விக்கிப்பீடியா:பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 05
தமிழ் - தமிழியல் | பண்பாடு - பகடிப்பட இயற்பியல் |
தமிழ் மொழியையும் தமிழர் பண்பாடு, வரலாறு, சமூகம், அறிவியல் போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் தமிழியல் ஆகும். தமிழியல் தமிழும் தமிழருக்கும் பிற மொழிகளுக்கும் இனங்களுக்கும் இருக்கும் உறுவுகளைச் சிறப்பாக ஆய்கின்றது. தமிழையும் தமிழர் சார் விடயங்களை பிறருக்கும், பிறர் மொழியையும் அவர்களுடைய சிறப்புகளைத் தமிழ் புலத்துக்கும் பரிமாறும் ஒரு துறையாக தமிழியலை பார்க்கலாம்.
|
பகடிப்பட இயற்பியல் (Cartoon physics) என்பது இயக்கமூட்டப்பட்ட பகடிப்படங்களில் பொதுவாக அறியப்பட்டுள்ள இயற்பியல் கோட்பாடுகளும் விதிகளும் நகைச்சுவை பொருட்டு மீறப்படுவதைக் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதில் வெகுவாக அறியப்படும் ஒரு விளைவு: ஒரு பகடிப்படப் பாத்திரம் விரைவாக ஓடிவருகையில் மலைமுகட்டைத் தாண்டியும் ஓடிவிடுதலும், அதை அப்பாத்திரம் உணரும் வரை புவியீர்ப்பு விசை செயல்படாதிருத்தலும்.[1]
"இயக்குமூட்டப்படும் பகடிப்படங்கள் இயற்பியல் பொதுவிதிகளைப் பின்பற்றுகின்றன—வேறு விதமாக இருந்தால் நகைச்சுவை தருமென்றில்லாதபோது." என்று ஆர்டு பாப்பிட் என்ற பகடிப்பட வல்லுநர் மொழிந்ததாகக் கருதப்படும் கூற்று இந்த நிகழ்வை வரைவுபடுத்துகிறது. மேலும், பகடிப் படங்களில் வரும் காட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் இசைவுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளதை இவ்விளைவு காட்டுகிறது. |
வரலாறு - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி | அறிவியல் - இதயம் |
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஒரு கூட்டுப் பங்குக் கம்பனி ஆகும். 1600 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி, இந்தியாவில் பிரித்தானியாவுக்கு வணிக ரீதியான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, முதலாம் எலிசபெத் மகாராணியால் இதற்கு ஆங்கிலேய அரச பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் தனியுரிமையை (monopoly) இக் கம்பனிக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட இது, ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், இலங்கை முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. 1858 ஆம் ஆண்டில் இது ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டடு இதன் கட்டமைப்புக்களை ஐக்கிய இராச்சியம் நேரடியாக நிர்வாகிக்க தொடங்கியது.
இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இக் கம்பனி, பிரித்தானியப் பேரரசு உருவாவதில் தலைமை வகித்தது எனலாம். 1717 ல், வங்காளத்தில், சுங்க வரிகளைக் கட்டுவதிலிருந்து விலக்களிக்கும் ஆணையொன்றைக் கம்பனி, முகலாயப் பேரரசரடமிருந்து பெற்றுக்கொண்டது. இது, இந்திய வணிகத்தில், கம்பனிக்குத் தெளிவான முன்னுரிமையை வழங்கியது. 1757 இல், பிளாசி போரில், சர். ராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றி, கிழக்கிந்தியக் கம்பனியை ஒரு, வணிக மற்றும் இராணுவ வலிமை கொண்டதாக்கியது. 1760 ஆம் ஆண்டளவில், பாண்டிச்சேரி போன்ற ஓரிரு இடங்களைத் தவிர்த்து, இந்தியாவின் ஏனைய இடங்களிலிருந்து பிரெஞ்சுக்காரர் துரத்தப்பட்டனர். |
இதயம் என்பது முதுகெலும்பிகளில் காணப்படும் ஒரு தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை இரத்தத்தைக் குருதிக்குழாய்களின் வழியாக சுழற்சி முறையில் சீரான வேகத்தில் உடல் முழுதும் செலுத்துவது ஆகும். இதயமானது இதயத்தசை என்னும் சிறப்புத் தசையால் ஆனது.
இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது பெரிகார்டியல் நீர்மம் என்னும் நீர்மத்தினால் சூழப்பட்டுள்ளது. இந்நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மனித உடலில் இதயமானது மார்பின் இடதுப்பகுதியில் மார்பு எலும்புகளுக்குப் பின் பகுதியில் அமைந்துள்ளது. இடப்பகுதியில் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது. வலது இதயத்தின் பணியானது அசுத்த இரத்தத்தைச் சேகரிப்பது ஆகும். அசுத்த இரத்தமானது வலது ஆரிக்கிளை அடைகிறது. பின் இது வலது வெண்ட்டிரிக்கிள் வழியாக குருதி நுரையீரல்களுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு இரத்தத்தில் ஆக்ஸிஜன் கலக்கிறது. இதயத்தின் இடப்புறமானது தூய இரத்தத்தை பெறுகிறது. இது இடது ஆரிக்கிளை அடைகிறது. இங்கிருந்து குருதியானது இடது வெண்ட்டிரிக்கிளை அடைந்து அங்கிருந்து உடல் முழுவதற்கும் அனுப்பப் படுகிறது. |
கணிதம் - இடவியல் | புவியியல் - ஓட்டன் சமவெளி |
இடவியல் கணிதத்தின் ஒரு பெரிய உட்துறை. அடிப்படைக் கணித அமைப்புகளுக்குக் குந்தகமில்லாமல் வடிவவியல் முறையிலோ அல்லது இயற்கணித முறையிலோ செய்யப்படும் உரு மாற்றங்களைப் பற்றி இத்துறை விபரிக்கின்றது. ஆங்கிலத்தில் Topology என்றும், பிரென்ச், ஜெர்மானிய மொழிகளில் Topologie என்றும் கூறப் படுகிறது.
|
ஓட்டான் சமவெளி இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசியப் வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டயார் பரப்பளைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீட்டர் (7000 அடி) உயரமானது.1969 ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாக காணப்பட்ட ஓட்டன் சமவெளி 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது நுவரெலியா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும்.[2] இச்சமவெளி அயனமண்டல மலைக்காடுகளாலும் ஈரபத்தனைப் புல் நிலங்களாலும் ஆனாது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும்.[3]
|
சமூகம் - தமிழ்நாடு காவல்துறை | தொழில்நுட்பம் - விண்டோஸ் விஸ்டா |
தமிழ்நாடு காவல்துறை சுமார் 140 வருடங்கள் பாரம்பரியம் கொண்டதாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும். இது குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் செயல்படுகிறது.
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 80,977 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு என மொத்தம் 4 காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன. தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது. தமிழகம் 30 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. |
விண்டோஸ் விஸ்டா என்பது மைக்ரோசாப்ட்டின் கடைசியாக வெளிவந்த விண்டோஸ் பதிப்பாகும். 22 ஜூன் 2005 இப் பெயரைப் பெறுவதற்கு முன்னர் இது லாங் ஹான் என அறியப் பட்டது.மைக்ரோசாப்ட் தன் திறமையை நிரூபிக்க விஸ்டா பதிப்பில் மும்முரமாக ஈடுபட்ட்டு வருகின்றது. மைக்ரோசாப்ட்டின் அறிவிப்புப்படி விஸ்டாவின் வர்தகப் பதிப்பு நவம்பர் 2006 இலும் பாவனையாளரின் பதிப்பானது ஜனவரி 30, 2007 இலும் வெளிவந்தது.இந்தப் பதிப்பானது மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் XP வெளிவிடப் பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்தே வெளிவந்திருக்கின்றது. இத்திட்டமானது கணினி வரலாற்றிலேயே மிகப் பெரியதும் மிகப் பணச் செலவானதுமான ஓர் திட்டமாகும். விஸ்டாவுடன் ஆபீஸ் 2007 ம் இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
விஸ்டாவின் பயன்படும் வரைகலை மக் ஓஸ் போன்று அழகானதாகவும் பயனருக்கு இலகுவில் கையாளக் கூடியதாகவும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. வின்டோசுக்கு முதலே மக் ஓ.ஸ் வரைகலை பயனர் இடைமுகத்தைப் (Graphical User Interface) பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. |
நபர்கள் - ரிச்சர்ட் ஸ்டால்மன் | அகமகிழ்வு புன்னகை |
ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் (Richard Matthew Stallman, பி. மார்ச் 16, 1953) என்பவர் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free software movement), க்னூ திட்டம் (GNU Project), கட்டற்ற மென்பொருள் அமையம் (Free Software Foundation), நிரலாக்க தளையறுப்பு லீக் (League for Programming Freedom) போன்றவற்றின் தோற்றுவிப்பாளராவார்.
இவர் ஒரு சிறந்த நிரலாளருமாவார். இவரது சிறந்த மென்பொருட் படைப்புக்களாக ஈமாக்ஸ் (Emacs. பின்னாளில் GNU Emacs), GNU C Compiler, GNU வழுத்திருத்தி போன்றவை கருதப்படுகின்றன. க்னூ பொதுமக்கள் உரிமத்தின் ஆக்கியோரும் இவரே. தொண்ணூறுகளிலிருந்து தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளிலும், கட்டற்ற மென்பொருள் தத்துவ ஆக்கம், பரவலாக்கம் , ஆலோசனை வழங்கல் போன்ற விடயங்களிலும் தன்னுடைய பெரும்பகுதி நேரத்தினை செலவிட்டு வருகிறார். இவர் உரையாற்றுவதற்காக வழங்கப்படும் பணமே இவரது சொந்த வருமானமாக இருக்கிறது. |
|
- ↑ புதிய விஞ்ஞானி அமைப்பு நடத்திய புதுச் சொல்லாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற கொயாடஸ் இன்டெரப்டஸ் ("coyotus interruptus") என்ற சொற்றொடர் இவ்விளைவைக் குறிப்பதாக ஏற்படுத்தப்பட்டது. இணையப் பக்கம்
- ↑ ஓட்டன் சமவெளி தாகவல்கள்
- ↑ இலங்கையின் காடுகள் பற்றி தினக்குரல்