ஹே ராம்

கமல்ஹாசன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஹேராம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹே ராம் (Hey Ram) [1][2], 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் தமிழ், இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ஷாருக் கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹே ராம்
இயக்கம்கமல்ஹாசன்
தயாரிப்புகமல்ஹாசன்
கதைகமல்ஹாசன்
திரைக்கதைகமல்ஹாசன்
வசனம்கமல்ஹாசன் (தமிழ்)
மனோகர் ஷியாம் ஜோஷி (இந்தி)
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஷாருக் கான்
ஹேம மாலினி
ராணி முகர்ஜி
கிரீஷ் கர்னாட்
நசிருதீன் ஷா
வசுந்தரா தாஸ்
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுதிரு
படத்தொகுப்புரேணு சலுஜா
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
வெளியீடுபெப்ரவரி 18, 2000
ஓட்டம்202 நிமிடம். (தமிழ்)
199 நிமிடம். (இந்தி)
மொழிதமிழ், ஹிந்தி

நாடகப்படம்

1999ம் ஆண்டு சாகேத் ராம் என்ற 89 வயது மனிதர் சென்னையில் மரணப்படுக்கையில் அமர்ந்திருப்பதுடன் படம் தொடங்குகிறது. வரலாற்று புனைகதைகளை எழுதும் பிரபல நாவலாசிரியரான அவரது பேரன் சாகேத் ராம் ஜூனியர் மற்றும் அவர்களின் குடும்ப மருத்துவர் முனாவர் ஆகியோர் அவரை கவனித்து வருகின்றனர். இளைய ராம் தனது தாத்தாவின் கதைகளைக் கேட்டு எவ்வாறு வளர்ந்தார் என்பதை விளக்குகிறார், மேலும் தனது தாத்தாவின் விசித்திரமான கதைகளில் ஒன்றை தனது அடுத்த நாவலுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். அவரது பேரன் கதையைச் சொல்லும்போது, மரணப்படுக்கையில் இருக்கும் சாகேத் ராம் அதை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.

கதை 1946 ஆம் ஆண்டிற்கு நகர்கிறது, ராம் மற்றும் அவரது பதான்[3]  முஸ்லீம் நண்பர் அம்ஜத் அலி கான் ஆகியோர் அப்போதைய வடமேற்கு இந்தியாவில் சிந்து மாகாணத்தில் உள்ள மொகஞ்சதாரோவில், மார்டிமர் வீலர் என்ற ஆங்கிலேயரின் கீழ் ஒன்றாக பணிபுரியும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாக இருக்கிறார்கள். இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கும் சமயம், திட்டமிடப்பட்டு பிரிக்கும் பாகிஸ்தான் உருவாக்கத்தை ராமரும் அம்ஜத்தும் ஏற்கவில்லை. பல இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லத் திட்டமிட்டாலும், அம்ஜத் தனது தாயகம் என்று நம்புவதால் இந்தியாவில் தங்க முடிவு செய்கிறார்.

இந்து முஸ்லீம் கலவரத்திற்கு பயந்து தொல்லியல் தளம் மூடப்பட்ட பிறகு, ராம் தனது மனைவி அபர்ணாவுடன் இருக்க கல்கத்தாவுக்குத் திரும்புகிறார். வீட்டிற்குச் செல்லும் வழியில், கலவரங்களையும் குழப்பங்களையும் பார்க்கிறார். உணவுக்காக வெளியே செல்லும் ராம், ஒரு அப்பாவி சீக்கிய பெண்ணை ஒரு முஸ்லீம் கும்பலிடம் இருந்து காப்பாற்றுகிறார். அவர் தனது வீட்டிற்குத் திரும்பும்போது, அவரது குடும்ப தையல்காரர் அல்தாஃப் மற்றும் முஸ்லிம்களின் குழுவால் தாக்கப்பட்டு பிணைக்கைதியாக வைக்கப்படுகிறார். அவர்கள் அபர்ணாவை கற்பழிக்கிறார்கள், ஆனால் காவல்துறை கட்டிடத்திற்குள் நுழைவதை அறிந்ததும், அபர்ணாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்புகிறார்கள். தனது துயரமான இழப்பை சமாளிக்க முடியாத ராம், தனது துப்பாக்கியை எடுத்து அவர்களைப் பின்தொடர முயற்சிக்கிறார். ஒரு வழியாக ராம் அவனைக் கண்டுபிடிக்கிறார். கருணை காட்டும்படி கெஞ்சும் அல்தாப்பைக் கொல்கிறார்.

தெருக்களில் வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கியால் சுடும் ராம், இந்துக்களின் குழுவை வழிநடத்தும் தஞ்சை மராத்தியரான ஸ்ரீராம் அபயங்கரை சந்திக்கிறார். அவர்கள் இருவரும் இந்துக்கள், எனவே எதிரிகள் அல்ல என்பதை உணர்ந்த அபயங்கர் ராமருக்கு தனது படையில் சேர ஒரு வாய்ப்பை வழங்குகிறார். இதற்குக் காரணமானவர் வேறு யாருமல்ல, மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் என்று ராமிடம் தெரிவிக்கும் அபயங்கர், காந்தி எதிர்ப்பு குறித்த தடைசெய்யப்பட்ட புத்தகத்தைப் படிக்கக் கொடுக்கிறார்.

1947 ஆம் ஆண்டில், அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்குத் திரும்புகிறார் ராம். அவரது சகோதரர் பாஷ்யம் மற்றும் சகோதரி வசந்தா ஆகியோர் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர். பின்னர் குடும்ப நண்பரான மைதிலியின் மகளை திருமணம் செய்து கொள்கிறார். தனது திருமணம் கிராமம் முழுவதும் கொண்டாடப்படும் போது, ராம் தனது குழந்தை பருவ நண்பர்களான வேதா மற்றும் யாகத்திடம், இந்தியப் பிரிவினையுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் விவாகரத்து நடந்து வருவதால் மகிழ்ச்சியாக இருக்க எந்த காரணமும் இல்லை என்று கூறுகிறார். தனது முதலிரவின் போது, மைதிலியும் அவரது குடும்பத்தைப் போலவே காந்தியின் ஆதரவாளர்கள் என்பதையும், இரத்தம் தோய்ந்த கலவரத்தின் ஆண்டு விழாவில் சில நாட்களுக்குப் பிறகு மகாத்மா காந்தி கல்கத்தாவுக்கு வருகை தருவார் என்பதையும் அவர் அறிந்துகொள்கிறார். ராம் கல்கத்தாவுக்கு தனியாகச் செல்கிறார், அங்கு அவர் தனது பழைய வீட்டிற்குச் சென்று தனது இழந்த வாழ்வை நினைத்து வருந்துகிறார். பின்னர் காந்தி மற்றும் வங்காள முதலமைச்சர் ஹுசைன் ஷாஹீத் சுஹ்ராவர்தி ஆகியோரை எதிர்கொள்ளும் ஒரு கும்பலுடன் இணைகிறார். கலவரத்திற்கு முழுப் பொறுப்பேற்கிறீர்களா என்று கேட்டால், இருவரும் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறார்கள். கும்பல் அவர்களை மன்னிக்கிறது, ஆனால் ராம் மறுக்கிறார்.

ராம் முதலில் விலகியிருந்தாலும், மெல்ல மெல்ல மைதிலி மீது காதல் கொள்கிறார். இருப்பினும், மகாராஷ்டிராவில் தேனிலவின் போது, ராமும் மைதிலியும் மாறுவேடத்தில் வந்த அபயங்கரை சந்திக்கிறார்கள், அபயங்கர் ராமை தனது மகாராஜாவுக்கு (தற்சமயம் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர்) அறிமுகப்படுத்துகிறார். அபயங்கர் மற்றும் மகாராஜாவுடனான வேட்டை பயணத்தின் போது, கலவரத்தில் தனது குடும்பத்தையும் வீட்டையும் இழந்த கல்கத்தாவைச் சேர்ந்த தனது பழைய சிந்தி நண்பரான மனோகர் லால்வானியை சந்திக்கிறார். மீண்டும் இணைகிறார். லால்வானியின் துயரத்தைப் பார்த்த ராம், அபர்ணாவின் கொலையில் இருந்து தான் இன்னும் மீளவில்லை என்பதையும், அதன் மீதான வெறுப்பு மீண்டும் அதிகரிக்கிறது என்பதையும் உணர்கிறார். இந்தியாவைப் பிரிப்பதற்கும் இரண்டு மதங்களுக்கு இடையிலான வன்முறைக்கும் காந்தி மட்டுமே பொறுப்பு என்று அபயங்கரும் மகாராஜாவின் குழுவும் நம்புகிறார்கள். மேலும் அவர் தனது சொந்த இந்து மக்களை விட முஸ்லிம்களை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதனாலும் அவரை ஒரு துரோகி என்று நினைக்கிறார்கள். தீவிர இந்து அடிப்படைவாதிகளாக, அவர்கள் காந்தியைக் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். மேலும் ராமுக்கு அந்த செயலைச் செய்ய பணிக்கிறார்கள். ஒரு குதிரை சவாரி விபத்து காரணமாக நோய்வாய்ப்பட்டிருக்கும் அபயங்கரிடம், தன் தனிப்பட்ட உறவுகளைத் துறந்து காந்தியைக் கொல்லும் தனது வேலையைத் தொடர்வதாக ராம் சத்தியம் செய்கிறார். சத்தியத்தை பெற்றுக்கொள்ளும் அபயங்கர் இறந்து போகிறார்.

நிகழ்காலத்தில், வயதான ராமின் நிலைமை மோசமடைகிறது. அவரது பேரனும் டாக்டர் முனாவரும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள், ஆனால் இந்து-முஸ்லீம் மதக்கலவரங்கள் காரணமாக சென்னையில் குண்டுவெடிப்புகள் நடப்பதால் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரி அவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களை ஒரு குழியில் ஒளித்து வைக்கிறார். அந்த இடத்தில் தான் பல தசாப்தங்களுக்கு முன்பு காந்தியைக் கொல்ல எவ்வாறு சதி செய்தார் என்பதை நினைவு கூர்கிறார் ராம்.

கதை சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கு பின்னோக்கி நகர்கிறது. ராம் சென்னைக்குத் திரும்பியதும் காந்தியைக் கொலை செய்யத் தன்னை தயாராக்கத் துவங்குகிறார். கர்ப்பிணியான மைதிலி தனது கணவர் மேலும் விலகியிருப்பதால் கவலைப்படுகிறார், மேலும் அவரை மகிழவைக்க தனது பெற்றோரையும் மாமியாரையும் அழைக்கிறார். இருப்பினும், ராம் காந்தியைக் கொல்ல முடிவு செய்து, மைதிலியை விட்டு வெளியேறி வாரணாசிக்குச் செல்கிறார், அங்கு அவர் தன்னை சுத்திகரிப்பு செய்துகொண்டு துறவு சடங்கை மேற்கொள்கிறார். பின்னர், அவர் டெல்லிக்குச் சென்று காந்தியைக் கொல்லத் திட்டமிடும் நாதுராம் கோட்சேவை அறியாமல் அதே ஹோட்டலில் தங்குகிறார். கோட்சேவை விசாரிக்க போலீசார் வரும்போது, ராம் தனது துப்பாக்கியை ஹோட்டலில் இருந்து புறப்படும் சோடா லாரியில் மறைத்து வைக்கிறார். பின்னர், ராம் தனது துப்பாக்கியை எடுப்பதற்காக சாந்தினி சவுக்கில் உள்ள சோடா தொழிற்சாலைக்கு செல்கிறார்.

சாந்தினி சவுக்கில், ராம் அம்ஜத்தை சந்திக்கிறார். அம்ஜத் அவரை சோடா தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்கிறார். ஊரடங்கு உத்தரவின் போது இந்துக்களால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அம்ஜத்தின் மனைவி நஃபீசா மற்றும் அவர்களின் குழந்தைகள் உட்பட பல முஸ்லீம் மக்கள் அங்கு மறைந்திருப்பது தெரியவருகிறது. ராம் துப்பாக்கிக்காக அங்கு வந்தது தெரிந்ததும், அவர் தங்களைக் கொல்லப் போகக்கூடும் என்று சந்தேகித்த முஸ்லிம்கள் அவரைத் தாக்குகிறார்கள். அப்போது அங்கு ஏற்பட்ட சண்டையால் அப்பகுதியில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகிறது. இந்து மற்றும் முஸ்லீம் கும்பல்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது, காந்தியைக் கொலை செய்ய ராம் டெல்லிக்கு வந்திருப்பதை தெரிந்துகொள்ளும் அம்ஜத், வேண்டாம் என்று சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். மேலும் தொடரும் அம்ஜத் தனது தந்தை இயற்கையான காரணங்களால் இறக்கவில்லை என்றும், ஒரு இந்து கும்பலால் கொல்லப்பட்டார் என்பதையும் தெரிவிக்கிறார். மேலும் ராமிடம் காந்தி மீதான வெறுப்பைக் கைவிடுமாறு கேட்கிறார்.

அப்போது, அம்ஜத்தை கொல்ல முயற்சிக்கும் ஒரு இந்து கும்பலால் அவர்கள் சுற்றி வளைக்கப்படுகிறார்கள். ராம் அவரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அம்ஜத் ஒரு சுத்தியலால் தலையின் பின்புறத்தில் தாக்கப்படுகிறார். ராம் அவரை மீண்டும் சோடா தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்கிறார். அம்ஜத் சுடப்பட்டாலும், நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் வரும் வரை சோடா தொழிற்சாலையில் மறைந்திருக்கும் முஸ்லிம்களைப் பாதுகாக்க அவர்கள் ஒன்றாக உதவுகிறார்கள். இப்போது மருத்துவமனையில், வன்முறையைத் தொடங்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறும் இந்து நபர் குறித்து அம்ஜத்திடம் ஒரு போலீஸ் அதிகாரி கேள்வி எழுப்புகிறார். அம்ஜத் அந்த மனிதரை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று பொய் சொல்கிறார், எல்லாவற்றையும் மீறி தனது உயிரைக் காப்பாற்றிய அவரது சகோதரர் ராம் மட்டுமே அவருக்குத் தெரியும் என்கிறார். குற்ற உணர்வு கொள்ளும் ராமனின் கையைப் பிடித்துக் கொண்டு இறந்து போகிறார்.

அதைத் தொடர்ந்து, காந்தியைச் சந்திக்க வந்த தனது மாமனார் மற்றும் அவரது நண்பரை ராம் சந்திக்கிறார். ராம் வீட்டை விட்டு சென்றதை அறிந்த மாமாவும், அக்காவும் இறந்து விட்டதாக அறிகிறார். அப்பாவி முஸ்லிம்களைக் காப்பாற்ற ராம் உதவியதைக் கண்டறிந்த காந்தி, ராமை பாகிஸ்தானுக்கு தனது நீண்ட நடைப்பயணத்திற்கு அழைக்கிறார். காந்தியின் போதனைகள் அனைத்தும் அன்பு மற்றும் அகிம்சையைப் பற்றியவை என்பதைக் கண்ட ராம் இறுதியில் காந்தியைப் பற்றிய தனது எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். தலைவனைக் கொலை செய்யக் கூடாது என்று முடிவு செய்து, அவரிடம் உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்க முயற்சிக்கிறார். காந்தி குறுக்கிட்டு, பாகிஸ்தானுக்கு நீண்ட நடைப்பயணத்தின் போது அதைப் பற்றி பேசலாம் என்று ராமிடம் சொல்கிறார். ஆனால், சில நொடிகளில் கோட்சேவால் காந்தி படுகொலை செய்யப்படுகிறார். பின்னர், ராமர் காந்திய கொள்கைகளின்படி வாழ்கிறார்.

நிகழ்காலத்தில், தெருக்களில் நிலைமை இயல்புநிலைக்கு திரும்புகிறது. ராம் தனது பேரனிடம் தனது கடைசி வார்த்தைகளை கிசுகிசுத்து இறுதியில் இறந்துவிடுகிறார். ராமரின் இறுதிச் சடங்கின் போது, காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி வரலாற்று புகைப்படங்கள் நிறைந்த ராமின் தனிப்பட்ட அறைக்கு வருகிறார். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திலிருந்து மறைந்த தாத்தா சேகரித்து வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருந்த காந்தியின் காலணிகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகளை ராமின் பேரன் ஒப்படைக்கிறார்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் புவியரசு ஒரு பத்திரிக்கையில் அளித்த பேட்டியில், "ஹே ராம் படத்தில் எந்ததெந்தக் கதாப்பாத்திரங்கள் எந்தெந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்களே நடித்திருந்தார்கள். காந்தி கதாபாத்திரத்திற்கு சாஹிபை போடலாமென ஆலோசனை கூறினேன். அதன்பின்பே நஷ்ருதீன் ஷா படத்திற்குள் வந்தார். திரைக்கதை ஆங்கிலத்திலேயே எழுதியிருந்தார் கமல். அதனை தமிழில் மொழிபெயர்த்தேன். 'என் படத்தில் சப்டைட்டில் போடமாட்டேன்' என்று கமல் பிடிவாதமாய் இருந்தார். 'ஏன்' என்று கேட்டேன். 'இது தமிழ் படமல்ல. இந்தியப் படமென இருக்கட்டும்' என்று திடமாகக் கூறினார்." என்று தெரிவித்துள்ளார்.[2]

இப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசை அமைத்துள்ளார்.[1]

தமிழ் பாடல்கள்

தொகு
பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
"ராம் ராம்" கமல்ஹாசன், சுருதி ஹாசன் கமல்ஹாசன்
"நீ பார்த்த" ஆஷா போஸ்லே, ஹரிஹரன், (கவிதை வாசித்தவர்: ராணி முகர்ஜி) கமல்ஹாசன், (கவிதை : ஜீவன் ஆனந்ததாஸ்)
"பொல்லாத மதனபானம்" மகாலட்சுமி ஐயர், அனுபமா தேஷ்பாண்டே வாலி, ஜெகதீஷ் கேபுட்கர்
"வாரணம் ஆயிரம் வைஷ்ணவ ஜன தோ" கனபாடிகள், விபாஷர்மா நரசிங் மேத்தா, ஆண்டாள், ஞானக்கூத்தன்
"இசையில் தொடங்குதம்மா" அஜொய் சக்ரவர்த்தி இளையராஜா
"சந்நியாச மந்திரம்" கமல்ஹாசன்
(கடிதம் படித்தவர்கள் : கமல்ஹாசன், ஹேம மாலினி)
"ராமரானாலும் பாபரானாலும்" கமல்ஹாசன், ஜாலிமுகர்ஜி வாலி

இந்தி பாடல்கள்

தொகு

1. "ஏய்! ராம்" -கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன்

2. "ஜான்மோன் கி ஜ்வாலா" (ராணி முகர்ஜே ஓதிய ஜிபானானந்த தாஸின் கவிதை) -அஷா போஸ்லே, ஹரிஹரன்

3. "அச கா மதன் பான் குஸ்லா காசா"- ப்ரீத்தி உத்தம், அனுபமா தேஷ்பாண்டே

4. "சன்யாஸ் மந்திரம்" -கமல் ஹாசன்

5. "சாஹே பண்டிட் ஹோ" -கமல் ஹாசன், ஹரிஹரன், ஜாலி முகர்ஜி

6. "பிரேம் பான்" -பிரீத்தி உத்தம்

7. "வைஷ்ணவ் ஜன தோ" -விபா சர்மா

8. "ஹர் கோய் சம்ஜே" -அஜோய் சக்கரபாணி

விருதுகள்

தொகு

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா (2000)

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

64வது பெங்காள் பிலிம் ஜர்னலிஸ்ட் அசோசியேசன் விருது

ஸ்கிரீன் நாளிதழ் விருது

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "என்னுடைய கோபம்...இளையராஜாவின் கண்ணீர்! - கமல்ஹாசன் சொல்லும் 'ஹேராம்' கதை". ஆனந்த விகடன். 31 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 ""குருதிப்புனல் கதையைப் படமாக்குவதே கமலின் கனவு...!" - கவிஞர் புவியரசு". ஆனந்த விகடன். 16 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "முந்தைய இந்தியாவின் (தற்பொழுது பாகிஸ்தான்) வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் புஷ்த்து மொழி பேசும் இந்து முஸ்லீம் இரு சமயத்தவரை குறிப்பது பதான் (Pathan) என்ற இனச் சொல்".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹே_ராம்&oldid=4016335" இலிருந்து மீள்விக்கப்பட்டது