தி. க. சண்முகம்
திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் (26.4.1912 - 15.2.1973) 1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர்.[1] நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர்.[2] ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். இவரது தம்பி தி. க. பகவதி புகழ்பெற்ற நாடக நடிகரும், திரைப்பட நடிகரும் ஆவார்.
தி. க. சண்முகம் | |
---|---|
ஔவை | |
பிறப்பு | திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் ஏப்ரல் 26, 1912 திருவனந்தபுரம் |
இறப்பு | பெப்ரவரி 15, 1973 சென்னை | (அகவை 60)
தொழில் | நாடக நடிகர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இரண்டாம் வகுப்பு |
துணைவர் | சீதாலட்சுமி |
பிள்ளைகள் | மகன்: தி. க. ச. கலைவாணன் |
பிறப்பும் கல்வியும்
தொகுசங்கரதாசு சுவாமிகளின் மாணவரும் நாடக நடிகருமான டி. எசு. கண்ணுசாமி பிள்ளை என்பவருக்கும் சீதையம்மாள் என்பவருக்கும் மூன்றாவது மகனாக திருவனந்தபுரத்தை அடுத்த புத்தன்சந்தையில் 1912 ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தவர் தி. க. சண்முகம்.[3] தி. க. சங்கரன் (1904 – 1948.03.31), தி.க. முத்துச்சாமி ஆகிய இருவரும் இவருக்கு அண்ணன்மார் ஆவர். தி. க. பகவதி (1917 - ) இவருக்குத் தம்பி ஆவார். சுப்பம்மாள் (1920 - ), காமாட்சி (1921 - ) ஆகியோர் இவருக்குத் தங்கைகள் ஆவர். இவர்கள் நால்வரை தமிழ்நாடக உலகம் டி. கே. எசு சகோதரர்கள் என அழைத்தது.
இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நாடகக்கலையின் தலைமையிடமாக மதுரை திகழ்ந்தது. எனவே நாடக நடிகரான கண்ணுசாமிபிள்ளையின் குடும்பம் மதுரை சோற்றுக்கடைத் தெருவில் குடியிருந்தது. எனவே தி. க. சண்முகம் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பலம் என்னும் ஆரியவைசிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தனர்.[1]
நாடக வாழ்க்கை
தொகுதத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில்
தொகுசங்கரதாசு சுவாமிகள் 1918-ஆம் ஆண்டில் மதுரையில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக நிறுவனத்தை உருவாக்கினார். அந்நிறுவனத்தில் 1918-ஆம் ஆண்டில் தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி, தி. க. சண்முகம் ஆகிய மூவரும் அவர்தம் தந்தை கண்ணுசாமிபிள்ளையால் இளம் நடிகர்களாக இணைக்கப்பட்டனர். 1922-ஆம் ஆண்டு ஆகத்து 3-ஆம் நாள் இரவு அக்குழுவிலிருந்து அவர்கள் மூவரும் அவர்தம் தந்தையாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.[4]
பால மனோகர சபையில்
தொகுதந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட தி. க. சண்முகம் அவர் உடன்பிறந்தவர்களும் தெ. பொ. கிருட்டினசாமி பாவலர் நடத்திய பால மனோகர சபை என்னும் நாடகக் குழுவில் 1922 ஆகத்து 4-ஆம் நாள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் விலகியதால் சங்கரதாசு சுவாமிகள் மனம்நொந்து இருப்பதாக அறிந்து, அக்டோபர் 15-ஆம் நாள் பால மனோகர சபையிலிருந்து தி.க.ச. உடன்பிறவியர் மூவரும் அவர்தம் தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டனர்.[5]
மீண்டும் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில்
தொகு1922 அக்டோபர் 16-ஆம் நாள் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் மீண்டும் தி.க.ச. உடன்பிறவியர் மூவரும் அவர்தம் தந்தையால் இணைக்கப்பட்டார்.[6] 1924-ஆம் ஆண்டில் தி.க.பகவதியும் அக்குழுவில் இளம் நடிகராக இணைக்கப்பட்டார். இதற்கிடையில் தி.க.ச. உடன்பிறவியரின் தந்தை கண்ணுசாமி பிள்ளை இறந்ததால், தம் சிற்றப்பா, மாமா ஆகிய இருவரின் பாதுகாப்பில் வளர்ந்தனர். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் முதலாளிகளில் ஒருவரான சுப்பிரமணியபிள்ளையிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக 1925 பிப்ரவரி 15-ஆம் நாள் அந்நாடகக்குழுவிலிருந்து தி.க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தோரும் அவர்தம் பாதுகாவலர்களால் விலக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.[7]
ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா தொடக்கம்
தொகுபின்னர் தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தவர்களும் தம் சிற்றப்பாவை உரிமையாளரென அறிவித்து 1925 மார்ச்சு 31-ஆம் நாள், திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா என்னும் நாடகக் குழுவை உருவாக்கினர். அக்குழுவின் முதல்நாடகமாக “கோவலன்” என்னும் நாடகம் அந்நாளிலேயே அரங்கேற்றப்பட்டது.[8] அப்பொழுது எம். கந்தசாமி முதலியார் நடிப்பாசிரியராக இக்குழுவில் பணியேற்றார். அவரிடம் தி.க. சண்முகம் நாடக நுட்பங்களைப் பயின்றார்.
தேச பக்தி
தொகுவெ. சாமிநாத சர்மா எழுதிய இந்திய சுதந்திர போராட்ட நாடகம் பாணபுரத்து வீரன் இதைப் பிரித்தானிய அரசு தடை செய்யவே தி.க. சண்முகம் அவரது நாடகக் குழு "பாணபுரத்து வீரன் நாடகத்தைத் தேச பக்தி எனப் பெயர் சூட்டி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் போராட்டம் நடந்தது போலப் பாணபுரத்துக்கும், ஈசானபுரத்துக்கும் இடையே நடக்கும் விடுதலைப்போரை அடிப்படையாக் கொண்டது- தேச பக்தி நாடகம்" [9] வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரன் நாடகத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து, இடை இடையே சில புதிய காட்சிகளையும், உணர்ச்சி மிகுந்த பாடல்கள், வசனங்களையும் எழுதிக் கொடுத்தது மதுரகவி பாஸ்கர தாஸ் அவர்கள் எனத் தனது வாழ்க்கைக் குறிப்பில் கூறியுள்ளார்.[10]
பாரதியின் பாடல்
தொகுபிரித்தானிய அரசு தடை செய்த "பாணபுரத்து வீரன் நாடகத்தை தேச பக்தி என பெயர் சூட்டி நாடகத்தை அரங்கேற்றியது மட்டுமல்லாது மகாகவி பாரதியின் "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்", "விடுதலை விடுதலை", ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே போன்ற தடை செய்யப்பட்ட தேச பக்திப் பாடல்களைத் தேச பக்தி நாடகத்தில் முதன்முதலாக பாடப்பட்டது.[10]
முதற் கலைப்பு
தொகு1931-ஆம் ஆண்டில் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியதால், நாடகங்களுக்கான மதிப்புக் குறைந்தது. போதுமான வருவாய் கிடைக்கவில்லை. எனவே தி.க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தோரும் 1932-ஆம் ஆண்டில் தம் நாடகக்குழுவை ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் குத்தகைக்கு கோல்டன் கோவிந்தசாமி நாயுடு என்பவரிடம் ஒப்படைத்தனர்.[11] ஆனால் அவ்வொப்பந்தம் பதினோராம் மாதத்திலேயே முறிந்தது. தி.க.ச. உடன்பிறப்புகள் அந்நாடகக் குழுவைத் தற்காலிகமாகச் சில காலத்திற்குக் கலைத்தனர்.[12]
தேவி பால சண்முகானந்த சபையில்
தொகுபின்னர்க் கொரடாச்சேரியைச் சேர்ந்த தர்மராஜபிள்ளை என்பவரின் தேவி பால சண்முகானந்த சபையில் தி. க. ச.வும் அவர் உடன்பிறந்தவர்களுடன் சென்று இணைந்தனர்.[13] சிறிது நாளில் தர்மராஜபிள்ளை சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனதால் அந்த நாடகக் குழுவை இவர்களே பொறுப்பேற்றுக் கலைத்தனர்.[14]
சிறப்பு நாடகத்தில்
தொகுசிறிதுகாலம் நாடக வாழ்விலிருந்து ஒதுங்கி இருக்கலாம் எனத் தி. க. ச. உடன்பிறந்தோர் நால்வரும் நாகர்கோவிலுக்குச் சென்று உறவினர்களுடன் வாழத் தொடங்கினர். அப்பொழுது அல்லி அர்ஜூனா, சதாரம் ஆகிய இரண்டு சிறப்பு நாடகங்களில் (Special Drama) தி.க. சண்முகம் நடித்தார். ஆனால் நாடக முறை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அதிலிருந்து விலகினார்.[15]
இவ்வாறு இவர் 74 நாடகங்களில் 109 கதைமாந்தராக நடித்தார். 1935-ஆம் ஆண்டில் மேனகா என்னும் திரைப்படத்தின் வழியாகத் திரையுலகில் நுழைந்து கப்பலோட்டிய தமிழன் என்னும் படம் வரை பல்வேறு படங்களில் நடித்தார்.
இவர் தமிழகத்திற்கு வெளியே பம்பாய். தில்லி, கல்கத்தா, நாகபுரி, பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கும் இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் தன் குழுவினருடன் சென்று நாடகங்கள் நடத்தினார்.
ஔவையார் நாடகத்தில் ஔவையாராக வேடமேற்றுச் சிறப்பாக நடித்ததால் ஔவை சண்முகம் என அழைக்கப்பட்டார்.
திரைப்படத் துறை பங்களிப்புகள்
தொகுநடித்த திரைப்படங்கள்
தொகு- மேனகா (1935)
- பாலாமணி (1937)
- பூலோக ரம்பை (1940)
- குமாஸ்தாவின் பெண் (1941)
- பில்ஹணன் (1948)
- ஓர் இரவு (1951)
- இன்ஸ்பெக்டர் (1953)
- மனிதன் (1953)
- ரத்த பாசம் (1954)
- வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
- கடவுளின் குழந்தை (1960)
- கப்பலோட்டிய தமிழன் (1961)
பெற்ற பட்டங்கள்
தொகுதி. க . சண்முகம் தனது நாடகப்பணியால் பின்வரும் பட்டங்களைப் பெற்றார்.
ஆண்டு | பட்டம் / விருது | வழங்கியவர் |
1941 | முத்தமிழ் வித்வ ரத்தினம் | மதுரைத் தமிழ்ச் சங்கம்[10] |
1944 | ஔவை | ஆர். கே. சண்முகம் செட்டியார்[10] |
நாடகவேந்தர் | ||
நடிகர்கோ | ||
கலைமாமணி | தமிழ் இயல் இசை நாடக மன்றம் | |
1962 | சங்கீத நாடக அகாதமி விருது[16] | சங்கீத நாடக அகாதமி |
1972 | நாடகத் தொல்காப்பியர் | மு. கருணாநிதி |
1971 | பத்மசிறீ | இந்தியக் குடியரசு [17] |
1953 ஆம் ஆண்டில் மனிதன் என்னும் திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த தமிழ்ப்பட நடிகர் [10] என்னும் விருதை வழங்கியது.
1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கமும் 1962 ஆம் ஆண்டு புதுதில்லி சங்கீத நாடக அகாதமியும் சிறந்த நாடக நடிகர் என்பதற்கான விருதுகளை வழங்கின.[18]
பங்கேற்ற அமைப்புகள்
தொகுதி. க. சண்முகம் பின்வரும் அமைப்புகளில் முதன்மையான பொறுப்புகளை வகித்தார்:[3]
- தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தென்னிந்திய நடிகர் சங்கம்
- தமிழ்நாடு சங்கீத நாடக அகாடமி
- தமிழ்க் கலை மன்றம்
- தமிழ் வரலாற்றுக் கழகம்
- தமிழ் வட்டம் சமாதானக் குழு
- சென்னை நாட்டியச் சங்கம் (துணைத் தலைவர்)
- நடராஜா கல்விக் கழகம்
- சங்கரதாச சுவாமிகள் நினைவு மன்றம் (தலைவர்)
- இளங்கோ கலைக் கழகம் (தலைவர்)
- பாரதியார் சங்கம் (பொதுச் செயலாளர்)
- தமிழரசுக் கழகம் (பொதுச் செயலாளர்)
எழுதிய நூல்கள்
தொகுதி. க. சண்முகம் அறிவுச்சுடர் என்னும் கையெழுத்து இதழைத் தன் நாடகக் குழுவினருக்காக வெளியிட்டார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் திங்கள் இதழான நடிகன் குரல் ஏட்டின் பொறுப்பாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.[18] பின்வரும் நூல்களை எழுதினார்:
- தமிழ் நாடகத் தலைமையாசிரியர் (தவத்திரு சங்கரதாசு சுவாமி வரலாறு) 1955
- நாடகக்கலை (சொற்பொழிவுகள்) 1959
- நெஞ்சு மறக்குதில்லையே (நாடகமேடை அனுபவங்கள்)
- எனது நாடக வாழ்க்கை (தன்வரலாறு) 1972
- நாடகச் சிந்தனைகள் (கட்டுரைகளும் எழுத்துரைகளும்) 1978
தொகுத்துப் பதிப்பித்தவை
தொகுதி. க. சண்முகம் தன் குருநாதர் சங்கரதாசு சுவாமிகளின் பாடல்களைத் தொகுத்து சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு என்னும் நூலையும் சங்கரதாசு சுவாமிகளின் நூற்றாண்டு விழா 1967-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபொழுது, சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு மலர் ஒன்றையும் தொகுத்துப் பதிப்பித்தார்.
மாநாட்டுக் கட்டுரை
தொகுஉலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் சார்பில் 1966 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் மாநட்டில் கலந்துகொண்டு தமிழ் நாடக வரலாறு என்னும் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார்.[17]
சட்டமன்ற மேலவை உறுப்பினர்
தொகுதமிழக சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக 1968 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.[17]
மறைவு
தொகுதி. க. சண்முகம் 1973 பிப்ரவரி 15 ஆம் நாள் சென்னையில் காலமானார்.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக். 7
- ↑ கருணாநிதி மு. 14.4.1972ஆம் நாள் தி. க. சண்முகத்தின் எனது நாடக வாழ்க்கை என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரை
- ↑ 3.0 3.1 சண்முகம் ஔவை தி. க., நாடகக்கலை, ஔவை பதிப்பகம் சென்னை 86, நா. பதிப்பு 1981, பின்னட்டை
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக். 35
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக். 106 - 117
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.116
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.154
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.157
- ↑ நாடகச் சிந்தனைகள் சண்முகம் தி.க.வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.57
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.207
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.255
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.268
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.269
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.273
- ↑ சண்முகம் தி.க. எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம் சென்னை, ஏப்ரல் 1972, பக்.276
- ↑ "Akademi Awards". Archived from the original on 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2014-09-03.
- ↑ 17.0 17.1 17.2 17.3 சண்முகம் தி. க. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், பூவழகி பதிப்பகம் சென்னை, இ.பதி.2006, பக்.7
- ↑ 18.0 18.1 சண்முகம் தி. க. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், பூவழகி பதிப்பகம் சென்னை, இ.பதி.2006, பக்.6
வெளி இணைப்புகள்
தொகுhttp://thamizhagam.net/nationalized%20books/Avvai%20TK%20Sanmugam.html பரணிடப்பட்டது 2015-05-16 at the வந்தவழி இயந்திரம் தி. க. சண்முகம் நூல்கள் மிண் நூலகத்தில்