அமராவதி காட்சிக்கூடம், சென்னை அருங்காட்சியகம், சென்னை
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி அமராவதி பௌத்த தொல்லியல் களம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
அமராவதி காட்சிக்கூடம், சென்னை அருங்காட்சியகம், சென்னை என்பது, ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம், அமராவதி மண்டலம், அமராவதி பௌத்த தொல்லியல் களத்தில் இருந்த சிதைந்த தூபியில் மேற்கொண்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட பண்டைய அமராவதி பௌத்த சுண்ணாம்புக்கல் சிற்பப் பலகைகள் (Buddhist Limestone Sculpture Panels), அல்லது அமராவதி பளிங்குக்கற்கள் (Amaravati Marbles) மற்றும் கல்வெட்டுகளின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தனிச்சிறப்பான காட்சியகமாகும்.[1] அமராவதி சிற்பப் பலகைகள் 1840 களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுக்குக் காரணமான சர் வால்டர் எலியட்டுடன் தொடர்பு கொண்டதன் காரணமாக, இவை 'எலியட் பளிங்குக்கற்கள்’ (Elliot Marbles) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை ஒரு காலத்தில் அமராவதி பௌத்த தூபியை அலங்கரித்தன.[2]
அமராவதி தூபி
தொகுஅமராவதியில் உள்ள பெரிய தூபி என்று பிரபலமாக அறியப்படும் அமராவதி தூபி என்பது சிதைவுற்ற பௌத்த நினைவுச்சின்னம் ஆகும். வெள்ளை பளிங்குக்கல்லால் கட்டப்பட்ட இந்தத் தூபி கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கிபி 250க்கும் இடைப்பட்ட கால கட்டங்களில் கட்டப்பட்டதாகும்.[3][4] பௌத்த இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய தூபிகளில் ஒன்றான அமராவதி தூபி சுமார் 160 அடி (50 மீ) விட்டம் மற்றும் 90 முதல் 100 அடி (சுமார் 30 மீ) உயரம் கொண்டதாகும்.[5] இது மாமன்னர் அசோகரின் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பபடுகிறது. எனினும் இக்கூற்றை வலுவாக்கும் சான்றுகள் எதுவுமில்லை.[6] பௌத்த மதம் பரவத் தொடங்கிய களத்தில் வளர்ந்த மூன்று புகழ்பெற்ற பள்ளிகளுள் அமராவதி பள்ளியும் ஒன்றாகும். இக்காலகட்டத்தில் இந்தியாவில் காந்தாரக் கலைப் பள்ளி, மதுரா கலைப் பள்ளி மற்றும் அமராவதி கலைப் பள்ளி ஆகிய மூன்று பௌத்த கலைப் பள்ளிகள் நிறுவப்பட்டன. இவற்றின் கலைப்பாணிகளுள் பல்வேறு சிறப்பான வேறுபாடுகள் இருந்தன. அமராவதி தூபி அமராவதி கலைப்பள்ளியின் சிற்பக்கலையை அடிப்படையாகக் கொண்டது ஆகும். அமராவதி தூபி சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டன.
வரலாறு
தொகுகாலின் மெக்கென்சீ
தொகுபிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய காலின் மெக்கென்சீ என்ற ஸ்காட்லாந்துகாரர், பதவி உயர்வு பெற்று இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலாகவும் பணியாற்றினார். இவர் பழங்காலப் பொருட்களை சேகரிப்பவராகவும் கீழ்த்திசை புலமையாளராகவும் (Orientalist) திகழ்ந்தார். 1798 ஆம் ஆண்டில் அமராவதியில் தீபலதிம்மா (தெலுங்கு) அல்லது 'விளக்குகளின் மேடு' என்றழைக்கப்படும் ஒரு மண்மேட்டில் செங்கற்களால் கட்டப்பட்ட பெரிய பௌத்தக் கட்டுமானத்தையும் அதனைச் சுற்றி சுண்ணாம்புப் பலகைச் சிற்பங்களால் அமைக்கப்பட்டிருந்த வேலியையும் (Railings) கண்டறிந்தார்.[8] [9]
சிந்தப்பள்ளி ஜமீன்தார்
தொகுசிந்தப்பள்ளி ஜமீன்தார் வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு தனது சிந்தப்பள்ளி பரம்பரை அரண்மையை கைவிட்டு அமராவதி நகரில் புதிய அரண்மனையை உருவாக்கினார். அரண்மனையின் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்காகத் தோண்டியபோது ண்டபோது, அவரது கட்டிடக் தொழிலாளர்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அமராவதி சுண்ணாம்புப் பலகைக்கல் சிற்பத் துண்டுகளைக் கண்டறிந்தனர். இவற்றை தான் கட்டிவரும் புதிய அரண்மனைக்குப் பயன்படுத்திக் கொண்டார். பல பலகைச் சிற்பங்கள் சிதைந்து போனதால் கணிசமான அளவில் சேதத்தையும் ஏற்படுத்தினர்.[10] அமராவதியில் உள்ள அமரலிங்கேஸ்வரர் கோவில் 18 ஆம் நூற்றாண்டில் வெங்கடாத்திரி நாயுடு காலத்தில் கட்டப்பட்டதாகும். அமராவதி என்ற பெயரும் இந்தச் சமயத்திலேயே சூட்டப்பட்டது. அமராவதி என்றால் தெலுங்கில் ‘எப்போதும் வாழ்ந்திடும் நகரம்’ என்று பொருளாகும்.[11][12]
காலின் மெக்கென்சீயின் அகழ்வாய்வுகள்
தொகுஅமராவதியில் புத்த தூபியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, காலின் மெக்கென்சீ 1816 ஆம் ஆண்டில் மீண்டும் அமராவதி புத்த தளத்திற்குச் சென்றார். பௌத்த தலத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளூர் மக்கள் தூபியிலிருந்து செங்கற்களை அகழ்ந்தெடுத்து வீடுகள் கட்டப் பயன்படுத்திக்கொண்டனர். பௌத்த தூபி விரைவாக அழிந்து வருவதை மெக்கன்சி உணர்ந்தார். எனவே தூபியின் கட்டமைப்பு குறித்து ஆவணப்படுத்துவதாற்காக அடிப்படை அகழாய்வுகளை மேற்கொண்டார். இங்கு 85 வரைபடங்கள் மற்றும் திட்டப்படங்கள் கொண்ட தொகுப்பினை உருவாக்கினார். வரைபட ஆவணங்களின் தொகுப்பு மூன்று பிரதிகள் செய்யப்பட்டன. ஒன்று கல்கத்தாவில் உள்ள ஏசியாடிக் சொசைட்டி நூலகத்திலும், மற்றொன்று மெட்ராசிலும், ஒன்று லண்டனில் உள்ள பிரித்தானிய நூலகத்திலும் டெபாசிட் செய்யப்பட்டன. தற்போது இலண்டன் பிரதி மட்டுமே எஞ்சியுள்ளது. அமராவதியிலிருந்து பல பலகைகள் மசூலிப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதை காலின் மெக்கென்சீ அறிந்தார் , மசூலிப்பட்டினத்திலிருந்து சில பலகைகள் கல்கத்தாவில் உள்ள பெங்கால் ஆசியடிக் சொசைட்டியின் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மற்ற சில பலகைகள் மெட்ராஸுக்கும் பின்னர் இங்கிலாந்தில் உள்ள இந்திய அலுவலகத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன.
காலின்சீ வரைந்து கி.பி.1816 ஆம் ஆண்டு தேதியிட்ட பழமையான வரைபடங்கள் மற்றும் திட்டப் படங்கள் இவ்வூரை (தூபி கண்டறியப்பட்ட தொல்லியல் களத்தை) தீபலதிம்மா (தெலுங்கு) அல்லது 'விளக்குகளின் மேடு' என்று குறிப்பிடுகின்றன.[13] பண்டைய கல்வெட்டுகளில் இது "தூபி" என்று அழைக்கப்படவில்லை. மாறாக "மகாசைத்யம்" என்றும் "மாபெரும் சரணாலயம்" (Great Sanctuary) என்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.[14]
சென்னை சென்ற அமராவதி சிற்பங்கள்
தொகு1817 முதல் 1819 வரை மசூலிப்பட்டிணத்தில் கலெக்டரின் தலைமை உதவியாளராக இருந்த பிரான்சிஸ் டபிள்யூ. ராபர்ட்சன் வழிகாட்டுதலின் கீழ் சில அமராவதி சிற்பப் பலகைகள் மசூலிப்பட்டிணத்தின் மத்திய சந்தைப் பகுதியை அழகுபடுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பப்பட்டன. 1835 ஆம் ஆண்டு இந்த இடத்தில் இருந்த பலகைகளை கண்ட மெட்ராஸ் கவர்னர் சர் ஃபிரடெரிக் ஆடம், அவற்றை சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தார். அவை 1859 வரை மெட்ராஸில் இருந்தன, பின்னர் அவை மாட்சிமை பொருந்திய இந்திய அரசு செயலருக்கு (Her Majesty’s Secretary of State for India) அனுப்பப்பட்டு இங்கிலாந்தில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.[9]
சர் வால்டர் எலியட்டின் அகழ்வாய்வுகள்
தொகுஸ்காட்லாந்து நாட்டின் கீழ்த்திசை மொழிப்புலமையாளரும், மொழியியலாளரும், இயற்கை அறிவியலாளருமான சர் வால்டர் எலியட், (Walter Elliot) என்பவர் கிபி 1845ல் குண்டூரில் ஆணையராக இருந்த போது, அமராவதி தொல்லியல் களத்தின் மேற்குப் பகுதியில் விரிவாக அகழாய்வு செய்தார். அகழாய்வில் கண்டறியப்பட்ட அமராவதி சிற்பப் பலகைகளை மசூலிப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து மெட்ராசுக்கு அனுப்பினார். இவை புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களைப் பயிற்றுக்குவிக்கும் கல்லூரி (தற்போதைய மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி வளாகத்தில் அமைந்திருந்தது) வளாகத்திலிருந்த புல்வெளியில் சிறிது காலம் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அங்கிருந்து எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தின் முன்னுள்ள திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தன.[9]
எட்வார்ட் பால்ஃபர்: கண்காணிப்பாளர், சென்னை அருங்காட்சியகம்
தொகுஇந்நிலையில் 1853 ஆம் ஆண்டில், சென்னை மைய அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய எட்வார்ட் பால்ஃபர் லண்டனில் உள்ள உள்துறை அதிகாரிகளுக்கு எழுதிய குறிப்பில் அமராவதிச் சிற்பப் பலகைகள் வெயில் மற்றும் ஈரப்பதம் போன்ற தட்பவெப்பநிலை சார்ந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி உள்ளது என்றும், இவை இங்கிலாந்துக்குக் கொண்டு செல்வதற்குத் தகுதியானவை என்று பரிந்துரைத்திருந்தார். முருகேச முதலியார் என்ற உள்ளூர் கலைஞரின் உதவியுடன் அமராவதி சிற்பப்பலகைகள் வரைபடங்களாகத் தீட்டப்பட்டன. புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. வரைபடம் மற்றும் புகைப்படங்கள் இலண்டனுக்கு அனுப்பப்பட்டன. இந்த வரைபடங்களும் புகைப்படங்களும் தற்போது பிரித்தானிய நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.[9]
பின்னர் வந்த அமராவதி தொகுப்புகள் டாக்டர்.பிடியின் (Dr.Bidie) காலத்தில் பாதுகாக்கப்பட்டு அவை சென்னை அருங்காட்சியகத்தில் தற்போது உள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. 1884-85 ஆம் ஆண்டில் சென்னை அருங்காட்சியகத்தில் இந்த அமராவதி பளிங்குச் சிற்பங்களை காட்சிப் படுத்துவதற்காக டாக்டர்.பிடி, இந்திய அரசின் தொல்லியல் துறையைச் சேர்ந்த பர்கீஸ் உடன் மோத வேண்டியிருந்தது.[9]
அமராவதி சிற்பக் காட்சியகங்கள்
தொகுஅமராவதி பௌத்த தொல்லியல் களத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட பெரும் அளவிலான அமராவதி பௌத்த சுண்ணாம்புக்கல் சிற்பப் பலகைகள் பல அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் மூன்று மிகப்பெரிய தொகுப்புகள் அரசாங்க அருங்காட்சியகம், சென்னை, தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி மற்றும் லண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள அமராவதி பளிங்குத் தொகுப்பு ஆகிய காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அமராவதி சிற்பங்களின் குறிப்பிடத்தக்க தொகுப்புகள் பின்வரும் அருகாட்சியாகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன:[15]
- பிரித்தானிய அருங்காட்சியகம் [16][17]
- குய்மெட் அருங்காட்சியகம் [18]
- தேசிய அருங்காட்சியகம், புது டில்லி[19]
- அரசு அருங்காட்சியகம், சென்னை[20]
- அரசு அருங்காட்சியகம், ஐதராபாத்
- சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம், மும்பை [21]
- இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா மற்றும் தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி
அமராவதி காட்சியகம், அரசு அருங்காட்சியகம், சென்னை
தொகுசிற்ப வகைகள்
தொகுஅப்போது சென்னை அருங்காட்சியகத்தின் காப்பாளராகப் பணியாற்றிய திரு.சி.சிவராமமூர்த்தி என்பவர் எழுதிய சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அமராவதி சிற்பங்கள் (Amaravati Sculptures in the Chennai Government Museum) என்னும் வழிகாட்டி நூலை 1942 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியகம் வெளியிட்டது. இந்த வழிகாட்டி நூலில் சென்னை அருங்காட்சிகத்தில் காட்சிப் படுத்தப்பட்ட அமராவதி சிற்பம் ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து, விரிவாக விவரித்து எழுதித் தொகுத்துள்ளார். பௌத்த கலைப்பொக்கிஷமாகக் கருதப்படும் அமராவதி சிற்பத் தொகுப்பு சென்னை அருங்காட்சியகத்தின் பெருமைமிக்க சேகரிப்புகளாகும்.
சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அமராவதி சிற்பங்கள்: 1. தனிச்சிற்பங்கள் (Freestanding Sculptures), 2. சிற்பப் பலகைகள் (Rectangular and Drum Panels) , 3. தூண்கள் (Railing Pillars) 4. 'தோரணங்கள்' அல்லது நுழைவாயில்கள், 5. மேல் மதில் முகடு (Copings) மற்றும் சிலுவைச் சட்டங்கள் (Cross Bar), 6. காவல் சிங்கங்கள் (Guardian Lions) 4. சிற்பப் பதக்கங்கள் (Medallions) ஆகிய வகைகளாகப் பிரித்து அறியலாம்.
சிற்பத்தின் கருப்பொருள்
தொகுஇவற்றுள் பல சிற்பங்கள், அழகணிகளாகவும் (Decorative Sculptures) விளக்க நிகழ்வுகளாகவும் (Narrative Events) சித்தரிக்கப்பட்டுள்ளன. விளக்க நிகழ்வு சிற்பங்களில் புத்தரின் வரலாறு, புராணம் மற்றும் கதைக் காட்சிகளாக, சித்தார்த்த கௌதமரின் வாழ்க்கை நிகழ்வுகள், புத்தர் பரிநிர்வாணம் (Enlightenment of Buddha), புத்தர் அறவுரைகள் (Buddha’s Sermons), மாறனின் தாக்குதல், புத்த ஜாதகக் கதைகள், புத்தரின் மரணம், போன்றவை பல உருவகப்படுத்தப்பட்ட புடைப்புச் சிற்பங்களாக (Figuritive Bas-relief sculpture) செதுக்கப்பட்டுள்ளன.
தேரவாத பௌத்தம் (முதியோர்களின் பள்ளி) (Theravada Buddhism (The School of the Elders) சிறந்து விளங்கிய காலத்தில், புத்தரின் குறியீடுகளாக (Buddhist Aniconism) சித்தரிக்கப்பட்ட பாதச் சுவடுகள், தர்மசக்கரம், வஜ்ரம், மணி, மரம், குடை போன்ற குறியீட்டுச் சிற்பங்களும், மகாயான பௌத்தம் (பெரிய வாகனம்) தழைத்தோங்கிய காலத்தில் நிலவிய புத்தரை மனித உருவில் வணங்கும் வழிபாட்டு முறையின்படி கௌதம புத்தர், பிற புத்தர்கள், போதிசத்துவர்கள் ("அறிவொளியின் சாராம்சம்"), இயக்கர், இயக்கிகள் ஆகியோரின் சிற்பங்களும் அமராவதி கட்சிக்கூடத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
2008 ஆம் ஆண்டில், சென்னையில் உள்ள அமராவதி கலைக்கூடத்தின் 100 ஆண்டுகள் பழமையான காட்சியகத்தின் சுவர்களில் கசிவு ஏற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து இக்கலைக்கூடம் புதுப்பிக்கப்பட்டு அமராவதி பளிங்கு சிற்பங்கள் மாற்றியமைக்கப்பட்டன.[22]
மேற்கோள்கள்
தொகு- ↑ "PDF List from the BASAS Project" (PDF). Archived from the original (PDF) on 2022-08-30. பார்க்கப்பட்ட நாள் 2022-10-05.
- ↑ Out of Amatavati Roy, Amit IndiaToday December 1992
- ↑ Archaeological Museum, Amaravati - Archaeological Survey of India
- ↑ India: Amaravati - The Asahi Shimbun Gallery 300 BC – AD 300 The British Museum
- ↑ Amarāvatī sculpture Brittanica
- ↑ Akira Shimada, Early Buddhist Architecture in Context The Great Stūpa at Amarāvatī (Ca. 300 BCE-300 CE). Leiden: Brill, 2013. எஆசு:10.1163/9789004233263
- ↑ 7.0 7.1 Amaravati: The Art of an early Buddhist Monument in context. PdF
- ↑ Colin Mackenzie and the Stupa at Amaravati. Howes, Jennifer. South Asian Studies. 18 (1); 2002.; 53-65 doi:10.1080/02666030.2002.9628607. S2CID 194108928.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 Amaravati sculptures - a colonial voyage K.S.S. Seshan. The Hindu April 7, 2016
- ↑ Indian Monuments. N. S. Ramaswami Abhinav Publications. 1971 isbn=978-0-89684-091-1 பக். 115–116
- ↑ அமராவதி... ஒரு ஜீவ நகரம்! முத்தாரம்
- ↑ South Indian transliteration differs from Hunterian transliteration, thus Amarāvatī can appear as Amarāvathī, Ratana as Rathana, etc.
- ↑ For link to maps and plans at the British Library: The Amaravati Album
- ↑ Pia Brancaccio, The Buddhist Caves at Aurangabad: Transformations in Art and Religion (Leiden: Brill, 2011), p. 47.
- ↑ A fuller list, from BASAS
- ↑ See: http://www.basas.org.uk/site/index.php/our_work/page/689aaf33-c326-4090-a60d-dc6950adffa5/ பரணிடப்பட்டது 2016-10-23 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "British Museum - Room 33a: Amaravati". British Museum.
- ↑ http://www.guimet.fr/fr/documentation/glossaire?word=Amarâvatî
- ↑ "National Museum, New Delhi". Archived from the original on 2018-03-24. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
- ↑ "Government Museum Chennai".
- ↑ Virtual Museum of Images and Sound - VMIS. "Collections-Virtual Museum of Images and Sounds".
- ↑ Amaravati’s Tamil Nadu connection R. Sujatha October 27, 2015