ஆர். கே. சண்முகம்

(ஆர். கே. சண்முகம் செட்டியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் (அக்டோபர் 17, 1892மே 5, 1953) இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க நாடாளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர்.

ஆர். கே. சண்முகம் செட்டியார்
இந்தியாவின் நிதியமைச்சர்
பதவியில்
1947–1949
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்லியாகத் அலி கான்
பின்னவர்ஜான் மத்தாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1892-10-17)அக்டோபர் 17, 1892
கோயம்புத்தூர்
இறப்புமே 5, 1953(1953-05-05) (அகவை 60)
கோயம்புத்தூர்
அரசியல் கட்சிசுயாட்சிக் கட்சி,
நீதிக்கட்சி
முன்னாள் கல்லூரிசென்னை கிறித்துவக் கல்லூரி,
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
தொழில்வழக்கறிஞர்

இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் முதல் தமிழ் சபாநாயகர் தொகு

1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணிய செட்டிக் குடும்பத்தில் ஆர். கந்தசாமி செட்டியார் - ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சண்முகனாருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள்.

கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். மிகக் குறுகிய காலமே வழக்குரைஞராகப் பணியாற்றி, பின்னர் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.

பொதுப்பணி தொகு

ஆர்.கே.எஸ்., பொது வாழ்வில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். கோவை நகர் மன்ற உறுப்பினராகவும், நகர் மன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் (அன்றைய நாடாளுமன்றம்) உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றினார்.

சர் ஆர்.கே.சண்முகம் செட்டி 1920-இல் அன்னி பெசன்ட் அம்மையாருடன் சில மாதங்கள் இங்கிலாந்து சென்று பல பொதுக் கூட்டங்களில் உரையாற்றி, இந்திய சுயாட்சிக்காக தமது கருத்துகளை வெளியிட்டார்.

கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார் தொகு

1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்மை மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப்படுத்தப்பட்டது.

1929 இல் பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1923 முதல் 1929 வரை மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். அந்த அவையின் துணைத்தலைவராக 1931-33 ஆண்டுகளிலும், தலைவராக 1933-34களிலும் பதவியில் இருந்தார். 1938 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க (League of Nations) கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1945 ஆம் ஆண்டு மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார்.

கொறடாவாக ஆர்.கே.சண்முகம் தொகு

நாடாளுமன்றத்தின் சுயராஜ்யக் கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக நேருவும், செயலாளராக சித்தரஞ்சன் தாசும், கொறடாவாக ஆர்.கே.சண்முகனாரும் பணியாற்றிச் சிறப்பித்தனர்.

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று தொகு

இளம் வயதிலேயே பல மொழிகளைக் கற்றறிந்தார். கோவை மாநகரில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்த இவரது ஹவார்டன் எனும் இவரது இல்லத்திலிருந்த நூலகம் இந்தியாவிலுள்ள வீட்டு நூலகங்களில் மிகப்பெரிய வீட்டு நூலகங்களில் ஒன்று.

கல்விப்பணி

கோவை அவினாசி சாலையில் 1953ஆம் ஆண்டு தனது தாயார் சீரங்கம்மாள் நினைவாக ஆர்.கே. சீரங்கம்மாள் கல்வி நிலையம் என்று 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை போதிக்கும் கல்வி நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். ஆனால், பள்ளி துவக்க விழாவிற்கும் அதன் செயல்பாட்டினைக் காணும் நிலையில் 1953 மே 5ஆம் நாள் இயற்கையெய்தினார்.

இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் தொகு

இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர்.

அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். அவர் நீதிக்கட்சியில் சிலகாலம் உறுப்பினராக இருந்தார். பின்னர் சுதந்திராக் கட்சியின் முதன்மை கொறடாவாகவும் இருந்தார்.

இந்திய விடுதலையின்போது "உலக நிகழ்வுகளின் முதன்மைக் காரணத்தாலும், இதுவரை ஆட்சி புரிந்தவர்களின் பெருந்தன்மையான விட்டுக்கொடுத்தலினாலும் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் " என்று கூறியுள்ளார்.

1941-இல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல.

மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் தொகு

1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். உலகப் போரின் பின்னர் பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்த அந்தக் கால கட்டத்தில் உலக வரலாற்றில் இந்தியப் பிரிவினையின் காரணத்தால் நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரங்கள், இனப் படுகொலைகள், பலகோடி மக்களின் இடமாற்றம், இவற்றால் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளித்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்தும் பெரும்பணி ஆர்.கே.எஸ். மீது சுமத்தப்பட்டது.

வாதத் திறமையால் மீட்டெடுத்தார் தொகு

விடுதலைக்குப் பின் பிரித்தானிய இந்தியாவிடம் மாட்டிக்கிடந்த பல நூறு கோடி ரூபாய் அந்நியச் செலாவணியையும், தங்க இருப்பையும் தமது வாதத் திறமையால் மீட்டெடுத்தார். இருப்பினும் இவரது அமைச்சின் அதிகாரி ஒருவரின் விதிமீறல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை துறந்தார். இவரையடுத்துப் பதவியேற்ற ஜான் மத்தாய் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அவர் தவறு செய்யவில்லை; தவறிழைக்கப்பட்டார் ("he is more sinned against than sinning.") எனக் கூறினார்.

1952 ஆம் ஆண்டு சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்ப் புலமை தொகு

சண்முகனார் ஆங்கில மொழித் திறமையுடன் தமிழ் மொழிப் புலமையிலும் தேர்ந்து விளங்கினார். இளம் வயதில் தாய்மொழி தமிழைப் புறக்கணித்து, ஆங்கில மொழி மோகம் கொண்டு விளங்கிய சண்முகனார், தனது வாழ்வின் பிற்காலத்தில் தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கினார்.

சிலப்பதிகாரத்திற்கு எளிய தமிழில் உரை எழுதினார் தொகு

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய தமிழில் உரை எழுதி வெளியிட்டார்.

தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார் தொகு

தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார். தேவாரப் பண் ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் நடத்தி, தேவாரப் பண்ணிசை இராகங்களை முறைப்படுத்தினார்.

குற்றாலக் குறவஞ்சிக்கு உரை எழுதினார் தொகு

தமது ஊரான கோவை மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கீழை சிதம்பரம் என்றழைக்கப்படும் திருப்பேரூரில் பேரூராதீனத்தில் அருள்மிகு சாந்தலிங்க அடிகளார் மடாலயத்தில் தமிழ்க்கல்லூரி ஒன்று  உருவாகக் காரணமாக அமைந்தார். குற்றாலக் குறவஞ்சிக்கு அழகிய உரை எழுதினார்.

தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகு

ஆர்.கே.சண்முகனார் இந்திய நிதி அமைச்சராக இருந்தபோதுதான் தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, பதிப்பிப்பதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக இவர் மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கினார். கம்பராமாயணப் பாடல்கள் எளிமை ஆக்கப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளோடு வெளிவர, ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசனுடன் இணைந்து பணியாற்றினார்.

இலக்கிய மாத இதழ் தொகு

"வசந்தம்' என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கியதோடு, தம் வாழ்நாளின் இறுதி வரை அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தார்.

வேறு பணிகள் தொகு

துணைவேந்தராகப் பணியாற்றினார் தொகு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

தேசிய ஆய்வகங்கள் தொகு

1943-இல் இந்திய அரசாங்கம் உருவாக்கிய தொழில் ஆய்வு நிலைக்குழுவின் தலைவராக சண்முகம் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான இந்தக் குழுவின் பரிந்துரைகளின் காரணமாகவே அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுவின் கீழ் இந்தியா முழுவதும் 32 தேசிய ஆய்வகங்கள் நிறுவப்பட்டன.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தொகு

1950-இல் அன்றைய சென்னை மாகாணத்தை தொழில் மையமாக உருவாக்கப்பட்ட சென்னை தொழில் முதலீட்டுக் கழகம் எனப்படும் இன்றைய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.

தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராக தொகு

இந்தியாவிலும், ஆசியக் கண்டத்திலும் மிகப் பெரிய தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

இந்திய வணிக மற்றும் தொழில் சங்கத்தின் கோவை கிளையின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தவர்.

நினைவுச் சின்னம் தொகு

கொங்கு மண்டலத்தின் தலைமகனான ஆர்.கே.சண்முகனாரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த இருக்கும் கோவை மாநகரில், ஒரு பெரும் நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் வேண்டுகோளாகும்.

இவருக்கு கோவையில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி சிலை திறந்து வைக்கப்பட்டது.[1]

உசாத்துணைகள் தொகு

மேலும் படிக்க தொகு

  • Business Legends by Gita Piramal (1998) - Published by Viking Penguin India.
  • T. Praskasam by P. Rajeswara Rao under National Biography Series published by the National Book Trust, India (1972).
முன்னர்
பிரிடீஸ் ஆட்சி - லியாகத் அலி கான்
இந்தியாவின் நிதியமைச்சர்
1947–1949
பின்னர்
இந்திய அரசு - ஜான் மத்தாய்

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._சண்முகம்&oldid=3480397" இலிருந்து மீள்விக்கப்பட்டது