின் தொழிநுட்ப விபரம் என்பவற்றையும் குறிப்பிடுவார்கள். தாங்கள் ஒலிபரப்பை கேட்டதை உறுதிப் படுத்த ஒலிபரப்பான நிகழ்ச்சியிலிருந்து சில குறிப்புகளை அறிக்கையில் சேர்த்துக் கொள்வார்கள். மொழி தெரியாத சந்தர்ப்பங்களில் நிகழ்ச்சியில் இடங்களின் அல்லது நபர்களின் பெயர்கள் ஒலிபரப்பாகி இருந்தால் அவற்றை எழுதுவார்கள். இல்லையெனில் அந்த மொழியில் முடிந்தவரை ஒன்றிரண்டு சொற்களை எழுதுவர். இந்த அறிக்கை Reception Report (பெறுதல் அறிக்கை) எனப்படும்.
உள்ளூர் வானொலி நிலையங்களை விட தொலைவில் உள்ள வானொலி நிலையங்கள் இந்த பெறுதல் அறிக்கைகளை பெரிதும் வரவேற்றன.
பிற்காலத்தில் அவை வேறு வழிகளைக் கையாண்ட போதிலும் தொடக்க காலத்தில் வானொலி நிலையங்கள் தங்கள் ஒலிபரப்பு குறிப்பிட்ட பிரதேச மக்களை சரியாகச் சென்றடைகின்றனவா என்பதை அறிய வானொலி ஆர்வலர்களின் பெறுதல் குறிப்பையே பெரிதும் நம்பியிருந்தன.
இந்த ஆர்வலர்களின் சேவையின் பயனாக எல்லா மக்களும் ஒலிபரப்புகளை நல்ல திறனுடன் கேட்க முடிந்தது. ஆனாலும் அந்த மக்களில் மிகப் பெரும்பாலானோர் இந்த ஆர்வலர்களின் சேவை பற்றி அறிந்திருக்கவில்லை.
கியூ எஸ் எல் அட்டைகள்
தொகுஅதனால் இத்தகைய வானொலி ஆர்வலர்களை ஊக்குவிக்க வானொலி நிலையங்கள் பெறுதல் அறிக்கையை பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாக வண்ண அட்டைகளை அந்தந்த ஆர்வலருக்கு அனுப்பின. அந்த அட்டையில் ஆர்வலரின் பெயர், முகவரியோடு அவர் ஒலிபரப்பைக் கேட்டார் என உறுதி செய்யப் பட்டிருக்கும். இந்த அட்டையை QSL அட்டை[7] என்பார்கள். நூற்றுக்கணக்கில், ஆயிரக் கணக்கில் இந்த அட்டைகளை சேகரித்த வானொலி ஆர்வலர்களும் உண்டு.
சில வானொலி நிலையங்கள் காலத்துக்குக் காலம் ஒரு கருப்பொருளை மையமாக (எ-கா: காடு வளர்த்தல், அருகி வரும் விலங்கினங்களை காப்பாற்றுதல்) வைத்து அட்டைகளை ஒரு தொடராக அனுப்புவார்கள். வேறு சில நிலையங்கள் தங்கள் நாட்டின் கலைச் செல்வங்கள் பற்றிய அட்டைகளை வெளியிடுவார்கள்.
பெரிய வானொலி நிலையங்கள் தொடர்ந்து பெறுதல் அறிக்கை அனுப்பும் ஆர்வலருக்கு கிறிஸ்மஸ், புதுவருடம் சமயங்களில் பரிசுப் பொருட்களை அனுப்பும். பல வானொலி நிலையங்கள், அநேகமாக ஆங்கில மொழி ஒலிபரப்புகள், வானொலி ஆர்வலர்களுக்கென்றே தனியாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்பினார்கள்.
ஆர்வலர் சங்கங்கள்
தொகு1950 களிலும் 1960 களிலும் பல ஆசிய ஆபிரிக்க நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து விடுதலை அடைந்தபோது தமக்கென வானொலி நிலையங்களை நிறுவின. அதனால் வானொலி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கேற்ப வானொலி ஆர்வலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
வானொலி ஆர்வலர்கள் பலர் ஒன்றுகூடி சங்கங்கள் அமைத்தார்கள். அமெரிக்காவிலும்[8], ஐரோப்பாவிலும்[9] அங்கங்கு இயங்கும் சங்கங்களை இணைக்கும் ஒன்றியங்கள் அமைக்கப் பட்டன. இவை ஒவ்வொரு வருடமும் மகாநாடுகள் நடத்தி சிறந்த ஒலிபரப்பு நிலையம், சிறந்த ஒலிபரப்பாளர்கள் என வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்து பரிசு வழங்கினார்கள். இதனால் வானொலி நிலையங்கள் மேலும் மேலும் நல்ல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின. ஒலிபரப்பாளர்களும் மக்களைக் கவரும் வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். ஒலிபரப்புகளை கேட்பவர்களை துடிப்புள்ளவர்களாக மாற்ற இந்த சங்கங்கள் பல வகையான போட்டிகளை அறிவித்து நடத்தின. இந்த போட்டிகளில் பங்குபற்ற QSL அட்டைகள் தேவை என்பதால் ஒலிபரப்புகளைக் கேட்டவர்கள் பெறுதல் அறிக்கை அனுப்பி அட்டைகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு சுற்றுலா செல்வது தொடக்கம் பலவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. இவை எல்லாம் வானொலி ஆர்வலர்கள் தங்கள் சொந்தப் பணத்தை சேர்த்து செய்தார்கள்.
வெளியீடுகள்
தொகுவானொலி ஆர்வலர்களுக்குத் தேவையான தகவல்களையும், உலகின் பல்வேறு வானொலி நிலையங்களின் ஒலிபரப்பு அலைவரிசை, ஒலிபரப்பு நேரங்கள் போன்ற விபரங்களையும் தாங்கிய புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் செய்திக் கடிதங்கள் என்பனவும் வெளிவந்தன. இவற்றுள் பழமையானதும் அதிக தகவல்களைக் கொண்டதும் உலக வானொலி தொலைக்காட்சி கையேடு (World Radio TV Handbook) ஆகும்[10].
தமிழ் ஒலிபரப்பு சார்ந்த சங்கங்கள்
தொகுதமிழகத்தில் ஒரு வானொலி ஆர்வலர் சங்கம் பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகிறது. ஆர்டிக் (ARDIC DX CLUB) என்ற இந்த அமைப்பு ஆங்கிலத்தில் DXers Guide[11] என்ற இதழையும், சர்வதேச வானொலி[12] என்ற தமிழ் இதழையும் வெளியிடுகின்றது.
இலங்கையில் 1980களில் தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம்[13] என ஒரு மன்றம் செயற்பட்டு தமிழ் ஒலி என்ற இதழை வெளியிட்டு வந்தது.
ஆர்வலர் அநுபவம்
தொகுஅனைத்துலக வானொலி ஒலிபரப்புகளை தொடர்ந்து கேட்கும் ஒருவர் புதிய அநுபவத்தைப் பெறுகிறார். அதுவரை தனது நாடு, தனது மொழி என்ற வட்டத்துக்குள் பழகி வந்தவர் அந்த வட்டத்திற்கு வெளியே வந்து உலகைக் காண்கிறார். அவரின் சிந்தனைகள் புதிய பரிமாணத்தை பெறுகின்றன. தெளிந்த சிந்தனை, பலநோக்கு பார்வை, மக்கள் நேயம், இயற்கையை பாதுகாப்பதில் ஆர்வம் என பல விதங்களில் அவரின் செயற்பாடுகள் மற்றவர்களைவிட மாறுபடுகின்றன. எந்த ஒரு விடயத்திலும் ஒரு குறிப்பிட்ட சமூகம், மொழி, நாடு என்றில்லாமல் அனைத்து உலகு, அனைத்து உயிர்கள் என்ற வகையில் சிந்திக்கிறார். செய்திகளின் நீள, அகலம் மட்டுமன்றி அவற்றின் ஆழத்தையும் புரிந்து கொள்ள அவரால் முடிகிறது.
இன்றைய நிலை
தொகுதொலைக்காட்சி, இணையம், திறன்பேசி என்பவற்றின் பரம்பலால் வானொலிப் பயன்பாடு அருகிவிட்டது. ஆனாலும் வானொலியின் தேவை இன்னும் அவசியமாகவே இருக்கிறது. முன்னைய மூன்றும் அலைகளைக் கடத்துவதற்கு செயற்கைக் கோள்கள், கோபுரங்கள் போன்ற அமைப்புகளை நம்பி இருப்பவை. ஆனால் வானொலி இயற்கையின் அயன் வலையத்தைப் பயன்படுத்தி அலைகளைக் கடத்துகிறது. அதனால் எங்கும் எப்போதும் செயற்படும் தன்மை கொண்டது.
மின்தடை ஏற்படும்போதும், பயணங்களின் போதும் இன்றைக்கும் வானொலி நிலையங்களையே சாதாரணமாக மக்கள் நாடுகிறார்கள்.
அனைத்துலக வானொலி ஒலிபரப்புகளைக் கேட்கும் ஆர்வலர்களும், வானலை வழியாக ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு உரையாடும் ஆர்வலர்களும் இன்றைக்கும் இருக்கிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Radio Enthusiast
- ↑ DXing.com
- ↑ "The Complete DXer". Archived from the original on 2014-01-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-19.
- ↑ What is HAM Radio
- ↑ The cyclone of November 23, 1978, which blasted Batticaloa (ஆங்கிலம்)
- ↑ Broadcast Battles
- ↑ Reporting and QSLs
- ↑ Association of North American Radio Clubs பரணிடப்பட்டது 2013-11-14 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- ↑ European DX Club (ஆங்கிலம்)
- ↑ WRTH
- ↑ DXers Guide
- ↑ சர்வதேச வானொலி
- ↑ தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம்