விண்வெளியில் விலங்குகள்

விண்வெளியில் விலங்குகள் (Animals in space ) மனிதர்கள் விண்வெளியில் காலடி வைப்பதற்கு முற்பட்ட காலத்தில் விண்வெளிப் பறப்பின் போது விலங்குகள் உயிருடன் தப்பிப் பிழைக்கின்றனவா என்பதை சோதித்து அறியவே பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை பல்வேறு வகையான உயிரியல் செயல்முறைகள் ஆய்வுகளுக்காகவும் விண்ணில் பறந்தன. அவற்றின் உடலில் விண்வெளிப் பறப்பின் விளைவுகள் மற்றும் எடையிழப்பு ஆகிய விண்வெளி மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா,பிரான்சு, அர்கெந்தீனா, சீனா, சப்பான் மற்றும் ஈரான் போன்ற ஏழு நாடுகளின் தேசிய விண்வெளி திட்டங்கள் மூலம் விண்வெளிக்கு விலங்குகள் அனுப்பப்பட்டன.

விண்வெளி குரங்கு "மிஸ் பேக்கர்" 1959 ஆம் ஆண்டில் இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை (IRBM) மூலம் சவாரி செய்தது.
விண்வெளியில் விலங்குகள் மைல்கற்கள்
1947: விண்வெளியில் முதல் விலங்கு
1949: விண்வெளியில் முதல் குரங்கு
1951: விண்வெளியில் முதல் நாய்
1957: சுற்றுப்பாதையில் முதல் விலங்கு
1968: ஆழ்விண்வெளியில் முதல் விலங்கு
2007: விண்வெளியில் வெளிப்பட்டு உயிர்வாழ்ந்த முதல் விலங்கு

வரலாற்றுப் பின்னணி

தொகு

விலங்குகள் 1783 ஆம் ஆண்டு முதல் விண்ணாய்வில் பயன்படுத்தப்படுகின்றன. அப்பொழுது மொன்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் ஒரு வெப்பக் காற்று ஊதுபையினுள் ஒரு ஆடு, ஒரு வாத்து மற்றும் ஒரு சேவல் ஆகிய விலங்குகளை வைத்து விண்வெளிக்கு அனுப்பினர். இச்சோதனைக் கட்டுப்பாட்டில் வாத்து மையப்படுத்தப்பட்டது, கைப்பற்றப்பட்ட செருமனியின் வி-2 ஏவூர்திகளை மட்டுப்படுத்திய அமெரிக்கா இவற்றின் மூலம் பலூன்களை மிகவுயரத்திற்கு செலுத்தியது. இப்பலூன்களில் ஒருவகையான பழ ஈக்கள், எலிகள், வெள்ளெலிகள், கினி பன்றிகள், பூனைகள், நாய்கள், தவளைகள், தங்கமீன் மற்றும் குரங்குகள் ஆகிய உயிரினங்கள் 44000 மீட்டர் அல்லது 1,44,000 அடி உயரத்திற்குப் பயணம் செய்தன.[1] 1947 ஆம் ஆண்டிலிருந்து 1960 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த அதிக உயர பலூன் விமானங்கள் கதிர்வீச்சு வெளிப்பாடு, உடலியல் பாதிப்புகள், உயிர்காக்கும் மற்றும் மீட்பு அமைப்புகள் முதலியன சோதனை செய்யப்பட்டன. இதே காலகட்டத்தில் அமெரிக்கா அதிக உயரத்திற்கு ஆள்தாங்கி பலூன் விமானங்களில் பழ ஈக்கள் அனுப்பி நடத்தப்பட்ட திட்டமும் ஏற்பட்டிருந்தது.

1940கள்

தொகு
 
விண்வெளி குரங்கு இரண்டாம் ஆல்பர்ட்டை சுமந்து செல்லும் வி–2 எண் 47

வெள்ளை மணல் ஏவுகணைகள் வீசுகளம், நியூ மெக்சிகோ பகுதியில் இருந்து அமெரிக்கா 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று வி – 2 ஏவுகணை மூலம் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை தொடங்கியது.[1][2][3][4] அதிக உயரத்தில் கதிரியக்க வெளிப்பாட்டின் விளைவுகளை ஆய்வு செய்வதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருந்தது. 3 நிமிடம் 10 வினாடிகளில் ராக்கெட் 68 மைல்கள் உயரத்தை அடைந்தது. இப்பயணத் தொலைவு அமெரிக்க இராணுவ விமானப்படை மையத்தில் இருந்து 50 மைல்கள், சர்வதேச விண்வெளி எல்லையென வரையறுக்கப்பட்ட கார்மன் கோடு 100 கிலோ மீட்டர்களை அடைந்தது.ராக்கெட்டிலிருந்து பிளாசம் உறை வெற்றிகரமாக உமிழப்பட்டு வான்குடையில் பழ ஈக்கள் உயிருடன் மீட்கப்பட்டன. மற்ற வி – 2 திட்டங்களில் பாசிகள் போன்ற உயிரின மாதிரிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

1949 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வி – 2 ராக்கெட்டில் பயணம் செய்த இரண்டாம் ஆல்பர்ட்டு என்ற சிறு செம்முகக் குரங்கு விண்வெளிக்குச் சென்ற முதல் குரங்கு என்ற பெருமையைப் பெற்றது. இதற்கு முன்னர் முதலாம் ஆல்பர்ட்டு என்ற குரங்கு 30 முதல் 39 மைல் உயரம் வரைமட்டுமே பயணம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் ஆல்பர்ட்டு 83 மைல் உயரத்திற்கு பயணம் மேற்கொண்டு வான்குடை பழுதின் காரணமாக மீள்வதற்குள் இறந்தது. பின்னர் 1950, 1960 களில் அமெரிக்கா பலவகையான குரங்கு வகைகளை விண்ணுக்கு அனுப்பி பலவிதமான பரிசோதனைகள் மேற்கொண்டது. குரங்குகளின் உடலில் தோன்றும் மாற்றங்களை அளவிட அவற்றின் உடலில் உணரிகள் பொருத்தப்பட்டும் சில குரங்குகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் குரங்குகளின் இறப்பு வீதம் மிகஅதிகமாகக் காணப்பட்டது. 1940 மற்றும் 1950 களில் சோதனைக்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்குகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பாகம் குரங்குகள் திட்டத்தின் போது அல்லது தரைக்கு வந்து சேர்ந்தவுடன் இறந்துவிட்டன.

1950கள்

தொகு
ராக்கெட் ஊர்தியில் விண்வெளிக்குச் செல்லும் விலங்குகள், 1953 அமெரிக்க வான்படை படம்

ஆகத்து 31 1950 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு எலிகளை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா தொடங்கியது. ஒன்று முதல் நான்கு வரையிலான ஆல்பர்ட்டு ராக்கெட்டுகள் குரங்குகளைச் சுமந்து சென்றது போலில்லாமல் ஐந்தாம் ஆல்பர்ட்டு எலியைச் சுமந்து சென்றது. விண்வெளியில் 137 கிலோ மீட்டர் தொலைவு வரை எலியைச் சுமந்து சென்ற ராக்கெட் வான்குடை செயற்பாட்டின் பழுது காரணமாக சிதைவடைந்து தோல்வியில் முடிந்தது.[5] இதைத் தொடர்ந்து 1950 களில் மேலும் பல எலிகளை அமெரிக்கா விண்ணுக்கு அனுப்பியது.

சூலை 22, 1951 இல், சோவியத் யூனியன் ஆர் – 1 III ஏ- 1 என்ற வானூர்தியில் திசைகன் மற்றும் டெசிக் நாய்களை சுற்றுப்பாதை அல்லாத விண்வெளிக்கு அனுப்பியது[6] . இந்த இரண்டு நாய்கள்தான் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக திரும்பிவந்து வாழும் மேம்பட்ட வகை உயிரினங்களாகத் திகழ்ந்தன. விண்வெளியில் பறந்த போது இரண்டு நாய்களும் பிழைத்து இருந்தன[6] என்றாலும் அடுத்த பறத்தலின் போது ஒரு நாய் இறந்தது. இதே ஆண்டின் இறுதியில் அமெரிக்காவும் வானூர்திகளில் எலிகள் அனுப்பும் திட்டத்தைத் தொடங்கியது. இருந்தபோதிலும் வானூர்தியின் உண்மையான உச்சவுயரத்தை அவர்களால் எட்ட இயலவில்லை.

1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று புவிச்சுற்றுப் பாதைக்கு ஏவப்பட்ட சோவியத் நாட்டின் இரண்டாவது விண்கலமான இசுப்புட்னிக் 2 விண்கலம் முதல் விலங்கான லைக்கா என்னும் நாயை புவிச்சுற்றுவட்டப் பாதைக்குக் கொண்டு சென்றது. இசுப்புட்னிக் 2 விண்கலம் முட்னிக் என்ற செல்லப் பெயராலும் அழைக்கப்பட்டது. சுற்றுப்பாதையில் இருந்து பூமிக்குத் திரும்பும் தொழில்நுட்பம் அக்கால கட்டத்தில் வளர்ச்சியடையாமல் இருந்த காரணத்தால் லைக்கா நாய் விண்ணில் இருக்கும்போதே இறந்தது. யூரி ககாரின் விண்ணில் காலடிவைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான 12 ஏப்ரல் 1961 ஆம் ஆண்டிற்கு முன்பு கிட்டத்தட்ட பத்திற்கும் மேறபட்ட நாய்கள் விண்வெளியின் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

1958 ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று,இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை சுபிட்டர் ஏ.எம்-13, புளோரிடாவில் உள்ள கேப்கார்னிவெரால் ஏவூர்தி தளத்தில் இருந்து ஏவப்பட்டது. அமெரிக்க கடற்படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட தென்னமெரிக்க கோர்டூன் எனப்பெயரிடப்பட்ட அணில் குரங்கு இவ்வூர்தியில் அனுப்பப்பட்டது. வான்குடை பழுது காரணமாக கோர்டூன் தரையிரங்க முடியாமல் இறந்து போனது. ஒரு மணி நேரத்திற்கு 10,000 மைல்கள் என்ற வேகத்தில் சுற்றுப்பாதையில் சுழலும் போது பூமிக்கருகில் 10ஜி தொலைவிலும், எடையில்லாமை 8 நிமிடங்கள் அளவிலும் மற்றும் பூமிக்குத் தொலைவாக மறுதிரும்பலில் 40ஜி அளவிலும் குரங்கு பிழைத்து உயிரோடு இருந்ததாக பறத்தலின் போது அனுப்பப்பட்ட தொலைக்கணிப்பு தரவு தெரிவித்தது. கேப் கார்னிவல் பகுதியிலிருந்து 1302 கடல்மைல் தொலைவில் ராக்கெட்டின் முகப்புக் கூம்பு மூழ்கியதால் அதிலிருந்த எதுவும் மீட்கப்படவில்லை.

1959 ஆம் ஆண்டில் விண்வெளியில் பறந்ததைத் தொடர்ந்து செங்குரங்கு ஏபிலும், அணில் குரங்கு பேக்கரும் விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் குரங்குகள் என்ற பெயர் பெற்றன. 1959 ஆம் ஆண்டு மே மாதம் சுபீட்டர் இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை ஏஎம் – 18 இல் இவை இரண்டும் பறந்து திரும்பின. அமெரிக்காவில் பிறந்த செங்குரங்கு ஏபில் 3.18 கிலோ கிராம் எடையையும், பெரு நாட்டைச் சேர்ந்த அணில் குரங்கு பேக்கர் 310 கிராம் எடையையும் கொண்டிருந்தன. புளோரிடாவில் உள்ள கேப் கானவரால் ஏவுதளத்தில் இருந்து அட்லாண்டிக் ஏவுகணை தளம் வரையிலான 2735 கிலோமீட்டர் தூரத்தை 579 கிலோமீட்டர் உயரத்தில் குரங்குகள் இரண்டும் ஏவுகணயின் முன்கூம்புப் பகுதியில் இருந்தபடி சவாரி செய்தன. சவாரியின் போது அவை சாதாரண ஈர்ப்பு விசையைக் காட்டிலும் 38 மடங்கு அதிகமான ஈர்ப்புக்கு உட்பட்டும், 9 நிமிடங்களுக்கு எடையிழந்த நிலையிலும் இருந்தன. அவற்றின் 16 நிமிட விண்வெளிப் பயணத்தில் ஏவுகணை அதிகபட்சமாக மணிக்கு 16000 கி.மீ வேகத்தை எட்டியது. ஏவுகணையில் பறந்தபோது குரங்குகள் இரண்டும் நலமுடன் தப்பிப் பிழைத்தன. ஆனால் நான்கு நாட்களுக்குப் பிறகு ஓர் அறுவைச் சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தின் எதிர்வினை காரணமாக செங்குரங்கு ஏபில் இறந்து போனது. 29 நவம்பர் 1984 வரை பேக்கர் அணில்குரங்கு, அலாபாமா அண்ட்சிவில்லில் உள்ள அமெரிக்காவின் விண்வெளி மற்றும் ஏவுகணை மையத்தில் உயிருடன் இருந்தது.

1959 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் ஏவப்பட்ட சோவியத் ஆர்2 ராக்கெட் 212 கிலோமீட்டர் தூரம் சென்றது. அதில் இரண்டு நாய்களும் மர்பூசா என்ற ஒரு முயலும் விண்ணுக்குச் சென்றன[1].

அதே ஆண்டு செப்டம்பர் 19 இல் 2 தவளைகளையும், 12 எலிகளையும் சுமந்துகொண்டு புறப்பட்ட சுபீட்டர் ஏஎம் - 23 விண்ணில் ஏவப்பட்டவுடன் சிதைந்து அழிந்தது[1]

1960கள்

தொகு

1960 ஆம் ஆண்டு ஆகத்து 19 இல் சோவியத் உருசியா இசுப்புட்னிக் 5 என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ஏவுகணை கோராபல் இசுப்புட்னிக் 2 என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பெல்கா மற்றும் சிடெரெல்கா நாய்களுடன் ஒரு சாம்பல் முயல், 40 சுண்டெலிகள், இரண்டு எலிகள், 15 சேமக் குடுவை பழயீக்கள் மற்றும் தாவரங்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.[7] புவியின் சுற்றுப்பாதைக்கு விலங்குகளுடன் சென்று அவற்றை உயிருடன் திரும்பக் கொண்டு வந்த முதல் விண்ணூர்தி இசுப்புட்னிக் 5 ராக்கெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.[8] இந்த பறத்தலுக்குப் பிறகு பிறந்த சிடெரெல்காவின் குட்டி புசின்கா கரோலின் கென்னடிக்கு அன்பளிப்பாக நிக்கிட்டா குருசேவால் அளிக்கப்பட்டது. இதன் பின்னரான சந்ததிகள் பல உயிருடன் இருந்ததும் அறியப்பட்டது.

அட்லசு டி 71டி ஏவுகணை வாகனத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா, கேப் கானவராலில் இருந்து ஒரு ராக்கெட்டை 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 13 இல் ஏவியது. ஏவுதளத்தில் இருந்து 8,000 கி.மீ. தூரமும் 1,000 கி.மீ உயரமும் சென்ற இந்த ராக்கெட்டில் மூன்று கருப்பு எலிகள் சாலி, அமி மற்றும் மோ ஆகியவை பயணம் செய்தன. அசென்சன் தீவுக்கருகே மீளப்பெறப்பட்ட எலிகள் மூன்றும் நல்ல நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.[9]

1961 ஜனவரி 31 அன்று காம் என்ற வாலில்லா குரங்கு ரெட்சிடோன் ராக்கெட்டின் மெர்க்குரி உறையில் விண்வெளியில் சவாரி செய்ய அனுப்பப்பட்டது. இத்திட்டம் மெர்க்குரி – ரெட்சிடோன் ஏவுகணைத் திட்டம் எனப்பட்டது. நெம்புகோல்களை இழுத்து வாழைப்பழ வெகுமதியைப் பெற்றுக் கொள்ளவும் அதிர்வுகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் வாலில்லாக் குரங்குக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தன.[10] விண்வெளியில் பறக்கும் பொழுது சிறு செயல்களையும் திறம்பட வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை குரங்கின் இப்பயணம் விவரித்தது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்கா ஆலன் செப்பர்டு என்ற விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பியது. 1961 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று அட்லாசு ராக்கெட்டின் மெர்க்குரி அட்லாசு 5 திட்டத்தின் மற்றொரு மெர்க்குரி உரையில் அனுப்பப்பட்ட ஏனோசு வாலில்லா குரங்குதான் புவிச்சுற்றுப் பாதைக்குச் சென்றுவந்த முதல் குரங்கு என்ற சிறப்பைப் பெற்றது.

இதே 1961 மார்ச்சு மாதம் 9 அன்று சோவியத் உருசியா மேலும் ஒரு கோரபல் – இசுப்புட்னிக் 4 ஏவுகனையை விண்ணில் ஏவியது. இவ்விண் கலத்தில் செமுசுக்கா என்ற நாயுடன் சில சுண்டெலிகள், தவளைகள் மற்றும் முதன்முதலாக ஒரு கினியா பன்றி ஆகியவை விண்ணுக்குச் சென்றன.[11] எல்லா விலங்குகளும் பயணத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டன.

பிரான்சு நாடு தன்னுடைய முதல் எலி எக்டரை 1961 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விண்ணுக்கு அனுப்பி தன்னுடைய பரிசோதனையைத் தொடங்கியது. 1962 ஆம் ஆண்டு அக்டோபரில் மேலும் இரண்டு எலிகளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பிவைத்தது[12].

1963 ஆம் ஆண்டு அக்டோபரில் பிரான்சு நாடு வெரோனிக் 47 வகை ராக்கெட் மூலம் பெலிக்கேட் என்ற பூனையை விண்வெளிக்கு அனுப்பியது. 15 நிமிடப் பறத்தலுக்குப் பின்னர் பூனை பத்திரமாக மீட்கப்பட்டது. பெலிக்கேடின் மூளையில் பொருத்தப்பட்டிருந்த மின்முனைகள் வழியாக அதன் நரம்புகளில் தோன்றிய அதிர்வுகள் பூமிக்கு மீண்டு வந்தன. இதேபோல மற்றொரு பூனையும் அக்டோபர் 24 அன்று பிரெஞ்சு அரசால் அனுப்பப்பட்டது. ஆனால் அப்பூனையைத் திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இறுதியாக மீட்கப்பட்ட போது அது இறந்து கிடந்தது.[13][14] இதன் பின்னர் 1967 ஆம் ஆண்டில்தான் பிரான்சு இரண்டு குரங்குகளை விண்ணுக்கு அனுப்பியது.

1964 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் சீனா சுண்டெலிகளையும் எலிகளையும் விண்வெளிக்கு அனுப்பியது. தொடர்ந்து 1966 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு இரு நாய்களை அனுப்பியது.

1966 ஆம் ஆண்டு உருசியா தன்னுடைய வோசுகாட் விண்வெளித் திட்டத்தில், விட்டராக் மற்றும் உகோலையாக் என்ற இரண்டு நாய்களை பிப்ரவரி 22 அன்று விண்ணுக்கு அனுப்பியது. காசுமாசு 110 விண்கலத்தில் சவாரி செய்த இரண்டு நாய்களும் 22 நாட்கள் விண்ணில் இருந்து மார்ச்சு 16 இல் பூமிக்குத் திரும்பின. 1971 ஆம் ஆண்டு சோயூசு 11 விண்வெளிக்குச் செல்லும் வரை விண்ணில் 22 நாட்கள் தங்கியிருந்தது என்பது மிகப்பெரிய சாதனையாக இருந்தது. நாய்கள் தங்கியிருந்தன் என்ற வகையில் இன்று வரை அது ஒரு சாதனையாகவே உள்ளது.

1967 ஆம் ஆண்டில் அமெரிக்கா உயிரியச் செயற்கைக்கோள் I மற்றும் 1967 ஆம் ஆண்டில் உயிரியச் செயற்கைக்கோள் II என்ற இரண்டு விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பியது. இவ்விண்கலங்களில் பழஈக்கள், ஒட்டுண்ணிக் குளவிகள், மாவு வண்டுகள், தவளை முட்டைகள் இவற்றுடன் பாக்டீரியா, அமீபா, பூஞ்சைகள் மற்றும் தாவரங்கள் ஆகியனவும் விண்வெளிக்குச் சென்றன.[15]

ஏப்ரல் 11, 1967 இல் அர்கெந்தினாவும் பெலிசாரியோ என்ற எலியை அடாப் என்ற யாராரா ராக்கெட் [16] மூலம் கார்தோபா இராணுவ ஏவுதளத்தில் இருந்து ஏவியது. பின்னர் இவ்வெலி பத்திரமாக திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்துப் பல எலிகள் விண்ணில் பறக்கவிடப்பட்டன.[17] சர்வதேச விண்வெளி எல்லையான 100 கி.மீ தொலைவை அர்கெந்தினாவின் உயிரியச் செயற்கைக் கோள்கள் ஏதாவது அடைந்தனவா என்பது தெளிவாக அறியப்படவில்லை.

14 செப்டம்பர் 1968 இல் முதலாவது ஆமையை சோவியத் ஒன்றியம் விண்வெளிக்கு அனுப்பியது. இந்த நிலவுசூழ் பயணத்தில் உருசிய ஆமையுடன் மது ஈக்கள், உணவுப் புழுக்கள் மற்றும் சில உயிரியல் மாதிரிகள் அனுப்பப்பட்டன. ஆழ்விண்வெளிக்குச் சென்ற முதலாவது உயிரினங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 21 செப்டம்பரில் இவையாவும் திரும்பப் பெறப்பட்டன. 1969 இல் அமெரிக்கா முதலாவது பலநாள் உயர்விலங்கு ஏவுகணைத் திட்டத்திற்கு வித்திட்டது.

1960 களில் அமெரிக்கா மேற்கொண்ட குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பும் நான்கு திட்டங்களில் போனி குரங்கு என்ற நாட்டுக் குரங்கை விண்வெளிக்கு அனுப்பிய திட்டமும் உள்ளடங்கும்.

1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சோவியத் யூனியன், மொத்தமாக 57 முறை நாய்களை விண்வெளிப் பயணத்திற்கு அனுப்பியிருந்தது. சில நாய்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பறந்துசென்ற காரணத்தால் விண்வெளி நாய்களின் உண்மையான எண்ணிக்கை அதைவிடக் குறைவானதாக இருக்கிறது.

1969 திசம்பர் 29 இல் அர்கெந்தினா, நாவிதாட்டு விண்வெளி நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட குரங்கு சூவானை கானோபசு ராக்கெட் II மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.[18] 82 கி.மீ பயணம் செய்த அக்குரங்கு வெற்றிகரமாகத் திரும்ப பெறப்பட்டது.[19] இந்த வெற்றியனுபவத்தைத் தொடர்ந்து 1970 பிப்ரவரி 1 இல் அதேஅகை பெண்குரங்கை எக்சு-I பாந்தர் ராக்கெட் மூலம் அனுப்பி சோதனையைத் தொடர்ந்தது. முதலாவது முயற்சியைக் காட்டிலும் அதிக உயரத்தை இக்குரங்கு எட்டினாலும் தரையிரங்குவதில் சிக்கல் ஏற்பட்டு இறந்தது.

1970கள்

தொகு

விண்வெளியில் இயங்கும் போது உருவாகும் நோய்கள் பற்றி மேலும் புரிந்து கொள்வதற்காக, செவிக்கல் தவளைகளுக்கான சுற்றுப்பாதை செயற்கைக்கோள் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு பெருந்தவளைகள் நவம்பர் 9, 1970 இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

16 ஏப்ரல் 1972 இல் உருளைப்புழுக்களைச் சுமந்துகொண்டு அப்பல்லோ 16 மற்றும் ஐந்து சுண்டெலிகளைச் சுமந்து கொண்டு அப்பல்லோ 17 ராக்கெட்டும் விண்ணில் பறந்தன. ஆயினும் ஒரு சுண்டெலி நிலவைச் சுற்றும் பயணத்தில் இறந்து விட்டது. சிகைலாப் 3 ராக்கெட்டு ஒரு சுண்டெலியையும் விண்வெளிக்கு முதன்முதலாக மம்மிசோக் என்ற ஒரு மீனையும் கொண்டு சென்றது. அமெரிக்காவின் அப்பல்லோ – சோயூசு ஏவுகணைத் திட்டத்தில் 15 சூலை 1975 இல் விண்வெளிக்கு முதன்முதலாக அரபெல்லா, அனிதா என்ற சிலந்திகளும் ஒரு மம்மிசோக் மீனும் அனுப்பப்பட்டது.

சோவியத்து ஒன்றியம் உயிரிஏவுகணைத் திட்டத்தில் பல செயற்கைகோள்கள் உயிரியல் சரக்குகளை சுமந்து சென்றன. இவை விண்ணில் பறந்தபோது ஆமைகள் எலிகள் மற்றும் மம்மிசோக் மீன்கள் அவற்றுடன் பறந்தன. 17 நவம்பர் 1975 இல் சோயூசு 20 விண்ணில் பறந்தபோது அதில் பயணம் செய்த ஆமைகள் 90.5 நாட்கள் விண்ணில் இருந்து சாதனை படைத்தன. 22 சூன் 1976 இல் விண்ணில் பறந்த சல்யூட் 5 ராக்க்கெட்டு ஆமைகளுடன் செப்ரொ டேனியோ என்ற வரிமீனையும் சுமந்து சென்றது.

1980கள்

தொகு

சோவியத் ஒன்றியம் 1980களில் உயிரிஏவுகணைத் திட்டத்தில் விண்வெளிக்கு எட்டு குரங்குகளை அனுப்பியது. இரண்டு சிறு அணில் குரங்குகளுடன் 24 ஆண் அல்பினோ எலிகள், மற்றும் தள்ளிப்பூச்சி முட்டைகள் ஆகியவை 1985 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளியூர்தியின் விண்வெளி ஆய்வகத்தில் பயணம் செய்தன. செப்ரா டேனியோ, பழ ஈக்கள் எலிகள், தள்ளிப்பூச்சி முட்டைகள் மற்றும் விண்வெளிக்குப் பயணம் செய்த முதலாவது பல்லி ஆகியனவும் உயிரிஏவுகணையில் விண்வெளிக்கு பயணம் செய்தன.

உயிரிஏவுகணை 7 இல் 10 பல்லிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. விண்வெளியில் உறுப்புகளின் மீளாக்க வீதத்தைச் சோதிக்கும் நோக்கத்தில் அப்பல்லிகளின் முன்னங்கால் துண்டிக்கப்பட்டு அனுப்பப் பட்டன. இதன் மூலம் மனிதனுக்கு விண்ணில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை முறைகள் அலசப்பட்டன.

1986 இல் நிகழ்ந்த மோசமான சாலஞ்சர் விண்ணோட விபத்திற்குப் பின்னர் 1989 ஆம் ஆண்டில் விண்வெளியூர்தியில் கருவுற்ற கோழி முட்டைகள் அனுப்பப்பட்டன.

1990கள்

தொகு
 
அமெரிக்க விண்வெளி வீரர் டொனால்டு தாமசு விண்வெளியூர்தியில் ஒரு பல்லியை ஆய்வு செய்கிறார்

நான்கு குரங்குகள் கடந்த பயோன் சோவியத் ஒன்றியம் அனுப்பிய கடைசி உயிர்ஏவுகணைத் திட்டத்தில் அனுப்பப்பட்ட நான்கு குரங்குகளுடன் தவளைகள் மற்றும் பழ ஈக்களும் பறந்து சென்றன. அடுத்ததான போட்டான் திட்ட ராக்கெட்டில் செயல்படாத உவர்நீர் இறால், பல்லிகள், பழ ஈக்கள், மற்றும் பாலைவன மணல் வண்டுகள் முதலியன கொண்டு செல்லப்பட்டன.[20][21]

சீனா 1990 ஆம் ஆண்டில் கினி பன்றிகளை விண்ணுக்கு அனுப்பியது.[22]

உடோயொகிரோ அகியாமா என்ற ஒரு சப்பானிய பத்திரிகையாளர் மீர் 1990 இல் விண்நிலையத்திற்கு போகும்போது தன்னுடன் சப்பானிய மரத்தவளைகளை எடுத்துச் சென்றார். காடை முட்டைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டது இவருடைய வேறு உயிரியல் பரிசோதனை ஆகும்.

18 மார்ச்சு 1995 இல் சப்பான் தன்னுடைய முதலாவது விலங்கான பல்லியை விண்வெளியூர்தி விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.

அமெரிக்கா 1990 களின் போது, வெட்டுக்கிளி, சுண்டெலிகள், எலிகள், தவளைகள், பல்லிகள், பழ ஈக்கள், நத்தைகள், கெண்டை, மெடாக்கா மீன், சிப்பித் தேரைகள், கடல் முள்ளிகள், கத்தி மீன், சிப்சி அந்துப்பூச்சி முட்டைகள், தள்ளிப்பூச்சி முட்டைகள், உவர்நீர் இறால், காடை முட்டைகள் மற்றும் நுங்கு மீன்கள் முதலியன விண்வெளி ஊர்தியில் அனுப்பப்பட்டன.

2000கள்

தொகு

2003 இல் கொலம்பியா விண்வெளி ஓடத்தின் கடைசி பயணத்தில் பட்டுப்புழுக்கள், ஒருவகை தோட்டச் சிலந்திகள், மரத் தேனீக்கள், அறுவடை எறும்புகள், சப்பானிய மெடாக்கா மீன், உருளைப் புழுக்கள் ஆகிய உயிரினங்கள் விண்வெளிக்குச் சென்றன. விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு பூமிக்குத் திரும்பி கொண்டிருந்த கொலம்பியா விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பொழுது வெடித்து சிதறியது. புவிநிலப்பகுதியில் கண்டறியப்பட்ட கொலம்பியாவின் எச்சங்களில் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்ட உயிரினங்களில் சில உயிருடன் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.[23]

அனைத்துலக விண்வெளி நிலையம் அதனுடைய விண்வெளி சோதனைகளில் உருளைப் புழுக்கள் மற்றும் காடை முட்டைகளை ஆய்வுக்குப் பயன்படுத்தியது.

ஆரம்பகாலத்தில், விண்வெளி ஓடங்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்களில் சிலவகை எறும்புகள், சிலவகை பூச்சி முட்டைகள் மற்றும் உவர்நீர் இறால் ஆகியன ஆய்வுக்காக பயன்பட்டன. அதன் பின்னரான அறிவியல் பயணங்களில் சிப்சி அந்துப்பூச்சி முட்டைகள் சேர்க்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு சூலை 12 ம் தேதி, பிக்லோ வான்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தன்னுடைய விண்கலப் பெட்டகத்தில் பொம்மைகள், பல சிறிய பொருட்கள், மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட புகைப்படக் கருவி வழியாக உற்று நோக்கத்தக்க எளிய சோதனைகள், சில பூச்சிகள் ஆகியவற்றை செனிசு 1 விண்ணோடம் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பிய முதலாவது தனியார் விமான நிறுவனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மடகாசுகர் இரைப்பு கரப்பான்பூச்சி, மெக்சிகோவின் அவரைப் புழு மற்றும் அந்துப்பூச்சிப் புழு ஆகியன இந்நிறுவனத்தால் அனுப்பப்பட்ட பூச்சி வகைகளாகும்.[24] சூன் 28, 2007 இல் இதே நிறுவனம் செனிசு 2 என்ற விண்ணோடத்தை விண்வெளிக்கு அனுப்பியது. இதிலும் மடகாசுகர் இரைப்பு கரப்பான், தென்னாப்பிரிக்கப் பாறைத் தேள் மற்றும் அறுவடை எறும்புகள் ஆகியன அனுப்பப்பட்டன.[25]

செப்டம்பர் 2007 இல், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் போட்டான்-எம்3 திட்டத்தில் அனுப்பப்பட்ட நீர்-கரடிகள் திறந்த விண்வெளியில் வெளிப்பட்டு தங்களுக்கு இருக்கும் இயற்கைப் பாதுகாப்பு துணையுடன் 10 நாட்கள் வாழ முடிந்தது.[26][27]

இதே திட்டத்தில் உருசிய கரப்பான் பூச்சி நடேசிடா ஒரு மூடிய கொள்கலனில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமிக்கு வெளியே விண்வெளிப் பயணத்தில் பிரசவித்த முதல் உயிரினம் இக்கரப்பான் பூச்சியாகும். இது 33 புதிய கரப்பான் பூச்சிகளை ஈன்றது.[28]

நவம்பர் 2009 இல் வண்ணப் பட்டாம்பூச்சிகளும் மொனார்க் பட்டாம்பூச்சிகளும் விண்ணுக்குச் செலுத்தப்பட்டன. நீண்டகால எடையிழப்பை ஆய்வு செய்ய உருளைப்புழுக்களும் அனுப்பப்பட்டன.

2010கள்

தொகு

ஈரானியப் புரட்சியின் 31 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பும் நாடுகள் பட்டியலில் ஈரானும் சேர்ந்தது. ஒரு சுண்டெலியும் இரண்டு நீர் ஆமைகளும் கவோசகார் 3 ராக்கெட்டில் விண்வெளிக்குச் சென்று உயிருடன் பூமிக்குத் திரும்பி வந்தன.[29][30]

நாசாவின் எண்டெவர் விண்ணோடம் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் அபூர்வ வகை சிலந்திகளான கிளாடிசு, எசுமரால்டா என்ற இரண்டு பீமன் சிலந்திகளையும் அவற்றின் உணவு மூலமான ஒரு பழ ஈ தொகுப்பையும் விண்வெளிக்குக் கொண்டு சென்றது. நுண்ணீர்ப்பு விசையின் தாக்கத்தால் சிலந்திகளின் நடத்தையில் தோன்றும் மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டன.[31]

நவம்பர் 2011 இல் போபொசு கிரண்டு கோள்களிடை விண்வெளித் திட்டத்தில் மெதுநடையன்களான நீர்கரடிகளை செவ்வாய் கோளுக்குக் கொண்டு சென்று மீளும் திட்டமாகும். ஆனால் இத்திட்டம் புவிச்சுற்றுப் பதையில் இருந்து விடுபடமுடியாமல் தோல்வியில் முடிந்தது.

அக்டோபர் 2012 இல் சோயூசு விண்கலம் டிஎம்ஏ-06எம்மின் மூலம் 32 மெடாக்கா மீன்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டன.

சனவரி 28, 2013 இல் ஈரான் பிசுகாம் என்ற குரங்கை விண்வெளியில் 116 கி.மீ தொலைவுக்கு அனுப்பி திரும்பப்பெற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. பின்னர் அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரு 18 நிமிட காணொளியை வெளியிட்டது.[32] The video was uploaded later on YouTube.[33]

2014 களில் அனைத்துலக விண்வெளி நிறுவனம் ஐரோப்பிய வகை எறும்புகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.[34][35]

2014 சூலை 19 இல் உருசியா தன்னுடைய போட்டான்- எம்4 செயற்கைக்கோளை புவியின் சுற்றுவட்டப்பாதையில் 575 கிலோமீட்டர் தொலைவுக்கு 1 ஆண் மற்றும் 4 பெண் மரபல்லிகளை அனுப்பியதாக அறிவித்தது. ஊர்வனவற்றின் இனப்பெருக்கத்தில் நுண்ணீர்ப்புவிசை விளைவுகளை ஆய்வு செய்ய இது ஒரு முயற்சியாக அமைந்தது.[36] மரபல்லிகளுக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவு இருப்பில் இருந்தபோதே போட்டான்- எம்4 செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக 2014 சூலை 24 அன்று, உருசியா அறிவித்தது.[37] அடுத்த சில நாட்களில் கோளாறு சரிசெய்யப்பட்டு சூலை 28 2014 இல் செயற்கைக் கோள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.[38] ஆனால் மரபல்லிகள் உடல் உறைந்து இறந்து கிடந்ததாக செப்டம்பர் 1 அன்று உருசியா உறுதிப்படுத்தியது. விலங்குகளின் மரணம் பற்றி விசாரிக்க அவசர ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது[39]

செப்டம்பர் 23 2014 இல் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் வாழ்வதற்காக 20 சுண்டெலிகள் விண்வெளி எக்சு சிஆர்சு-4 திட்டத்தில் அனுப்பப்பட்டன.[40] கொறிணிகளின் மீது நுண்ணீர்ப்புவிசையின் நீண்ட நாள் விளைவுகளை ஆராய்வது இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

ஏப்ரல் 14 2015 இல் விண்வெளி எக்சு சிஆர்சு-4 திட்டத்தில் 120 சி57பிஎல்/6என்டிஏசி சுண்டெலிகள் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டன. முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைச் சூழலில் நுண்ணீர்ப்புவிசையின் விளைவுகளை மதிப்பீடு செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். ஈர்ப்புவிசை அற்ற நிலையில் விண்வெளி வீரர்களின் உடலில் தன்னிச்சையாக நிகழும் தசை, எலும்பு, மற்றும் தசைநார் பொருண்மை இழப்புகள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Beischer, DE; Fregly, AR (1962). "Animals and man in space. A chronology and annotated bibliography through the year 1960.". US Naval School of Aviation Medicine ONR TR ACR-64 (AD0272581). http://archive.rubicon-foundation.org/9288. பார்த்த நாள்: 14 சூன் 2011. 
  2. UPPER AIR ROCKET SUMMARY V-2 NO. 20. postwarv2.com
  3. "The Beginnings of Research in Space Biology at the Air Force Missile Development Center, 1946–1952". History of Research in Space Biology and Biodynamics. நாசா. Archived from the original on 25 ஜனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 31 January 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. "V-2 Firing Tables". White Sands Missile Range. Archived from the original on 25 ஜனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 31 January 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "Top 10 Animal Astronauts". Toptenz.net.
  6. 6.0 6.1 Asif. A. Siddiqi (2000). Challenge to Apollo: The Soviet Union and the Space Race, 1945–1974 (PDF). NASA. p. 95. Archived from the original (PDF) on 16 செப்டெம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2015.
  7. A brief History of Animals in Space பரணிடப்பட்டது 2015-02-24 at the வந்தவழி இயந்திரம். NASA
  8. Dogs, Space Online Today, 2004
  9. "1960 Chronology". Encyclopedia Astronautica. பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2011.
  10. Swenson Jr., Loyd S.; James M. Grimwood; Charles C. Alexander (1989). "MR-2: Ham Paves the Way". This New Ocean: A History of Project Mercury. நாசா. Archived from the original on 30 ஜனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 31 January 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. Gray, Tara (1998). "Animals in Space". நாசா History Division. Archived from the original on 28 ஜனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 31 January 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. France, Encyclopedia Astronautica, 1997–2008
  13. Roberts, Patrick. "Félicette, the space cat ... and Félix, who didn't exist". பார்க்கப்பட்ட நாள் 7 திசம்பர் 2014.
  14. Grey, Tara (2008). "A Brief History of Animals in Space". நாசா. Archived from the original on 24 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 29 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. Dubbs, Chris and Burgess, Colin (2007) Animals In Space: From Research Rockets to the Space Shuttle. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0387360530.
  16. de León, Pablo. Historia de la Actividad Espacial en la Argentina. Lulu.com. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-557-01782-9.
  17. Manfredi, Alberto N. ARGENTINA Y LA CONQUISTA DEL ESPACIO. reconquistaydefensa.org.ar
  18. Córdoba பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம். unc.edu.ar. 19 December 2009
  19. "Juan, el primer astronauta argentino". unc.edu.ar.
  20. Hernandorena, A.; Marco, R.; Reitz, G. and Facius, R. (1997) SHRIMP-2; Effects of cosmic radiation and space vacuum on the viability and development of the primitive crustacean Artemia franciscana (part 2). esa. int
  21. Rietveld, W. and Alpatov, A.M. (1997) Biological clocks of beetles: reactions of free-running circadian rhythms to spaceflight conditions (BEETLE 2). esa.int
  22. "Timeline: China's space quest". CNN. 6 சனவரி 2004. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2008.
  23. Brown, Irene (30 April 2003). "Shuttle worms found alive". United Press International இம் மூலத்தில் இருந்து 24 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110524214850/http://www.upi.com/Science_News/2003/04/30/Shuttle-worms-found-alive/UPI-21661051746091/. பார்த்த நாள்: 31 January 2008. 
  24. Antczak, John (27 June 2007). "NLV firm launches Genesis II". Las Vegas Review-Journal இம் மூலத்தில் இருந்து 7 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120207130414/http://www.lvrj.com/news/8246747.html. பார்த்த நாள்: 30 June 2007. 
  25. Chen, Maijinn. "Life in a Box". BigelowAerospace.com இம் மூலத்தில் இருந்து 13 மே 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070513040221/http://www.bigelowaerospace.com/life_death/life_in_a_box.php. பார்த்த நாள்: 10 August 2007. 
  26. "'Water Bears' are first animal to survive vacuum of space". newscientist.com இம் மூலத்தில் இருந்து 10 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080910062613/http://space.newscientist.com/article/dn14690-water-bears-are-first-animal-to-survive-vacuum-of-space.html. பார்த்த நாள்: 10 September 2008. 
  27. "'Water Bears' Able To Survive Exposure To Vacuum Of Space". sciencedaily.com இம் மூலத்தில் இருந்து 11 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080911091656/http://www.sciencedaily.com/releases/2008/09/080908135906.htm. பார்த்த நாள்: 10 September 2008. 
  28. ""Hope" the Russian cockroach gives birth to first space babies". ria.ru. 23 October 2007.
  29. "Tehran Times". Tehran Times Political Desk (Tehran Times). 4 February 2010 இம் மூலத்தில் இருந்து 12 பிப்ரவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100212225529/http://www.tehrantimes.com/index_View.asp?code=213671. பார்த்த நாள்: 5 February 2010. 
  30. "'Iran sends mouse, worms, turtles into space". MSNBC இம் மூலத்தில் இருந்து 6 பிப்ரவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100206001136/http://www.msnbc.msn.com/id/35213146/ns/world_news-mideastn_africa/. பார்த்த நாள்: 2 March 2010. 
  31. "Spiders in Space – Live!". NASA.
  32. "Reliability Research Center" (in Persian) இம் மூலத்தில் இருந்து 2014-11-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141115201200/http://www.ari.ac.ir/index.php/news/35-lastest-developments/572-1391-11-30-12-41-51.html. பார்த்த நாள்: 2 December 2014. 
  33. Mohammad Mohsenipur (18 February 2013). "Iran's Space Monkey Full High Quality Video". https://www.youtube.com/watch?v=Xo-7QjxxcDg. பார்த்த நாள்: 2 December 2014. 
  34. Ants Hold Their Own Searching in Space, Discovery News, March 31, 2015
  35. Collective search by ants in microgravity, Stefanie M. Countryman, Martin C. Stumpe, Sam P. Crow, Frederick R. Adler, Michael J. Greene, Merav Vonshak and Deborah M. Gordon, Front. Ecol. Evol., 30 March 2015
  36. "Russia launches geckos and other critters into space". MotherNatureNetwork. 22 July 2014. http://www.mnn.com/earth-matters/space/stories/russia-launches-geckos-and-other-critters-into-space. 
  37. "Russia loses contact with satellite full of geckos". TheGuardian. 24 July 2014. http://www.theguardian.com/world/2014/jul/24/russia-loses-contact-satellite-geckos. 
  38. "Russia Restores Contact with Gecko-Filled Space Capsule". Space.com. 28 July 2014. http://www.space.com/26661-russia-space-gecko-capsule-contact-restored.html. 
  39. "Russia confirms death of five geckos on space sex mission". theguardian.com. 1 September 2014. http://www.theguardian.com/science/2014/sep/01/russia-death-five-geckos-space-sex-mission. 
  40. Bergin, Chris. "SpaceX’s CRS-4 Dragon completes Tuesday arrival at ISS", NASA, 22 September 2014

உசாத்துணை

தொகு
  • McDowell, Jonathan (26 January 2000). "The History of Spaceflight: Nonhuman astronauts". The History of Spaceflight. Archived from the original on 2 பிப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 31 January 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  • L. W. Fraser and E. H. Siegler, High Altitude Research Using the V-2 Rocket, March 1946 – April 1947 (Johns Hopkins University, Bumblebee Series Report No. 8, July 1948), p. 90.
  • Kenneth W. Gatland, Development of the Guided Missile (London and New York, 1952), p. 188
  • Capt. David G. Simons, Use of V-2 Rocket to Convey Primate to Upper Atmosphere (Wright-Patterson Air Force Base, AF Technical Report 5821, May 1949), p. 1.
  • Lloyd Mallan, Men, Rockets, and Space Rats (New York, 1955), pp. 84–93.
  • Henry, James P. (1952). "Animal Studies of the Subgravity State during Rocket Flight". Journal of Aviation Medicine 23 (5): 421–432. பப்மெட்:12990569. 

வெளி இணைப்புகள்

தொகு